cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 கட்டுரைகள்

கனிந்து மிதக்கும் கனவுகள்


கவிதாயினி அன்பு மணிவேலின் கவிதைத் தெறிப்புகளை அவரது முகநூல் பக்கத்தில் படித்து ரசித்திருக்கிறேன். ஒரு சமயம் அவரிடம் எப்போது உங்கள் கவிதைத் தொகுப்பைக் கவிதைப் பிரியர்களின் கைகளில் தரப்போகிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.. இப்போது அந்த தருணம் வந்திருக்கிறது.

அவரது கவிதைகளில் கலைப் படிமங்களாகி கவனம் ஈர்த்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கும் ‘ கொட்டாரம் ‘ பதிப்பகத்தை பாராட்டுகிறேன். கவிதைத் தொகுப்பு ‘காளஞ்சி’ யாக கைகளில் தவழ்கிறது.

காளஞ்சி என்றால் செட்டிநாட்டில் ‘பிரசாதம்’ என்பது வழக்காம். அதுவும் அவரவர் கொடுத்து, பூஜை செய்ததும் அவரவர்க்கே தரப்படும் பிரசாதம்..! இந்தத் தலைப்பைத் தொற்றுக் காலத் துயரங்களைச் சொல்லும் கவிதைக்கு வைத்திருக்கிறார் அன்பு.. தொகுப்பிற்குத் தலைப்புக் கவிதையும் இதுதான்..

தொற்றுக் காலத்தைச் சொற்கனில் நிரப்பிக் கவிதை சொன்னவர்கள் பலருண்டு. தொட்டாலும் பட்டாலும் மரணம் என்ற கடுமையான காலத்தை கடந்து வந்து அதைக் கவிதையில் அசைபோடுகிறது மனம்..

முழுதாக அடைத்துக் கொண்ட காலத்தில் கடை கண்ணி கிடையாது.. நல்லதும் கிடையாது.. வந்து கொண்டே இருந்த பொல்லதுக்கும் போக முடியாது. வெளியூரும் விழாக்களும் இல்லாது போன காலத்தைக் கவிதாயினி நிகழ்காலமாகவே கவிதையில் வருவித்து வருத்தம் கொள்கிறார்.

அவரது கவிதையில் கிராமத்து முத்தாலம்மன் பூட்டிய அறைக்குள் வெம்பிக் கிடப்பது போலவே வியாபாரம் வேடிக்கை எதுவும் இல்லாமல் வெறித்துக் கிடக்கிறது ஊர்மந்தை..! வேறென்ன சொல்ல.. கலைஞரின் கால்கள் கரகமாட முடியாமல் காத்துக் கிடக்க, பக்தரின் கைகளும் ‘காளஞ்சி’ ஏந்த ஏங்கி நிற்கின்றன.

தொற்று அவரவர் கொடுத்து அவரவர் வாங்கியதா என்ன..? யார் யாரோ யாருக்கெல்லாமோ தந்து வந்தது அல்லவா..? கேட்காமல் கொண்ட காளஞ்சி..!

இப்படி படித்த கணத்தில் சொல்மலர்களில் இருந்து மனம் நிரப்பும் கவிதை மணத்தை இந்த தொகுப்பு வழியாக நுகர்ந்து ரசித்தேன்.

அன்பு மணிவேலின் கவிதைகள் இயல்பாகத் துவங்கி சடாரென பாய்ச்சல் காட்டி பூரணத்துவம் அமைந்து நிறைவாவதை ரசித்துத் துய்க்கலாம்.

அன்பின் கவிதைகளில் அமைந்து பொலியும் இன்னொரு சிறப்பு, அவைக் காட்சிப் படலங்களாக விரியும் அற்புதம்தான். கவிதைகள் காட்சியாகும் தருணங்கள் ஒவ்வொரு கவிதையிலும் வாய்த்துக் கிடப்பது வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அனுபவமாகும்.

முதல் பருக்கையில் துவங்குகிறது தொகுப்பின் கவிதைப் பாய்ச்சல்.. முதல் பருக்கையின் பெரும்பயன் பரிசோதனை அல்லவா.. பாந்தமான வாழ்க்கை பதமாகி அமையும் முன்பு நடக்கிற பரிசோதனைதானே பால்யப் பருக்கை.!

பிரபஞ்சத்திற்கு ஏதும் பாரபட்சம் உண்டா..? அது அதன் போக்கில் காலம் தள்ளுகிறது.. வெயிலும் மழையும் கருணை காட்டுவது ஒவ்வொருக்குமா.. பிரபஞ்ச மலர்க்காடு கல்லும் முள்ளுமாய்த்தானே கருணை காட்டுகிறது.. கவிதாயினி பிரபஞ்சத்தைக் கேட்டுப் பார்க்கச் சொல்லுகிறார்..

