ஒரு பழமரத்தின் மீது கல்லெறிவதற்கும் தன்னைத் துரத்தும் நாயின்மீது கல்லெறிவதற்கும் இடையே துளிர்க்கின்றன பிரியதர்ஷினியின் கவிதைகள்.
“மயிரை மட்டும் வைத்து
மரபியலின் தந்தை ஆனார் அப்பா
சிலுவையற்ற பரலோகத்தில்
கடவுள் 120 டிகிரியில் சரிகிறார்
ஊர் மூத்திரம் வந்துசேரும் கழிமுகத்தில்
எனது பறவையோ பாசி படர்ந்த நெடுங்காலக் குளத்தின்மீது
ஒற்றைக் காலில் நிற்கிறது”
இப்படியாகத் தொடங்கும் இன்றைய இளம் பிராயத்தினரின் கவிதை களை நாம் புல்வெளியில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்க, எப்படியோ அவை புட்டத்தில் ஒட்டிக்கொள்ளும் விதைகளைப் போல வீடுவரை வந்துசேருகின்றன.
ஒரு சமூகத்தில் ஒரு கவிதையை அல்லது மொழியின் துணுக்கை அதன் ஒலியிடும் அவஸ்தையை எவ்விடத்திலும் கேட்டுக்கொண்டே பயணிப்பதாய் இருக்கிறது இவ்வாழ்வு ஆனாலும் ஒரு விநாடியில் தட்டிவிட்டுப் போயிருக்க வேண்டியதுதான். ஒரு பொது மனிதன் இப்படிப் பல விசயங்களைத் தட்டிவிட்டுக் கொண்டுதான் தன் நினைவு மறதியோடு இருத்தலைப் பேணிக்கொள்கிறான்.
சுயம் இவ்வாறாகத் தன்னுணர்ச்சி கொள்கிறது. அகமும் புறமுமாய் தமிழ் வாழ்வு யாருக்கு ஏற்புடையதாய் இருந்ததோ அல்லது யாருக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருந்ததோ அங்கிருந்து தொடங்குகின்றன பிரியதர்ஷினியின் கவிதைகள்.
சின்னஞ்சிறிய பெண்களை நாம் எதிலும் அடக்கி வைத்துக்கொள்ள முடியாது. தன் மன ஒளிர்விலிருந்து இந்த உடலத்தை ஏற்பதில் அவர்கள் தன்னிலை காண்கிறார்கள்.
ஏற்கெனவே பெயரிடப்பட்ட அனைத்தையும் விளங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட எதையும் மறுப்பதில் அவர்கள் உண்டாக்கும் குழப்பமே வளர்ந்தவர்கள் தவறிழைப்பார்கள். அவற்றை குழந்தைகள் சீர்செய்வார்கள் என்று சொல்லும் ழார்க் ப்ரேவரின் படைப்புகளை நினைவூட்டும் பிரியதர்ஷினி கவிதைக்கு வந்துசேர்கிறோம்.
எனக்கு பிரியதர்ஷினியை சமீப காலமாகத்தான் தெரியும். தன்னுடைய இன்றைய இருப்பை, கூக்குரலை, அதன் சத்தத்தை ஊடுருவலாய் முன்வைத்திருப்பது கவனம் ஈர்த்தது.
ஒரு பழமரத்தின்மீது கல்லெறிவதற்கும் தன்னைத் துரத்தும் நாயின்மீது கல்லெறிவதற்கும் இடையே துளிர்க்கின்றன பிரியதர்ஷினியின் கவிதைகளும் அவற்றின் வலிகளும்.
இளம்பெண்கள் தங்கள் காதலுக்கு அப்பால் செலுத்தும் சமிக்ஞைகள் ஒரு மரபான வாழ்க்கைக்கு எந்தவிதக் கருணையையோ ஒப்புதலையோ அளிப்பதில்லை. மிகச்சிறந்த முதியவர்கள் தங்கள் கண்ணீர்த் துளிகளைச் சிந்திக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் இன்றைய தன்னுணர்ச்சிக் கவிதைகள் இதுவரை எழுதப்பட்டு வந்த மொழியின் தீர்மானங்கள் மீது ஓர் உடைப்பையும் விலகலையும் நிகழ்த்துகின்றன. இவற்றின் மீது அஜாக்கிரதையாகத் தங்களை நிறுவும் அனைத்து அமைப்புகளும் தாங்கள் நம்பிய மெய்ம்மைகளைப் பிடிவாதமற்றுக் கைவிடத்தான் வேண்டும் என்கிற இடத்தில்தான் மற்றமைகள் தங்கள் அரசியலை இடப்படுத்திக்கொள்கின்றன. மிகப்பெரிய வேண்டுதல் என்னவெனில் இந்த இடத்தில் கலை மிகுந்த மன உயரத்தை ஏற்கவேண்டி இருக்கிறது. அப்படியாகும் போதிலே அதுவே அறமாக மாறுகிறது.
