உயிரி
சுவரிலிருந்து கீழேயிறங்கவில்லை அந்நிழல்
காற்று அலைக்கழிக்கிறததன்
மட்டற்ற திசையினை திருகி
பால்கனி கம்பியிலமர்ந்து
இரவின் நீட்சியில் அமைதியை நகலெடுக்கிற
கூகையின் வட்டக் கண்
விரல் நக இடுக்கில் மிச்சமிருக்கிற மாமிசத்தை
வெறிக்கிறது சற்றை நேரம்
ஒரு பசிக்கும் அடுத்த பசிக்கும் நடுவே நெளிகிற
தெளிவற்ற பொழுதுகளின் குளிர் வெப்பங்கள்
பொதுவல்ல
என்றபோதும்
காத்திருக்கத்தான் முடிகிறது
கிளை அசைந்தாலும் இலை உதிர்ந்தாலும்
கண்களின் பள்ளத்தாக்கை இட்டு நிரப்புவதற்குரிய கனவுகளை
உறக்கம் ஏந்தி பிச்சையெடுக்க
எதுவோ பணிக்கிறது
புதிய காரணங்களை எடுத்துக்கூட்டி
எவ்வி பறந்திட்டபோது
எஞ்சியிருந்த அடிவயிற்று சூடு
படுக்கையில் புரண்டு புரண்டு அசையும்போதெல்லாம்
நடுத்தண்டின் அடுக்குகளில் துயரமென படருகிறது
கீழ்முதுகில் சூல் கொண்டு
அமிழ்ந்துவிட்ட குரங்குகளின் வால் நுனியை
நினைவுகூர்ந்து
●●●
பயணத்தின் Pirate
உந்தித் தள்ளி சிதறடிக்க முனையும் அழுத்தத்தில்
இழுத்துப் பிடிக்கும் வலுவை எட்டி
பரஸ்பரம் நீட்டும் நேசக் கரத்தில்
புதிர்ப்படுகிற தீர்க்கரேகைப்
பாதையில்
நாட்டிகல் மைல் பாயும் நீரோட்ட முடிச்சு வேகத்தோடு
அலைவீசி
வட தென் துருவ குறுக்குவெட்டை
கீறித் துடிக்கக் காத்திருக்கிற
ஒரு நங்கூர நியூரான்
எனது ரகசியம்
கரைத்தட்ட நேரும் வியாக்கியான பாறைகளின்மீது
மோதச் செய்வதில்
சாதுரியம் கொண்ட பாய்மரத்தை
மடித்து வைக்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்டேன்
இனி
ஓசையின்றி இந்த அகண்ட வான் இருளைச் சீவி சீவி
பசித்திருக்கும் கடற்கிழவனை நோக்கி
ஏவிட
திமிங்கலமென பாயும்
என் சொற்கள்
●●●
ஒரு ப்ளூ பிரிண்ட்
இந்நகரின் வெயில் அலையும் தார்ச்சாலைகளை
தேவதையின் கரமொன்று வருடுகிறது
அரூபமாக
கானல்நீர் மிதக்கும் கார்களின் கூரைத் தகடுகளில்
மின்மினி பூச்சிகளின் பூத உடல்கள் மல்லாந்து கிடக்கின்றன
காலம்காலமாய்
துக்கம் நெஞ்சை அடைக்க
செய்வதறியாது முழித்து நிற்கிற
வட்டவொளி சிக்னல் மரத்தின் முதுகிடையே
பிதுங்கியுள்ள பறவையின் கூடொன்றை வருடுகிறது
தேவதையின் கரம்
சிறகுகளின் கதகதப்பை மறுதலித்து
அனல் பறக்கும் வெப்பத்தின் காத்திரத்தை குடித்தே
வெறித்திருக்கும் குஞ்சுகளின் மூளைக்குள்
மோதுகின்ற
விதவிதமான வாகன ஹாரன்களையும்
வருடுகிறது அக்கரம்
ஹெல்மெட்டுக்குள் பாதுகாப்பாய் வியர்த்திருக்கும்
மண்டையோட்டிற்குள்ளே
ஆயிரம் யோசனைகளைத் தீட்டுகிற நிதி அட்டவணை மோதல்கள்
ஈ.எம்.ஐ புலம்பல்கள்
கடன் அட்டை பாக்கிகள்
நெடுக
நீண்டு நீண்டு
பிடரியில் வழிந்திறங்கும் உப்புத் திரளில்
துருப்பிடித்து கிடக்கிறது
பின்மூளை
தோல் நிறமிகளை தீய்த்துவிட்ட உக்கிர வெயிலின்
உபயத்தில்
மேனி கருத்துப் போன தேவதையின்
தூக்க இரவின்மீது
கடுப்பேறிய மஞ்சள் நிறத்தில் சிதறலாய்
மூத்திரம் பெய்கிறது
யாரோவால் கைவிடப்பட்ட
தெருநாய்
●●●
உங்களுக்கும் எனக்குமிடையே..
ஆழ்ந்த அமைதியின் வளைவை எனக்குப்
பரிசளித்தேன்
அதன் தரை பாவிய கிடைமட்ட வாட்டத்தில்
ஒரு துளி துயரம் கூட தேங்குவதில்லை
ஆனாலதன்
உருண்டோடிய வழித்தடத்தை
நோக்கமற்று பார்த்திருக்கும் கணநேரச் சாயலை
இதற்கு முன்பும்
கேள்விப்பட்டிருக்கக்கூடும் இக்காதுகள்
எங்கோ
ஆபத்து மிகுந்த அலறலை அடிமனத்திலிருந்து
பிரதியெடுக்கும் முனைப்போடு
விரல் நெருடும் அடுக்கின் பழங்கால மென்மை
பொடிந்துவிடலாம்
எக்கணமும்
வளைவுகளின் திருப்பத்தில்
கால்மேல் கால் போட்டுக்கொண்டு எதிர்காலத்தை
உறுத்து பார்க்கும் அபத்தத்தை
வேறெவரோ வேறெவரிடமிருந்தோ அடைந்திருக்கலாம்
ஒரு நோக்கத்தோடு
கையொப்பமில்லை
தேதியும் இல்லை
ஆதலால்
எனக்கதை சமர்ப்பித்தேன்
நூற்றாண்டின் வாசத்தை மூச்சிறைப்பில்
நீவி