- பறையாடும் ராம ஜோடி
நகரச் சாலைகளின் இருபுறங்களும் குடைவிரித்த வேர்களை அறுத்தெறிந்து கால்வாய்களைப் புனரமைக்கும் பணி மந்தகதியில். நகர் மூலைச் சுடுகாட்டில் வசிக்கும் ராமன் முலைக்காம்பு நிற இரவு உதிர்ந்தும் சூரியனைத் தலைக்குவைத்து உறங்குகிறான். மாட்டுக்கறி வத்தலை வறுக்கச் சொல்லிக் கெஞ்சியபடி தலை உலர்த்தும் சீதை கூரிய இரு கொம்புகளால் ராமனின் குண்டியில் குத்தி உறக்கத்தை உதிரச் செய்தாள். எவ்வளவு நேரம்தான் மாட்டுவாலை உலர்த்துவாளோ முனங்கியபடி புதைமேடுகளுக்கு நடுவே கன்றின் குதத்தைப் புணரும் ராமன் அதன் முதுகெலும்பைக் காய்ச்சிச் சூப்பு வைத்தான். வானோக்கி மேலெழும் ஆவி சுடுகாட்டைத் தாண்டி மணக்கிறது. பாண்டவர்களும் கௌரவர்களும் கபாலத்தை ஏந்தியபடி முண்டியடித்துச் சுடுகாட்டைத் திறக்கிறார்கள். எலும்பு தடுக்கி விழுந்த சகுனி பல்லுடைந்ததும் தெரியாது எழுந்தோடுகிறாள். கையிலிருந்த கபாலத்தில் சிறுகீறலுமில்லை. குலுங்கும் சலங்கையைக் கழற்றிச் சூப்புப் பானையை மறைத்துவைத்த சீதை வெறுங்கையை விரித்து விரித்துக் காட்டுகிறாள். சுணங்கிய கபாலங்கள் நாவறண்டு திரும்புகின்றன. மெல்லத் தன் தோலை உரித்துப் பறையடித்து ஆடுகிறார்கள் ராமனும் சீதையும்.
- புகையாய்ப் பறக்கும் நரைகள்
ஆதாம் சந்தைக்கு எதிர்த் தெருவான ஆசூதீன்கான் தெருவில் நடந்து சென்றேன். கான்கிரீட் வேர்களில் ஊன்றிய கறுப்பு வெள்ளைக் கம்பத்தில் பறக்கும் கொடியின் நிழலில் அறுந்த செருப்பைத் தைப்பவன் உடைந்த கண்ணாடியைப் பின்னங்கழுத்தில் இறுக்கியிருந்தான். மின்பெட்டியில் ஒட்டியிருந்த மூலம் பௌத்திரம் விளம்பரத்தைச் சுவைத்த ஆடு மரணப் பாதையில் உதிர்ந்த ரோஜாக்களை மேய்ந்துகொண்டிருந்தது. நகரமெங்கும் ஒலிக்கும் கடைவாய்ப் பற்குழியில் மே மே எனக் கத்துமோசை. மின் கம்ப உச்சியிலாடும் கோவக்கொடியின் காய்ந்த நுனி தேனைச் சுமந்து காற்றிலாடுகிறது. பெரியபாளையத்தம்மன் கோயில் புற்றினோரம் அசைபோடும் ஆட்டுக் குட்டி ஐந்து தலை கல்நாகத்தின் வாயை மோந்து புழுக்கையிட்டது. மென்பச்சைச் சுவரில் ஓமென்ற வார்த்தையைச் செருகி நின்ற கரும்பு வேலில் கணுக்களை எண்ணுகிறான் வீடு திரும்பும் ஈவ் பள்ளிச் சிறுவன். அரச வேரின் நிழலில் பீடியைப் பற்ற வைத்த தீக்குச்சி தாடியைப் பொசுக்குகிறது. புகை புகையாய்ப் பறக்கின்றன நரைமுடிகள். அப்புகையினுள் மாசா அமினியின் இறுதி ஊர்வலம் துப்பாக்கிச் சூட்டில் பொசுங்குகிறது. மயிரை வெட்டும் ஈரானியப் பெண்கள் ஹிஜாப்பைக் கொளுத்துகின்றனர்.
