உரையாடல் : பச்சோந்தி
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்தவர் கவிஞர் வினையன். சிறுவயதிலிருந்தே வெவ்வேறு தொழில்களைச் செய்ய முனைந்து தோல்வியுற்றவராகத் தன்னைக் கருதும் வினையன், வறுமையினூடே மருதம் என்னும் கலைக் குழுவை நடத்தி வருகிறார். கழிவறைகூட ஒப்பனை அறையாகிப் போன தமிழ்ச் சூழலில், ஒப்பனையற்றக் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். ஆம், மரபுச் சுமையோ, மேற்கத்திய தாக்கமோ, கவிதைகளுக்கே உரிய அலங்காரமோ எதுவுமின்றித் தோன்றுகிறார். மாறாக மரபைத் திருப்பிப் போடும், உடைத்துப் பார்க்கும் கலையை வழக்கு மொழியில் சர்வ சாதாரணமாகச் செய்து விடுகிறார். எறவானம், எச்சிக்கொள்ளி ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை மணல்வீடு, நீலம் பதிப்பகங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
நவீனக் கவிதைக்கென்று உருவாக்கி வைத்திருக்கும் அழகியல் வடிவங்கள், மொழி நுட்பங்கள், மொழிபு முறைகள், தொனிகள் ஆகியவற்றைக் கழற்றி எறிந்து, வழக்காற்று மொழியின் கவிதை லட்சணங்களை உள்வாங்கி நவீனக் கவிதையில் அளித்திருக்கிறார். ஆதலால்தான் நவீனக் கவிதைகள் உருவாக்கி வைத்திருக்கும் வானம் குறித்த அழகியல் கற்பிதங்களை விலக்கிவைத்து கண்டாரோழிப்பய வானம், வாக்காள ஓழி வானம், சாண்ட நக்கி வானம் என்று மக்களின் வசைமொழியில் எழுதுகிறார். தமிழின் ராவான இளங்கவி வினையனுடன் மெய்நிகர்ச் செயலியின் மூலம் உரையாடினேன்.
- உங்களின் பால்ய காலம் எவ்வாறு கழிந்தது?
அம்மாவை விட ஆயாவால்தான் வளர்க்கப்பட்டேன். “ஆண் குழந்தை பிறந்தால் ஆயுசுக்கும் மாலை போட்டு உன் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறேன்” என ஐயப்பனிடம் வேண்டியதால் பிறந்தவன் நீ என்பார் அம்மா. வீட்டிற்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளை என்கிற செல்லம். அடுப்பெரிக்க ராட்டி பொறுக்கி வருவதோடு தப்புக் கடலையும் பொறுக்கி வருவாள் ஆயா. எங்காவது ஒரு கள்ளிக் கொத்தில் ஓணான் குத்திக்கொண்டு நிற்பேன். “ஏ… வெசயகுமாரு… வெசயகுமாரு…” என ஆயா அழைத்தால், தின்பதற்கு ஏதாவது வைத்துக்கொண்டு அழைக்கிறார் என்பது தெரிந்துவிடும். பொறுக்கி வந்த தப்புக் கடலையை வறுத்து வைத்திருப்பார். அல்லிக் கிழங்கை அவித்து உரித்துக் காடி வெல்லத்தில் தொட்டுத் திங்கச் சொல்வார். கொட்டிக் கிழங்கை அவித்து உரித்துத் தருவார். நண்டின் கொடுக்கிலிருந்து சதையை எடுத்து ஊட்டி விடுவார். முந்திரிப் பழங்களை வட்ட வட்டமாக நறுக்கி உப்புப் போட்டுக் குலுக்கி வெயிலில் காய வைத்து உண்ணத் தருவார். தாமரைக் கிழங்கை ஊற வைத்துச் சேறு போகத் தேய்த்துக் கழுவி அவித்துத் தாளித்துத் தருவார். புளியங்கொட்டையை வறுத்து ஓடு நீக்கி ஊர வைத்து, மஞ்சளும் உப்பும் கலந்து குலுக்கித் தின்னத் தருவார்.
கவுண்டியால் அடித்த தேன்சிட்டு, ஆக்காட்டி, காக்கை, அணில், முயல், உடும்பு, தவிட்டுக்குருவிகளைத் தோல் நீக்கி உப்பு, காரம் சேர்த்துச் சுட்டுத் தின்றது. கண் சிவக்கச் சிவக்கக் குழம்பிய நீரின் களிமண் சேறு உடல் முழுக்க இள மஞ்சள் நிறத்தில் தெரிகிற வரை குளத்தில் குளித்தது என இன்னமும் சொல்ல நிறைய இருக்கின்றன. நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, அம்மா வாங்கியிருந்த 300 ரூபாய் கடனை அடைக்க சனி, ஞாயிறுகளில் அவர்கள் வீட்டில் வேலை செய்வேன். வேலி அடைப்பது; தோட்டத்தைச் சமன் செய்வது போன்ற வேலைகள் இருக்கும். ஒரு நாளைக்கு 25 ரூபாய் கூலி. பல நாள்களாக அந்தக் கடனை அடைத்துக் கொண்டிருந்தேன்.
நெல் வயல்களுக்கு உரமாகக் காவாலைச் செடியைப் போட்டு டிராக்டர் வைத்து உழுவார்கள். பயிரிடாத கொல்லைகளில் வளர்ந்து நிற்கும் செடிகளை அறுத்தெடுக்கும் வேலைக்குச் சென்றிருக்கிறேன். பிஞ்சுக் கைகள் சிவந்து எரிச்சலாக இருந்தன. ஒரு நாள் கூலியாகப் பச்சை நிற ஐந்து ரூபாய் நோட்டைத் தந்தார்கள். பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது விடுமுறை நாளொன்றில், தர்ப்பூசணிக் கொல்லைக்கு அண்டை எடுக்கும் வேலைக்கு வா 150 ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று சேகர் சித்தப்பா கூட்டிச் சென்றிருந்தார். “சும்மா மேலாகப் பாரு தம்பி, நான் சரி பண்ணிக்கிறேன். கை காலெல்லாம் வலிக்கும். படிக்கிற புள்ளய இப்படி வேலைக்கு அனுப்பிருக்கே ஒம்மா…” என சேகர் சித்தப்பாவே என் வேலையில் பாதியைப் பார்த்தார். “தண்ணி குடிக்கச் சொம்பு இல்ல சித்தப்பா என்றேன்.” கீழே காலியாகக் கிடந்த ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலைப் பாதியாக அறுத்து எடுத்து வந்தார் நிலத்தின் உரிமையாளர். அதில் தண்ணீர் குடித்ததை இப்போது நினைத்தாலும் தொண்டையில் கசப்பேறியது போல் கட்டிக் கொள்ளும்.
- உங்களின் முதல் கவிதை பிரசுரமான மற்றும் கவிதைகள் மூலம் இலக்கிய வெளியில் பரவலாகக் கவனம் பெற்ற பருவங்கள் குறித்து…
திருமணம் ஆன ஆறு மாதத்தில் என் மனைவியைச் சென்னை அழைத்து வந்துவிட்டேன். நான் பணி செய்த லாண்டரி கடைக்கே அவங்களையும் வேலைக்கு அழைத்து வந்தேன். “வேலை நேரம் போகக் கடுப்பாக இருந்தால், பேஸ்புக் ஓப்பன் பண்ணித் தரேன். நிறைய பேர் எழுதுவாங்க. நல்ல கருத்தெல்லாம் சொல்வாங்க பாரு” என ஒரு கணக்கை ஆரம்பித்துக் கொடுத்தேன். “நீயெல்லாம் இப்படி எழுத மாட்டியா” எனக் கேட்டார். நான் உக்கிரமாக ஈழ ஆதரவு பதிவுகளைப் போட்டுக்கொண்டிருந்த கணக்கை மூடிவிட்டு, வினையூக்கி எனும் பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கி, காதல் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். நினைவுகள் பகிர்தல் எனப் பால்ய அனுபவங்களைப் பகிர்ந்தேன். பலர் கொண்டாடினர். எழுத்துச் சூழலில் ஏற்கெனவே ஒருவர் அப்பெயரில் எழுதி வருவதை அறிந்து, வினையூக்கியில் யூக்கியைத் தூக்கிவிட்டு யன் சேர்த்து வினையன் எனப் பெயர் மாற்றி என் அடையாளங்கள் மறைத்து ஹெமிங்வே படத்தோடு எழுதத் தொடங்கினேன். அந்த நாட்களை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும். தொடக்கத்தில் அறக்கட்டளைப் பத்திரிகையான ‘மாதவம்’ இதழில் கவிதைகள் எழுதினேன். 2014 இறுதியிலும் 2015 முழுக்கவும் பல பத்திரிகைகளில் கவிதைகள் பிரசுரமாகின. கவிஞர் காவனூர் சீனிவாசன் நடத்திய ‘அருவி’ இதழில்தான் முதல் கவிதை வந்தது. அக்கவிதைத் தொகுப்பில் இல்லை; நினைவிலும் இல்லை. விகடனில் கவிதைகள் வந்தபோது பலருக்கு அறிமுகமானேன். கணையாழி எனக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது. முதல் தொகுப்பு வந்த பிறகுதான் பரவலாகக் கவனம் பெற்றேன்.
- கவிதை வடிவத்திற்கு வழக்கு மொழியைத் தெரிவு செய்தது ஏன்?
