cropped-logo-150x150-copy.png
0%
Editor's Pick இதழ் 41

நேசன் கவிதைகள்


இறவாதவைகள் இப்போதும் இருக்கின்றன

வெற்றுடம்பாய் நிற்கிறது
சொல்லொன்று

நீட்டப்பட்டவைகளில்
நிறங்களுக்கு
கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்
அளவைத் தெரிந்தெடுப்பதில்
காட்டப்படவில்லை

வரிந்து கட்டி வரும்
அர்த்தச் சட்டைகள் எதிலும்
பிசகாத கவனம் என்று
எதுவுமில்லை

தத்தமது சாயங்களோடு
நெருங்கிப் பின் திரும்பியவைகளுக்கு
எப்படியும் ஒரு காரணம்
இருந்தாகவேண்டும்

தீப்பந்தமோ பனிக்கட்டியோ
சொல்லுக்கு
இதுதானென்னும் விருப்பக்குறியும்
இருந்திருக்கவில்லை

சொல்லின் முதுகெங்கிலும்
சாட்டைகளின் கால்த்தடம்

அனுமானங்களைக் கடந்த
மூர்க்கம் ஒன்று
அதன் ஆயுதமாய் இருந்தது

கூர்ந்து கவனிக்கும்
அதிகார வர்க்கங்களின் பார்வைகளில்
வெட்டிய மின்னலின் நொடிநேர வெளிச்சம்
ஏதோவொரு ஆதிக்கதையை
அடையாளங்காட்டியிருக்கக் கூடும்

மீண்டு வந்த பார்வைகளின் முகங்களில்
கொட்டிக்கொண்டிருந்தன
வியர்வை அருவிகள்

அனேகமாய்
அது ஆண்டைகளால் கொல்லப்பட்ட
அடிமையொன்றின் சொல்லாய் இருக்கலாம்

******

இந்த உலகம் மூன்றாமவர்களுக்கானது

எனக்கு
மலையேறத் தெரியும்
என்றான் ஒருவன்
ஏறியும் காட்டினான்

அப்படி செய்துகாட்டுவதற்கு
அவன் எடுத்துக்கொண்ட
பிரயத்தனங்கள் ஏராளம்
கால விரயத்திற்கும் கணக்கில்லை

எனக்கு
ஆழ்கடலில் மூச்சடக்கி
நெடுந்தொலைவு நீந்தத் தெரியும்
என்றான் இன்னொருவன்
நீந்தியும் காட்டினான்

அதற்கு அவன் கொடுத்திருந்த பதிலிகள்
யாராலும் தரமுடியாதது

அப்போதெல்லாம்
உலகம்
அமைதியாய் வேடிக்கை பார்த்தபடி இருந்தது

மன்னிக்க வேண்டும் நண்பர்களே
நீங்கள் ஏறிய மலையையும்
நீந்திய கடலையும்
நான் விலைக்கு வாங்கிவிட்டேன்
மலையிலிருந்து கீழிறங்குங்கள்
கடலிலிருந்து கரையேறுங்கள்
என்றான் மூன்றாவன்

உலகம் ஒட்டுமொத்தமாய்க் கைதட்டியது

******

மானசீகம்

இன்று
போக்குவரத்து நெரிசலைக் கடந்து
வீடு வந்து சேர்வதற்குள்
ஆறு கொலைகளைச்
செய்ய வேண்டியதாயிற்று
என்னால் கொல்லப்பட்டவர்கள்
இந்நேரம்
அவரவர் வீடுகளை அடைந்திருப்பார்கள்

சாலையை மறித்து
மேடை போட்ட மதப்பிரசங்கிகளின்
கூட்டத்தை நோக்கி கல்லெறிந்தேன்
அவர்களின் கடவுள்
அதை ஒரு ரப்பர் பந்தைப்போல
பிடித்துக் கொண்டார்

நாளை நீ செத்துவிடுவாயென
அரசுமருத்துவமனை நோயாளியிடம்
பிதற்றிக் கொண்டிருந்த
மருத்துவரின் கன்னத்தில்
செருப்பாலறைந்தேன்
அவர் அங்கிருந்து நகர்ந்து
அடுத்த படுக்கையில்
அன்று வந்து சேர்ந்திருந்த
காய்ச்சல்க்காரனின்
கூறாய்வு அறிக்கையை
எழுதத் தொடங்கினார்

குட்டையில் கிடந்த
இரண்டுவாளி கலங்கிய நீரை
கண்மாயில் கொண்டு ஊற்றிவிட்டு
என் நதியைப்
பெருங்கடலில் கரைத்துவிட்டேனென்ற
பகுதி நேர அரசியல்வாதியின் முகத்தில்
காறியுமிழ்ந்தேன்
ஒப்பனை அழகாய் இருப்பதாக
அவனை ஆரத்தழுவிக் கொண்டன
கண்மாயின் திமிங்கிலங்கள்

வீட்டுப் பேழையில் இருக்கும் நகைகளை
அடமானக்கடைக்கு வரவேற்கும்
விளம்பர நடிகையை
விளாசி விளாசியே
நாலைந்து விளக்குமாறுகள்
தேய்ந்து போயின
அடுத்த நாளும்
அதே ஆடை அணிகலன்களோடும்
அதே வசனத்தோடும்
ஒய்யாரமாய்
அவள் வந்துகொண்டுதானிருக்கிறாள்

ஏரிகளில் பாத்திகட்டி
அதை மனைகளெனக் கூவி விற்கும்
மெய்ப்பேட்டை முதலைகளை
ஓட ஓட விரட்டுகிறேன்
அவர்களின் மகிழுந்துகள்
என் மூச்சிரைப்பை
சட்டை செய்தபாடில்லை

குத்தல் வசனங்களை
இலவச இணைப்பாக்கும்
பாடல் வெளியீட்டு விழாக்களில்
சாணி உருண்டையை வீசினேன்
தயாரிப்பாளர் தந்த இரவு விருந்தில்
அதுவும் கைகழுவப்பட்டது

கடைசியாய்

எதையும் மாற்றவியலா விரக்தியில்
என்னை நானே அறுத்துக் கொண்டேன்
கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தில்
தலையணை ஈரமாகிறது
காலையில்
அதுவும் காணாமல்ப் போகிறது


** நுட்பம் எடிட்டர் சாய்ஸ் பகுதிக்காக கவிஞர்  நேசன்  கவிதைகள் உரிய அனுமதியோடு வெளியிடப்பட்டுள்ளது. 

About the author

நேசன் .

நேசன் .

நேசன் என்னும் புனைப்பெயரில் கவிதைகள், பாடல்கள் எழுதிவரும் L. ரவிச்சந்திரன் கட்டிடத் தொழில் பணியில் உள்ளார்.

Leave a Comment

You cannot copy content of this Website