cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

ந.சிவநேசன் கவிதைகள்


1.  நாளையின் நேற்று

இன்றைச் சந்திக்க வருவதாய்ச் சொன்ன நேற்றுக்கு வேறு வேலையில்லை
பிடிவாதமாக முதுகிலேறிய அதனைக்
கைவிடவும் வழியற்ற தவிப்பு
இன்றைக்குள் வலம் வந்த
நேற்றை நேற்றென நம்ப யாவரும் மறுத்தார்கள்
வரையறுத்த எல்லைக்கப்பால் கொண்டுபோய் விட்டுவந்த பிறகும்
எப்படியோ அது இன்றைக்குள் நுழைந்துவிடுவதைச் சமாளிக்கவும் முடியவில்லை
அன்றிலிருந்து இப்போது வரை
நேற்று தன்னை நேற்றென நிரூபிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது
வாழ்ந்து கெட்ட அரசன் அதிகாரத்தைத் தக்கவைக்கத் தவிப்பதைப் போலத்
தடுமாறி அலையுமென்
மெய்யறிய அனைவரும்
நாளையின் மீது
குதிக்கும் வரை காத்திருக்க வேண்டும்
யார் கண்டது
அப்போது இன்று தன்னை இன்றென நிரூபிக்கப் போராட வேண்டியதிருக்கும்.

2. மௌனத்தின் சொற்கள்

சலசலப்புக்கு இடையிலான மௌனத்தில் எப்போதும்
ஒளிர்கிறது
வெவ்வேறு உயிர்களின்
சாயல்

வாதையற்ற
பறவையின் இறகில் குளிர்காற்றாய் பதுங்கும்
மௌனம்
குழந்தையின்
உறக்கம் கலைக்காத
நடையில்
பூனையின் பாதங்களைப்
பூட்டிக் கொள்கிறது

இரவு ஷிப்ட்
வாட்ச்மேனின் கண்களில்
எரிகிறது
முதிர்ந்தோய்ந்த புலியின்
நாளை குறித்த மௌனம்

வகுப்பறையில்
அமர்ந்திருக்கும் குழந்தையின்
வாய் மீது வைத்திருக்கும் விரலில்
ஒளிகிறது
தொட்டிக்கு மாற்றும்போது
துள்ளிக் குதிக்கும் மீனின் மௌனம்

எத்தனை இருந்துமென்ன
குலுங்கும் தட்டை
கடக்கும் கால்களுக்கு
வெட்டிச் சரித்த
வனத்தின் மௌனம்
காத்திருந்து தலைகுனியும் யாசகனின் கண்களில்
பாதை மறந்த
யானையின் மௌனம்.

3. எதுவுமற்றும் யாதுமாகியும்

வெகுமதியாய்
கூடை நிறையப்
பிரபஞ்சக் குளிரை
அளிப்பதாக உரைத்து
யாசகன் ஒருவனைப் போட்டிக்கு அழைத்ததில் விருப்பமில்லைதான்
தனிமையோடு நிகழ்ந்த
சதுரங்க ஆட்டத்தில்
காய்களை நகர்த்தச் சொல்லியும்
நகர்த்தாமல்
அலட்சியம் சுமப்பவனை
விளையாடாதே ஒழுங்காக விளையாடென எச்சரிக்கிறது தனிமை
அலெக்சாண்டரின்
புரவியைத் தொட்டதும் நகர்த்துவதற்குப் பதில்
அதிலே சவாரி செய்துவிடுவதில்
பயமில்லை அவனுக்கு
சில நேரம்
கோட்டைக்குள் சிறைப்பட்டிருக்கும்
அவனின் அவனை
நலம் விசாரித்து வர
மந்திரிகளை அனுப்பிக் காத்திருக்கிறான்
அடுத்த நகர்த்தலுக்குள்
இரண்டு இராசாக்களும்
இராணிகளின் அதிகாரத் தோரணையை
வெற்றுப் புலம்பலில் பரிமாறுவதைக் கண்டு சிரித்தே சாகிறான்
வெறுப்பேற்றி கதவு திறந்து வெளியேறப் பார்க்கும் தனிமையைச்
சிப்பாய்களை அனுப்பிச் சிறையெடுத்து வரச்சொல்கிறான்
யாதொரு பற்றுமற்று மகிழ்ந்திருக்கும் இரகசியத்தை
யாரோ ஒருவன் வினவப்
பற்றற்று இருப்பதுவும் பற்று தான் தோழனே
எனக் கடந்து செல்பவனின் விலாசத்தைக் கேட்டால்
தன் பெயரும் தனிமைதான்
என்கிறான் கள்ளச்சிரிப்போடு.

4. ஸ்டார்களால் ஆனது வாழ்வு

நாள் முழுக்க இயக்கியதில் பெருகும் வாகனத்தின் சூடு
உணவிலும் இறங்கி
சகாயம் செய்கிறது
தாமதமாக டெலிவரி செய்தவனுக்கு

இரவில்
வானம் பார்த்தபடி படுத்திருப்பவனிடம்
மகள் எடுத்துத் தருகிறாள்
பணிக்காலம் முழுதும் தொலைத்த ஸ்டார்களை

பைக்கின் பின்புறம்
கட்டியிருக்கும் உணவுப் பையின்
கனம் குறையும் துரிதத்தில்
அதிகரிக்கிறது
அன்றாடங்களின் ஒளி

ஏதோவொரு நகரில்
யாரோ ஒருவனிடம்
குறித்த நேரம் கடந்ததில்
பிடுங்கப்பட்ட
ஐந்து ஸ்டார்களில் ஒன்று
சிக்னலிலேயே
விழுந்திருக்கக் கூடும்
சிவப்பு விளக்காக.


 

About the author

ந.சிவநேசன்

ந.சிவநேசன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான ந.சிவநேசன் இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற இதழ்களில் வெளியாகி வருகின்றன.

'கானங்களின் மென்சிறை', மீன் காட்டி விரல், இதயங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை ஆகிய கவிதைத் தொகுப்புகள் . ’ ஃ வரைகிறது தேனி’ - ஹைக்கூ தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியாகி உள்ளன.

1 Comment

Leave a Comment

You cannot copy content of this Website