“இன்னக்கி வடக்குவெளி வாணாம். பறயங் கொளம் பக்கம் ஓட்டிட்டுப் போ” எனச் சொல்லிக்கொண்டே ராட்டிச் சாம்பலால் பல் தேய்த்துக்கொண்டிருந்தார் சாந்தி அத்தை. ஆட்டுக் கொட்டகையில் சிதறிக் கிடந்த புழுக்கைகளைக் கூட்டி வாரிக் கொட்டிவிட்டு, நீராகாரத்தை வாளியில் ஊற்றி வைத்தார் கம்சலைக் கிழவி. நுகத்தடியின் தேய்மானத்தையும் நைந்து போன பூட்டாங்கயிற்றையும் மாற்ற வேண்டுமென முனகிக்கொண்டே, டயரில் ஒட்டியிருந்த களிமண்ணை எடுத்துக்கொண்டிருந்தார் காமராசு மாமா. திடீரென ஊரே நடுங்கும் ஓலம், கூச்சல். குடிசைகள் பற்றியெரிந்தன. சாலைகளில் இரத்தச் சுவடுகள். கருகிப் போன நுகத்தடியைப் பார்த்துக் கதறிக்கொண்டிருந்தார் காமராசு மாமா. கொட்டகையில் பதமாக வெந்திருந்த 30 ஆடுகளின் மீதும் நீராகாரத்தை ஊற்றிச் சூடு தணிக்க முயன்றார் சாந்தி அத்தை.
“நம்ம ஆளுவோள போட்டு அடிக்கிறானுவோளாம், வூட்டக் கொளுத்துறானுவோளாம்… என்னத்துக்குடா இந்த உசுரு”ன்னு கடப்பாரை, மண்வெட்டியின் வம்பாரைக் காம்பு எனத் தூக்கிக்கொண்டு வந்த பக்கத்து ஊர்க்காரர்கள், துணிந்து சண்டையிட்டுத் துரத்தி அடித்த சம்பவத்தைக் கொளஞ்சித் தாத்தாவிடம் கேட்கும்போதெல்லாம் பதற்றமாகி விடுவேன். எம் உடைமைகள் சூறையாடப்படும்போதும் எம் பெண்கள் வன்புணரப்படும்போதும் எம் உழைப்புச் சுரண்டப்படும்போதும் குரலற்றவர்களாய் நின்றிருந்தோம். குரலற்றவர்களின் குரலாய் என் கவிதைகள் இருக்க வேண்டுமென நினைத்து, அவ்வுணர்வுகளை அதே மொழியில் கடத்த வேண்டுமென நினைத்தேன். இன்னமும் அதைப் பிடிவாதமாகவே செய்கிறேன்.
- மக்களின் மொழியை அப்படியே பிரதி எடுப்பதில் என்ன சவால் இருக்கு? எழுத்தாளனின் பிரதானப் பணியும் தனித் திறனும் புனைவாக்குவது தானே?
மக்கள் மொழியில் எழுதுவது என் ஆயுதம். அதன் எதிர் அழகியலே அதிலிருக்கும் சவால். சமூகம், அரசியல், பொருளாதாரம் இவைதான் மனித நிலையைத் தீர்மானிக்கின்றன. இவற்றோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிற மக்களின் அனுபவங்கள், அதன் பின்னிருக்கின்ற அரசியலை உள்வாங்கி எழுதுவதே மிகப்பெரும் சவால்.
எழுத்தாளனின் பிரதானப் பணி புனைவாக்குவது மட்டும்தானா என்ன. எழுதுவதைச் சமூகச் செயல்பாடாகவே பார்க்கிறேன். அபத்தங்களுக்கு இடமளிக்காத புனைவை வரவேற்கிறேன். இன்று ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறவர்களைப் பாட்டுடைத் தலைவியாகவும் தலைவனாகவும் வைத்துச் செவ்வியல் துணைகொண்டு நான் எழுதிய கவிதைகள் நியாயங்களைக் கோருகிற புனைவுகள்தான். ‘புனைவு’ என்பதை அழகியல் எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தோழர் பொதிய வெற்பன், கவிதைகள் குறித்த விமர்சன நூலில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. “பரந்துபட்ட மக்கள்திரள் மத்தியில் வெகுமக்களுக்கான பயன்கலைகளாகப் பரிணமிக்கும் மற்றைமையான கவிதைப்பாடுகளை அறவே புறமொதுக்கிப் போகும் அழகியலும் எமக்குப் பாசிசமாகவே படுகிறது. கலை நியாயங்களைக் கெளரவிக்கத் தயங்காத நாங்கள், சமூகதர்ம நியாயங்களைக் கணக்கிலெடுக்காத அழகியலாய் உறைந்து கிடக்கும் அரசியலை அம்பலப்படுத்திக் கவிதையையும் மக்கள் நாயகப்படுத்தவே விழைகின்றோம். மெளன வாசிப்புக்கான அழகியல் வேண்டுமானால் புதிர்அழகியலாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இத்தகைய எதிர்மரபின் கலகக்குரலுக்கு ஊடான அழகியலை எதிர் அழகியல் எனலாம்.”
சமூக மாற்றம்; சாதி ஒழிப்பு; தலித் பெண்ணியம்; இந்து மத எதிர்ப்பு எனத் தலித் இலக்கியத்தை அம்பேத்கரியப் பார்வையோடு உள்வாங்கிக்கொண்டு படைப்பாக்கும் என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள் அபாரமானவை. மக்களின் மொழியை அப்படியே பிரதியெடுத்து எழுதுவது ஒரு வகை என்றால், மொழியையும் வாழ்வையும் செம்மையாக்கி எழுதுவது ஒரு வகை. உதாரணமாக ஒரு கவிதையைச் சொல்கிறேன். இதில் ‘வாழ்வும் புனைவும்’ பிணைந்திருப்பதைப் பாருங்கள்.
“ஒரு கலயம் கஞ்சிக்காய்
தீண்டல் துணி கழுவியும்
யோனியைப் பறிகொடுத்தும்
பூப்புவரி கட்டியும்
மாராப்புப் போட முடியாமல்
மானங்கெட்டுச் செத்தயெங்கள் பெண்டுகளும்
திருகியெறியப்பட்ட முலைதேடி
வதைபட்டுச் செத்தவர்களும்தான்
எங்கள் தலைமூத்த அம்மைகள்
இவர்களின் விந்துகளில் விழுந்த
வெட்டுகளும் கீறல்களுமாய்
பிறப்புரிமைத் தேடியலையும்
நாங்களும்
எங்கள் இனியும்”.
- புனைவு என்பதை அழகியல் எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள் எனச் சொல்கிறீர்கள். அப்படி ஒற்றைத்தன்மையுடன்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டுமா? “நம்மிடம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். எனவே, புனைவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்” என அம்பேத்கர் கூறியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?
புனைவு/அழகியல் போன்ற கேள்விகள் கூடத் தொடர்ச்சியாகத் தலித் படைப்பாளிகளிடமே கேட்கப்படுவதாக உணர்கிறேன். தலித் படைப்புகள் பெரும்பாலும் தன் வரலாற்றுத்தன்மை கொண்டதாக இருப்பது கூடக் காரணமாக இருக்கலாம். அதுவும் கூட இங்கு புனைவிலக்கியம் ஆகியிருக்கிறது. தலித் என்கிற ஓர்மை இங்கு பெரும் திறப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் தலித் படைப்புகளின் பங்கு பெரிது. அவை அபுனைவு, புனைவு எனப் பரிணமித்திருக்கின்றன. புனைவெழுத்துக்கு அபாரமான சக்தி இருப்பதாகவே நம்புகிறேன். அதுதான் வாசிப்பாளர்களைத் தக்க வைக்கிறது.
முன்பு சொன்னதுபோல, அபத்த புனைவுகள் மீதுள்ள மாயப் பிம்பங்களைத் தகர்க்க, அண்ணல் குறிப்பிடுகிற ரூட் மிகச் சரியானது என்பேன். இங்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்குமே விளிம்புநிலைப் படைப்புகளால்தான் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். விளிம்புநிலைப் படைப்பு என்பது தலித்துகளால் மட்டும் எழுதப்படுவதல்ல.
- முதல் கவிதை நூலுக்காக சைக்கிளிலேயே சென்று நிறைய பதிப்பகங்கள் ஏறி இறங்கிய அனுபவங்கள் குறித்து…
அந்த நாள்களை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன். நான் எழுதும் எல்லாவற்றையும் பாராட்டிக்கொண்டே இருப்பார் எனது நண்பர் மாதவன் கிருஷ்ணமூர்த்தி. சரியாகச் சொல்ல வேண்டுமானால், 2012ல் தீவிரமாக ஈழ ஆதரவுக் கவிதைகளை முகநூலில் எழுதி வந்தேன். முதலில் நோட்டில் எழுதி நண்பரைத் தொடர்பு கொண்டு வாசித்துக் காட்டுவேன். என் வாசிப்பின் தீவிரத்தை உணர்ந்து, சென்னையில் எந்த மூலையில் இருந்தாலும் சைக்கிளை ஓட்டிக்கொண்டு அண்ணாநகர் வந்துவிடுவார். ஈழம், பெரியார், அம்பேத்கர் என உரையாடுவோம். 2012 – 2014 வரை நான் எழுதிய கவிதைகள் 150 இருக்கும். அவற்றை நூலாகக் கொண்டு வர விரும்பியதும் அவர்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஏறுங்க சைக்கிள்ல எனச் சொன்னவர், கோடம்பாக்கம் தெரு ஒன்றில் நிறுத்தி ஒரு பதிப்பகத்தை அடைந்தார். “ரேஷன் கார்டு மாதிரி கவிதைப் புத்தகங்கள் வர ஆரம்பிச்சிடுச்சு. 7 ஆயிரம் காசு கொடுங்க அச்சடித்துத் தரேன்” என்றார். அன்றைக்கு என் மாதச் சம்பளம் 9 ஆயிரம். சாப்பாட்டுக்குப் போக எஞ்சுவது சொற்பமான தொகைதான். அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டு அறைக்குத் திரும்பும்போது, சாலிகிராமத்தில் ஒரு பதிப்பகத்தை அணுகினோம். கவிதைகள் அடங்கிய நோட்டை வாங்கிப் பார்த்த பதிப்பாளர், “சுயம்புலிங்கம் கவிதைகள் போல் உள்ளது. நிறைய படிங்க, தொடர்ந்து எழுதுங்க. நான் கவிதை நூல்கள் பதிப்பிப்பது இல்லை” என்றார். பின்பு கே.கே.நகரில் இருக்கும் பதிப்பகம் ஒன்றிலும் காசு கொடுத்தால் போடுவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புத்தகம் போடும் எண்ணத்தை மூட்டைக் கட்டிவிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். 2016ல் வெளிவந்த எறவானம் கவிதை நூலில், அந்தக் கவிதைகள் எதுவும் இல்லை. இன்றளவும் எறவானம் குறித்து யாராவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
- உங்கள் கவிதைகளை சுயம்புலிங்கத்தின் கவிதைகளுடன் ஒப்பிட்டபோது என்ன உணர்ந்தீர்கள்?