மனிதத்தின் சங்கடங்களையும் சவால்களையும் எளிமையான சொற்களில் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியான நதி போன்ற பாவனையில் யதார்த்தமாகப் பேசுகின்றன அன்பின் கவிதைகள். முத்தாய்ப்பாக நமது மனதில் முறுவல் பூக்கவும் வைக்கின்றன அவரது எள்ளல் ததும்பும் சொல்லாடல்கள். நீங்கள் நூலைப் பரட்டிப் புகுமுன்பு கொஞ்சம் அவரது கவிதைத் தேன்துளிகள் தரட்டுமா..

பார்த்துப் பார்த்து பராமரித்த பாட்டியின் கனவில் மட்டும் தாத்தா வரவில்லை பார் என்று பேத்தி நக்கல் செய்ய, அவர் இறந்து விட்டாரா என்ன? என்ற பாட்டியின் கேள்வியில், இனனும் மறதித் தாழ் போட்டு அடைக்காத அன்பு வந்து முறுவல் பூக்கிறது. அவர் ‘பாட்டியின் தாத்தா ‘ அல்லவா..!

வானம்தான் பொதுவான கூரையென்று எல்லார்க்கும் தெரியும்தானே.. பின் ஏன் இத்தனை அலட்டல்..? ஓட்டைகள் நிறைந்த குடிசைக்குள் ஓராயிரம் நிலவுகள் வருகை தருகின்றனவே.. கூரை விரிசல்களில் சிரிக்கும் ‘கிழிந்த வானம்’ எத்தனை அழகு..!
ஒரு செயலின் எதிர்வினை முகத்தில் அறையும் போது கூட முன்செயலின் குற்றம் உறுத்தாத ஜென்மங்கள் இருக்கிறார்கள் தானே..! பறவைக் கூச்சலும் மாளாத குப்பையுமாக தொல்லை தருவதாக வாசல் மரங்களை எதிர் வீட்டுக்காரம்மா வெட்டி அகற்றியதைப் பார்க்கிறார் கவிதாயினி. பின்பு, கூப்பிட்டால் வராத காக்கைகளின் மீதும், கூப்பிடாமலே வந்து கிடக்கும் வெயிலின் மீதும் வருகிற ‘விசனம்’ மரம் அகற்றிய போது அவருக்கு வந்ததா என்று கேட்கிறது அன்பின் கவிதை..!

நல்ல அடையாளங்கள் உண்மையில் தொலைந்து போனபின்பும் தொலையாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் சுவடுகளில் அந்த பழைய கருணை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லவா.. பதினெட்டாம் நூற்றாண்டின் சகோதரி கிளாரிந்தா வெட்டிய கிணற்றில் பாளையங்கோட்டையில் சாதி பார்க்காது சகலரும் நீரிறைத்துக் கொண்டார்கள்.. கால வெள்ளத்தில் சகோதரியும் மறைந்தார். அவரது பெயர் சொல்லி வந்த ‘பாப்பாத்திக் கிணறும்’ மறைந்து போனது. ஆனால் வரலாறு அந்தப் பெருங்கருணையை நினைவில் வைத்திருக்கிறது. அன்பு மணிவேலின் ‘கிணத்து வீடு’ம் அப்படித்தான். தொலைந்து போகாது.

மரண வீட்டில் எல்லாருக்கும் முடிந்தது பரிவு ஒன்றுதான். பரிவை இறக்கிவிட்டு சொல்லாமலே வந்து விடுவோம்.. இழப்பை நிரந்தரமாகச் சுமக்கப் போகிறவர்களுக்கு நம்மால் வேறென்ன செய்ய முடிகிறது என்று விசனம் கொள்கிறது அன்பின் ‘முடிந்தது’ என்ற கவிதை. வேறென்ன முடியும் அன்பு..?

‘தள்ளிப்போகாதே’ என்றொரு கவிதை.. தள்ளிப் போய்விட்ட சங்ககாலம் முதல் தங்கியிருக்கும் தற்காலம் வரை தொடரும் அன்பின் தருணங்களை அள்ளி வந்திருக்கிறது.

முற்றத்துத் தொட்டி நீரில் முகிழ்த்துக் கிடக்கிறது முழுநிலவு.. குழந்தை காடடினாள் அன்னைக்கு அன்னையின் கண்களில் குழந்தையின் முகமே பூரண நிலவு.. இருந்தாலும் குழந்தை பார்த்ததையும் சேர்த்து இரண்டு நிலவென்றாள்.. குழந்தை மனத்திற்கும் அந்த குறும்பு புரிந்துவிட்டது போலும்.. திரும்பவும் பார்த்துவிட்டு மூன்றென அன்னையையும் காட்டிக் கொண்டது.. கவிதை நம்மைக் கட்டிக்கொண்டது..! ‘மூன்றும் நிலா’ தானே..!

