பிறகொரு ரம்மியம்
நறுமணத்துடன்
பவளமல்லி மலர்கள்
மழைத் தூறல் போல
இவன் பார்க்கப் பார்க்க
உதிர்கின்றன
சங்கு புஷ்பங்களில்
சொட்டுகிறது
நீலம்
துளசிச் செடிகளும்
கருவேப்பிலைச் செடிகளும்
போட்டி போட்டு
வளர்ந்து நிற்கின்றன
குப்பைமேனிச் செடிகளும்
தண்டுக் கீரைச் செடிகளும்
தாங்களும் இருக்கிறோம் என்கின்றன
வெள்ளைச் செம்பருத்திப் பூக்களுக்கும்
சிவப்புச் செம்பருத்திப் பூக்களுக்கும்
பூப்பதில் போட்டி
வீட்டுப் பெண்களுக்குப்
பூப்பறிப்பதில் போட்டி
பூக்களைப் பறித்து மாளவில்லை
கொத்துக் கொத்தாகக்
காய்த்திருக்கும் சுண்டைக் காய்களின் மேல்
கொத்துக் கொத்தாகக்
கனிந்திருக்கும் பனித் துளிகள்
அப்போது தான் நெற்றியில் இட்டத் திலகம் போல
இளங்காலை வானப் பின்னணியில்
புத்தம் புதிதாகச் இந்தச் செவ்வரளிப் பூக்கள்
மணிவெளிச்சம் போலப்
பாதி பழுத்த பப்பாளிப் பழங்கள்
வேப்பங் கொழுந்துகளும்
வாழையிலையை ஒத்த
பொல்லாச் சிறகுகள் கொண்ட
மஞ்சள் செடிகளின் இலைகளும்
எங்களையும் பார்க்கலாமே என்கின்றன
தொட்டியில் வளரும் புதினாவும் கற்பூரவள்ளியும்
எங்களை இப்போதே பறிக்கலாமே என்கின்றன
ஊர் சுற்றுவது போல
வீட்டை ஒரு முறைக்கு இரு முறை
சுற்றி வருகிறான் இவன்
வீட்டுக்கு முன்
தெருவோரம்
பதின்மப் பருவப் பிள்ளைகள் போல வளர்ந்து நிற்கும்
பாதாம் மற்றும் பூவரச மரங்கள் உதிர்க்கும்
இலைகளும் பழங்களும்
உள்ளேயும் வெளியேயும் சிதறிக் கிடக்கின்றன
வீட்டுப் பெரியவருக்கு இது ஒரு வேலை
குப்பை கூளத்தைக் கூட்டி மாளவில்லை
தெருவுக்கு அந்தப் பக்கத்து வீட்டில் இருக்கும்
மாடிகள் தாண்டி
இருபதடிகளுக்கும் மேல் உயர்ந்து வளர்ந்த
தென்னை மரக்கிளையில் அமர்ந்து
கத்தும் கருங்குயிலுக்குப் பின்னே இருந்து
இந்த நாளை இப்போது துவங்கலாமா
இல்லை இன்னும் கொஞ்ச நேரம் போகட்டுமா
எனச் சற்று சோம்பேறித்தனமாகப் பார்க்கின்றது
சூரிய வெளிச்சத்தின் காரிய நிமித்தம்
அந்த வீட்டில் இருந்து இந்த வீட்டுக்கு
ஓடி வருகிறது இந்த வீட்டின் வசிப்பிடவாசி அணில்
கரண்ட் கம்பிப் பாலத்தின் மேல்
ஒரு பெண் நாயும்
ஒரு ஆண் நாயும்
தெரு நடுவே
புணர்ந்து மகிழ்கின்றன
மழையை மறைத்தபடி நகரும்
அந்தச் சில மேகங்களைப் போல
இவன் வீட்டிற்குள் செல்கின்றான்
மனதில் இருந்த மறுமொழியை
மறந்தபடி.
