அதற்கும் பிறகான..
●
குறுகலான காரிடாரில் முன்னும் பின்னும் நகர முடியாமல்
நிற்கிறது மனம்
இதுவொரு காரிடார்
அதன் அரூப பிளவில் கிளைச்சாலை ஒன்று முளைக்கிறது
பாதங்களை நேற்றைய வார்த்தைகள்
இறுகப் பிடித்து வைத்திருக்கின்றன
நாளையும்
நாளை மறுநாளும்
அடுத்தடுத்து வீணாய் போகவிருக்கும் தேதிகளின் கிழிசலிலும்
பின்னை கிழமைகளை கபளீகரம் செய்து
பெருகவிருக்கும் நூற்றாண்டுகளிலும்
அதே வார்த்தைகள்
வேடம் பூண்டு மூச்செரிந்து விடுவிக்கும்
பொழுதுகளை
திசைகள் பல அலைவுறச் செய்து
நெடுஞ்சாலைக்குள் பிடித்து தள்ளிவிடும்போது
இதே காரிடாரின்
இன்னொரு முனையில் நின்று கொண்டிருக்கிறது
வேறொரு குரூர கணம்
●●●
என்னை யாரென்பது முக்கியமில்லை ஆதலால்..
●
நண்பன் வந்திருந்தான்
கனவின் உள்ளே அனுமதிக்கப்படாத எல்லையை
தலை கவிழ பார்த்திருந்தேன்
நடந்த தெருக்கள்
பார்த்த சுவரொட்டிகள்
விவாதித்த காட்சி மயக்கங்கள்
எல்லாம்
கீழே
கிடந்தன
என்னுடைய வரவின் பொருட்டு எடுத்து வைக்கும்
ஆற்றாமைகளை
புறம் ஒதுக்கிவிட்டு விபரங்கள் கேட்டான்
திறந்த வாயின் ஒலி சீரான வரிசையில்
மொழியை பெயர்க்கவில்லை
எழுத்துரு இல்லாத அர்த்தங்களை
வாரி எடுத்துகொண்டு
புகையாகி கலைந்து போனான்
முன்னே
தலை கவிழ பார்த்திருந்த எல்லையை மீறி
வெளியேறிய நொடியில்
இவ் வாசலில் வெளிச்சம் புலர்ந்து கிடந்தது
அபத்தமாக
●●●
டோக்கன் நம்பர் : 24
●
அவர்கள் தொடங்கி வைத்ததை மறந்திருந்தார்கள்
வழக்கங்களின் சுழல் தீர்மானங்கள்
சரியென்றோ
இல்லையென்றோ
முடிவுகளை எழுதவில்லை
ஆதாயங்களை கோரிக்கைகளாக முன்வைக்கும்போதே
கச்சிதமில்லாத முன்னெடுப்புகளை
குடும்பத் தலைமைகள் தட்டிக் கொடுக்கின்றன
அனுபவத்தின் கசடு
அடிநாக்கில் தேங்கும் வரை காத்திருப்பதற்கான
குறிப்புகளும் யத்தனங்களும்
போன மழை வெள்ளத்தோடு காகிதக் கப்பலாகி
பக்கத்து ஊருக்குப் போய்விட்டது
மொய் பணத்தில் சேகரமாகும்
சில்லறை நாணயங்களை மட்டும் தனியே
நோட் புக் கணக்கில் வரவு வைப்பதற்கு
இருபது ரூபாய் விலையில்
ஒரு ப்ளூ கலர் ஜெர்மன் மேக் ஜெல் பேனாவிலிருந்து
தொடங்க வேண்டும்
மேலும்
கீழே
துணையாக இரண்டு சாட்சி கட்டைவிரல்கள்
உருட்டப்படலாம்
‘அங்க.. என்னப்பா கூச்சலு..
அடுத்த நம்பரை வரச் சொல்லு..’
●●●
வேறெங்கெல்லாமோ..
●
புராதான கதவுகள் ஓசையோடு திறக்கும் எத்தனிப்பில்
கிறீச்சிடும் பேசாப்பொருள்களை
கைமாத்தாக வாங்கி வைத்திருந்தேன்
பின்னிரவின்
தூக்கமின்மையை
அது சதா தாலாட்டிக்கொண்டிருக்கிறது
நெடுங்காலமாக
இன்னும் புலர்ந்திடாத வைகறையின்
கிழட்டு சாயல்களோடு வெளிப்பட காத்திருக்கும்
உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாடிழந்து
கசிகிறது
மருந்துவாடை கலந்த சிறுநீர்
Courtesy : Art – boredart.com
ஆழமான கவிதைகள்…. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நன்றி தோழர்