cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 36 கவிதைகள்

அன்பின் மிச்சங்கள்

சுபி
Written by சுபி

1.

யாவற்றையும் அழித்து விட்டதான
பாவனையில் முங்கி எழுகிறேன்
ஆற்று நீரில்
வட்ட வட்ட சுழல்களை விட
நீர்க்குமிழிகளை விட வேகமாக
மேலெழுகின்றன
குரலும், பற்றுதலும், வரவும்
மறக்க வேண்டிய நினைவுகளும்
மறக்க முடியாத நாட்களும்
நாம் நின்ற இடங்களில் எல்லாம்
மீண்டுமொரு முறை சென்று பார்த்து
வந்திருந்தேன்
அங்கேதான் இன்னும் நகராமல் நின்று கொண்டிருக்கிறோம்
பல அவதாரங்களாக
யுக யுகங்களாக ஆற்றில் முங்கி
எழும் போதெல்லாம் குதிகாலைக்
கடிக்கிற மீனின் குறுகுறுப்பு
போலத்தான் காதில் ஓதிய
மந்திரங்களும் இருந்தன‌
என்பதை இனி யாரிடம் சொல்லட்டும்?

****

2.

பிறழ்வுகளின் உச்சத்தில்
மூளையின் நரம்புகள்
பின்னிப்பிணைகின்றன
கண்களோ தானே மூடுகின்றன
தலையோ கவிழ்ந்தபடி தண்ணீர் தெளித்தவுடன்
வெட்டுப்படப்போகும் ஆடென
துளிர்த்தபடி ஆடுகிறது
கைகளின் நடுக்கம் குறைந்தபாடில்லை
எங்கிருக்கிறோம் என்பதறியாதபடி
உடலின் எரிச்சல் தீக்கங்குகளாய்
பாதம் வரை பரவுகிறது
எதிரில் இருப்பவர் பிச்சியாயிருக்குமோ என‌ நகைக்கிறார் மெதுவாக
நானும் சிரித்துவைத்தேன்
நினைவு மெல்ல மெல்ல மங்க பதறிய மனதிற்கு
இருப்பு பற்றிய கவலை எழ எச்சில் கூட்டி
பனிவிழும் இரவில் நீ இட்ட நெற்றி முத்தம்
நெற்றிக்கண்ணாய் மாறி
சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.

Surrealism Art

****

3.

நீலவிசும்பை
நோக்கி நீட்டிய கைகளை
இறக்கவேயில்லை
வயிற்றிலோ
நெஞ்சிலோ அடித்துச் சாபமிடும்
தினவு எப்போதும் வாய்த்ததேயில்லை
வழக்கமாக நிகழும்
கதறும் கண்ணீரல்லாது
செல்லச்சிணுங்கலல்லாது
சந்திக்கும் நாளில்
நீ விரும்பியவண்ணம் யாரோபோல
இதுவரை நீ என்னிடம் பார்த்திராத
ஒரு தேர்ந்த புதுப்புன்னகையை
உன் முன் வீசுவேன்
அது போதும் உன் ஆயுளுக்கும்.

****

4.

சூறாவளிக் காற்று
வைத்திருக்கும் ஒரு பற்றுக்கோலையும் பிடுங்கியதாய்
நினைத்து வெம்பியபடி
அரை மயக்கத்தில் தலைசுற்றி விழுந்து கிடப்பவளுக்கான
பிரார்த்தனைகளை
யார் யாரோ செய்கிறார்கள்
தினந்தோறும் எழும் பிரக்ஞையற்றுக் கிடப்பவளை நினைத்து
உருகி உருகி யாசிக்கிறார்கள்
உயிரைத் தரத் துணிந்தவளை
கண்களில் நீராறு‌ ஓட
உடல் குலுங்க உயிர் பிச்சை கேட்டவளை
இறங்கி வந்து அணைத்துக்
கொள்கிறாள் ஆதித்தாய்
பிரார்த்தனைகளில் வழியும்
இத்தனை அன்பும் இங்கே தான்
இத்தனை நாட்களும் இருந்தது என்பதைச் சொல்ல
இவ்வளவு இரக்கமற்ற
தண்டனைகளை தந்திருக்க வேண்டாம் இந்த காலம்.

****

5.

சட்டையைக் கோர்த்துப்பிடித்து
கேள்விகள் கேள்
முடிந்தால் கன்னத்தில் அறைந்து விடு
தேர்ந்தெடுக்கப்பட்ட வசவுகளால்
சாபமிடு
உன்னிடமே மீண்டும் வந்துவிட்டேன்
ஏதேனும் செய் ஏதேனும் செய்
உன் அன்பின் முன் தோற்றுவிட்டேன் என்றான் முதல் பிரிவில்
இதையெல்லாம் செய்யத்தானா உருகிக் கொண்டிருந்தேன் அன்பே
என்றாள் அவள்
புகைமூட்டிய இரவில் எரிந்த
நெருப்பில் காமம் தகிக்குதடி
என்றான்
அவன் அப்படித்தான்
ஒரு மாயக்காரன்
மண்டியிடுவதில் கெட்டிக்காரன்
கட்டிப்பிடி வைத்தியக்காரன்
மீண்டும் அவள் வேண்டவே வேண்டாம் எனச்சொல்லிவிட்டு
உடனே தன் தேரேறி பவனி வருகிறான் தேவதேவன்
அவளுக்கு என்னாகும் என்கிற பதைபதைப்போடு
இரண்டாம் பிரிவில்
இப்படியோர் அழகிய பிரிவு
யாருக்கு வாய்க்கும்
அக்கணமே
அவளொரு தேவதை என்றான்
மேலும் அன்பாய் இருந்தோர்
அனைவரும் சொன்னதும் சொல்வதும் இதுதானே
உயிருக்கும் மேலாக யாரையும்
அன்பு செய்யாதீர்கள்
உங்களுக்கென உயிரைக்கொஞ்சம் வைத்துக்கொள்ளுங்கள்
ஒப்புக்கொடுக்குமுன் தலைமேல்
இடி விழுந்தால் தாங்குமா என நினைத்துப் பாருங்கள்.
அன்பில் கடுகளவு சல்லித்தனங்கள்
பாதுகாப்பானது.
இல்லையெனில் நீங்கள் யாருமே
கைக்கொடுத்து தூக்கமுடியாத
ஆழப்புதைக்குழியில் விழுவீர்கள்.
இன்னொன்றையும் கேளுங்கள்..
நீங்கள் பேசும் போது
அவள் மோட்டுவளைச் சுவரை
உறைந்த பார்வையில் பார்த்துக் கொண்டிருப்பாள்
அல்லது
நீங்கள் பேசுவதை காதிலேயே
வாங்கியிருக்காமல் இருப்பாள்
அவள் கடந்து வந்த காலங்களில்
பெற்றிருக்கும்
அன்பின் மிச்சங்கள்
இவ்வளவுதான்
இவ்வளவு மட்டும்தான்.


Courtesy : Art By  Jeramondo Djeriandi

கவிதைகள் வாசித்த குரல்:
சுபி
Listen On Spotify :

About the author

சுபி

சுபி

சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி; வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி, தற்போது முகநூலிலும் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். இவரின் எழுத்தாக்கத்தில் காலடித் தடங்கள் , தேம்பூங்கட்டி, தோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் ஆகிய தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website