 

பெய்யெனப் பெய்யும் மழை எத்தனை பெரிதென்றும், எத்தனை அரிதென்றும் வள்ளுவர் வியந்து போய், கணவனிடம் பக்தி கொண்ட மனைவிக்கு உவமை செய்தார். ஆனால் நமக்கெல்லாம் நினைக்காத நேரத்தில் வந்த மழை பற்றித்தான் அலட்டல் அதிகம். ‘சொல்லாமல் வந்த மழை’மீது வருகிற செல்லக் கோபத்தை ஒரு கவிதையாக்கி நம் மனம் நனைக்கிறார் அன்பு.

தும்மலும் விக்கலும் நினைவின் எதிரொலியாக சங்க காலம் தொட்டு வள்ளுவர் தொடர கண்ணதாசன் வரை கவிதை சொல்லியும் தமிழ் களைத்துப் போகவில்லை. அன்பு மணிவேலின் கவிதை வேறுரகம்.. விக்கலை வேவு பார்க்க அனுப்பி வைத்து விசாரிக்க காத்துக் கொண்டிருக்கிறாள் அன்பின் தலைவி. ‘கெக்கலிக்கும் விக்கல்’ வந்திருக்கும்.. வந்திருக்கும்..

அன்பின் கவிதையொன்று ‘வெயிலை மேய்க்கிறது’ . இன்னொரு கவிதையில் அவரைத் தூங்க விடாமல் தட்டி எழுப்பி மேய்க்கவா என்கிறது. ‘புல் குடித்த மிச்சப் பனி’ என் மீதுபட்டால் எழுந்து விடுவேன் என்கிறார் கவிதாயினி.. இது என்ன கோளாறு..? விட்டு விடுமா வீட்டுக்குள்ளேயே வந்து விட்ட அந்த வெயில்.?

இந்தக் கவிதைக் காதலர்களுக்கு மழையென்றால் அப்படி ஒரு கொண்டாட்டம் போலும்.. சேர்ந்திருந்ததை நினைத்தாலும் மழை நாள் நனைக்கிறது.. பிரிந்து போனதை நினைத்தாலும் மழைநாள் தான் அழுகிறது.. மழை நாள் மாறிப் போனாலும் அன்று போல இன்றும் ‘ஊதா நிறத்துக் குடை’ இன்னொரு நல்ல மழைக்காக காத்திருக்கிறதாம்..! நினைவுக் குடை ‘ஊதா நிறத்துப் பிழை’ ஆகி விட்டதே

‘பசி’ என்றொரு கவிதை இந்தத் தொகுப்பில் உள்ளது.. ‘பசித்திரு தனித்திரு விழித்திரு’ என்றாரல்லவா வள்ளலார்.. அன்பின் கவிதையில் பசி விழித்திருந்து தனித்துவம் காட்டுகிறது.

‘அர்ச்சனை’ என்ற இன்னுமொரு கவிதையில் காதல் சொல்லாலும் நினைவாலும் அர்ச்சிக்கப் படுகிறது.. சொல்லிச் சொல்லி மாளாத நீண்ட பேச்சில் சொல்லாமல் விட்டதும் இருக்கும் தானே.. அன்பின் கவிதை அர்ச்சனைகளில் விழுந்த சொற்களே செடியாகி பூக்குமென்றால் விழாது போன சொற்களின் விலை என்னவாயிருக்கும் என்று கேட்டது என் வாசிப்பனுபவம்.

‘இங்கிருந்தால் அங்கே.. அங்கிருந்தால் இங்கே’ என்று அலைபாய்வதுதானே மனித மனம். அதுவும் தாய்க்கு மகளென்றால் ‘தவிப்பு’க்கு பஞ்சமென்ன.. அன்பின் சொற்கள் தவியாய் தவிக்கிறது.

அன்பின் கவிதைகளில் அலையடிக்கும் மனிதத்தைச் சுவைத்து நுகருங்கள்..

இந்தக் கவிதைத் தொகுப்பு தமிழ்க் கவிதைப் பிரியர்களுக்கு அன்பு வழங்கிய காளஞ்சி..

இன்னும் பல கவிதைகள் அன்பின் அம்பறாத் தூளியிலிருந்து அடுத்தடுத்த தொகுப்பாக வரவேண்டும்.. வாழ்த்துகள் அன்பு மணிவேல்.


நூல் விபரம்

நூல் : காளஞ்சி
வகைமை : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : அன்பு மணிவேல்
வெளியீடு : கொட்டாரம்
பதிப்புக் குழுமம் : Hexagon Media House
பக்கங்கள் : 152
விலை : 180

நூல் பெறுவதற்கு: +91 95510 65500


இப்பதிவு அன்புமணிவேலின் “காளஞ்சி” கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற அணிந்துரை.

About the author

இரா.கோமதிசங்கர் .

இரா.கோமதிசங்கர் .

எழுத்தாளர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website