cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 கவித்துவம், கவிதை, கவிஞன் தொடர் கட்டுரைகள்

கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம்-9]

Getting your Trinity Audio player ready...

முதற்கண் புரிந்துகொள்ளப்படுகிற வரையில்
எதையும் விரும்பவோ வெறுக்கவோ
முடியாது.

-லியனார்டோ டா வின்ஸி
(இத்தாலிய ஓவியர்)
1452-1519

தொடக்கத்திலேயே ஒன்றைத் தெளிவுப்படுத்திக்கொள்ளலாம். சிலர், அப்ஸ்ட்ராக்ட் என்பதை ‘அரூபம்’ (Formless) எனத் தவறுதலாகப் புரிந்துகொள்கிறார்கள். எளிதாக, அப்படி நினைக்கத் தூண்டி அதன் அர்த்தப் பாதைக்குள் சிந்தனையைச் செலுத்திவிட்டால், அது வேறெங்கோ ஒரு முட்டுச்சந்தில் கொண்டுபோய் வாசிப்பனுபவத்தை நிறுத்திவிடும்.

ஆகையால், அரூபம் என பொத்தாம்பொதுவாகவும் அப்ஸ்ட்ராக்டை குறிப்பிட்டுவிட முடியாது. 

குறிப்பிட்டுவிடக் கூடாது.

[தொடரின் மூன்றாம் அத்தியாயத்தில் ரூபம் X அரூபம் குறித்து உரையாடியிருக்கிறோம். அதனை ஒரு மறுவாசிப்பு செய்துவிட்டு இங்கே வந்தால், இந்த அத்தியாயம் 9-ல் அதே அரூபத்தை எந்தக் கோணத்திலிருந்து அணுகுகிறோம்? ஏன் அப்படி அணுகுகிறோம் என்பது சட்டென பிடிபட்டுவிடும்]

மற்றபடி-

இந்த அத்தியாயத்திலேயும் சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாக அப்ஸ்ட்ராக்டை எடுத்துச் செல்வதற்கும் முன்னே வேறொன்றினை குறித்து கொஞ்சம் பேசிவிட்டு மீண்டும் அதற்குள்ளே போகலாம்.

மது அறிவுக்குள்ளே சதா வேலை செய்துகொண்டிருக்கிற முக்கியமான இரண்டினை இப்போது பார்ப்போம்.

1. உணர்வு:

மகிழ்ச்சி, கோபம், இரக்கம், சலிப்பு, பொறாமை, அச்சம், நம்பிக்கை, பெருமை, சோகம், அவமானம், குற்றவுணர்வு, அன்பு, நன்றி, சோர்வு, உற்சாகம்..

2. உணர்ச்சி வெளிப்பாடு:

பதற்றம் அடைதல், அழுகையை வெளிப்படுத்துதல், உற்சாகக் கூக்குரலிடுதல், அதிர்வடைதல், அச்ச உணர்வால் அலறுதல், வியர்த்துப் போய் உறைதல், சலிப்படைந்து புலம்புதல், கோபத்தில் கத்துதல் மற்றும் பிற செயல் புரிதல், அவமானத்தால் / குற்றவுணர்வால் தலைகுனிந்து இருத்தல், அன்புணர்வால் / நன்றியுணர்வால் அணைத்துக்கொள்ளுதல், கை குலுக்குதல்..

இவையிரண்டுமே மனித நிலைப்பாடுகளுக்குரிய அடிப்படையை கட்டமைக்கின்ற ஒரு சிறிய உதாரணப் பட்டியல். அவை, ஏற்கனவே பலதரப்பட்ட நுணுக்கமான ஆய்வுகளுக்கு எடுத்தாளப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சாமானிய மனித வாழ்வில் இவை யாவும் சிறப்பு கவனம் பெறுவதற்கு சூழ்நிலைகள் அவசியமாகின்றன. சூழ்நிலைகளையோ மனநிலைகளே உருவாக்குகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டிலொன்று அகத்தில் உள்ளது. மற்றொன்று, அதன் விளைவாக புறத்தில் உருவாகின்றது.

அதாவது, உணர்வுகள் நம்முடைய மனத்தின் அகநிலைக்குள் ஏற்படுகின்றன. அவற்றின் விளைவுகளை உணர்ச்சிநிலைகள் புறத்தில் வெளிப்படுத்துகின்றன. அவ்வெளிப்பாடுகளில் நமது செயல்பாடு பிரதானமாக உள்ளது. அந்தப் புறவெளிப்பாடுகள்தாம் சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.

