தோழி அன்புமணிவேல் பல்லாண்டுகளாக மின்னிதழ்களில் தூவி வந்த கவி விதைகளில் துளிர்த்த அருங்கொடி வரிகளை தொடர்ந்து சென்று முகநூல் மலர்களுடன் கை குலுக்கியவன் நான். இவர் உணர்வுகளை வடிக்கட்டி சொற்களாய் வடித்தெடுக்கும் வித்தையை கற்றவர்.
புத்தகங்களை ஆராதிப்பவர்கள் மனதில் துளிர்க்கும் எண்ணங்களை எழுத்தில் கொண்டு வராமைக்கு முக்கிய காரணமாய் இருப்பது இயலாமையும், முயலாமையும். அதிலும் குறிப்பாக பெண்கள் வீட்டையும் சுமந்து கொண்டு கனவையும் துரத்துவது கடினமான ஒன்று. அப்படி பற்பல வைரங்கள் இன்னும் பட்டை தீட்டப்படாமல் இருக்கின்றன. இந்த வைரத்தை பட்டை தீட்டி மகுடமேற்றிய தோழர் நல்லு லிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றி.
கவிதைகள் என்பவை சொற்திரள்களை தொடுத்திருக்கும் மெல்லிய உணர்வின் வெளிப்பாடு. அவை பனிப்பாறைகளில் உருகியோடும் தெளிநீராய், மலரிதழ்களில் துளிர்க்கும் தேனாய் சுவை கூட்டுவது.
நெஞ்சகமே கோயில் எண்ணங்களே சுகந்தமென அன்புமணிவேல் வடித்த கவிக்கோயிலில் படைத்த பிரசாதமே காளஞ்சி எனும் இக்கவிதை நூல். காளந்தி எனும் சொல்லுக்கும் பிரசாதம் என்றே அர்த்தம்.
இதிலிருக்கும் ஒவ்வொரு கவிதையும் வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தை மீண்டும் வாழவைப்பதே இந்நூலின் சிறப்பு என நினைக்கிறேன். சில நேரம் துயரத்தையும், சில நேரம் இன்பத்தையும் நுகர வைத்து கலைடாஸ்க்கோப்பாய் பிம்பங்களை மனதில் உருவாக்குகிறது. நாம் வாழாத சில காட்சிகளையும் கண்முன்னே கடை விரித்து காட்டுகிறது.
வெயில் மேய்க்கிறேன், புத்தம் புதிதாய் ஒரு பழையமுது, சொல்லடி வீதி, கிழிந்த வானம், ஊதா நிறத்துப் பிழை, வலித் தடம் என கவிதைகளின் தலைப்புகளே வானிற்கு முகவரியளிக்கும் வானவில்லாய் அழகூட்டுகின்றன. வெய்யிலாய் காய்ந்து, மழையாய் குளிர்விக்கவும் செய்கின்றன.
இந்நூலின் துவக்கத்தில் …
எஞ்சிய பருக்கைக்கெல்லாம்
பிறவிப்பயன் தந்துபோனதோ
வெந்துவிட்டதாயெனப்
பதம் பார்க்கையில் செத்தொழிந்த
அந்த முதல் பருக்கை!
என பொங்கும் கவிதையே நம்மை பதம் பார்த்து முழுக்கவனத்தையும் ஈர்த்து விடுகிறது. எவருமே பொருட்படுத்தாத அந்த முதல் பருக்கை இவரது கவிப்பசியை தூண்டியிருக்கிறது. மேலும் கவிதை பிடிக்க தூண்டிலிட்டு இருக்கிறது.
என் குடைக்கு
மழையேந்தி நிற்கிறேன்
நீ வருவாயென
என்று இவர் விரிக்கும் சொற்குடையில் நாம் அறியாமலே மனம் சென்று நின்று விடுகிறது. மனம் மழையில் நனைகிறது. அடுத்திருக்கும் கவிதைக்கு நம்மை குதூகலத்துடன் கைப்பற்றி அழைத்து செல்கிறது.