யார் அந்த சுயம்புலிங்கம் எனத் தேடிப் படித்தேன். எனக்குள் இருந்த தயக்கங்களை அவரது கவிதைகள் உடைத்தன. அனுபவங்களையும் வாழ்வியலையும் காட்சிகளாக அடுக்கும் முறையை அவர் கவிதைகள் எனக்குக் கற்றுத் தந்தன. எஸ்.ரா தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இருந்த சுயம்புலிங்கத்தின் ‘ஒரு திருணையின் பூர்வீகம்’ கதை எனக்குள் புதிய எண்ணங்களை விதைத்தது.
- எறவானம் பெயர் தெரிவு குறித்து…
எளிய மக்களின் சேமிப்புக் கிடங்கு அது. பறைக்குச்சி, ரூபாய்த் தாள்கள், ஈருக்கோல், கோணி ஊசி, அறுப்பருவாள், களைவெட்டி, கிலிக்காட்டி எனத் தாங்கி நிற்கும். நம் வாழ்வின் பிற்பகுதி உயிர்த்து நிற்பதே நினைவுகளால்தான். பிறந்ததிலிருந்தே பேச்சு வராத சண்முகம் அண்ணனை ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் ஒருமுறைச் சந்தித்தேன். இலுப்பைக் கொட்டைகள் பொறுக்கப் போன நினைவுகளைச் சைகை மொழியில் சொல்லிக் காட்டினார். எனக்குச் சிலிர்த்துவிட்டது. எழுதாமல், பேசாமல் ஓர் உணர்வைக் கடத்த முடிகிறது பாருங்கள். எறவானமும் அப்படித்தான் எனக்குள் பல நினைவுகளைக் கடத்தியது. உடைமைச் சமூகமாக அல்லாத தலித்துகள் தங்களிடம் இருக்கும் அனைத்தையும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்த்தனர். எறவானத்தில் செருகி வைத்த நினைவுகள் கவிதைகளாக மாறும்போது, தலைப்புகளற்ற கவிதைகள் எறவானத்தையே தலைப்பாக்கிக் கொண்டன.
- பத்திரிகைப் பயணம் எப்போது தொடங்கியது?
உணவகம், காய்கறிக் கடை, கோழிப் பண்ணை, விவசாயம், மளிகைக் கடை என எல்லாத் தொழில்களிலும் ஏமாற்றப்பட்டும் தோற்றுப் போயும், இரண்டு குழந்தைகளோடு நானும் என் மனைவியும் அன்றாடச் செலவுக்கே தவித்துக்கொண்டிருந்தோம். 2019 கடைசியில் கவிஞர் தம்பி மூலமாக நற்றிணைப் பதிப்பகத்தில் பிழை திருத்துநராகப் பணிக்குச் சேர்ந்தேன். அங்குப் பணியாற்றிய இரண்டு ஆண்டுகள் வலி மிகுந்தவை. இடையில் சில மாதங்கள் சீர் இதழில் பணிபுரிந்தேன். பின்பு நக்கீரனில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். நக்கீரன் எனக்குப் புதிய பாதையை வகுத்துத் தந்தது. தற்போது, சிறார் இதழ் ஒன்றில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.
- வலி மிகுந்த நாட்களைப் பகிர முடியுமா?
தொழில்கள் முடங்கிப் போனதில், வேலைக்குப் போனால்தான் அன்றாடத்தையே கடக்க முடியும் என்கிற நிலை. பதிப்பகத்தில் பிழைதிருத்தும் பணியை உறுதிப்படுத்திவிட்டு ஊரிலிருந்து சென்னை புறப்பட்டேன். வழக்கறிஞர் தோழர் திருநாவுக்கரசு அவரது சேத்துப்பட்டு வீட்டில் தங்க அனுமதித்தார். ஒரு வருடம் வாடகையே இல்லாமல் தங்க இடம் தந்தது எனக்குப் பேருதவியாக இருந்தது. வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் எனது ஜாதியைத் தெரிந்துகொள்ள ரொம்பவும் சிரமப்பட்டார் பதிப்பாளர். நேரடியாக என்னிடமே கேட்டும்விட்டார். சராசரிகளை நினைத்து எனக்குக் கவலையில்லை. பதிப்பாளர், எழுத்தாளர் எனும்போது குறைந்தபட்ச மானுட அறம் இருக்கும் என்று நம்பினேன். என் அரசியல் நிலைப்பாடும் சமூகம் குறித்த எனது புரிதலையும் வைத்து, ஒரு வழியாக ஜாதியைத் தெரிந்துகொண்ட பிறகு என்னிடம் பேசும்போது, திருமா புகழாரம், அம்பேத்கர் புகழாரம்தான்.
நுங்கு வாங்கி வருவது; இளநீர் வாங்கி வருவது; உப்புக்கடலை வாங்கி வருவது; மெடிக்கல் சென்று வருவது; அஞ்சப்பர் ஓட்டலில் வஞ்சிரம் மீன் குழம்பு வாங்கி வருவது; சூப்பர் மார்க்கெட்டில் தோசை மாவும் கடலை மிட்டாயும் வாங்கி வருவது மாதிரியான வேலைகள் வழக்கமாக இருந்தன. எல்லோரும் வேலை முடிந்து சென்று விடுவார்கள். நான்தான் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சாவியை வீட்டில் தர வேண்டும். அங்குச் சென்றால், அன்னபூர்ணாவிலோ பெரம்பூர் சீனிவாசாவிலோ டிபன் வாங்கித் தந்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதன்பிறகு பேருந்து பிடித்து சேத்துப்பட்டு செல்வேன். அதனாலேயே அரை மணி நேரம் தாமதமாகத்தான் பணிக்கு வருவேன். ஆனால், “ஏன் லேட்டா வர்றீங்க…” என்பார்கள்.
ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய லாண்டரிக் கடையில், நேர மேலாண்மைக்காக எனக்கு ஊக்கப் பரிசு தந்துள்ளார்கள். நக்கீரனிலும் எனது நேர மேலாண்மையைப் பாராட்டியுள்ளார்கள். வேலைக்குச் செல்கிற இடங்களில் இதுபோல சின்னச் சின்ன வேலைகள் பார்ப்பது இயல்புதான் எனத் தோன்றலாம். அங்குப் பணிபுரிந்தவர்களில் நான் மட்டும்தான் தலித் என்பதால், அது எனக்கு வலியைத் தந்தது. பதிப்பாளர் சினிமா சார்ந்து இயங்க என்னையும் உடன் அழைத்துக் கொண்டபோது, நிறைய பேசுவார். அவற்றில் சில தரமானதாகவும் இருக்கும். சம்பளம் குறைவுதான் என்றாலும் அதைத் தாமதமாகத் தந்ததில்லை. என் கொடுங்காலத்தில் பேருதவியாக அந்த வேலை இருந்தது. அங்கும் கற்றுக்கொள்ள நிறைய இருந்தன. வேறு என்ன வேலைக்குச் செல்வது எனத் தெரியாமலும் யாரிடமும் உதவி கேட்க வேண்டாமென்கிற பிடிவாதத்திலும் அங்கேயே தொடர்ந்தேன்.
- கேரள நகர் வீதிகளில் கடப்பாரை, மண்வெட்டியோடு அலைந்து திரிந்த தகப்பனைப் பற்றி…
எனக்கு நினைவு தெரிந்து கேரளத்திலிருந்து வரும் இன்லேண்ட் லெட்டரில்தான் அப்பா அறிமுகம். முதன் முதலாக, அன்புள்ள ராஜகாந்தம் நலமா. மகள் ஜெயந்தியைத் தறி போடப் போகச் சொல்லாதே… பயலை அடிக்காதே. முதலாளி, மேஸ்திரியிடம் பணம் கொடுத்துள்ளார். மேஸ்திரி அடுத்த மாதம் ஊருக்கு வருவார். நேரில் சென்று பெற்றுக்கொள்ளவும். அட்வான்ஸ் வாங்க வேண்டாம் இந்தத் தீபாவளிக்காவது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என அந்தக் கடிதம் முடிந்தது. அன்றிலிருந்து தீபாவளிக்காகக் காத்திருந்தேன். ஆனால், அப்பா வரவில்லை. அம்மா முன்பணம் வாங்கியதால் முதலாளி அவரை ஊருக்கு அனுப்பவில்லை. இப்படி எல்லா தீபாவளி பொங்கலிலும் அப்பாவின் வருகைக்காகக் காத்திருப்பேன்.