அதனால்தான், -தனிமனிதனோ அல்லது சமூகமனிதனோ- நாம் பிறர் கண்ணுக்குப் புலப்படுகின்ற சூழ்நிலைக் காரணிகளில் முக்கியமான நபராகக் கருதப்படுகிறோம். அப்பேற்பட்ட சூழல்தோறும் நமது அறிவால் தெரிந்து, புரிந்துகொள்ள முடிகிற பருப்பொருள்களை (Concrete Objects) நம்மால் எளிதாக அடையாளங்கண்டுகொள்ள முடியும். ஏனென்றால் நாம் உரையாடிக்கொண்டிருக்கிற அனைத்துப் பகுதிகளும் ‘வேறு எதுவோ’ அல்ல ‘வேறு யாரோ’ அல்ல, அது நாம்தான். அவை அனைத்தும் நம்மைப் பற்றித்தான். 

இதில், பருப்பொருட்கள் (Concrete Objects) நம் சொந்த உபயோகத்திற்கு பயன்படுவதால் அவை நம்மைப் பிரதிபலிக்கின்றன அல்லது நம்மை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தொழில்நுட்ப ரீதியாக அவற்றின் பயன்பாடுகள் நமது தேவையையொட்டி மட்டுமே உருவாக்கப்பட்டவை. அவற்றின் பருவடிவமும் தன்மையும் காலத்திற்கேற்ப உருமாற்றம் அடைந்துகொண்டே இருந்தாலும், அப்பொருட்களின் இறுதி செயல்பாடு என்பது நாம்தான்.

அது கவித்துவத்திற்குரிய பாடுபொருளாகினால் அந்நிலைப்பாட்டையே புறம் என்கிறோம்.

இவற்றை நினைவில் நிறுத்தி, நம்முடைய மைய உணர்ச்சிகளுக்கு(Emotions) ஆதாரமாக உள்ளவை உணர்வுநிலைகள்தான்(Moods) என்கிற கணக்கில் அதன் தொடர்ச்சியாக வெளிப்படுகின்ற உணர்ச்சியின் சாட்சியாக நமது செயல்களைப் பிரித்துப் பகுத்துப் பார்க்கப்போனால்.. அதில்

  • நம்முடைய உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள்
  • நம்மிடமிருக்கின்ற உணர்ச்சிகரமான நிலைகளின் தூண்டுதல்கள்
  • நம்மிடம் தோன்றிடும் உணர்ச்சிகரமான முகபாவனைகள் –என மூன்று அம்சங்கள் கவனத்திற்குரியனவாகின்றன.

அதன்வழியே பிடிபடுபவை நமது அகத்தில் உள்ள உணர்வுநிலைகள்(Moods) ஆகும். அவை சர்வநிச்சயமாக அப்ஸ்ட்ராக்ட் தன்மையாவன. அதுவே மனிதச் செயல் அனைத்திற்குமான தொடக்கப்புள்ளியாகும். ஆனால் அவை, பருப்பொருளிற்கு(Concrete Object) எதிர்வடிவம் கொண்டவை.

இப்படி படிப்படியாக கவனித்துக்கொண்டே வரும்போது..

  • ஓர் உணர்ச்சி வெளிப்பாட்டிலிருந்தோ..
  • அதன் விளைவுகளிலிருந்தோ.. ஒன்றினை நேரிடையாகப் புரிந்துகொள்வதில் எந்தக் குழப்பமும் எழப் போவதில்லை. 
  • நமது ஐம்புலன்களின் துணையால், மனித நடவடிக்கை என்கிற அளவில் அப்புரிதல் தெளிவாகவே இருக்கும்.
  • சொல்லப்போனால், துல்லியத்தன்மைக்கு மிக நெருக்கத்திலிருக்கும்.

எனவேதான் காலம்காலமாக பொதுமனித ரசனையும் அன்றாடத்தின் மீச்சிறு தத்துவநிலைகளும் மறைபொருளென இந்த மானுட வாழ்வின்மீது சரடுகளாகப் பின்னலிட்டுள்ளன. இவற்றினூடே, மொழியம்சம் கூடிய கவிஞரோ வாசகரோ அல்லது கலையம்சம் வேண்டுகிற படைப்பாளியோ பார்வையாளரோ.. இரு வகையினருக்குமே எதுகுறித்தும் உற்று நோக்கிடவும்.. நெருங்கிச் சென்று கூர்மையாக நுணுகி அவதானிக்கவும் பரிந்துரை உள்ளது.

● ● ●

ரி, சென்ற அத்தியாயத்தின்படி…

எளிமையாகச் சொல்வதென்றால் ஒரு பருப்பொருளின் (Concrete Object) எதிர்த்தன்மையை அப்ஸ்ட்ராக்ட் கொண்டுள்ளது. அதனை நமது கண்களால் பார்க்க முடியாது. ஆனால், நம்முடைய பயன்பாட்டிலிருந்து விலக்க முடியாத அளவிற்கு ஓர் அர்த்தமாக அதனை நாம் உணர்ந்திட முடியும்.

