எதிலும் ஈடுபட மறுக்கும்
சோர்ந்த மனதை
மல்லுக்கட்டித் தூக்கிவந்து
கொஞ்சம் இருட்டும்
கொஞ்சம் வெளிச்சமுமுள்ள
அறையிலிட்டுப் பூட்டிவிட்டு
முடங்கிக் கிடந்த இசையை முடுக்கிவிட்டேன்.
ஒற்றை மேஜையில்
என் மனத்தைக் கிடத்தி
மிதமான சூட்டிலிருந்த மூலிகை எண்ணெய்யால்
மனிதனைப்போலப் படுத்திருந்த மனத்தின்
கழுத்திலிருந்து உள்ளங்கால் வரை நீவினேன்
உள்ளங்காலை உரசித் தேய்த்தபோது
முதுகின் தண்டுவடத்திலிருந்து
பறவையொன்று கீச்கீச்சென்று பறந்தது.
அப்பறவையோடு உற்சாகமாகக் கிளம்பிய மனதை
நீங்கள் யாரேனும் வழியில் சந்திக்கலாம்!
*******
அரட்டலுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சியஞ்சி
பரவலாய்ப் பேசப்படும் பட்டியலில் தொற்றிக்கொள்ள
நடிப்பதற்கு உடன்பட மறுக்கிறது
பாழாய்ப்போன என் மனம்..
அதை அப்படியே விட்டு விடுங்கள்
ஒட்டுத் திண்ணையில்
சுருண்டு படுத்துக்கொள்வதுகூட
பெரும் நிம்மதிதான் அதற்கு.
*******
தரக்குறைவாக நடத்துபவர்கள் வசிப்பது
தாய் வீடாயினும்
தன் வீடாயினும்
ஒரு கணம்கூட தங்க மறுக்கும்
இவ்வளவு சூடு சொரணையுள்ள
மனத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு
எப்படித்தான் எஞ்சியுள்ள தூரத்தைக் கடப்பது?
மனம் நாடும் ஊருக்கு
வழிப்போக்கராய் வரும்
அன்றாடத் துணைகளிருக்க
ஆயுசுக்கும் துணை வேண்டி
நரிகள் வாழும் ஊரிலேயே
தேங்கிக் கிடக்கத்தான் வேண்டுமா?
யோசித்துப் பார்த்தால்
இந்தப் பக்குவப்பட்ட மனத்தைக் கட்டி இழுப்பது
அவ்வளவு சிரமமொன்றுமில்லை தான்.
அவிழ்ந்த கூந்தலோடு
முந்தானையை உதறிக்கொண்டு கிளம்பிவிட்டால்
எஞ்சியுள்ள தூரத்தையாவது
வாழ்ந்து கடக்கலாம்.
*******
வீர வசனங்களோடு
சொற்போர் தொடுப்பதும்
சமாதானக் கொடியைப் பறக்கவிடுவதும்
நம் வாழ்வெனும் நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்.
நீ போர் தொடுக்கும்போது
உறையிலிருந்து என் வாளை எடுக்காமலும்
நான் போர் தொடுக்கும்போது
கூர் தீட்டி வைத்த உன் வாளை
உன் கரங்களினாலேயே ஒடித்தும்
வரவு செலவு பார்க்கும்
கைதேர்ந்த கணக்காளர்கள் நாமெனில்
நம் மனம்தான் நம் ராஜாக்கள்.
Inspiring artwork directed by ThetaCursed