எப்போதாவது வருவதாலோ என்னவோ அப்பாவின் மீது அதீதமான அன்பைச் செலுத்த ஆரம்பித்தேன். கோட்டுவாய் ஓடிய என் கன்னத்தில் முத்தமிட்டு, ‘சின்னக்குட்டி சின்னக்குட்டி’ என எழுப்புவார். எப்போது கேரளத்திலிருந்து வந்தாலும், நீளமான சவுக்காரத் துண்டு; கெட்டியான அல்வா; பாக்குக் கொட்டைகள்; டெலிபோன் வயர்; பாக்கெட் டைரி இவை எல்லாம் இருக்கும். டைரியில் வேலை செய்த கணக்குகள் இருக்கும். என் பெயரையும் அக்கா பெயரையும் மலையாளத்தில் எழுதி வாங்கி வைத்திருந்தார். அதில் ஒரு பக்கத்தில், ‘ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு – மாடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு. அந்த ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிறு ஆலம் இலை போல காஞ்சிருக்கு’ என எழுதியிருந்தது. அந்த வரிகள் என்னை என்னவோ செய்தன.
கேரளத்தில் பார்த்த படங்களின் கதைகளைச் சொல்வார். அப்பா மீண்டும் கேரளம் செல்லும் வரை அத்தனை குதூகலமாக இருப்பேன். சாராய அடுப்பிலேயே வெந்து நொந்து போனவர், கேரளத்துக்குக் கூலி வேலைக்குச் சென்றார். பரதேசி படத்தில் வரும் உழைக்கும் மக்கள்தான் என் அப்பா. கங்காணி எங்க அம்மா. உழைத்து உழைத்துத் தேய்ந்தவர், நீரிழிவு நோய் வந்து உடல் வீங்கி மாண்டார்.
- ஒத்தக் கையுடன் போட்டோவில் நிற்கும் பெத்தவனைப் பார்த்து உந்தை அழுதது ஏன்? அப்போது பரணில் ஓங்கியெழுந்த பறையோசையின் மர்மம் என்ன?
அப்பாவின் கருமாதி பத்திரிகை வைக்கக் கொள்ளிடக் கரையோரம் இருக்கும் அரசூர் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தேன். கண்ணாடிச் சட்டகத்துக்குள் இருந்த கறுப்பு வெள்ளை படத்துக்குப் பூ வைத்துப் பொட்டு வைத்திருந்தார்கள். அத்தையிடம் விவரம் கேட்டபோது சொன்ன கதைதான் அக்கவிதை.
ஐயா இளையபெருமாள், எங்கள் பகுதியில் நிகழ்த்திய பல சீர்திருத்தங்களில் ஒன்று, ‘சாவுக்குப் பறையடிக்காதே’ என்பது. பறை அடிக்கவில்லை என ஆண்டைகளால் வெட்டுப்படுவதும் அடிக்கக் கூடாது எனச் சொன்ன சமுதாயத் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்படுவதுமான பெரும் போராட்ட நாள்களை நினைவுகூர்ந்து சொன்ன கதையிலிருந்து உருவான கவிதை அது. அந்தக் கதைகளைத் தன்னகத்தே வைத்துள்ள பறை, படையல் போடுகிற நாளில் அந்நாள்களை நினைவுகூர்ந்து பரணில் ஓங்கியெழுகிறது.
- சிவனாண்டியின் சவரக்கத்தி சபாபதி படையாட்சிக்குத் தாடி, கமிட்டி சிரைக்கும்போது மட்டும் ராஜேந்திரச் சோழனின் போர்வாளாய்த் தெரிவது எதனால்?
பண்டிதம் (மருத்துவம்), முண்டிதம் (சவரம், அழகுக் கலை), இங்கிதம் (சடங்கு முறைகள்), சங்கீதம் (இசை, கச்சேரி) இந்த நான்கும் அறிந்து வைத்திருந்த நாவிதர்களை வருணாசிரமம் விழுங்கிய காட்சிப் படிமம்தான், சபாபதி படையாட்சிக்குத் தாடி கமுட்டி சிரைக்கும் அந்த இடம்.
250 ஆண்டுகளுக்கும் மேலாகச் சோழ மன்னர்களின் தலைநகராக இருந்த கங்கைகொண்ட சோழபுரம் எனது ஊர். அங்கு பிரதான சாலையில் சலூன் கடை வைத்திருக்கும் உத்தண்டி அண்ணன் எனக்கு நல்ல பழக்கம். எல்லோரிடமும் மரியாதையாகப் பேசுவார். இங்குள்ள மக்கள் என்ன வேலைக்காக அழைத்து வரப்பட்டிருப்பார்கள். அல்லது இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களா? அப்போது அவர்கள் என்னவாக இருந்திருப்பார்கள். இன்றிருக்கிற இந்த வர்ணப் பேதங்கள் அன்று எவ்வாறு இருந்திருக்கும் என உரையாடும்போதுதான் அந்தக் கவிதையை எழுதினேன்.
- “தீக்காயம் ஏற்பட்டவரின் தொங்கவிடப்பட்ட கால்கள்
யூரியா குடித்தவரின் குடல் பிடுங்கும் வாந்திச் சத்தம்
பனை மட்டையால் விசுறுபவளின் விட்டம் பார்த்த முணுமுணுப்புகள்
சிலந்திகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மின் விசிறிகள்”
போன்ற எறவானச் சித்திரங்களின் பின் புதைந்துள்ள விஷயங்கள் என்ன?
இக்கவிதை 2015இல் கணையாழியில் பிரசுரமானது. எதிர் வீட்டில் இருந்த ரவீந்திரன் சித்தப்பா என் அப்பாவின் நண்பர். என் அப்பாவை ‘தகுடு’ என்ற பட்டப் பெயரை வைத்து அழைப்பார். ரஜினியின் தீவிர ரசிகர். சதாசிவம் தாத்தா கடையில் கணேஷ் பீடி வாங்கி வரச் சொல்வார், இலுப்பைத் தோப்புக்குச் சென்று பட்டைச் சாராயம் வாங்கி வரச் சொல்வார். சாராயம் விற்குமிடத்தில், “லே தகுடு மொவன… வயிசு என்ன ஆவுது சாராயம் வாங்க வந்திருக்க” என ஒருவர் மிரட்டியதிலிருந்து அங்குச் செல்வதே இல்லை. குளித்துவிட்டு, உடலில் எங்கெல்லாம் பட்டை இட முடியுமோ அங்கெல்லாம் திருநீற்றால் பட்டையிட்டுக் கொண்டு, யாரோ வாங்கி வந்த சாராயத்தில் களைக்கொல்லியைக் கலந்து குடித்த ரவி சித்தப்பாவை மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். அங்குக் கண்ட காட்சிகள்தான் இவை. அரசு மருத்துவமனைகள் இன்று எவ்வளவோ மாறியிருக்கின்றன.
- லாண்டரி கடையில் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து…
உண்மையில் இன்று இந்த நேர்காணல் எடுக்கக் கூட அந்த லாண்டரிதான் காரணம் என்பேன். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் விண்ணப்பித்துவிட்டு, கோயில் வேலைக்குச் சென்றிருந்தேன். கலந்தாய்வுக்கான கடிதம் வந்ததும் உரிய தேதியில் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். மதிப்பெண் குறைவாக இருந்ததால், எனக்கு இடம் கிடைக்கவில்லை. ‘என் குடும்பத்தில் நான்தான் முதன் முதலாகக் கல்லூரி வரை வருகிறேன். ஏதாவது ஒரு படிப்புக்கு இடம் கொடுங்கள்’ எனக் கேட்டேன். சாதி ரீதியான இடம் கூட இல்லை என அனுப்பி வைத்தனர். குடும்ப வறுமை ஒருபுறம், கல்லூரியில் இடம் கிடைக்காமல் போன கவலை மறுபுறம். உறவினர் அண்ணன் தீபன்ராஜ் என்பவர் சென்னையில் ஒரு லாண்டரியில் மேலாளராகப் பணிபுரிந்தார். அவர்தான் என்னைச் சென்னைக்கு அழைத்தார்.
அன்றிரவு சென்னைக்கு வந்த போது, மெட்ரோ கட்டுமானப் பணிகள் தொடங்கி நடந்து வந்தன. அண்ணாநகர் ஜி ப்ளாக் பத்தாவது தெருவில் இருந்த ஒரு கட்டடத்துக்குள் கூட்டிச் சென்றார். துணி பவுடர் வாசம் ஈர்த்தது. எங்கும் துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. விடிந்ததும், என்னிடம் இருந்த ஒரே ஒரு நல்ல சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பி நின்றேன். ஒரு மாதம் வரை துணி துவைப்பதுதான் வேலை என்றனர். அதன்பிறகு தனி ஷோரூம் பில் போடும் பணி என்றார்கள். ராஜா அண்ணாமலைபுரம் க்ரீன் வேய்ஸ் ரோட்டில் இருந்த அந்த ஷோரூமில்தான் வார இதழ்கள் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனந்த விகடன் வாசகர் ஆனதும் அங்குதான். கவிதை எழுதத் தொடங்கியதும் அங்குதான். பணிச் சூழலில் இருந்த சுதந்திரம், வாசிக்க வைத்தது; வாசிப்பு எழுதத் தூண்டியது; வாழ்க்கை எழுத்தானது.
- திருவிழாவில் கிடாயின் உதிரம் கண்டவர்கள், தேர்ச்சக்கரத்தில் தெளித்த ரத்தத்தைக் கவனிக்காமல் போனது ஏன்?
