I. மறுக்கூர்
பதினொன்று ஐம்பத்தொன்பது
பன்னிரெண்டு ஒன்று
காற்றடைத்த உடல்
தன் உடலை உதறிக்கொண்டு
மெமரியில் உள்ள
கடந்த கால
புகைப்படங்களுக்கு “லைக்” இடுகிறது.
II. உடல்
தனது தலையை குழைத்து வாலை
விழுங்கும் பூச்சிகளின் அருகிலேயே
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்
நடக்கத் தொடங்கியவுடன்
நடக்கிறது யாவும்
நடநடவென
வளைவுகளில் வளைந்து வளைய
நெளிவுகளில் நீண்டு மடிய
நதி முட்டும் சாலையில்
தன்னை நீந்திக்கொள்வதற்கு
வாய்ப்பு கேட்கிறது ஒரு குரல்
உடைந்து உதறிய குரல்
போட்டுடைத்தப் பிறகு
போடுவதற்கென குப்பை காட்சி
சர்ப்பங்களின் நாவுகள் நீண்டு
தவளையுடலை அளக்கின்றன
போதும்
மயில்களுக்கு நீண்ட உடலை கொத்திக் குதறும் விதி
சூரியன் எப்போதாவது தன்னை
காவு கொடுக்க ஓர் அசைவை
நிர்ணயிக்குப்போது
கண்ணயரும் பூவின் பெயரில்
நீரூற்று உருவாகும்
இடியும் மின்னலும் ஓர் உத்தரவு
கொட்டித் தீர்க்கும்
மழைக்கு எந்த தடையுமில்லை
நீட்டி நிமிர்ந்து விறைத்த உடலின்
கசியும் கவுச்சியான
வாசம் ஆரவாரம்.
III. ஏமாற்றமடைந்த வணிகனின் ஒருநாள்
தற்கொலை செய்ய கயிறு வாங்க போனேன்
எழுபது ரூபாய் என்றான்
எனது முழங்கால் தரையில் உராயும் அளவுக்கான கயிறு அது
இன்னும் நீளமாக கொடு என்றேன்
நூற்றி நாற்பது ரூபாய் என்றான்
என்னிடமிருந்த நூறு ரூபாய்க்கு
வெட்டித் தர மறுத்தவனிடம்
பேரம் பேசி
முழுக் கயிறையும் வாங்கி விட்டேன்
வாழ்வில் முதலும் இறுதியாகவும்
நான் வென்ற வணிகம் அது.