இரவையும் தன்னையும் குடிக்கின்ற மதுக்குப்பியொன்று
அவன் வசமுள்ளது.
மிதந்தே கழிகின்ற அவ்விரவில்
தனது ஆற்றாமையை புலம்பல்களாய்
நிரப்பிக் கொண்டிருந்தான்.
குடிகாரனென தூற்றப்பட்டு
ஒருவர்கூட செவிமடுக்க விருப்பமின்றி நகர்கையில்
சொல்வதைக் கேட்கிற காதுடையதாய்
குப்பி மட்டுமேயிருப்பதாக தீர்க்கமாய் நம்புகிறான்.
பகலெல்லாம் மிதிபட்டுச் சீரழியும் வாழ்க்கையின்
ஒற்றைத் ராத்துணையெனக் கொள்கிறான்.
அந்நாளைய இழிவுகளையும் அவமானங்களையும்
விழுங்கிட அது தேவையென்கிறான்.
அது தன்னை தவணையில் விழுங்குவது குறித்தும்
அறிந்தே இருக்கிறான்.
வாழ்க்கை மட்டுமென்ன
என வாதிக்கவும் செய்கிறான்
மறுகேள்வியின்றி உருண்டு கொண்டேயிருக்கிறது
குப்பி.
- அகழாய்வறிஞன் நாட்குறிப்பிலிருந்து
உடைக்கவியலா மௌனம் கொண்டு
ஒரு யுகத்தின்
கதையை எழுதியது காலம்.
அதை யாருமறியாமல்
பின்னாளில்
யாவருமறிய வசதியாய்
பாறைகளுக்கிடையில்
பொதிந்து வைத்தது.
- எண்களின் அதிகாரி
அடையாளங்களை உருவாக்கும் அதிகாரி
எண்களோடு விளையாடுபவன்.
கண்மணிகள், கைரேகைகளென அத்தனையும்
தொகுத்து
தொடர்வண்டியையொத்த
நீண்ட எண்ணோன்றை பெயரெனச் சூட்டுகிறான்.
தனித்த அடையாளங்கள் யாவற்றுக்குமான
பதிலியென அதனை நிரப்புகிறான்.
தகவலென சுருங்கிப் போன மனிதர்களை
யாரோ களவாடத் துவங்கிய நாள் முதல்
எண்கள் அரற்றத் துவங்கின.
யாதும் நலமென நம்பிக்கையூட்டுகிறான் அதிகாரி.
- இதழ் தேடும் கோப்பை
தேன் நிறத்துத் தேநீர்
கொதித்துக் கொண்டிருக்கிறது கோப்பையில்
யோசனையில் கரைந்து கொண்டிருப்பவனிடம்
பருகுமாறு சமிக்ஞை செய்கிற
குளிருறுஞ்சும் ஆவியின் நெளிநடனம்
தனை மறந்து சிலையானவனுக்கு
எது குறித்தும் பிரக்ஞையில்லை.
எப்படியேனும் கவனம் ஈர்த்திட
ஆரஞ்சு நிற சூரியனை
வட்டமாய் நறுக்கிய பப்பாளித் துண்டென
திரவத்தின் மீது மிதக்க விட்டுப்பார்க்கிறது.
குடலை உறிஞ்சி வயிற்றை நிறைத்துக் கொள்ளும்
யத்தனத்துடன் கனன்று கொண்டிருக்கிறது
வினயமான சிறுவனின் விரல்களில் அகப்பட்ட
தும்பியாய் படபடக்கிற மொத்த உடல்
யாசிக்காதே
பால்யத்து வியாக்கியானங்களை
மீட்டெடுக்கிற மூளையின் வலைவீச்சை
அறுத்தெறியத் துவங்குகிறது
கூரேறிய கொடும்பசி குறுங்கத்தி
சர்வமும் அடங்கும் முன்
நினைவெனும் தொடர்வண்டியின் கடைசிப் பெட்டியென
சிந்தனையொன்று மிணுங்கி மறைகிறது.
இயற்கை எழுதுகிற மரண ஓலைகளில்
ஆகக் கொடுமையானது
பசியின் மை தொட்டு எழுதப்படுபவை.
கவிதைகள் வாசித்த குரல் : வருணன்
Listen On Spotify :