பழைய தோழி ஒருத்தியை எதிர்பாராமல் கண்டு வீடு திரும்பும் கவிதை
பால்யத்தின் பழையமுதில்
ஆகப் போதையாகிறது
புதிய மினுமினுத்த
நரைத்த என்பொழுது…
என்று மருகுகையில் நம்முள்ளிருக்கும் இறந்த காலம் நீர் மேல் எண்ணைப்படலமாய் எழுகிறது. மழை பெய்து விட்டு விலகிச்செல்லும் வெண்மேகமாய் ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.
பத்தியச்சோறு எனும் கவிதை ஒரு திருமணத்தில் பழைய காதலன் தனது மகளை கொஞ்சுவதை மறைந்திருந்து பார்க்கும் பெண் மனதின் தழும்புகளை கீறி ரணமாக்குவதை விவரிக்கிறது. எல்லோர் மனங்களிலும் இருக்கும் தழும்புகளை வருட வைக்கிறது. நெடுஞ்சாலைக்கிளிகளின் யாமங்கள் விமோசனமில்லாத பெருஞ்சாமங்களாய் கழிவதை மடிக்கனம் புலம்புகிறது. இவரது சொற்களுக்கு வெயிலை காயப்போட்டு மடித்து வைக்க தெரிகிறது. பனிக்கு பண்டமாற்றாக வெயிலை கூட்டிக்கொண்டு திரியவும் தெரிகிறது.
குடும்பத்திற்கு வாழ்வை தாரைவார்க்க சிறகுகளை வெட்டிக்கொண்ட ஒரு மனைவியின் கழிவிரக்கம்….
முனை மழுங்கிப்போன என்
சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்
முளைத்து நிற்கும் சுய பச்சாதாபத்தை
வேரோடு பொசுக்கிவிட்டால்
உனதன்போடு பின்னிக்கொள்வதில்
எந்தத் தடையும்
இருக்கப் போவதில்லை எனக்கும்…
என்று புலம்புகையில் மனம் கனத்து போகிறது. விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளி அடுக்களையில் வாழ்வை எரிக்கும் பெண்களின் மன புழுக்கம் அமிலம் தோய்ந்த சொற்களாய் வெளிப்படுகையில், வாழ்வின் சில வலிமிகுந்த பக்கங்களை நிரப்ப பெண்களால் மட்டுமே முடியும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆண் எவ்வளவு முயன்றாலும் அது நகலாகவே மிஞ்சும். அவனால் பார்த்ததை எழுத முடியுமே தவிர ஒருபோதும் உணர்ந்து எழுத இயலாது என்பதை முகத்திலறைந்து உணர்த்துகிறது.
நீ என் மீதேறிந்த
சொற்கல்லின் மீது
காலூன்றிக்கொண்டுதான்
என்னிலிருந்து
மேலும் ஓரடி உயர்ந்திருக்கிறேன்
என்ற நம்பிக்கை கவிதை செய்கூலி சேதாரம் கடந்துதான் கல் சிற்பமாகும் என உரக்க கூறுகிறது.
இப்படி கவிதைகள் அனைத்தும் தாயின் ஈரம், இயற்கையின் இளமை, ம்க்கும் என்ற சிணுங்கல், உலகத்தை கற்பிக்கும் தாய விளையாட்டாய் பரிணமித்து மனதை கொள்ளை கொள்கின்றன. இவர் பட்டு பட்டு அறிந்த ஒவ்வொன்றையும் கவியெனும் பட்டு இழைகளால் நெய்து அளித்த புத்தகத்தின் கதகதப்பில் மயங்கிய பின்னர் வேறென்ன கேட்க போகிறேன். மேலும் பல நூல்களை நெய்து மனதிற்கு ஆடை போர்த்துங்கள் என்பதைத் தவிர.
தமிழில் ஒரு சிறந்த கவிதை நூலை படைத்ததற்கும், பதிப்பித்ததற்கும் அன்பு மணிவேலுக்கும், நல்லு லிங்கம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நூல் : காளஞ்சி
வகைமை : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : அன்பு மணிவேல்
வெளியீடு : கொட்டாரம்
பதிப்புக் குழுமம் : Hexagon Media House
பக்கங்கள் : 152
விலை : ₹ 180
நூல் பெறுவதற்கு: +91 95510 65500