1.ராயல் ப்ளட்
கலப்படமற்ற பூக்களின்
இதழ்களை மகரந்தங்களோடு
வேகவைத்து
சொட்டுச் சொட்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடிக் குடுவையிலிருந்து
முதன் முதலாக
வெளியேறும் வாசனையை
நுகரப்படும்போது
நாசியின்
அத்தனை உணர்கொம்புகளும்
சல்யூட் அடிக்கிறதா
குட்
உயர் போதைக்கென
சர்ப்ப நாவுகளை
நாக்கில் தீண்ட விடுதல்
மலையிலிருந்து வழியும்
முதல் நீரில்
அலசும் போர்வை
கடலுக்கடியிலுள்ள மீனின் சினைமுட்டைகளை
கவரும் நெகிழிக் கைகள்
ஓநாயின் தலை
யானையின் தந்தம்
மான் கொம்பு
சிங்கத்தின் பல்
நீண்ட லம்போகினி வாகனத்திலிருந்து இறங்கி
வாடிகன் வளாகத்தின்
தங்கக் கோப்பையில்
பெறப்படும் முதல் அப்பம்
தரப்படும் இருக்கை
பெறப்படும் இருக்கை
பறிக்கப்படும் இருக்கை
அதே சிவப்புடன்
அதே சிவப்பில்லாத
ராயல் ப்ளட்.
2. இறுதியென நம்பப்பட்ட காலத்தின் முதல் பொய்
நீங்கள் நினைத்ததை விட நான் பலகீனமாக இருக்கிறேன்
நீங்கள் கொடுக்க நினைத்த துரோகத்தைவிட
பெரிய துரோகத்தில் இருக்கிறேன்
நீங்கள் தண்டிக்க நினைத்த குற்றங்களைவிட
கொடூரங்களில் இருக்கிறேன்
நீங்கள் என்னை கொல்வதற்கு விரைந்து வருகிறீர்கள்
நான் கொல்லப்படுவதற்கு உங்களிடம் விரைந்து வருகிறேன்
ஆனால் இடைவெளி நீளமாகிக்கொண்டே போகிறது
எனது இதயத்தில் ரத்தம் வழிகிறது
நீங்கள் சுவைக்க மறுக்கிறீர்கள்
இரக்கமற்ற பாடல்களை பாடுகிறீர்கள்
நான் இருண்டுப் போகிறேன்
நீங்கள் ஒருபோதும் என் எஜமானர்களில்லை
வியர்வைக்கு
சம்பளம் தர மறுக்கும் கயவர்கள்
ஆணிகள் அறையப்பட்ட படுக்கை சாய்ந்துகொள்ள அழைக்கிறது
தலையின் மீது தொங்கும் கத்தி
எழுந்து நிற்க சொல்கிறது
சொற்களின் நிர்வாணம் ஒளியெனப் படர்கிறது
பின் அஸ்தமிக்கிறது
ஐயோ எம்பிறப்பின் ஊற்றுக்கண்ணே
கண்களை மூடிக்கொள்
ஏனெனில்
உங்களுக்கு பெயர் நான்
எனக்கு பெயர் காலம்
அல்லது நீங்கள்.
3. நிர்க்கதியாய் நிற்கும் வாக்குறுதிகள்
வெள்ளை துணியால் சுருட்டப்பட்ட
உடல்களிலிருந்தும் கசியும் ரத்தம்
வாழ்வதற்கு மறுக்கப்பட்டு தூக்கியெறியப்பட்ட சூழ்ச்சி
உதறிக்கொள்ளும் கைகள்
உதறிக்கொள்ளும் கால்கள்
கடல் தன் நிறத்தை உரிக்க முற்படும் அந்தி
குரல்களின் மொழி
டெஸிபல் படிக்கட்டுகளில் ஏறுகிறது
வான் நோக்கி
திறவே இல்லாத வாசலை நோக்கி
தேள்களின் கொடுக்குகளுக்கு நகப்பூச்சு பூச முற்படும்
உலக கொடிகளிலிருந்து
அதிர்வலையாய் உதிரும் வெள்ளை நிறத்தை
வெள்ளை மாளிகைக்கு பூசுதல்
அவர்களின் நாட்குறிப்பிலிருந்த
ஞாயிற்றுக்கிழமைகள் காணாமல் போகின
வீதியில் இறைந்துகிடக்கும்
விளையாட்டுப் பொருட்கள்
குழந்தைகளை தேடுகின்றன
ஆனால்
குழந்தைகள்
உறவுகளின் முகங்களைத் தேடுகின்றன
உறக்கமற்ற விழிகள்
உணவற்ற பசி
உடையற்ற தோல்
உலகமே வேடிக்கை காண்
நீ ரசிப்பதற்கு பிறந்தவன்
இடிபாடுகளிலிலிருந்து
பிடுங்கியிழுக்கப்படும்
உடல்களின் மீது
பந்தயம் வை
அதோ
உங்களை விட
மனநிலை பிறழ்ந்தவனென
அழைக்கப்பட்டவன்
தன் கையிலுள்ள
வெடிமருந்து துகள்களை
மென்று தின்னப்போகிறான்
உன்
கேமராவை அசைக்காமல்
ஜூம் செய்து பதிவாக்கி
வலையொளியில் பரப்பிடு.