தேர்ச் சக்கரத்தில் தெளித்த ரத்தமென்பது, காலங்காலமாக வழிபாட்டு உரிமைக்காக நடக்கும் போராட்டத்தின் குறியீடுதான். என்னைக் கேட்டால், வழிபாட்டு உரிமைக்குப் போராடுவதை விட இந்துப் பெரும்பான்மைவாதத்தை உடைப்பதே தலித்துகளுக்கான விடுதலை என்பேன்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்கள் ஒன்றிணைந்து 80 பறையர் குடும்பங்களைச் சூறையாடியபோது எழுதிய கவிதை அது. 2015ல் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சேஷசமுத்திரக் கலவரத்தின்போது தமிழ்நாடே பதற்றமாக இருந்தது. சாதி இந்துக்கள் நடத்துகிற திருவிழாக்களில்தான் தேர் இழுக்க அனுமதி மறுக்கிறார்களே என, அங்குள்ள பறையர்கள் கட்டிய மாரியம்மன் கோயிலில் தேர் இழுக்க அரசிடம் அனுமதி கேட்கிறார்கள். தேர் இழுப்பதற்கு அங்குள்ள வன்னியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அரசு அனுமதி அளித்துத் தேர் இழுக்கவும் தயாரான மக்களின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினர் ஏவல் ஜாதியினர். எல்லா உடைமைகளையும் இழந்து நின்றனர் அம்மக்கள். இந்தச் சம்பவம் 2015 ஆகஸ்டு 15ல் நடந்தது. 1985 ஆகஸ்டு 15ல் காட்டுமன்னார்கோயில் அருகே பூவிழந்தநல்லூர் கலவரத்தில், 15க்கும் மேற்பட்ட தலித்துகளைத் துணை ராணுவத்தினர் சுட்டனர். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். அன்று நாடு முழுக்கச் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தது…
- வெண்ணங்குழி சாராயங் குடித்து வெள்ளாட்டுக் குட்டி உடன் உறங்கிய ஈச்சம்பூண்டி கிழவனும், தப்புக்கடலை பொறுக்க வந்து வெள்ளாட்டுக் குட்டிக்கு விடுப்புக் கொடுத்தவளும் இப்போது எப்படி இருக்கிறார்கள்?
ராஜமாணிக்கம் பெரியப்பாவை செவப்பு தாத்தா என்றே அழைப்போம். நையாண்டியாகப் பேசுவார். இரட்டை அர்த்தக் கதைகள் சொல்வார். மெட்டெடுத்துப் பாடுவார். தமுரு அடிப்பார். ஆடு மேய்க்கச் செல்வார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. ஒருமுறை, ஆடுகளுக்கு முட்டிக்கால் போட்டுவிட்டுப் புளியமரத்து நிழலில் வந்து அமர்ந்தவரிடம் கதை கேட்டோம். தப்புக்கடலை பொறுக்கப் போன உத்திரானம், ஈச்சம்பூண்டிக் கிழவனோடு குடும்பம் நடத்தியதைச் சொன்னார்.
கடலைக் கொல்லையில் கடலைச் செடியைப் பிடுங்கும்போது, ஒன்றிரண்டு கடலைகள் மண்ணுக்குள்ளேயே தங்கிவிடும். பெரும்பாலும் மானாவரி நிலங்கள் என்பதால், அடுத்தது மழை பெய்யும்போதுதான் பயிரிடுவார்கள். அந்தக் காலஇடைவெளியில் மண்ணுக்குள் தப்பிப் போன கடலைகளைப் பொறுக்கச் செல்வார்கள். வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று, இருட்டிவிட்டால் அங்கேயே எங்காவது தங்கும் வழக்கமும் இருந்துள்ளது. அப்படிப் போனவள், ஈச்சம்பூண்டியில் ஆட்டுக் கிடை போட்டிருந்தவரோடு குடும்பமானாராம். முக்கியமாகக் குறிப்பிட விரும்பியதும் உணர்த்த விரும்பியதும், தப்புக் கடலை பொறுக்கும் வழக்கம் இருந்ததையும், ஊர் ஊராய்ச் சென்று கிடை போடுபவர்களின் பாலுறவு சார்ந்த எண்ணம் என்னவாக இருந்தது என்பதையும்தான்.
சமீபத்தில் Shop Lifter’s எனும் ஜப்பானியப் படம் பார்த்தேன். குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்; கணவனால் கைவிடப்பட்டவர்; அம்மா அப்பாவின் தொடர்ச் சண்டையால் தனித்து விடப்பட்ட குழந்தை; திருமணமே ஆகாத நடுத்தர வயது ஆண்; மேலும் சிலர் இணைந்து ஒரு குடும்பமாக வாழ்கிறார்கள். அவர்களுக்குள் உணவு பகிரப்படுகிறது; அன்பு பகிரப்படுகிறது; உடல் பகிரப்படுகிறது. அவர்கள் எல்லோரும் தனித் தனியானவர்கள் என்பதே படம் முடியும்போதுதான் நமக்குத் தெரிய வரும். ஒருவரை இழந்துவிட்டாலோ ஒருவரால் கைவிடப்பட்டாலோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டாலோ அதோடு முடிந்துவிடாத இந்த வாழ்க்கை, எவ்வளவு அர்த்தப்பூர்வமானது என்பதை அப்படம் உணர்த்தும். ஈச்சம்பூண்டிக் கிழவனுக்கு, உடலைப் பகிர்ந்து குடும்பம் நடத்தத் தயாரான தப்புக் கடலைப் பொறுக்கப் போனவளின் கதையும் எனக்கு அதைத்தான் உணர்த்தியது. கிழவன் கிடையின் மூத்த ஆடாகிவிட்டான். அவள் தப்புக் கடலையாகிவிட்டாள்.
- நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் தொன்மையான இசைக்கருவிகள் எவை? இவ்வாறு சேகரிப்பதன் நோக்கமென்ன?
மிகவும் தொன்மையான பறை, தமுரு, துடும்பு, கொம்புத்தாரை, முகவீணை, சிறுபறை, எக்காளம் இவைதான் நான் ஆரம்பத்தில் சேகரித்தவை. என் கலைக்குழுவில் கொம்பு ஊதிக்கொண்டிருந்த தம்பி வெங்கடேசனிடம் எல்லாத்தையும் கையளித்துவிட்டேன். தற்போது அவன் நாமுழவு, குடமுழா, மகுடி, சங்கு, உடுக்கை, தமுக்கு, திருச்சின்னம், உறுமி, கொக்கரை, சட்டி மேளம் எனச் சேகரித்து வைத்துள்ளான்.
தொடக்கத்தில் ஆவணமாக்கும் நோக்கம் இருந்தது. அதுவும் கூட இங்கு வியாபாரம் ஆகியிருக்கிறது எனக் கைவிட்டு விட்டேன். நான் அவ்வப்போது முரண்பட்டாலும், ‘பேசு கலைக்குழு’ ஜேகே அண்ணனை மிகச் சிறந்த கலைஞன் என்பேன். “இது என் கலை, முடிஞ்சா நீங்க திருந்துங்க” எனப் பேசுவார். என் கலைகுழுவுக்கான இசைக்கருவிகளை அவரிடம்தான் வாங்கினேன்.
- ‘மருதம்’ கலைக்குழுவைத் தொடங்க வேண்டும் என்கிற உந்துதல் எப்போது தோன்றியது?
வழக்காற்றுப் பாடல்களைப் பதிவு செய்துகொண்டிருந்த நாள்களில், ரெட்டியூர் பாண்டியன் குறித்த ஒரு பாடல் கேட்கிற வாய்ப்புக் கிடைத்தது. பாடல் கடத்திய வலிகளோடு அவர் குறித்த ஆவணப்படம் எடுக்க நினைத்தோம். அதன்மூலம் இழிதொழில் ஒழிப்புக் களங்கள் குறித்துத் தெரிந்துகொண்டேன். இழிவாகக் கருதுகிற இடங்களில் வாசிக்காமல், பண்பாட்டுக் களங்களிலும் அரசியல் களங்களிலும் வாசிக்க முடிவெடுத்துத் தொடங்கினேன். உள்ளே வந்த பிறகுதான் தெரிந்தது. அன்று இழிவாகக் கருதப்பட்ட பறை இன்று வியாபாரமாகியிருக்கிறதே என. ஆனாலும், அந்த வியாபாரத்தைத் தொழில்முறைக் கலைஞர்கள் அல்லாதவர்களே வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதைச் சொல்வதில் காழ்ப்போ, வெறுப்போ எனக்கில்லை. இங்கு பல நவீனப் பறையிசைக் குழுக்களில் தலித் அல்லாதவர்கள் தலைமையேற்றுத் தொழில்முறைக் கலைஞர்களை வைத்துச் சம்பாதிக்கிறார்கள்; கலைஞர்களைச் சுரண்டுகிறார்கள்.
எனது கலைக்குழு, கலைகள் குறித்தும் சமூகம் குறித்தும் மேலும் சில புரிதல்களைத் தந்தது. தொழில்முறையாகப் பறையைக் கையில் வைத்திருப்பவர்கள் அதை விட்டொழிக்க வேண்டும் என்பது என் எண்ணமாக மாறியது. அண்ணல் சொன்ன ‘கற்பி’யை வலுப்படுத்த சின்னச் சின்ன வேலைகள் செய்து வருகிறேன். ஆனாலும் புலிவாலைப் பிடித்ததுபோல், இன்றளவும் மருதம் என்னை விடவில்லை. நானும் அதை விட்டொழிக்க முடியவில்லை.
- தொழில்முறையாகப் பறையைக் கையில் வைத்திருப்பவர்கள் ஏன் அதை விட்டொழிக்க வேண்டும். தலித் அல்லாதவர்கள் மட்டும்தான் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுகிறார்களா?
