வீட்டிலிருந்து கிளம்பிய காலடிகள் மற்றும்
வீடு திரும்பிய காலடிகளின் எண்ணிக்கை
சமனுற்றதாவென முணுமுணுப்பாய்க் கணக்கிட்டபடி
வீடு திரும்பிக் கொண்டிருந்தது இரவு
காலடி ஓசைகள் தணிந்த நடைபாதையின் வழியே.
எண்ணிக்கையில் விடுபட்ட காலடிகளின் கணக்கால்
குழம்பிய இரவு அப்படியே நடைபாதையில்
சாய்ந்து அமர்ந்தது சோர்ந்த உணர்வோடு.
ஆயிரம் கருவிழிகளால் ஆன இருளோ
நட்பாய் இரவின் அருகில் அமர்ந்து
கூட்டத்தில் தொலைந்த குழந்தைப் பாதங்கள்
வீடு விரட்டிய முதிய பாதங்கள்
காதலில் விரைந்த இளைய பாதங்கள்
கடன் பளு சுமந்த பூனைப் பாதங்கள்
வாழ்வு வெறுத்த நாடோடிப் பாதங்கள்
வாழ்வை நேசித்த இலட்சியப் பாதங்கள்
கோடுகள் தாண்டிய அவசியப் பாதங்கள் என
விடுபட்ட கால்களின் விவரம் கூறி
களைத்த இரவை உறங்கச் சொன்னது
உள்ளம் அதிர்ந்த இரவோ
மற்ற பாதங்களின் விதி தானறியேன் என்றும்
கூட்டத்தில் தவறிய குழந்தைகளின் பாத ஒலி
ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்குவதால்
இனி ஓயாதொலித்துக் கொண்டே இருக்குமென்றும்
குழந்தையைப் பறிகொடுத்தவர்களின் தேய்ந்த
பாதங்கள்
மறந்தும் ஒரு நாளும் ஒலி ஏற்படுத்தாதென்றும்
அரற்றியபடி ஓட ஆரம்பித்தது
எல்லைகள் அற்ற கரிய நெடுஞ்சாலையில்.