உன் அம்மா சொல்கிறார்
‘வாங்க போங்க’ என்றால்
உன் வாழ்நாள் அதிகரிக்குமாம்.
அடேய் என் பனங்கற்கண்டு பேச்சழகா
சொல்லுடா..
உன் அம்மா சொல்வதைக் கேட்கவா?
இல்லை ‘டா’க்களை அரைத்து
அமுத விஷமாக்கி
உன்னை அழிக்கவா?
*****
காயா பழமாவென
நறநறவென பல்லைக் கடித்துக்கொண்டு
இரு விரல்களை நீட்டும் சிறுமியாய்
ஒரு விரலில் என் பெயரையும்
மறு விரலில் நான் கணித்த
எனக்கு கொஞ்சமும் பிடிக்காத
என் பாலினப் பெயரொன்றையும்
கண்ணீரால் எழுதி
முறைத்தபடி கேட்கிறேன்.
உனக்கு முதன்மையானது எந்த விரலென்று?
எனதொரு விரலை
வெட்டிவெட்டித் துண்டாக்கினாலும் பரவாயில்லை
வெட்டி வீசிவிடு
அந்த சண்டாளி பெயர் சுமக்கும் விரலை!
*****
என் வழியை மரிக்கும் உன்னிடம்
நான் நதி போன்றவள் என்கிறேன்
பரவாயில்லை நான் இலையாவேன் என்கிறாய்
நீ எண்ணுவது போலில்லை
கடும் வெய்யிலிலும்
பெரும் மழையிலும் இறுகிப்போன
பாறை நான் என்கிறேன்
சிந்தனையில் எவ்விதச் சிக்கலுமின்றி
உன்னைக் கூழாங்கல்லாக்குவேன் என்கிறாய்
வேறு வழியில்லை
விதி வலியதுதான்போல
நீ மிதந்து வாடா
என் பிடிவாதக்காரா
நான் பாய்ந்து ஓடுகிறேன்.