இலட்சம் பூக்கள்
பல இலட்சம் பூக்களைத் தொடுத்த கைகள் நடுங்கத் தொடங்கியதும்
தாத்தா பூக்கடைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.
தன் கை விரல்களைப் பூக்களென சொன்னவர்,
உலகில் எல்லாவற்றையும் ஒரு பூவோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்வார்.
தலைமுடி சிலுப்பி இருந்தவனை
மழை மோடத்தில் கருகிய சாமந்தி தலை என்றார்.
பூக்கள் வரைந்த பீங்கான் தட்டுகளில் மட்டுமே சாப்பிடும் அவர்
சில நாள்களாக
ஒவ்வொரு வேளையும் சாப்பிடும்போது
தட்டில் வரைந்திருக்கும் பூக்களை யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டார்.
தட்டுக்களைக் கழுவுவதால்
பூக்கள் காணாமல் போவதாக நினைத்திருந்த பாட்டி
ஒரு நாள் அவர் சாப்பிடும் போது
வாயிலிருந்த பீங்கான் பூக்களைப் பார்த்து திடுக்கிட்டாள்
அன்றிலிருந்து
தாத்தா சாகும்வரை
தினமும் ஏதாவது ஒரு பூவைச் சமைத்து தந்தாள்.
முருங்கை வாழை அகத்தி தும்பை மணிச்சிகை பூசணி
சாதி பத்திரி நெருஞ்சி வேலிப்பருத்தி ரோஜா கஞ்சா என
நேற்று
ஒரு வெள்ளை பீங்கான் தட்டை
கடையில் வாங்கிய பாட்டி
அதிலிருந்த பூக்களைத் தாத்தா சாப்பிட்டுவிட்டதாக
எல்லோரிடமும் சொல்லித் திரிகிறாள்.
***
அதில் இதுவும் ஒன்று
அவளின் முழங்கை முட்டி
அத்திப் பழம் போல இருந்தது
தற்செயல் தான் ஆனாலும் முழங்கையால் வலுவாக இடித்தவள்
வருத்தத் தொனியைக் கூட காட்டவில்லை
மனிதர்களிடம் புதிய குணங்கள் உருவாகி உள்ளன
அவற்றில் இதுவும் ஒன்று.
அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன்
மூக்கும் முழங்கையும் ஒரே மாதிரி இருந்தன
இப்படியான ஒருத்தியை யாராவது பார்த்தது உண்டா?
பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரிடமும்
இடிப்பது போலவே பேசினாள்
பேச்சும் மூக்கும் முழங்கையும்
ஒரே மாதிரியான ஒருத்தியை
யாராவது பார்த்து இருக்கிறீர்களா?
நான் பார்த்தேன்
எனது நிறுத்தத்தில் இறங்கும்வரை
அவளை அடிக்கடி உற்றுப் பார்த்தபடியே இருந்தேன்
அதில் கொஞ்சம் காதலும் உருவாகி இருந்தது
மனிதர்களிடம் புதிய குணங்கள் உருவாகி உள்ளன
அவற்றில் இதுவும் ஒன்று.
***
மேலே பறந்த புறாக்களும் இல்லை
செருப்புகள் சிதறிய தெருவில்
கண்ணீர் மல்க கைகூப்பும் ஒருவனையும்
இறந்தவனின் கன்னத்தில்
எலிகள் அமர்ந்து காதைக் கொரிப்பதையும் பார்த்தேன்.
முடிந்துவிட்ட ஒரு கலவரத்தை
இப்படி நினைவு கூர்வது
ஓர் இடிபாட்டுச் சிதறலை
பாட்டியின் சுருக்குப் பையில் வைத்திருப்பது போல இருக்கிறது.
ஒரு கலவரத்திற்காக
முட்டாள்களை வெளியூட்டுவது எளிது.
எந்த முழக்கத்தையும்
அவர்களின் இதயத்தில் சொருகி விடலாம்.
எனக்கு முன்னால்
தலையில் தீவைத்துக்கொண்டு சிலர் செல்கிறார்கள்
அந்தத் தீயே அவர்களின் கொடி.
அவர்களிடம்
இன்னொரு கட்டடத்தை உருவாக்கும் செங்கற்கள் இருக்கின்றன.
அவை இடிபாடுகளில் இருந்து எடுத்தவை.
அதில் இரத்தமும் ஒட்டி இருக்கிறது
பொய்யும் ஒட்டியிருக்கிறது.
தோழர் பூவிதழ் உமேஷ் அவர்கள் விரல் கொண்டு வடித்த கவிதைகளும்… அதை குரல் கொண்டு படித்த,தோழர் தேன்மொழி அவர்களின் குரலும் வெகு அருமை… வாழ்த்துகள்