- சுடுகாட்டுக் கறுஞ்சிவப்புக்கொடி
மூலக்கொத்தளம் சமாதி மேட்டில் மலம் கழிக்கும் சிறுவன். சிறுநீர் வாடையை நுகர்ந்து உரக்கச் சிரித்த மண்டையோடுகள் கிரானைட் கல்லறைகளைச் சம்மட்டியால் ஓங்கியோங்கி அடித்தன. பிளந்து தெறித்த துகள்கள் வீழாது வானில். எலும்புக்கூடுகளாய் ஒட்டியிருந்த கம்பிகளைச் சேகரித்த இடைச்சி தேடும் ஆடுகள் மேய்ந்தவாறே பிணமெரியும் தழலில் நுழைந்து புளியங்கொம்பை வளைக்கின்றன. மல்லிப்பூக்கள் பரந்துதிர்ந்து கிடக்கும் சமாதி மேட்டை நக்கிக்கொண்டிருந்த மிருகம் புதர்ச்செடிகள் விலகும் சத்தத்தில் அலறியோடியது. அதன் மூக்கில் ஒட்டியிருந்த காராப் பூந்திகள் வழியெங்கும். யாருமற்ற சுடுகாட்டு மைதானத்தில் வடக்கிலிருந்து பறந்து வரும் கால்பந்து, தெற்கை இழுத்துச் செல்கிறது. உருண்டோடும் பந்தை முன்னும் பின்னுமாய்த் துரத்திச் செல்லும் இரு ஜோடி காலணிகளுக்கு எண்ணிலிறந்த மணிக்கட்டுகள் ஒன்றை ஒன்றை உரசி ஒலியெழுப்புகின்றன. இடைவிடாது ஒலிக்கும் விசில் சத்தம் சுடுகாட்டை அனல் பறக்கவைக்கிறது. செடிகொடிகளை விலக்கி நடராசன், தாலமுத்துக் கல்லறையைத் திறக்கிறார் பெரியார். சிறைக் கொட்டடிகளில் சிந்தும் ரத்தம் ஆழியாய்ப் பெருக்கெடுக்க, மிதக்கும் படகில் உயர உயரப் பறக்கிறது கறுஞ்சிவப்புக்கொடி.
- இரு திசைகளிலும் நகரும் ரயில் பெட்டிகள்
சுடுகாட்டின் வடக்கே கிழக்கும் மேற்குமாய் நீளும் முடிவற்ற தண்டவாளங்களைப் பன்றிகள் மேய்கின்றன. உறுமல் சத்தத்துடன் தூரத்துக் கானலில் அலைவுறும் ரயில். தண்டவாளத்தின் மீது மலம் கழிப்பவன் செல்திரையில் மூழ்கியிருந்தான். அவன் பிடரி மீது காய்ந்த மலத்தை எறிந்த முதியவள் இருப்புப் பாதையினோரம் கீரையில் தோய்ந்த இட்லி தோசைகளைப் பன்றிக்குத் தின்னக் கொடுத்தாள். தனியே விழுந்த வாகெலும்பிலிருந்து சுண்ணாம்பு எடுத்து நாக்குச் சிவந்த நிலைய அதிகாரி எலும்பில் துளையிட்டு நீரெடுத்துப் போத்தல்களில் நிரப்புகிறான். பிரியும் இரு தண்டவாளங்களுக்கு நடுவே பாழடைந்த மைதானத்தில் இளைப்பாறும் காற்பந்தைப் பன்றிகள் புதருக்குள் எத்திச் செல்கின்றன. புதராழத்திலிருந்து வான்நோக்கிப் பன்றியைத் தூக்கித் தூக்கிப் போட்டு விளையாடும் பந்து கண்ணாடிச் சில்லுகளில் கிழிந்தது. காற்றுடைந்த பந்து நார் நாராய்க் கிழிந்து பஞ்சாய்ப் பறந்தன. இரும்பு வேலியில் காயும் முதுகெலும்பை உடுத்திய ஈரச் சட்டை பள்ளிக்குச் செல்கிறது. சுடுகாட்டின் கிழக்கிலுள்ள ராம்தாஸ் நகரில் குரங்கு பொம்மையைத் தரையிலடித்து விளையாடும் சிறுவன் சிதறிய சஞ்சீவி மலைக்குள் ஒவ்வொரு விரலெலும்பையும் நுழைத்துத் துலாவுகிறான். தொழுவமிருந்த சமாதி மேட்டில் துளையிட்டு வானை எட்டிப் பார்க்கும் குரங்கு ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமானெனக் கத்தியது. பன்றிகளின் உறுமல் சத்தத்துடன் அதிரும் தண்டவாளங்கள் இரு திசைகளிலும் பெட்டிகளை நகர்த்துகின்றன.
