1
டிரைவர் அப்பா
அப்பாவுக்கு
இயல்பாகவே சூட்டுடம்பு
கோடையன்றி
தட்பத்திலும் அனலாகவே இருக்கும்
என்ஜின் சூடுடா என
வீட்டுக்கு வருகையில்
பன்றிக்கறி வாங்கி வருவார்.
எந்தப் பகலிலும்
கட்டிக்கொள்ளவே
முடியாத உக்கிரத்தின் நிழல்
லாரி என்ஜினாக
மேனியில் படிந்திருக்கும்
ஒரிஸாவுக்கு வடக்கே
லாரியில் அமர்ந்தபடி
உயிர் விட்டிருந்தவரோடு
அமரர் ஊர்தியில்
ஊர் திரும்பும்போது
பாதங்களை தொட்டுக்கொண்டே வந்தான்
மொத்தக் குளிர்காலத்துக்குமான பனி கைகளில் உறைந்திருந்தது.
2
வியாழக்கிழமையை போலத் தோற்றமளிக்கும்
வெள்ளிக்கிழமையை
எனக்கு நன்றாகத் தெரியும்
வியாழக்கிழமையைப் போலத் தெரியும் வெள்ளிக்கிழமையை இதற்கு முன்பும்
பலமுறை சந்தித்திருக்கிறேன்
கை குலுக்கியிருக்கிறேன்
முக்குக் கடையில் தேநீர் பருகி நான்தான்
காசு தருவேனென வாதம் செய்திருக்கிறேன்
உண்மையில் வியாழக்கிழமையைப் போலத் தோற்றமளிக்கும் வெள்ளிக்கிழமைகள்
புதன்கிழமையைப் போன்ற வியாழனாக
செவ்வாயைப் போன்ற புதனாக
இன்னும் பிறக் கிழமைகளாகவும் இதற்கு முன் தோன்றியிருக்கின்றன
வியாழக்கிழமையைப் போலத் தோற்றமளிக்கும் வெள்ளிக்கிழமை
தன்னை வெள்ளிக்கிழமை எனக் கூறும் நொடி வாரநாட்களில் ஒன்று குறைந்த நிம்மதியை
இவ்வளவு நேரத்திய
தற்காலிக ஏமாற்றத்தின் மீது வைத்து மிருதுவாக துடைக்கிறது
அன்றைய இரவு
ஒரு பூனைக்குட்டியைப் போல
நான்
உடல் சிலிர்த்து உறங்க
அது தேவையாக இருக்கிறது.
3
சித்தி அடித்துவிட்டாளென
அழுதுகொண்டே வந்தவன்
முதல் காயம்
இரண்டாவது காயம்
மூன்றாவது காயம்
நான்காவது காயம்
ஐந்தாவது காயம்
ஆறாவது காயம்
கடந்து நீட்டிய
வீட்டுப்பாடத்தில்
ஒரு நட்சத்திரம் போட்டு அனுப்பினேன்
நீண்ட நேரம் கழித்து எட்டிப்பார்த்தால்
நட்சத்திர ஒளியில்
களிம்பு தடவிக் கொண்டிருக்கிறான் ராஸ்கோல்.
4
ஆமாம் குருவே
சோன் பப்டியும்
பஞ்சு மிட்டாயும்
ஒன்றென நினைத்தவனை பொடணியில் தட்டி
இரண்டும் வேறு வேறு என்கிறாள்.
சோன்பப்டியும் பஞ்சு மிட்டாயும் சீக்கிரம் இல்லாமல் போகிற இனிப்புகளாம்
ஒரு நாளின் ஒட்டுமொத்த இனிப்புகளை
நினைத்துப் பார்க்கிறேன்.
அனைத்தையும் தட்டிவிட்டு
சோன் பப்டியும்
பஞ்சு மிட்டாயும்
இவ்வளவு சிறியதை
அவ்வளவு பெரியதாய்
உன் சோகங்களைப் போல உருமாற்றப்பட்டவை
என்கிறாள்.
ஆமாம் பார்த்துக் கொண்டிருப்பதை விட
கரைத்து விடுவதே நல்லதென வாயிலிடுகிறேன்.
சோன் பட்டியையும்
பஞ்சு மிட்டாயையும்
உண்ணக் கூடாது
தின்னப் பழகு என அதட்டுகிறாள்
கைகட்டி வாய் பொத்தி
ஆமாம் குருவே என்கிறேன்.