தொழில்முறைக் கலைஞர்கள் என நான் குறிப்பிடுவது பறையர்களைத்தான். பறை வாசிப்பதால், அவர்களுக்குச் சமூகத்தில் பெரிய மரியாதையோ, அங்கீகாரமோ இல்லை. ஆனால் கல்வி அதைத் தருகிறது. கல்வியால் அடைகிற பொருளாதார மாற்றம், சமூகத்தில் அவர்களுக்குப் பெரும் மதிப்பைத் தருகிறது. இன்னமும் கிராமங்களில் நடைமுறையில் இருக்கும் வெட்டியான் தப்பு முறையையும், கலைஞர்கள் இழிவாக நடத்தப்படுவதையும் சரி செய்யாமல் மீண்டும் மீண்டும் அதைக் கையில் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. முன்பு இதுகுறித்து என்னிடம் மாறுபட்ட கருத்து இருந்தது. என் அனுபவங்களிலிருந்து இன்று முரண்படுகிறேன்.
சுரண்டல் ஜாதி பார்த்து நடப்பதில்லைதான், கலைக்குழு சார்ந்த கேள்வி என்பதால் அதிலிருக்கும் சிக்கல்களை எடுத்துச் சொல்கிறேன்.
- பொருளாதாரம் தலித்துகளுக்கு மதிப்பைப் பெற்றுத் தரும் என்பது சரி. தீண்டாமையைப் போக்குமா? குடியரசுத் தலைவரான பிறகும் ஜெகந்நாதர் கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்படாத திரெளபதி முர்முவிடம் கல்வி இல்லையா பொருளாதாரம் இல்லையா?
இப்படி வைத்துக்கொள்வோம், திருமா தமிழ்நாட்டின் முதல்வர் ஆகிவிட்டால் அவரால் இங்கு இருக்கக்கூடிய எல்லாக் கோயில்களின் கருவறைக்குள்ளும் செல்ல முடியும்தானே? மாயாவதியால் முடிந்திருக்கும்தானே? நமது நோக்கமென்பது கருவறைக்குள் செல்வதா? கல்வி, பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைந்த முர்மு, அண்ணல் மாய்ந்து மாய்ந்து ஆராய்ந்து எதிர்த்த இந்து மதப் பிடியில்தானே இருக்கிறார். ”நீ கற்ற கல்வி உன் சமூகத்திற்குப் பயன்படவில்லை என்றால் நீ இருப்பதை விட இறப்பதே மேல்” என்கிறார் அண்ணல். அவர் சொன்ன கல்விப் பொருளாதாரம் என்பது அப்படியே புரட்டிப் போட்டுவிடும் என்பது அல்ல. நான் சொல்வதும் அதுதான். இழிவைவிடக் குறைந்தபட்ச மரியாதை மேலானது. அதைக் கல்வி தருகிறது. அதன் ஊடாக அடையும் பொருளாதாரம் அதைத் தருகிறது.” உங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்குக் கல்வி கொடுங்கள், பாரம்பரிய வணிக நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தாதீர்கள்.” அண்ணல் சொன்ன இந்த வரிகளால் இங்கு பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
- உங்கள் ஊரில் அம்பேத்கர் படங்களும் ஓவியங்களும் ஆங்காங்கே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அம்பேத்கரை முதன் முதலில் நீங்கள் அறிந்து கொண்டது எப்போது?
நான் படித்த ஆதி திராவிட நலத் தொடக்கப்பள்ளியில், வகுப்பறைக்குள் பெரிய அம்பேத்கர் உருவம் ஓவியமாக வரையப்பட்டிருந்தது. அதில் அவர் படித்த படிப்புகள் நீளமாக எழுதப்பட்டிருக்கும். அப்போது நான் மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அதுதான் நினைவு தெரிந்து எனக்கு அறிமுகமான அம்பேத்கர். கல்யாண வீடுகளில் வாழ்த்து பேனர் வைப்பார்கள். அது கையால் வரைந்து எழுதியதாக இருக்கும். அதில் கட்டாயம் அண்ணலின் ஓவியம் இருக்கும். ஓவியர் ரமேஷ் அண்ணனும் தீவிர அண்ணலின் பற்றாளர் என்பதால், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியே இல்லாமல் வரைந்து விடுவார். சங்கத்துக் கொட்டகை என ஒன்று இருக்கும். அதில் அண்ணலின் படம் மாட்டியிருக்கும். மாலை நேர வகுப்புகள் நடக்கும். அந்த முறை இன்றளவும் தொடர்கிறது. நீல கோட் போட்ட அம்பேத்கரைத் தவிர வேறு உருவத்தையே பார்த்திடாத பல கிராமங்களுக்கு, வகை வகையான அண்ணல் உருவங்களை வி.சி.க கொண்டு சேர்த்ததை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எங்கள் ஊர் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அண்ணல் இருப்பார். எங்கெல்லாம் சமத்துவத்தை விரும்புகிறவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அண்ணல் இருப்பார்.
- ஒற்றைச் சடையோடு ஓடை வழியாய் வரும் பூனைக்கண்ணி, ஏழாம் பிள்ளைக்குப் பால் கொடுப்பவள், எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்பவள், கள்ளுக்கலயத்தில் விழுந்த கொளவி போல் மிதப்பவள், ஏன் வெள்ளாடு கூட செல்லாத்தி என்றே இடம் பெறுகிறது. இப்படி எச்சிக்கொள்ளி கவிதை நூல் முழுக்கப் பெண்களின் உலகம் நிறைந்திருப்பது திட்டமிட்டதா?
என் கவிதைகளில் வரும் பெண்கள், என்னைச் சுற்றி இருந்தவர்கள்தான். அவர்களின் அன்றாடத்தைக் கூர்ந்து கவனித்ததன் வெளிப்பாடாகவே அதைப் பார்க்கிறேன். அவர்கள்தான் என்னிடம் பரிகாசம் செய்தார்கள். அவர்கள்தான் என்னைக் கொஞ்சினார்கள். அவர்கள்தான் என்னை ஏசினார்கள். அவர்கள்தான் என்னிடம் அழுதார்கள். அவர்களின் பாடல்கள்தான் என்னைத் தீவிரமாக வட்டாரப் புலத்தில் எழுத உந்தித் தள்ளியது. பெண்களின் குரலாகவே ஒலிக்கிற கவிதைகள், மிகச் சத்தமாகவே இருக்கும். இயல்பிலேயே தலித் பெண்கள் அதிர்ந்து பேசுவதையே ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காணலாம்.
“என்ன ஆளு மூஞ்செல்லாம் சொறி சொறியா இருக்கு. பருவு கொட்டு கொட்டுன்னு கொட்டிருக்கு. எந் தீட்டுத் துணி தரேன். மூஞ்சில தேச்சிக்க சரியாபூடும்”னு பரிகாசம் செய்த அத்தை.
“இந்த துலுக்கமூடு மட்டும் இல்லன்னா… இந்த ஏழையும் வளத்து எடுத்துருக்க முடியுமா” என அழுத அத்தை.
“பறத்தெருவுல பொறந்து பாப்பாத்தியாட்டம் இருக்கேனாம்… மாவரைக்க மில்லுக்குப் போனப்ப, மில்லுக்கார்ரு சூத்த தட்றாருன்னு” சொன்ன உறவினர் அக்கா, என உடலையும் சமூக அமைப்பையும் தங்களின் யதார்த்த வாழ்வின் ஊடாக எனக்குக் கடத்தியவர்கள் குறித்து வெகு இயல்பாகவே எழுதுகிறேன்.
- சீவாங்குச்சி ஒடிக்கச் சென்று முதுகில் நெருஞ்சி முட்கள் செருக ஆண்டைகளால் வன்புணரப்பட்ட கொடவுக்கண்ணியின் துயரம் ஏனோ நந்தினியை நினைவுப்படுத்துகிறது. இச்சம்பவம் எப்போது நடந்தது? எவ்வாறு எதிர்கொண்டு கடந்து வந்தீர்கள்?
ஏவல் ஜாதி நிலவுடைமையாளர் ஒருவரால் வன்புணரப்பட்ட அந்தத் தலித் பெண், தொடக்கப்பள்ளி ஆசிரியர். அவரைக் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றியதைப் பொதுவில் முறையிடுகிறாள். அதனால் அச்சுறுத்தப்படுகிறாள். ஏமாற்றி அழைத்துச் சென்று, முந்திரிக் காட்டில் வைத்து வன்புணர்வு செய்து, கொன்று எரித்துச் சாம்பலை விளைநிலத்தில் தூவி உழுது விடுகிறார்கள். பிள்ளையைக் காணோம் என்று தேடி உண்மை தெரியவர கடும் போராட்டம் வெடிக்கிறது. தோழர் தமிழரசன், சம்பந்தப்பட்ட ஜாதி வெறியர்களை அம்பலப்படுத்துகிறார். இச்சம்பத்துக்குப் பிறகே மீன்சுருட்டி ஜாதி ஒழிப்பு மாநாட்டைத் தலித் சதாசிவம் தலைமையில், தோழர் தமிழரசன் நடத்துகிறார். இச்சம்பவம் 80களில் நடந்தது. சிறு சிறு களப்பணிகளில் தோழர்களோடு இணைந்தபோது, அவர்கள் சொன்னதுதான். இப்படியான ஒடுக்குமுறைகள் நாடு முழுக்க இருக்கிற தலித்துகளுக்கெல்லாம் நடந்தது, நடத்தப்படுகிறது. ‘உங்களிடம் அதுபோன்ற கதைகள் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். வாங்க நான் சொல்கிறேன்.’ என ஜாதியச் சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்விதான் அது.
