தனித்த பறவையின் சிறகுகளில்
கீழிறங்கும் காற்று
அது வனாந்தரங்களில் முதல்
ஒளியாய் விரவ
கரு நீல கண்களின் தியானங்களில்
தாவி உருளும் நீர்மணிகள்
இமையில் கனம் தாளாது
பூமிதொடும் பெரு மழை
இனி நிகழ முடியாத நீல விஷத்தை
சொற்களில் தடவும் உன் சாமர்த்தியங்களை வியக்கிறேன்
தேன் உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சியின் சூட்சுமங்கள்
உனக்கு அலாதியானவை
இறுகிக்கொண்டிருக்கும் நரம்புகளை தளர்த்த வெறுமையின்
உதிரத்தை மணிக்கட்டுவழி
வழிய விடும் மகோன்னதம் இந்த
மாலை
இந்த கசப்புகளில் தீர்ந்துபோகாத
ஒரு வாழ்தலை தான்
நான் வேண்டி விரும்புகிறேன்
சகா
****
ஒன்றை ஒன்று அறிந்திடாத
கோதுகளை அலகால் கொத்த
துவங்குகிறது நீலப்பறவை
முத்தங்களால் அறியப்படும்
இந்த காலைகள் மீது தீராத
தாபங்கள் வழுக்கி எழுகின்றன
வியர்வை வாசம் பிடரி சிலிர்க்கும்
மோனத்தவம்
அது அலையாடும் ஒற்றைப்படகு
கணத்திற்கு கணம் உயிர் தீண்டி
நினைவிழக்கும் பெருங்கனவு
கண்ணீரின் இன்பமறியும் பொன்
நொடித்தவம்
உன்னிலிருந்து உதிர்ந்து மீள
தேடும் பேதைமை
பரவிக்கிடக்கும் மணலில்
பாதம் பதிக்கும் குளிர்மை
இப்போது
தாழை மடலில் கதகதக்கும்
வெப்பம் உன் அணைப்பிற்கு.