cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கவிதைகள்

‘ரவி அல்லது’ கவிதைகள்.


  • உற்சாக ஊன்றுகோல்.

சொற்களைக்
கொறித்து நடப்பதும்
சுகமாகத்தான் இருக்கிறது
பற்களற்ற பொழுதும்
மென்றுவிடுமாறு.
சுவைத்து
துப்பி விட
நினைக்கும்
தருணம்
நாளை பற்றிய
கவலைகள்
சூழ்கிறது
எப்பொழுதும்
தடுமாற்றமென
தள்ளாமையால்.
தெம்பிற்காக
இருந்து
விட்டுப் போகட்டும்
செறிக்காவிட்டாலுமென்று
விழுங்க
வேண்டியதாகிறது
ஒவ்வொரு முறையும்
இயலாமையின்
மெய்யில்.

***

  • வீடு திரும்பும் வினோதம்.

கூடிப் பேசி
முடிவெடுத்து
அவர்கள்
சொல்லும்
எதுவும்
உண்மையாக இல்லாமலும்
இருக்கலாம்.

அவைகள்
யாவும்
எனக்கு
முன்பே
தெரிந்ததுதான்
வாய்த்த
லயக் கூத்தில்.

அநேகமாக
இந்த
இடைவெளியில் தான்
கண்டடைய வேண்டும்
கைபிடித்து
தோல் சாயும்
வாழ்க்கைத்
துணையை
நிதானத்தில் துலாவி.

அலுப்புகளுடைய
இந்த
சலிப்பு
பரவாயில்லைதான்
இவர்கள்
கல்யாணத்திற்கு முன்
இது
காதல் இல்லையென
கழட்டி மாட்டும்
சட்டைகளுக்கு
முன்.

***

  • அறக்கோடுகள்.

தருணம்
வாய்த்ததற்கு
மகிழ்வதாக
இல்லை
சந்தர்ப்ப
சர்ப்பம்
யாவையும்
விசமாக்கிவிடுமென்பதால்.
காணமல் போன
வெளிச்சத்தால்
உனக்குள்
எதுவும்
தோன்றி இருக்கலாம்
விலகியமர்ந்த
நிதானத்தை
பார்க்கும் பொழுது
அவல எண்ணில்
அழைக்குமாறு.
யாவும்
ஒத்திசைவில்
சிறக்க வேண்டும்
பிறகு
விளையும்
ஊடல்களுமென
நினைப்பனுக்கு
கோடுகளை
அழிப்பதில்
கொஞ்சமும்
விருப்பமில்லை
எப்பொழுதும்
இசைபட
வாழ முயல்வதால்.

***

  • இதுகாறும் தவித்து.

யாதொரு
வருத்தமுமற்ற
வாழ்வியலில்
சந்திப்புகள்
நிகழலாததன்
சேமிப்புகள்
நிறைந்து இருக்கிறது
சம்பவங்களாக
தளும்பி.
அடுக்கிய சருகுகள்
அழகுற
இருப்பதால்
எதை
உருவி காட்சியாக்கி
களிப்பது
தினங்களுக்குள்
நுழைந்து
திளைக்கவென
முணு முணுப்பதை
அறியலாம்
அணுக்கமானால்
எப்பொழுதாவது
சுவைத்து.
வாய்க்காது போன
அருகாமையால்
உழலும்
தருணத்தில்
சுவைத்த
அகமிய
வாசனையால்
துளிர்க்கும்
கண்ணீரைத் துடைப்பதைத் தவிர
துயருறப் போவதில்லை
இனி.


  • யாவும் நீயான பின்.

அற்ப காரணமொன்று போதும்
உன்னோடு
உறவாடித் திளைத்து
உயிராசைத் தீர்க்க.
அது
என் வீட்டு மரத்தின்
இலையுதிர்வை
சொல்வதாக
இருந்தாலும்
சரி
எதிர் வீட்டுச்
செடி
பூத்ததை
சொல்வதாக இருந்தாலும்
சரி
நம்
பறத்தலின்
வானம் தொட.


கவிதைகள் வாசித்த குரல்:
கபிலன்
Listen On Spotify :

About the author

ரவி அல்லது

பட்டுக்கோட்டையைச் சார்ந்த ரவிச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ ஆகிய கல்வி பட்டங்கள் பெற்றவர். கம்ப்யூட்டர், கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருபவர். ரவி அல்லது எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

Leave a Comment

You cannot copy content of this Website