- கிழக்கில் ஆடும் வால்
கடற்கரைப் புல்வெளியில்
செங்குத்தான இரண்டு கொம்புகள் மேய்கின்றன
செல்போனில் முகம் புதைத்தபடி
துண்டைக் கட்டி உள்நுழையும் ஆடவர்கள்
தண்ணீர்ப் போத்தலை நட்டுவைத்துக் குத்துக்காலிட்டனர்
வெகுநேரமாய்ப் புல்வெளியைக் கழுவிக்கொண்டே இருக்கிறான் ஒருவன்
மற்றொருவன் காலிப் போத்தலுடன் வெளியேறுகிறான்
அப்போது அடித்த பலத்த காற்றில்
கரையில் நழுவிய துண்டு அலைகளில் மிதந்தலைகிறது
ஏதுமறியா அவன்
நிர்வாண வீடியோவில் குதூகலிக்கிறான்
புற்களை விட அமோகமாய் விளைந்திருக்கும்
பாலித்தீன்களை மேய்ந்த மாடு
கிழக்கு நோக்கி வாலை ஆட்டுகிறது.
- துள்ளி வரும் ஏமாந்த நா
அ
திருவான்மியூர் தீவுப் பூங்காவின் இரும்புக் கதவு
துருப்பிடித்திருக்கிறது
எஞ்சிய பகுதிகளையும் இளைக்கும் மாட்டின் கயிறு
இரு மின்கம்பங்களுக்கிடையே
கேபிள் வயரில் பயணிக்கிறது அணில்
தீவு மூழ்கும்படி பூத்திருக்கும்
இளஞ்சிவப்புக் காகிதப் பூக்கள்
அதன் முள்ளில் ஆடும் சிட்டுக்குருவி
வேர்களில் இரை தேடும் எலி
வாகனச் சத்தத்தில் ஒளிகிறது.
ஆ
சிறுநீர் நாற்றத்தில் நொங்கு விற்பவனின் மனைவி
தண்ணீர்ப் போத்தலில் முகங்கழுவி
கிழக்கை வணங்குகிறாள்
வெகுநேரமாய்த் தலைகோதும் மற்றொரு பெண்
குவிந்து கிடக்கும் வாகன உதிரிப் பாகங்கள் மீது
சிந்திய மூக்கை எறிகிறாள்
பங்கிட்ட நாற்றத்தில் கோணியை விரித்து
கூம்பு வடிவக் கொண்டைகளோடு
தேங்காய்களை அடுக்குகிறாள்
தார்ச்சாலையை மறைத்திருக்கும்
மாட்டுச் சாணத்தில் வாகனத் தடங்கள்
ஒலிக்காமல் கிடக்கும் கழுத்து மணியை உற்று நோக்கித்
தெருவிளக்கின் உச்சியில் அமர்ந்திருக்கிறது பறவை.
இ
சாலையோரத்தை அசைபோடும் கொம்புகளை
இடைவிடாது எழுப்பும் ஹாரன் சத்தம்
பூமி நடுங்க நகரும் முதுகெலும்பு
மூங்கில் கழி நொறுக்க
மேற்கூரையற்ற சந்தைக்குள் கதறியோடி
குட்டியானையில் பொறிக்கப்பட்ட
தேசியக் கொடியின் பச்சையத்தைத் துழாவியது
குப்பை லாரியில் மீந்த காய்கறிகளை எட்டி எட்டிப் பார்த்து
ஏமாந்த நாக்கு
துள்ளி வருகிறது
தூரத்தில்.
நன்றி : பச்சோந்தி நிழற்படம் – ஆனந்த் வனமயில்.