கவிதையின் ஆழமான துருவங்களைத் தேடி இரவு பகலாக ஏன்? பல காலங்களாக அலையும் மனித மனதின் ஊடே புதிய தலை முறைக்கும் எடுத்து சொல்லுவதற்கும் சொல்லப்படாமல் விட்ட எத்தனையோ பாடங்களாக இன்னும் கிடப்பதை அறிவுறுத்தும் விதமாகவே இந்த “சூடான பச்சை சொல்” (வெளியீடு: தமிழ்வெளி, மலையம்பாக்கம், சென்னை 600122) எனும் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டக்காரான இவர் முதல் கவிதை புத்தகத்தின் “இலைக்கு உதிரும் நிலம்” 2017 ஆம் வருடம் வெளிவந்துள்ளது. இது இவரின் இரண்டாவது கவிதை புத்தகம் .இவர் கவிதைகள் அனைத்தும் சொல்லால் பரந்து விஸ்தாரித்து வேர்விட்டு நிற்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. என்ற போதும் 64 பக்கங்கள் என்ற குறைவான அளவிலான கவிதைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
இக்கவிதைத் தொகுப்பு கவிதைக்கென்ற குணத்துடன் எழுதப்பட்ட போக்கை முதலில் வரவேற்க வேண்டும். உவமைகளும் எதுகைகளும் மோனைகளும் ஆட்சி செய்த கவிதைப் பட்டறை குறியீடுகளாலும் படிமங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருப்பதை காண முடிகிறது. சொற்களில் தொய்வில்லாத குணம், வார்த்தையில் இறுக்கம் கலந்த அமைப்பு,
“கனவுகளின் கண்ணீரைக் கட்டிக்கொள்கிறேன் /-அற்ற பொழுதில்/ உடைக்கும்பொழுது/ உலகம் முழுதும்/ கடல்” (ப.23)
“புழுக்கம் ஒரு மரத்தைப் போல வளர்ந்து/ அசைந்து கொண்டிருக்கும் இரவு/ அரவங்களைத் தின்றும் நிழலில் வீங்கியும் இருக்கிறது கிளை மறந்த பறவை/ வரும் திசையெல்லாம் ஆகாதெனத் திரும்பும் நிலையில்/ விழுதுகள் விழத் தொடங்குகின்றன ஈனமாய்/ மூக்கும் வாயும் இல்லாதவனாகிய காலம்/ இலைகள் மூடத்துவங்கியது/ கதைகளை/ மரம் சரிய இயலாமல்/ அதே சூடான பச்சைச் சொல்லின்மேல்”. (ப.13)
கவிதையை அசுவாசிக்கையில் (கவிதையை வாசிக்கக் கூடாது கவிதையைப் படிக்கும் போது உள்ளார உணர்ந்து அதனுடன் லயக்க வேண்டும்) கெட்டித்து இறுகிய தன்மையுடனான வார்த்தைகள். கவிதைகள் எதனோடும் சேர்த்து பொறுத்திப் பார்ப்பது என்ற புதிர் தன்மைகள் முதலில் தென்படும். பிரமிள் , நகுலன், ஞானகூத்தன், தேவதேவன், கலாப்ரியா என எத்தனையோ கவிதை கர்த்தாக்கள் பின்னே நின்று வழி நடத்துகின்றனர்களா என்றும் தோன்றும்.
உள்ளே உறவுகள், வாழ்க்கை சாயம், சமூக பிறழ்வு, பெருநகரத்தின் பேரரவம், வாழ்க்கை விழுமியமான தொலைந்த கனவு, பால்யம் என எத்தனையோ முகங்களாக 49 கவிதைகள் இடம் பெறுகின்றது.
அணிந்துரை வாழ்த்துரை எதுமில்லாது உள்ளே நேரடியாக கவிதைக்குள் இறக்கிவிடப்படுகிறோம். எந்தப் பட்டகத்துக்குள்ளும் இவர் கவிதைகளை அடக்க முடியாது, மேலும் கவிதைகளின் அவஸ்தைகளை நேர்புறமாக வெட்டி துணிந்து எடுத்து எறியவும் முடியாது.
