- மகா எதிர்–கவிதை
தூக்கமின்மை போக்கும் இசையைக்
கேட்கத் துவங்கும் முன்
ஒரு எதிர்–கவிதையின்
சாமுத்ரிகா அவலட்சணங்கள் குறித்து வரும்
இந்த விளம்பரம் பார்க்க நேரிடுகிறது
உங்களுக்கு
நிச்சயம் இந்த எழுத்து
போலி தான்
அவ்வளவு இயல்பானதாக இருந்தால்
தானே உருவாகியிருக்க வேண்டும் இது
யாரும் சொல்லாமலே
எதுவும் செய்யாமலே
வீட்டுத் தோட்டத்தில் விரிந்து பொலியும்
இந்தக் ‘காட்டுத் தீச்சுடர்’ மலர்கள்* போலே
தேர்வுக்கு வந்து
நிரம்பி வழியும் பக்கங்களிலிருந்து
உங்கள் படைப்பை நிராகரிக்கிறார்
பத்திரிக்கை ஆசிரியர்
அது வந்து விழுகின்றது
உங்கள் குப்பைத் தொட்டியில்
நல்ல வேளை
பலர் வீட்டுக் குப்பைத் தொட்டிகளை
அவர் காப்பாற்றினார்
ஒவ்வொரு முறையும்
ஆணுறையை தலைகீழாக அணிந்து
பின் சுதாரித்துச் சரி செய்து
மாற்றிக் கொள்கிறான் அவன்
பெண்ணுறையை அணிந்துகொள்ள
எப்போதும் மறுக்கிறாள் அவள்
நீங்களோ மது அருந்துவதை நிறுத்திவிட்டதால்
‘மாசா’ வாங்கிக் குடிக்கிறீர்கள்
கறிக்கடைக் கோழிகள்
இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றன
செல்லப் பிராணிகளின் கூண்டுகளுக்குள்
அதிகாலை கசங்கத் தொடங்குகிறது
ஞாயிறு போற்றுதும் என்று
அகஸ்மத்தாகச் சொல்லி வைக்கிறீர்கள்
* – ‘காட்டுத் தீச்சுடர்’ மலர்கள் – பலாசு / புரசு – Flame of the Forest
- பழக்கப்படுத்தப்பட்ட சொற்களும் வளர்ப்பு வார்த்தைகளும்
நீங்கள் இப்போது
பழக்கப்படுத்தப்பட்ட சொற்களுடன்
பழகத் தொடங்குகிறீர்கள்
உரையாட உரையாட
உங்களுக்கும் இந்த ‘அரட்டை இயலி’-க்கும்*
வித்தியாசம் இல்லாமல் போகிறது
உங்களுக்கு இப்போது கவிதை எழுதத் தெரியும்
கதை எழுதத் தெரியும்
ஓவியம் வரையத் தெரியும்
இசையமைக்கத் தெரியும்
ஒளிப்படம் எடுக்கத் தெரியும்
காணொளிப் படம் உருவாக்கத் தெரியும்
கணினி மென்பொருள் நிரலாக்கம் தெரியும்
உங்களுக்கு இப்போது ஏறக்குறைய எல்லாம் தெரியும்
உங்கள் வளர்ப்பு வார்த்தைகள்**
உங்களை வளர்த்தெடுக்கின்றன
எப்போதும் பல்லண்டத்தின் பரவெளியில்
வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள்
இதற்கெல்லாம் என்ன அர்த்தம்
என்றெல்லாம் கேட்பதில்லை
யோசிக்கும் இன்பத்தை விட
வாசிக்கும் இன்பம் முக்கியம்
உங்களுக்கு
* – ‘அரட்டை இயலி’ – chatbot
** – வளர்ப்பு வார்த்தைகள் – prompts
*** – பல்லண்டம் – metaverse