தேசியப் பூங்காவில் ஒரு காலை: ஆரணியத்தின் தொடர்கனவு
புள்ளிமான்களின் மேல் மலைவிரித்தக்
கொம்புக் கிளைகளின் பட்டு ஓரங்கள் ஒளிர
தேக்கு மரங்களின் இலைக் குறிப்புகளை
காட்டு மைனாக்கள் பாடல்களாக்கி ஒலிக்க
வாகனங்கள் வழிமறிக்க வனச்சாலை கடக்கும் யானைக் கூட்டம்
புற்களைப் பறிக்கும் தும்பிக்கைகளால் புன்னகைக்க
ஹனுமன் லங்கூர் குரங்குகளின் சோம்பற் பார்வைகள்
சுறுசுறுப்பாகித் தம் வால் விறைத்து மரம் தாவ
அடவிப் பச்சையத்தின் சுபிட்சத் திரட்சி பெருக்கெடுத்து வழிய
பாம்புண்ணிக் கழுகு தலை சாய்த்துத் தன்னிலை விளக்க
காட்டெருமைகளின் காலடிக் குளம்புகள் தொட்டு மண்பூமி குழம்ப
மலபார் மலை அணில் ஏறும் செம்மரம்
காட்டுப்பன்றி முதுகு சொறிந்து பட்டை உதிர்க்க
தோகை அடக்கிய நீல மயில் அகவல் மறுக்க
காட்டுக்கோழி தன் இணை துரத்த
கடமான்குட்டிகள் நிலம் பதுங்க
குளத்தில் நீர் அருந்த வரும் புலியை
ஒளிப்படம் எடுக்கக் காத்திருந்து ஏமாந்த குடும்பம் ஒன்று
விடுதி திரும்பி அன்றைய மாலையின் காட்டுப் பயணம் தவிர்க்க
அம்மாலைப் பயணம் சென்ற அண்டை அறை ஐரோப்பிய ஜோடி
தாம் கண்ட அந்தப் புலியின் சௌந்தர்ய ஒளிப்படங்களைக் காட்டிக் களிக்கின்றனர்
இன்னும் தம் வாழ்வில் ஒரு கானுயிர் புலி கூட பார்த்திராத
அக்குடும்பத்தை மேலும் ஒரு கானக உலாவிற்குத் தயாராக்கி
ஆரணியம் மேலும் ஆர்வமாகிறது ஒரு கெலைய்டாஸ்கோப்பின் தொடர்கனவாக.
தேசியப் பூங்காவில் ஒரு மாலை: வனதேவதையின் மிகை வருத்தம்
600 மி.மீ தொலைநோக்குக் கண்ணாடி ஒளிவில்லையில் கண்டது என்னவோ
வெகுதூரத்து மின்னலின் சவுக்குச் சொடுக்கில் அதிர்ந்து உதிர்ந்த
அருகாமைச் சரக்கொன்றை மரத்தின் பொற்பூக்களின் அருட்பெருந்தடம் தான்
புரசு மரமோ இக்கானகத்துத் தீயின் தீபக்கொத்தைத் தன் இதழ்களில் ஏந்தி நின்றது திகட்டாத பகட்டாக
குரைக்கும் மான் ஒன்றின் அழைப்பின் பெயரில் திருப்பிய கழுத்து தரிசித்தது என்னவோ
மஞ்சள் அரளி மரம் ஏறிப் பூப் பறித்துக் காம்பு நீக்கி அதன் பின்பகுதியிலிருந்து இயற்கை விஷத் தேன் உறிஞ்சிப் பார்த்த
குல்லாய் குரங்கு நாளை உயிரோடு இருக்குமோ என்ற அதன் எதிர்காலத்தின் எதிர்கேள்வியைத் தான்
எனினும் 90 டிகிரி திகிரியில் தலை சாய்த்துத் தன் நாவால் தன் புறம் வருடிய பெண் புள்ளிமானுக்குத்
தன் காலடியில் கிடக்கும் செம்மார்புக் குக்குறுவான் பறவைகள் தின்ற ஆலம்பழ மிச்சில் பற்றிக் கவலையில்லை போல
வந்து சேர்ந்த பெரிய பொன்முதுகு மரங்கொத்தியோ இந்தக் கடம்பு மரத்தைக் கொத்தலாமா வேண்டாமா என யோசித்தது சில வினாடிகள்
பச்சைப் பஞ்சுருட்டான் தான் பிடித்த ஈசல் பூச்சியைத் தூக்கிப் போட்டு அலகில் பிடித்து சற்று நேரம் விளையாடியது
ஒரு கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகம் செல்லும் பாவனையுடன் காட்டுச் சாலை கடந்தது வரிக்கழுத்துக் கீரி தன் உடல் நிழலில் பதுக்கிய தன் குட்டியுடன்
கருங்கொண்டை நாகணவாய் ஒன்று தேடியது இந்த வனாந்திரத் தரையில் தன் மாலை உணவுக்கான புழுக்களை
காட்டெருதுக் கன்றுக்குட்டிகள் மிக மெதுவாக மேய்ந்து சென்றன
விடுதி திரும்பி முகாம் தீயில் குளிர் சாய்த்துப் பின் உறங்கப் போனோம்
பின் நள்ளிரவில் விடுதி தேடி வந்து புல் மேய்ந்த நூற்றுக் கணக்கான புள்ளிமான்களின் கூட்டம் தம் நட்சத்திரக் கண்களில் ஒளிவிட்டுக் காட்டியதைத்
தான் மட்டும் சப்தம் கேட்டு எழுந்து தரிசித்ததை என்னையும் எழுப்பி என் ஒளிப்பட ஆர்வத்திற்குக் காட்டாததை
இன்னுமும் சில இரவுகளில் சொல்லிப் புலம்புகிறாள் என் வீட்டு வனதேவதை.!