-
பறிமுதலான தருணங்களின் பொருளாதார அடியாள்..
செரிக்கும் சொல்லின் எளிமையை
உற்பத்தி செய்வதாக
கையெழுத்திட்டிருந்தான் GATT -ல்
மகிழ்ந்து ஊர்ந்த பின்னிரவு சாலைகளின் டோல்களில்
அனாயசமாய் உருவித் தரப்பட்ட
பணத் தாள்களில்
இருந்த பொக்கைவாய் சிரிப்பை
பின்னுக்குத் தள்ளியது
மூன்றாம் உலக
கியர்
சிக்னல் தோறும் மாறும் நிறங்களில்
அதுவரை அறிந்திருக்கவில்லை
வரவிருக்கும்
அனைத்தையும்
கண்ணாடிச் சுவர்களின் பிரதி பிம்பமாய்
கூடவே ஓடி வந்திருந்த
நெடுஞ்சாலையின் மஞ்சள் கோடுகள்
காலாவதியாகாத மைல் கற்களை
புறந்தள்ளி நகைத்தன
பீப்
பீப்
பீப்
பீப் என்றபடியேயிருந்தது
அப்போதைய நுழைவாயிலுக்கான
கடவுச் சத்தம்
********
-
அனுமதிக்கிறேன் யாவையும்
நீண்டுக்கொண்டே போகும் இரவின் கழுத்து மீது
கையை வைக்கலாம்
தகிக்கும் உடலின் ரகசியம் குறித்து எதையாவது
சொல்லலாம்
பயனற்று உதிரும் மௌனத்தின் அடர்த்தியை
அழுத்துகிறாய்
பிடரியில்
சலனமின்றி துளிர்க்கத் தொடங்கும் வியர்வைப் புள்ளிகளை
தோள்பட்டை வளைவில்
விரல் நுனிகொண்டு இழுக்கிறாய்
சிறு துடிப்போடு பிளக்கும் உதடுகளின் ரேகைகளைத் தொடும்போது
உச்சரிக்க நினைத்த சொல்லிலிருந்து ஒவ்வோர்
எழுத்தாய்
உலர்கிறது காமம்
ப்ரியங்களோடு முத்தமிட என்னை நோக்கி நீ குனியும்போது
கண்கள் மூடுவதை வெறுக்கிறேன்
குதிகால் உயர
துள்ளிச் சீண்டும் வெட்கத்தை எட்டிப்பிடித்துவிடும்
அந்த ஒற்றைப் பார்வை
தா
இப்போதே
போதையாகி செருகிக்கொள்ளும்
இச்சாம்பல் நிற மாலை
கோப்பதற்கு ஏற்றதாய் பொழுதின் கன்னத்தைக் கிள்ளுகிறது
ரசவாதத்தோடு உயிர் திருகும் என் கணப்பொழுதின் மேல்
கவிழ்கிறாய்
தூர வனத்தின் பச்சை வாசனையோடு
நான் அனுமதிக்கிறேன்
யாவையும்
என்னைப் பரிசீலி
மேஜை மீதிருக்கும் போன்சாய் மரத்தின் ஈர வேர்
அதன் கண்ணாடி பரப்பில் அசௌகரியமாய் நெளிகிறது
என் அடிவயிற்று நினைவாகி
நீயென்ன சொல்லுகிறாய்
அனைத்துமே ஓர் உரையாடலுக்கானவை
எல்லா சம்பிரதாயங்களும் அந்தரங்கத்தின் நிலவறைப் படிகள்
சுவர்களில் எழுதித் தீரா வலியை
பத்திரமாய் வைத்திரு
உடைகிறேன்
உடைக்கிறேன்
நொறுங்கிச் சிதறி
நீண்டுகொண்டே போகும் இவ்விரவின் கழுத்து மீது
கையை வைக்கிறேன்