வீட்டு வாடகைக்காக
மினுங்கும் அவள் கழுத்தை அடகுவைத்தேன்.
தீர்ந்து போன அரிசிமணிகளை வாங்க
ஒளிர்ந்த அவளின் ஒற்றை மூக்கை அடகு வைத்தேன்.
காய்கறிகளுக்காக ஒலிக்கும் கணுக்காலையும்
எரிவாயு அடுப்பை மீண்டும் மூட்ட
அவள் காதுகளையும் அடகு வைத்தேன்.
பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக
மூன்றாம் முலையாய் அவள் பாதுகாத்த
தாலியையும் அடகு வைத்தேன்.
மொத்த உறுப்புகளையும் அடகு வைத்துவிட்டு
எஞ்சிய தலைகளை
அடிக்கூரையில் பலூன்களாய்த் தொங்கவிட்டோம்
யாரோ ஒருவரின் கட்டை விரலால்
அவை கிறீச் கிறீச் என ஒலியெழுப்பின
கனமான தங்கப் பானைகள் ஒரு தரம்…
கனமான தங்கப் பானைகள் ரெண்டு தரம்…
கனமான தங்கப் பானைகள் மூணு தரம் …
****
பணி நேரத்தின் போது
கண்கள் இரண்டையும் நேர்கோடாக
கணினியில் கோர்த்துக்கொள்ளப் பணித்தார் மேலாளர்.
மேலும் கீழும் இமைகளைக் கூட அசைக்கக் கூடாதென்றார்
வலது இடதாகக் கண்களை மட்டும் உருட்ட எத்தனித்தேன்
கண்களுக்கும் இமைகளுக்குமான கயிற்றை
மேலும் இறுக்கி முடிந்தார்.
வேண்டுமானால் இடது பக்கம் மட்டும்
45° கோணத்தில் சாய்த்துக்கொள்ளச் சலுகையளித்தார்.
செந்நிறச் சிலந்தி வலை கண்களைப் பின்னிக்கொண்டது
நொறுங்கிய வானவில் என்றும்
கிள்ளிய செம்பருத்திச் சூலகம் என்றும்
சிதைந்த ரத்தக் கூடுகள் என்றும்
ஆளாளுக்குக் கதைக்கின்றனர்.
எட்டு மணி நேரத்தைத் தாண்டியும்
உற்பத்திக் கருவியாக மட்டுமே
எப்படி இருக்க முடியும்?
வேறுவழியில்லை, அதற்குத்தான் உனக்குக் கூலி தருகிறேன்.
****
உன் உச்சந்தலையில் புவிக்கோளத்தை வைத்து அழுத்துவது யார்
உன் பாதங்களின் அடியில் சூரியனைக் கொளுத்தி எரியூட்டுவது யார்
உன் உறக்கத்தின் மீது
சம்மட்டியைச் சதா ஓங்கி ஓங்கி ஒலிக்க விடுவது யார்
உன் இரைப்பையை
பலூனாய் ஊதி வெடிக்கவைத்து விளையாடிப் பார்ப்பது யார்
அதன் கிழிந்த துண்டுகளின் மீதும்
ஆள்காட்டி விரலை நுழைத்து அகழ்வது யார்
பல்லிடுக்கில் சிக்கிய மாமிசத் துணுக்குகளாய்
உன்னை நெம்பி எறிவது யார்
அந்தகாரத்தில் அமர்ந்தபடி
இன்னும் எத்தனை விடியல்களைக் கண்டு ஏங்கித் தவிப்பாய்
ஒட்டடைகளில் சிக்குண்ட புத்தகங்களை
இன்னும் எத்தனை நாள் துடைத்தடுக்குவதில் நிம்மதியுறுவாய்
அவ்வப்போது அழுக்குத் துணிகளை அலசி
ப்ளீச்சிங் பவுடர் ஊறும் கழிவறையை
இன்னும் எத்தனை நாள் சுத்தப்படுத்துவாய்
தேய்த்த பாத்திரங்களை
ஈரம் சொட்டச் சொட்ட அடுக்களையில் கவிழ்த்து
இன்னும் எத்தனை நாள்தான்
மனைவிக்குச் சகாயம் புரிந்தவனாய் மகிழ்ச்சியடைவாய்
உன் மனைவியும் தன் அம்மாவிடம்
இன்னும் எத்தனை நாள்தான் பாவம் மாமா என்பாள்
****
- பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ஒவ்வொரு நாளும் மாதக் கடைசி.
- பணிநீக்கம் ஒரு குடும்பத்தின் மொத்த இரைப்பைகளையும் நிரந்தரமாய் அகற்றும்.
- பணிநீக்கம் தானிய மூடையைப் பிடுங்கி அவ்விடத்தில் மலைப்பாறையைப் பொருத்தும்.
- பணியிழந்தவர், பசியில் தன் இரைப்பையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்.
- பணியிழந்தவரின் வாழ்வென்பது இரைப்பையின் நீளம்.
- பணிநீக்கக் காலத்தில் அறுத்தெடுக்கப்பட்ட இரைப்பை, கல்லறைக் கதவு திறந்ததும் மீண்டும் தைக்கப்படுகிறது.
Courtesy : The Disquieting Muses is a painting by the Italian metaphysical painter Giorgio de Chirico
வாழ்த்துக்கள்