நந்தினியை நினைவுப்படுத்தி எனக்குப் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறீர்கள். மேற்சொன்ன சம்பவம் நடந்து கால் நூற்றாண்டு கடந்தும் அதுபோலவே நடந்த ஒரு குரூரம்தான் நந்தினி படுகொலை. நாடகக் காதல் எனப் பிரச்சாரம் செய்தவர்களாலும் தலித் அல்லாத கூட்டமைப்புக் கூட்டியவர்களாலும் நிகழ்த்தப்பட்டவை ஏராளம். அதில் ஒன்று நந்தினிக் கொலை.
இடதுசாரி அமைப்புகளில் இருந்த தோழர்கள் அப்போதுதான் எனக்கு அறிமுகமானார்கள். நந்தினிப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். ‘கந்தத் துணியானாலும் இந்துக் கடையில் வாங்கு’ என இந்து ஒற்றுமை பேசுகிற இந்து முன்னணி அமைப்பில் இருந்த மணிகண்டன் என்கிற வெறியனாலும் அவனது சகாக்களாலும் வன்புணரப்பட்ட நந்தினி இந்திய அரசமைப்பின்படி இந்துதான். காதலிக்கிறேன் கல்யாணம் செய்து கொள்கிறேன் என ஏமாற்றி, அவள் கருவுற்றதும், “தன் கரு ஒரு பறச்சியின் வயிற்றில் வளர்வதா?” என வெறி கொண்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொன்று கிணற்றில் தூக்கி வீசினர். நந்தினிக்கு நீதி வேண்டி நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்ட அந்த நாட்கள் எனக்குள் இறுகிப் போயுள்ளன.
- ‘யானை கட்டிப் போரடித்தீர்கள் – சரி, யாருக்குக் கிடைத்தது நெல்லுச்சோறு’. உங்களின் பெயர் சொல்லும் கவிதை இது. மரபார்ந்த பெருமிதச் சிந்தனைப் போக்கைச் சற்றே திசைமாற்றிக் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். கண நேரத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இக்கவிதை உருவான சூழல் குறித்து…
இந்தக் கேள்வியை மிக முக்கியமான கேள்வியாகக் கருதுகிறேன். சமூக வலைத்தளங்களில், என்னைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொருபுறம் நான் எழுப்பிய கேள்வியைக் காணொளியாகவும் மீமாகவும் போட்டுக் கொண்டாடுகிறார்கள். மொத்தமாக ஒரு பதிலைத் தர வேண்டும் என நினைத்தேன்.
தோழர் ஒருவர், “பசி மானுடத்தின் பொதுமொழி” என்பது எந்தளவு உண்மை? என்று கேட்டார். “ஏழை – பணக்காரன் எல்லாருக்கும் ஒரு வயிறுதானே.” என்றேன். “அப்போ ஏழையின் பசியும் பணக்காரனின் பசியும் ஒன்னா?” என்ற கேள்வியை எழுப்பினார். ஒரு சாரார் செத்த மாட்டைத் தின்றுகொண்டிருந்த இதே நாட்டில்தான், உணவில் நெய் ஊற்றிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக, பசி என்பது இருவேறாக இருக்கிறதுதானே எனப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தத் தெறிப்பில் உருவான சிந்தனைகளிலிருந்து எழுப்பிய கேள்விதான் அது.
ஐயோ எனக்குச் சோறு போடுங்க என இரைஞ்சவில்லை. நிலத்தை இழந்த உழுகுடியின் குரல் அது. மானுட அறங்களைப் பேசிய முன்னோடித் தமிழினம், உலகே வியக்கும் திருக்குறளையும் அறநெறி இலக்கியங்களையும் வைத்துள்ள தமிழினம். எப்போது ஜாதியாகப் பிளவுண்டது. ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது– செந்நெல் என்று யானை கட்டிப் போரடிக்கும் மாமதுரை’ என்றும் ‘சோழன் புவிசோறு உடைத்தென்னும்/ துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து/ வாழும் பெருமைத் திருநாடு/ வளம்சேர் சோழ மண்டலமே’ என்றும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இக்கூற்றுகள் உண்மையென்றால், அந்த நெறிப்படிதானே வாழ்ந்திருக்க வேண்டும்.
“நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, பண்ணை அடிமையாக மாடு மேய்க்கச் சென்றேன்” என்ற மகாலிங்கத்துக்கு, வருடத்திற்கு இத்தனை மரக்கால் நெல் என்பதே கூலி. தினமும் போடுகிற சோறு கூட மாட்டுக் கொட்டகையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இரும்பு மரக்காலில்தான் கொடுப்பார்களாம். இது இந்த நூற்றாண்டில் நடந்த கொடுமைதான். நிலம் பிடுங்கப்பட்டு, ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டவனின் குரல் செவுட்டில் அடிப்பதைப் போல்தான் இருக்கும், இருக்க வேண்டும் என்கிறேன். வருணப் பேதத்தை விடாப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு சக தமிழனை வன்கொடுமைக்குள் உள்ளாக்குவதை, அவனின் அறநூல்களின் துணையோடுதான் அடிக்க முடியும் என அந்தக் கேள்வியை எழுப்பினேன்.
“என் சின்ன வயசுல நெல்லுச்சோறையே கண்ணால பாக்க முடியாது. ஒருநாளாச்சும் ஒரு கையி சோறாவது தருவாங்களான்னு… ஏங்கிக் கிடந்தேன்.” என் ஆயா இதைச் சொல்லும்போது, நெல்லுச்சோறு திங்க ஏன் அவ்வளவு கஷ்டமான்னு கேட்டேன். நிலச்சுவான்தார்களுக்கும் அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கும் எளிதாகக் கிடைத்த ஒன்று, என் ஆயாவுக்கு ஏன் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை என்கிற கேள்விதான் அது. நெல் சோறு மதிப்புக்குரியதாகவும், அது வேண்டுமானால் இன்னும் கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டும் என்றும் சுரண்டப்பட்டார்கள். பண்பட்ட வாழ்வியலைக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் அறம் தவறியது எதனால் என்பதை உணர்ந்து வருணப் பேதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பாமல், மீண்டும் மீண்டும் பெருமிதங்களைச் சுமந்துகொண்டு சக மனிதர்களைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.
- நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆதர்ச எழுத்தாளர்களில் கறுத்தடையான், தவசி கருப்பசாமி, என்.டி.ராஜ்குமார், வெய்யில் போன்ற கவிஞர்களும் உண்டு. இவர்கள் படைப்புகள் எப்போது அறிமுகமாகின. ஆதர்சமாகக் கருதும் பிரத்யேகக் குணாம்சங்கள் எவை?
இந்த நால்வரின் படைப்புகளும் மணல்வீடு நிகழ்வின் மூலம்தான் அறிமுகம். ‘பொழிச்சல்’ கவிதை நூல்தான் கறுத்தடையானைப் படிக்கத் தூண்டியது. மனித உடல் – நிலம், மரபு – மொழி எனத் தன்னை ஓர் சித்தனாகவே உணர்ந்து எழுதியதைப் போல் இருக்கும். ரத்தமும் சதையுமான ‘ஊட்டு’ தொகுப்பின் கவிதைகள், ஒரு சாமியாடி குறிச் சொல்வதைப்போல் இருக்கும். உடுக்கை, உறுமிகளின் ஓசைகளைக் கவிதைகளே எடுத்துக் கொள்ளும். கடுங் காப்பியும் கணேஷ் பீடியும் இழுத்துக் கொண்டிருக்கும் கறுத்தடையானைப் பார்க்கும்போதெல்லாம் சித்தனாகவே பாவித்துப் பார்ப்பேன். அவரின் படைப்புகளைப் படிக்கும்போதும் ஓர் சித்த நிலை என்னை ஆட்கொள்ளும். அது, படைப்பில் எதற்கும் தயங்காத துணிவைத் தரும்.
தவசி கருப்பசாமியின் ‘அழிபசி’ தான் வட்டார வழக்கில் எழுத ஒரு பிடிமானத்தைக் கொடுத்தது. கூத்து மனிதர்களின் வழியாக மக்கள் மொழியில், விளிம்புநிலை மக்களின் பாடுகளைச் சொல்லும் கவிதைகளை எழுதுபவர். அவரின் கதைகளே என்னை அதிகம் ஈர்த்தவை.
மணல்வீடு விருது விழாவில், “எரியும் எனது பிணத்தின் புகைக் குடிக்கும் சுடலைப் பெண்ணே…” எனப் பெருங் குரலெடுத்துப் பாடிய அந்தக் கட்டை மனிதரின் குரல் மிகப் பிடித்துப் போனது. அவரின் குரல் பதிவு பாடல் கவிதைகளை இசைத்தட்டாக விற்றார். அதைக் கேட்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் பாதுகாத்தே வைத்திருந்தேன். அவரின் மூக்கும் உதடும் மீசையும் என் அப்பாவை ஞாபகப்படுத்தும். முண்டாசு கட்டிய அந்தக் காட்டாளனின் கவிதைகளில் இருக்கும் ஒலி நயமும் அரசியலும் என்னைக் கவர்ந்தவை. தொன்மங்களை லாவகமாகக் கையாண்டு தனது சித்தாந்தங்களின் வழியாக எதிர்ப்பைப் பதிவு செய்கிற பாங்கை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
வெய்யிலின் ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ தான் முதலில் படித்தேன். அதிகாரத்திற்கு எதிரான குரல்களில் இருக்கும் கவித்துவம் என்னை வெகுவாக ஈர்த்தது. அதன்பிறகு வெய்யிலைத் தேடுகையில், திணை மரபைத் தற்காலக் கவிதைகளில் பாடும் பாணனாகத் தெரிந்தார். அக்காளின் எலும்புகளைப் போல் ஒரு தொகுப்பு போட வேண்டும் என நினைத்ததுண்டு. அத்தொகுப்பின் எல்லாக் கவிதைகளோடும் என் அக்காவை இணைத்து, நினைத்து நினைத்து அழுதிருக்கிறேன். கவிஞர் மண்குதிரை, வெய்யிலின் கவிதைகளை ‘குரூரமான அபூர்வங்கள்’ என்றார். ‘தீக்கடவுள் மீட்டும் ராகம்’ என்கிறேன் நான்.
