-
ஆண் நோக்கு
எறும்புப் புற்று போன்று அந்த மார்புகள் சிறிதாக எழுந்த போதா?
இல்லை
பாம்பு போல இடை சிறுத்து வளைந்த போதா?
இல்லை
ஒரு ஜோடிக் கண்கள் உன் உடலை வெறித்த போதா ?
அக்கண்களில் ஒளிந்திருந்த வேட்டை மிருகத்தை உணர்ந்த போதா?
அதன் அடங்கா பசியின் தகிப்பு உன் தோலைப் பொசுக்கிய போதா?
பார்க்க, சுகிக்கப் புசிக்க உரிமைப்பட்டவர்கள் நாங்கள்
என்று அக்கண்களில் எழுதப்பட்டிருந்ததை படித்தபோதா?
எப்போது இப்படித் தோள்களை வளைத்து,
உடம்பெல்லாம் விழித்திருக்கும் கண்களுடன்
நாலா பக்கமும் பார்த்துக்கொண்டு
பசிகொண்ட மிருகம் ஒன்று தேடும் சிறு இரையைப் போல
ஓடி ஓடி ஒளிந்து ஒளிந்து நடக்கப் பழகினாய்?
-
கனவு
சூரியனை அணைத்துவிட்ட நாளொன்றில் பிறந்தவன்
எங்களின் சிலுவையைச் சுமக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்
இருட்டில் பார்வை கொண்ட கூகை
சமன் செய்து சமன் செய்து களைத்த துலாக்கோலைப்
போல வளைந்த முதுகில்
சகோதரிகளை, அன்னைகளை
குழந்தைகளை பொதியாகச் சுமப்பவன்
நரம்புகள் புடைக்கப் புடைக்க மலையேறுகிறான்
நயமான வெள்ளை மஸ்லின் துகில் கொண்டு
காதலிகள் அவனது வேர்வையை ஒத்தி ஒத்தி எடுக்கிறார்கள்
பருக பழரசம் ஊட்டி விடுகிறார்கள்
குருதி காய்ந்த பாதத்திற்கு களிம்பிடுகிறார்கள்
வழியெங்கும் சாமரம் வீசி அடி பணிகிறார்கள்
அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
உலகம் வெடித்து வெடித்துச் சிதறுகிறது
வான் தேவதைகள் மலர் தூவி ஆர்ப்பரிக்கிறார்கள்
அவனது கலைந்த நீள் முடியில் நம்பிக்கையைப் பூசியிருக்கிறான்
உடம்பில் ஊற்றாக வழியும் வேர்வையில் உயிர்த்தலின்
திரவியம் கலந்திருக்கிறது
அவன் கண்கள்!
அய்யோ! அந்தக் கண்களின் காந்தத்தில்
வார்த்தைகள் எல்லாம் கவரப்பட்டு
பிரபஞ்சமே சொல்லற்று போகிறது
சூரியனைப் பிரதியெடுத்த பார்வை கொண்டு
முழு ஜென்மமும் உய்விக்க வல்லான்
அவன் பாரம் தாளாமல் தன்னிச்சையாக உறுமுவது
பாடலாகக் கேட்கிறது
பேசுவதனைத்தும் காதலுடன் மிளிர்கிறது
அத்தனைப்பேரையும் கட்டியிழுத்து ,
உச்சியடைந்து,
வெற்றிக் களிப்பில்
பிளிறியபின்
மல்லாந்து கிடக்கிறான்
அவன் தாகம் தணிக்கத் திராட்சை ரசம் ததும்பும்
கோப்பைகளை மெல்லிய கரங்கள் நீட்டுகின்றன
திராட்சை ரசம் பருகியே உயிர்த்தெழுகிறான்
யூதாஸ் இல்லாத இவ்வுலகில்
துரோகம் என்பது முகத்தைத் திருப்பிக் கொள்வது
புரம் பேசுவது
அவ்வளவே
அவனைச் சிலுவையில் அறைய யாருமில்லை
முப்பது வெள்ளிகள் மிச்சம்