cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 விமர்சனம்

“நீ உதிர்த்த சிறகின் பறவை” – ஓர் அறிமுகம்


“நீ உதிர்த்த சிறகின் பறவை” எனும் மீ. யூசுப் ஜாகிர் எழுதிய கவிதைத் தொகுப்பு காதல் கவிதைகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவரது முதல் கவிதைத் தொகுப்பும் காதல் கவிதைகள் தான். மீளவும் காதல் கவிதைகள் கொண்ட தொகுப்பு வெளியாகியுள்ளது.

இளைஞர்களுக்கென்றே இருக்கும் பாலினக் கவர்ச்சியும் காதல் வயப்படுதலும் கவிஞர்களுக்குக் கவிதைகள் வடிக்க வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

முதல் தொகுப்பு “நினைவுகளின் நதி” என்ற பெயரிலும் இரண்டாம் தொகுப்பு “நீ உதிர்த்த சிறகின் பறவை” என்ற பெயரிலும் நூலாகியுள்ளன.

“கவிதை நூலுக்கு எப்போதுமே தலைப்பு மிக சிறப்பாக அமைய வேண்டும். அந்தத் தலைப்பு நூலில் இடம் பெற்றுள்ள மொத்த தலைப்புகளுக்கும் ஓர் அறிமுக வரியாக இடம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை தலைப்பை படித்தவுடன் வாசகர்களுக்கத் தோற்றுவிக்க வேண்டும்.” என்று அணிந்துரையில் கவிஞர் பிரபுசங்கர் குறிப்பிட்டுள்ளது பொருத்தமானது. நூலுக்குத் தலைப்பு வைப்பதில் கவிஞர் யூசுப் ஜாகிர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

ஆணும் பெண்ணும் சமம் என்றாலும் அனைத்து அம்சங்களிலும் ஆணாதிக்கமே ஓங்கி நிற்கிறது. காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?

காதலி குறித்த இலக்கியங்கள் சங்ககாலந் தொட்டு இன்றளவும் விரவி நிற்கின்றன. தலைவன் தலைவி குறித்துக் காட்சிப்படுத்தும் தொல்காப்பியர் கூட,

“தன்னுறு வேட்கை கிழவன் முன்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை”

என்கிறார். பெண்ணானவள் தன் விருப்பத்தைக் தலைவன் முன் குறிப்பால் மட்டுமே உணர்த்த வேண்டும் என தொல்காப்பியம் வரையறை செய்கிறது. ஆண்களுக்கு அந்த வரையறை இல்லை.

அப்படித்தான் காதலை வெளிப்படுத்தவும் தனது விருப்பத்தைத் தெரியப்படுத்தவும் அல்லது ஆணின் ஒருதலைக் காதலை ஏற்க மறுக்கவும் வெளிப்படையான கருத்துச் சுதந்திரம் பெண்களுக்கில்லை. ஆனால் ஆண்களோ பெண்களிடம் வெளிப்படையாக காதல் வேட்கையை வெளிப்படுத்துவதும் ஒருதலைக்காதலானால் ” எனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்னும் கருத்தியலோடு வன்முறையில் ஈடுபடுவதும் கண்கூடு.

“பகிர்ந்து கொள்ள
யாருமில்லாத எல்லாமே
பாரம்தான்
காதலும் கூட”

“என் ஆசைகளுக்கு உயிர்
கொடுத்த நீ
உன்னோடு வாழ வேண்டுமென்ற
என் உயிரின் ஆசையை
மட்டும் கொன்றது ஏனோ”

“இன்னொரு உயிருக்கு
அன்பைக் கொடுக்காத வரும்
இன்னொரு உயிர் கொடுக்கும்
அன்பை உணராத வரும் தான்
மனமில்லாத அரக்கர்கள்”

“பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
நீங்கள் நேசிப்பில்
விஷம் கலந்த பிறகும் கூட”

“நான் இறக்கவில்லை
உன்னுடைய பொய்யான காதலும்
உண்மையான நினைவுகளும் தான்
அனுதினமும் இறக்க வைக்கிறது
அணுஅணுவாய்”

“ஒரு நாள் உயிரற்ற என்னுடன்
வெள்ளைத் துணி
சுற்றிக் கிடத்தி
வைக்கப்பட்டிருக்கும்
அப்போது எனக்கு
துரோகமிழைத்தவர்களின்
நெஞ்சம் தவிக்கும்
எனக்கு அநீதி
இழைத்தவர்களின்
மனம் கலங்கி நிற்கும்
என்னை நேசித்தவர்களின்
கண்கள் கண்ணீர் சுமக்கும்
என்னை வெறுத்தவர்களின்
இதயம் கனக்கும்
நான் இந்த அற்ப வாழ்வை விட்டு
விடுதலையாகியிருப்பேன்”

போன்ற கவிதைகளில் காதல் ஏக்கமும், ஒருதலைக் காதலின் தவிப்பும், கவிஞரின் விரக்தியும் விரவிக் கிடக்கின்றன.