ஏனெனில் வரலாறு தன் மற்றமைகள் மீதான முரண்பாடுகளையே தனது வரலாறாகவும் அழகியலாகவும் தக்கவைத்துக் கொண்டது.
இந்த அழகியலை அது யாருக்கும் பரிசளிக்கவில்லை. ஆகவேதான் பிரியதர்ஷினியின் கவிதைகளில் ஒரு பக்கம் வலியாகவும் மறுபக்கம் அநீதியிலிருந்து தப்பிச்செல்வதாகவும் இருக்கிறது. எந்தப் பெரிய மனதுக்காரர்களும் இக்கவிதைகள் பற்றிய தங்கள் தானங்களை அளிக்க இயலாது.
ஜீலியஸ் கிறிஸ்தவா, ஜூடித் பட்லர், அன்னா அக்கமதேவா, ஹெலன் சிச்சு, மேயர் கிரீன் மற்றும் ஹாசினி எல்லோரும் கேட்கும் கேள்வியைத்தான் சமூகம் நோக்கி பிரியதர்ஷினி கேட்கிறார்.
‘என் வேரின்மேல் நடந்துகொண்டிருக்கிறது
இரவின் விருந்து’
குடிசைகளில் நாங்கள் மறைவதும்
குடிசைகளை மறைப்பதும்
முழங்கால் அற்ற தேசத்தின் பண்பாடு மற்றும் கைநாட்டுப் பற்று’
என்று எழுதும் பிரியதர்ஷினிகள் நம்மிடையே வந்துவிடுகிறார்கள், பேசிவிடுகிறார்கள், உண்மையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.
‘இப்புதிய உலகத்தைப் பறவைகளோடும் நமக்குத் தேவையான காய்கறிகள், இறைச்சிகள், நோயற்ற வாழ்வு, வலிமையான சந்தோசம் இவற்றுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்’ எனவும் கவிதைகளில் வைப்பது எவ்வளவு ஆரோக்கியமானது.
சக்திவாய்ந்த ஆற்றல் மிக்க அரசுகள், இன்னபிற மூலதன மாயங்கள் யாவற்றுக்கும் இக்கவிதைகளை எதிரிடையாக முன்வைப்பதில் மிக நம்பிக்கையுள்ள கவிஞராகவும் தன் வாழ்வின் சதியை ஏற்றுக்கொண்டவராகவும் இப்படியாக ஒப்புக்கொடுப்பதாகவும் நிலத்தில் காலூன்றி நிற்பதில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் பொருளியல் அம்சங்களைக் கோரிப்பெறுபவராகவும் அதற்கான மொழியை எந்த தந்திரத்தையும் எந்தப் பூடகத் தன்மையையும் முன்வைக்காமல் எதிர்கொண்டு பல நூற்றாண்டு கவனிப்பின்மையைத் தூண்டுபவராகவும் இக்கவிதைகளை நமக்குத் தருகிறார் பிரியதர்ஷினி. மிகச்சிறந்த கவிஞரான, போராளியான சுகிர்தராணிக்கு பிறகு சமீபத்தில் இத்தகைய பாடுபொருள்களை முன்வைத்தவராகவும் என் வாசிப்பில் தென்படுபவராகவும் இருப்பதால் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தன் உடலின் அரசியலை முன்வைப்பதில் வேறு ஒரு வாசிப்பில் அரசியலிலும் கலையிலும் முக்கியத்துவம் பெறுவார் என நான் நம்புகிறேன்.
ஏனெனில் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற அன்னி எர்னாக்ஸ் தைரியம் மற்றும் மருத்துவக் கூர்மைக்கான அல்லது தனிப்பட்ட உடலில் பால்ய ஆர்கஸத்திற்காக எப்போதும் அதன் விருப்ப உறுதியில்தான் அல்லது வேட்கையில்தான் பலவிதத் தண்டனைக்கு அப்பாலும் தன்மீதான ஒடுக்குதலுக்கும் அப்பால் நான் உயிர் தரித்திருக்கிறேன் என்ற கூற்றுக்கு இணங்க நம்மிடையே பிரியதர்ஷினி தோன்றி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.
-யவனிகா ஸ்ரீராம்
திண்டுக்கல்
நூல்: தோடயம்
ஆசிரியர்: பிரியதர்ஷினி
வெளியீடு: யாவரும் பதிப்பகம்.
விலை : ₹ 180
நூலினைப் பெற :
Be4Books,
#24, Shop.No.B, First Floor, S.G.P.Naidu Complex,
Velachery Main Road, Velachery, Chennai-42.
Contact & WhatsApp.No: 90424 61472
குறிப்பு : யாவரும் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் பிரியதர்ஷினியின் “தோடயம்” கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய முன்னுரை. நூலாசிரியரின் அனுமதிப் பெற்று வெளியிடப்பட்டிருக்கிறது.