- சந்திப்பு
இதற்கு முந்தைய நொடியில் இருந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன்
அவனோ போன வருடத்தின் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறான்
ஒரே அறையில்
சினேகமாகச் சிரிப்புடன் அவரவர் தேடலைத் தொடர்கிறோம்
ஒரு வேளை மாற்றித் தேடினால்
கிடைத்துவிடுவோமோ என்ற நப்பாசையில்
போனவருடத்தின் என்னை நான் தேடிப்பார்க்கின்றேன்
அவனும் முந்தைய நொடியின் அவனைத் தேடுகிறான்
இருட்டிவிட்டதால்
நாளை காலை தொடரலாம் என்ற உறுதியுடன்
பிரிந்து செல்கிறோம்
இக்கணத்து நானும் அவனும்.
- ஊசலாட்டம்
உயிரான பூஞ்சாடியில் முதல் விரிசல்
உயிர் உருக்கிய காதல் கொண்டு
பொன் ரேகையாய் பூசலாம்
இல்லையேல் ஓங்கி உடைத்துவிட்டு
மானத்தோடு கிளம்பலாம்.
- தோல்வியுற்றவன்
தோல்வி தன் அழியாச் சாயத்தை அவன் முகத்தில் பூசியிருந்தது
நிலைத்துப் பார்க்க முடியாமல் நொடிக்கு ஒரு முறை தரைப் பார்க்கும் கண்களில்
பாதி விழுங்கிய வார்த்தைகளில்
பதற்றத்துடன் விடும் மூச்சில்
அதைக் கரைத்துக்கொண்டிருந்தான்
அஸ்தமிக்கும் சூரியனின் வானத்தைப் போல
அழிக்க அழிக்க வேறு வேறு நிறம் கொண்டது அவன் முகம்
முழுவதுமாக இருள் சூழும் வரை…
- கல்யாண வீட்டில் கடிகாரம் பரிசளிப்பவன்
எல்லா கல்யாண வீட்டிலும் சுவர்க் கடிகாரம் பரிசளிப்பவனை
உங்களுக்குத் தெரியுமா?
காலத்தைச் சுமந்து வருபவன்
தாலி கட்டியபின் தாமதமாகவே வருவான்
மேடையேறக் கூச்சப்படுவான்
அதனால் அவன் புகைப்படத்தைப் பார்த்திருக்க மாட்டீர்கள்
யாராவது கட்டாயப்படுத்தி
மேடைக்கு இழுத்துச் சென்றாலும்
புகைப்படம் எடுக்கும் அந்த நொடியில்
சரியாகக் கண்களை மூடிவிடுவான்.
பாயசமோ இனிப்போ- எதுவோ ஒன்று
இவன் இலையில் மட்டும் வைக்கப்படாமல்
விடுபட்டுப் போய்விடும்.
இத்தனைக்கு பிறகும் அவன் தன்னைத்தானே நொந்துகொள்வானே
அன்றி உங்களைப் பற்றி ஆவலாதி எதுவும் கூற மாட்டான்
மனதார வாழ்த்திவிட்டே செல்வான்
ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள்
அவன் கொடுத்த கடிகாரத்தை
எக்காரணம் கொண்டும் புது ஜிகினா காகிதம் சுற்றி
மறுசுழற்சி பரிசாக வேறொருவருக்குக் கொடுத்துவிடாதீர்கள்.
அவன் தன் வாழ்நாளின் சிறு பகுதியை
வரமாக உங்களுக்குத் தந்திருக்கிறான்.
என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- தீரா பொறாமை
அம்மாவே நடந்து வருவது போல் இருந்தது
கொஞ்சம் உயரமான ஒல்லியான அம்மா
அம்மாவின் சேலை அணிந்து வருகிறாள் தங்கை
மிளகாய் பழ சிவப்பில் ,
கட்டங்களுக்குள் அடைபட்ட சக்கரம்
சுழன்று சுழன்று நினைவு தப்புகிறது
அடக்க முடியாதொரு கோபத்தில்
முந்தானையின் குஞ்சங்கள் நான்கைந்தை
நான் நறுக்கிவிட்டேன்.
நல்ல நேரம் அம்மா அதைக் கவனிக்கவில்லை
சக்கரங்கள் இன்னும் வேகமெடுத்துச்
சுழல்கின்றன ,கட்டங்களை மீறாமல்.
“கிளம்பலாமா” என்று ரத்தம் சொட்டச் சொட்டக்
கேட்கிறார் ஒல்லியான உயரமான அம்மா .
கவிதைகள் வாசித்த குரல் : சிவநித்ய ஸ்ரீ
இந்தக் கவிதைகளை Spotify செயலி மூலமாகவும் கேட்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள். குரலும் உச்சரிப்பும் அருமை. சிறப்பான முயற்சி
அருமையான கவிதைகள். அனுராதா அவர்கள் நேரடி தமிழ் கவிதைகளையும் அதிகம் எழுத வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.