சமர்பணமே சட்டையடி தான் .. எல்லா இல்ல கிழத்தியின் முகங்களும் இப்படி இருப்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் மனைவி எனும் வட்டம் அதன் ஊடாக கலந்திருக்கும் அன்பு நேரடியாக சொல்லப்பட்டிருக்கிறதைக் கண் கூட காணலாம்.
ஒவ்வொரு கவிதைகளையும் நீர்த்திப் போகாத வார்த்தை கொப்பளிப்புகள் என்று சொல்லிக்கொள்ள தோன்றும். எந்தக் கவிதையின் உருவமும் எதாவது ஒன்றின் பின் அடக்கப்படுவதை உணர்ந்து கொள்ள முடியும். நீண்ட நெடிய கவிதைத் தலைப்புகள் கொண்ட கவிதைகள் பல இடம்பெற்றுள்ளது. ‘போர் என்பதற்கும் எல்லை என்பதற்கும் உள்ள தொடர்பு’(ப.28), ‘நான் ஒரு பல் துலக்கியைப்போல் அசைக்கப்படுகிறேன்’(ப.31), காலம் பெய்யும் மழைக்கு முளைக்க விடாத ஒரு மரம் யாருக்குதான் இல்லை?(ப.40), ப.33,ப.37,ப.45,ப.52,ப.53,ப.62, இது போன்ற நீண்ட தொடரமைப்பான தலைப்புகள் கொண்ட கவிதைகள் ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட கவிதை பாடுகளுக்கு தகுந்த அமைப்புடன் அமைகிறது.
மடை கசிதல் எனும் கவிதை பெண்ணின் மாதவிடாய் வாழ்வையும் குரலுக்குள் சத்தமிடும் சத்தங்களாக வெளிப்படுத்துகிறார். இந்த கவிதைக்குள் வலி, உணர்வு, பெரும்பாடுகள், தொய்வில்லாமல் சொல்லப்பட்டுள்ளது. மேலும் கவிதைக்கு அழகான கற்பனையும் உள்ளூர உள்ளது. இதில், “குக்கர் கத்திக் கொண்டு முடியாத நீரை வெளியே தள்ளுகிறது பதிலாக/ வெங்காயத்தினுள் இருப்பது பாவப்பட்ட கனவுகளே” (ப.8)
பல இடங்களில் கவிதைக்கு இடம் தந்தும் நிற்கிறார், “வளர்ந்த நிலவை ஒரு நிறைமாதக் கருவெனத்/ தடவிக் கொண்டேயிருக்கிறது வானம்” ப.9 “ சூரியனைப் போன்ற பயம் ஒன்று/ நான் பிறப்பதற்கு/ முன்பிருந்தே வெளிச்சம் தருகிறது” (ப.13)
மனித உறவின் பால்யத்தில் முடிச்சிட்டு கிடக்கும் ஞாபகங்களாக மன இறுக்கத்தை தாத்தா சைக்கிள் மூலம் வரையும் கவிதையாக ‘வாழும் எல்லோரும் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் பெயர் என்ன?’ கவிதை உட்பொருள் அமைகிறது
கவிதையின் வரிகளுக்குள் வாழ்வியலின் வலிகளும் காட்சிகளும் ஈரமான துணியைப் போல காட்சி தருகிறது. ‘தனது வரைபடத்தை உண்டு இல்லையென ஆக்கியவன்’ என்னை லயக்க வைத்தவை. இவர் கவிதையில் பூனை எப்படியாவது நுனைந்து கொள்ளுகிறது
மொத்தத்தில் இவர் கவிதைகள் சொற்பிரயோப்பின் நவீனம், இறுக்கமாக வேய்ந்தெடுத்த பொருள், படிமங்களை கசைக்கி எறிந்தது போல நுட்பம், கேள்வியுடனும் அதற்கான பதிலுடனும் பொருத்திப் போடும் குறியீடு, அகம்புற வாழ்வில் அகமும் எழுந்து பேசுகிறது, புறமும் எழுந்து பேசுகிறது. தனித்து ஒவ்வொரு வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய பண்பு இதனிடம் உள்ளது.
நூல்: சூடான பச்சை சொல்
ஆசிரியர்: முருகன். சுந்தரபாண்டியன்
வெளியீடு: தமிழ்வெளி
விலை : ₹ 60