- இடைவெளி’ 2010 க்குப் பிறகு வெளிப்பட்ட நவீனத் தமிழ்க் கவிஞர்கள் இதழில் றாம் சந்தோஷ் உங்களின் கவிதைகள் குறித்தும் மிகத் துல்லியமாக வரையறை செய்திருந்தார். அவ்விதழ் குறித்து உங்களின் பார்வை என்ன? உங்களின் சமகாலக் கவிஞர்களின் படைப்புகள் குறித்து உங்களின் பார்வை?
றாம் சந்தோஷின் அப்பணியை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். அது இக்காலத்தின் தேவை என்றும் கருதுகிறேன். றாம் கவிஞராக மட்டுமல்லாமல் ஆய்வாளராகவும் பிரமிக்க வைப்பவர். ஒரு கவிஞன் ஆய்வாளராகவும் இருந்துகொண்டு கவிதைகளைப் பகுத்துப் பார்ப்பது, கவிதைகளில் புதிய திறப்புகளைக் கண்டடைய உதவியாக இருக்கும். அந்த இடைவெளி இதழும் அப்படித்தான் வெளிவந்தது. எனது எறவானம் குறித்துப் பலர் பேசியிருந்தாலும், றாமின் அந்தக் கட்டுரை மிகச் சிறிய அளவே என்றாலும் செறிவான பார்வையாக இருந்தது. மற்ற படைப்பாளர்களின் கவிதைகள் குறித்த வேறொரு கோணத்தைக் காண முடிந்தது. அந்தக் கட்டுரை படித்த பிறகு நெகிழன், பெரு. விஷ்ணுகுமாரின் கவிதைகள் குறித்த எனது பார்வை முன்பைவிடவும் அவர்களின் கவிதைகளைத் தீவிரமாக அணுக உதவியது.
என் சமகாலக் கவிஞர்கள் என்பது, என் வயதைக் குறிக்குமா? அல்லது சமகாலத்தில் எழுதுபவர்களைக் குறிக்குமா? சமகாலம் என்றால், பலர் எழுதுகிறார்கள். மேலும், கவிதைகள் தொகுப்பாக வெளிவராத பலரும் மிக நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லல் முறையில், மொழியில், உள்ளடக்கத்தில் பல உத்திகளைக் கையாள்கிறார்கள். வாழ்வை அறிவியலோடு அணுகும் கவிதைகளும் எழுதப்பட்டு வருகின்றன. தனி மனித அன்றாடம் பேசப்படுகிறது. மனச் சிக்கல்களை நுட்பமாக ஆராய்ந்து எழுதுகிறார்கள். பல்வேறு மொழிகளிலிருக்கும் கவிதைகளின் வடிவங்களை தமிழில் முயல்கிறார்கள். மனிதப் பயன்பாட்டின் அனைத்தும் கவிதைக்குள் பாடுபொருளாகிறது. தமிழ் நவீனக் கவிதைகளின் போக்கு ஆரோக்கியமாக இருப்பதாகவே நம்புகிறேன்.
- தலித் இலக்கியம் என்கிற வகைமையை எப்படிப் பார்க்கிறீர்கள். சமகால தலித் படைப்புகளின் இயங்குதளம் குறித்து…
தலித் என்பது எதிர்ப்பின் குறியீடாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணிகளாக கலை, இலக்கிய, அரசியல் செயல்பாடுகளைச் சொல்லலாம். முப்பதாண்டுகளுக்கும் முன்பே இப்படி ஒரு வகைமை உருவாகி, இன்று அதற்கான இடத்தையும் அடைந்திருக்கிறது. தலித் அல்லாதவர்களும் விளிம்பு நிலை மக்களின் பாடுகளைப் புனைவிலக்கியங்களாகத் தரும் சூழல் உருவாகி, அந்தப் படைப்புகளும் தன்னைத் தலித் வகைமைக்குள் சேர்த்துக் கொள்கின்றன. தலித் படைப்புகளும் சிந்தனைகளும் பலவற்றைக் கட்டுடைத்திருக்கின்றன. படைப்பிலக்கியங்களை ஒரு சாரரே ஆக்கிரமித்திருந்த சூழல் மாறி, தற்போது பலவாறு எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. எதை வேண்டுமானாலும் எழுத முடியும் என்கிற சுதந்திர மனநிலையைத் தலித் இலக்கிய வகைமை தந்திருக்கிறது. மற்ற யாருக்கும் இல்லாத பொறுப்பு தலித் படைப்பாளிகளிடம் இருக்க வேண்டும் என்பதால், நிறைய கற்க வேண்டும். எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதைக்கூடக் கற்றறிந்து எழுத வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழில் மிகச் சொற்பமான தலித் படைப்புகளைத்தான் மேற்கோள் காட்ட முடிகிறது என்பது வருத்தமாக உள்ளது. அடையாளங்களுக்குள் சிக்க விரும்பாதவர்கள், வலதுசாரி சிந்தனை மரபை அவர்களை அறியாமலேயே ஏற்றுக் கொள்கிறார்கள். அம்பேத்கரியச் சிந்தனையைப் படைப்பாக்கும் முயற்சியும் புனிதங்களைக் கட்டுடைக்கும் படைப்புகளும் தலித் நாட்டாரியல் மரபை முன்னெடுக்கும் படைப்புகளும் எதிர் அழகியல் படைப்புகளும் தலித் வாழ்வியலை, நிலத்தைப் பேசுகிற படைப்புகளும் அருகி வருகின்றன. எனக்கு முன் பலரைக் குறிப்பிட முடியும். எனக்குப் பின் ஒன்றிரண்டு பேரைத்தான் கவனிக்க முடிகிறது. சமகால தலித் இலக்கிய இயங்குதளம் செறிவானதாக இல்லை.
- வகை வகையான அண்ணல் உருவங்களைப் பல கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்த வி.சி.க, தலித் உள்இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்பதையும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் விசிக எதிர்க்கிறது.
“ஜாதி இந்துகளின் அரசுதான் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த அதிகாரத்தைக் கொண்டு உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், தலித் மக்கள் சிதறடிக்கப்படுவார்கள். உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கான உள் ஒதுக்கீடு உரிமையும், கிரிமிலேயர் ஆகிய இரண்டும்தான் இங்கே மிக முக்கியமான பிரச்சனைக்குரியவை. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படுவது sub quota. அதாவது, பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை. ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது sub class. இது பட்டியல் சமூகத்தைத் தனி அங்கமாகப் பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது. எனவே பட்டியலினச் சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையையே நசுக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைகிறது.”
உள் ஒதுக்கீடு சம்பந்தமான ஆர்ப்பாட்டத்தில் திருமா பேசியதையே குறிப்பிட்டுள்ளேன். ஆக, திருமா இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் அல்ல. நடைமுறைப்படுத்தும் முறை தவறானது என்கிறார்.
- கிரீமிலேயரை விசிக மட்டுமல்ல அருந்ததியர்களும்கூடத்தான் எதிர்க்கிறார்கள். ஏன் எல்லோரும் எதிர்க்கக் கூடியதுதான். அம்பேத்கர் சொல்வதுபோல் படிநிலைப்படுத்தப்பட்ட தன்மை என்பது பட்டியல் சாதிகளிலும் இருக்கும்போது, இவர்களில் கீழ்நிலையில் உள்ள அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் என்ன சிக்கல். பட்டியல் சமூகத்தைத் தனி அங்கமாகப் பிரிக்கும் என்பது பார்ப்பனிய மனநிலை இல்லையா? அப்படியென்றால் உள் இட ஒதுக்கீட்டை மத்திய அரசே கொடுக்க முன்வந்தால் விசிக ஏற்றுக்கொள்ளுமா?
விசிக உள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்கக் கூடாது என்கிறது. பட்டியல் ஜாதியினர், 340 மற்றும் 341 பிரிவின்கீழ் அறிவிக்கப்பட்ட சமூகங்கள். அதில் மாறுபாடு கூடாது என்றுதான் சட்டமும் சொல்கிறது. புதிதாகச் சேர்க்க வேண்டும் என்றாலோ, நீக்க வேண்டும் என்றாலோ அது நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும் என்பதுதான் விசிகவின் நிலைப்பாடாகப் பார்க்கிறேன். நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புக்குள் இருப்பதுதான் சரி என்கிறது. அவ்வளவு ஏன், அரசின் அமைப்பான தேசியப் பட்டியலின ஆணையம்கூட எதிர்க்கிறது. தலித்துகளின் பிரச்சனைகளை மாநில உரிமைகளோடு மட்டும் அவர்கள் இணைத்துப் பார்க்கவில்லை. மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பதே சமூகநீதி என்றும் பட்டியலினத்தவர்களைக் கூறுகளாகப் போட்டு, அரசியல் தளத்தில் நிலவும் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடாது என விசிக விரும்புகிறது.
வினையன் நிழற்படம் : தமிழ்
அற்புதமான நேர்காணல். அசத்தலான கேள்விகள், நுணுக்கமான அரசியல் பேசும் பதில்கள். வினையனை இனிதான் வாசிக்க வேண்டும்.
Excellent Interview
wow nice interview
மிகச்சிறப்பான நேர்காணல்
வாழ்த்துகள் தோழர்