cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 கவிதைகள்

தென்றலின் நான்கு கவிதைகள்


குண்டு மல்லி ஏந்தும்
பற்றுக் கம்பிக் கவசத்தைப்போல்
உன் விரல்களைக் குவித்து
டார்ச் லைட் பூவைப் பறித்து
சுழற்றியபோது
வெள்ள ரவைக் கடுகு
நேம்பிய
தம்பளாப் பூச்சியின் நைஸில்
மெதுமெது பிங்க்
கன்னமாகிப் போயிருந்தது
சதுரக்கள்ளி

***

சாப்டறயா
சின்ன மனசின் பெரிய அக்கறை
சாப்பிடு
பெரிய மனசின் சின்ன அக்கறை
சாப்ட்டு தொலை
பிலுக்காதே
பின்பு ரொம்பத்தான் ஆனது
முதலிரண்டையும்
யாராவது நினைவூட்டிவிடுவார்கள்
நிழல் போன்ற கனவுகளில்
நினைவின் கதவுகள்
இரவில் திறந்தால்
திருட்டுப் போகும்
அபாயம்
உன்
மூன்றாவது தூக்கம்

***

சுள்ளிச் செடிப்
பூவின் நீண்ட
காத்திருப்பை
பிய்த்து
உன் மூச்சால்
மொட்டாக்கும்
பருவம்
முட்களின் மடியில்
தலைசாய்ந்து
நிலா பார்த்திருக்கிறது
நட்சத்திரப் பருக்களின்
சூரிய வெடிப்பாய்
சிதறி
உன் உதடமர்ந்து
உன்னைச் சூடும்படி.

***

ஒருத்தரிடம்
தன் கிறுக்குத்தனங்களை
அளவறிந்து
எல்லையிடும் இனிப்பான
அன்பே
சிறந்த தேநீரின் அலகு
மற்றபடி
ஸ்ட்ராங்
லைட்
மீடியம் யாவும்
ஒரே அனாதையின்
விதவிதமான நேர்ச்சைகள்.


கவிதைகள் வாசித்த குரல்:
அன்பு மணிவேல்
Listen On Spotify :

 

About the author

Avatar

தென்றல்

கோபிசெட்டிபாளையம் ஊரைச் சார்ந்தவர். அறிவியல் தொடர்பான தேடல் உடையவர் என தெரிவிக்கும் இவரின் 'கொங்காடை மனிதனின் நீரடித் தடங்கள்' எனும் முதல் கவிதைத் தொகுப்பை வாலறிவன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website