-
வார்த்தைகளின் கடவுள்
எப்பொழுதோ
நினைத்திராத தருணத்தின்
மௌனத்திற்குள்ளிருந்து
நான் உதிர்த்த வார்த்தைகளை
கண்டுபிடித்துக் கொண்டு வருகிறாள்.
அதன் மீது படிந்திருக்கும்
காலத்தின் கலக்கங்களை
ஊதித் தள்ளி
முத்தமிட்டுத் தருகிறாள்.
பளிச்சென மின்னிக் கமழும்
அற்புதமான சொற்கூட்டங்களுக்குள்
என் வார்த்தைகள் புதிதாய்ப் பிறந்த
குழந்தைகள் போல
பொருளைச் சூப்பிக் கொண்டு
தவழ்ந்திருந்தன.
குட்டி ஒரு மாயக்காரி.
-
மாயச்சுவர்
சின்னஞ்சிறு நகங்களால்
சுவரைக் கீறும்
குட்டியின் நக இடுக்குகளில்
தவறுதலாய்
சில வார்த்தைகள்.
ஒன்று திரட்டிக் காட்டுகிறாள்.
அம்மாவிடமும் மனைவியிடமும்
குட்டியிடமும்
இன்னும் யாரோரோ அனைவரிடமும்
சொன்ன பொய்கள்
அழியாமல் மினுமினுத்திருந்தன.
பயப்பட வேண்டாமெனச் சொல்லி
அனைத்தையும் விழுங்கிக் கொண்டு
கதறி அழுதாள்.
வயிற்றுவலியென தைலத்தைப்
பூசிக் கொண்டு
என் அனைத்துப் பொய்களையும்
மன்னிக்கின்றாள்.
குட்டி ஒரு மாயக்காரி.
-
பாதத்தடங்களில் நிறையும் மழை
விளையாடிவிட்டு
வீட்டுக்குள் நுழையும்
குட்டியின் பாதத்தடங்களில்
உப்பி பல்கி
குபுகுபுவென
நிறைகிறது பருவமற்ற மழை.