ஆனால் கவிஞரின் தூய அன்பையும் ஆழமான காதலையும் பல கவிதைகளில் வாசித்து இன்புறலாம். அவற்றுள் சில:-

“அவசரமாகவோ
நிதானமாவோ
நீ இடும் முத்தங்கள்தான்
என் ஆயுளை
நீட்டிக்கச் செய்கிறது”

“எங்கிருந்தோ நீ
என் கவிதைகளை
வாசித்துக் கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையில் தான்
இன்னமும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்”

“உன் மொத்த வாழ்நாளில்
ஒருமுறையேனும் எனக்காக
ஒரு கவிதையை எழுத
முயற்சித்திருப்பாய் தானே
அந்த ஒரு கவிதை தான் என்
கவிதைகளுக்கும் எனக்கும்
கிடைத்த பெரும் விருது”

இயல்பாய் பெய்யும் மழையைத் தன் காதலுக்குப் பயன்படுத்தி எப்படி எழுதுகிறார் பாருங்கள்:-

“விடாமல் தூறிக் கொண்டிருக்கும்
மழைக்கு
நீ வந்து நனைய வேண்டும்
என்பது கோரிக்கை
நீ காய்ச்சலில் தவிக்கிறார்
என்றதும் பெருங்குரலெடுத்து
அழ ஆரம்பிக்கிறது
தூறும் மழை”

இத்தகைய கவிதைகளில்தான் வெற்றி பெறுகிறார் கவிஞர்.

காதலைத் தவிர்த்து வேறு கவிதைகள் இல்லையே என்று ஏங்கும் போது சில கவிதைகள் நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.

“யாரோ வீசியெறிந்த
ஒற்றைக் கல்லில்
கலங்கி நிற்கிறது
குளம்”

அம்மா குறித்த கவிதையில்,

“படிக்காத அம்மாவின்
கைவளையும்
தாலிச்சரடும்தான்
என்னை பட்ட மேற்படிப்பு
படிக்க வைத்தது
படித்து முடித்து வேலை தேடி
அமர்ந்து வட்டியோடு
திரும்ப மீட்டு எடுக்கையில்
திரும்பக் கொடுக்க முடியாத
அளவுக்கு அவள் அன்புக்கடன்
பெருகியிருந்தது
எதுவும் கேட்காமல்
ஓரம் கண்ணீர் துளியை
சுந்தபடி அணிந்து
கொள்ளும் அம்மா வாழ்வின்
பல்கலைக்கழகமாகிறாள்”

என் அன்பின் ஆழத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர் யூசுப் ஜாகிர்.

“போராடி தோற்றால்
அவமானம் இல்லை
அனுபவம்”

“நீ மீண்டு வரவேண்டும் என்று
மனதில் உறுதியாக இருந்தால்
நீ உதிர்த்த சிறகுகளிலிருந்து கூட
பறவையாக சீறிப் பறக்கலாம்”

போன்ற நம்பிக்கை தரும் கவிதைகள் அருமை.

கவிஞருக்குள்ள கற்பனைத் திறன், வார்த்தைச் செறிவுகள், அழகியல் ஆளுமை ஆகியவற்றைப் பொதுவான கவிதைகளைப் படைக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக அவலங்களை அழகான கவிதைகளால் காட்சிப்படுத்தினால் ஒட்டுமொத்த சமூகமே பயன்பெறும். அடுத்த தொகுப்பில் நம்பிக்கையை மெய்ப்பிப்பார் என நம்பலாம்.

நூலினை அழகுற அச்சிட்டுத் தந்துள்ள மௌவல் பதிப்பகம் பாராட்டுக்குரியது.

“நீ உதிர்த்த சிறகின் பறவை” நூலின் கவிதைகளை வாசித்து இன்பம் துய்க்க வாங்கி வாசியுங்கள்.


  • பெரணமல்லூர் சேகரன்
நூல் விபரம்

நூல்: நீ உதிர்த்த சிறகின் பறவை 

ஆசிரியர்: மீ.யூசுப் ஜாகிர்

வெளியீடு: மௌவல் பதிப்பகம்

விலை :  ₹  150

தொடர்புக்கு : +91 9787709687

About the author

Avatar

பெரணமல்லூர் சேகரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website