நாம் ஏற்கனவே சிலவற்றைப் பார்த்திருக்கிறோம்:

  • படிமம்(Imagery)
  • உருவகம்(Metaphor)
  • மறைபொருள்(Allegory)

அப்ஸ்ட்ராக்ட் என்கிற கலையம்ச உத்தி, கவிதைக்குள் மொழியின்வழியே வெறும் சொற்களாக மட்டுமே துலங்குவதில்லை. ஒரு காட்சிக்குள் உதவிடவோ, ஒரு படிமத்தினூடாகவோ, ஓர் உருவகத்திற்குள்ளோ அல்லது மறைபொருளினுள்ளோ அது இருக்கக்கூடும்.

அதனை அறிந்து வைத்திருந்தால், வாசகரின் வாசிப்பனுபவம் புதிய கோணத்தில் விரியும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அகப்பொருளை கையாளுகின்ற நவீனத்துவக்கவிதைகளில் அப்ஸ்ட்ராக்ட் தவிர்க்கமுடியாத சிறப்புத்தன்மையை அடைந்துவிடுகின்றது. கவிதையின் வெளிப்புறத்தில் இருக்கின்ற சூழ்நிலைகளுக்கும் அகத்தில் எழுகின்ற மனோநிலைகளுக்கும் நடுவே ஒரு அப்ஸ்ட்ராக்ட் சொல் பாலமிடுகிறது.

அதன் காட்சிரூபத்திற்கு துணைபுரிந்திட ஓர் எளிமையான உவமையையோ அல்லது பிரமாதமான உருவகத்தையோ கவிஞர் தேர்ந்தெடுத்திருந்தால் அது வாசகரின் மனத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சமயங்களில் ஒரு படிமமே அப்ஸ்ட்ராக்ட் தன்மையான சொல்லாடலில் எழுந்து நிற்கலாம். அப்போது அக்கவிதையின் நவீனத்துவம் அடர்த்தியாகும்.

ஒரு முனையின் தொடக்கப்புள்ளியான உணர்வுகளும் எதிர்முனையின் இன்னொரு தொடக்கப்புள்ளியான உணர்ச்சி வெளிப்பாடும் சட்டென ஓர் இணைக்கோட்டு தண்டவாளமாகி புதிய பயணத்தைத் தொடங்கி வைத்துவிடும்.

நவீனத்துவக் கவிதைகளில் எடுத்தாளப்படுகின்ற பருப்பொருட்களின்மீது படிகின்ற அக உணர்வின் பன்முக அர்த்தங்களே சவாலானவை. அதிலுள்ள அடுக்குகளை மாற்றிக் கலைத்து மீண்டும் அடுக்கி என இழையிழையாக பகுத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பு ஒரு தேர்ந்த வாசகருக்கு உள்ளது.

ரு சொல்லிலிருந்து அடுத்த சொல்லிற்கு வெறுமனே அர்த்தங்களை மட்டுமே எடுத்துச் செல்லாமல் கவித்துவம் கோருகின்ற Demand என்ன என்பதை சற்று நிதானித்து அவதானித்தால் பிடிபட்டுவிடும்.

சரி, அப்ஸ்ட்ராக்ட் என்கிற இலக்கிய உத்தி, நவீனத்துவக் கவிதைக்குள்ளே எப்படியெல்லாம் பயன்பட வாய்ப்புள்ளது என்பதை சில புல்லட்டின் பாயிண்ட்ஸ் வழியாக பார்க்கலாம்.

  • மைய உணர்ச்சிகளை(Emotions) தூண்டிடவும் சிக்கலான யோசனைகளை(Variable complex ideas) படைப்பு அம்சத்திற்குள்ளே கடத்திடவும் ஒரு மனச்சித்திரத்தை உருவாக்குவதற்காக அப்ஸ்ட்ராக்ட் தன்மையுள்ள சொற்களின் துணைகொண்டு ஒரு சரியான படிமத்தை எழுதிட முடியும்.
  • காண முடியாதவற்றின் அப்ஸ்ட்ராக்ட் தன்மை ஒரு பக்கம். தொட்டு உணரக்கூடிய எதிர்த்தன்மை இன்னொரு பக்கம். இவ்விரண்டையும் ஒருங்கே இணைந்தபடி கவித்துவ வடிவத்திற்குள் அனுபவங்கொள்வதற்கு கவிஞர் ஒரு தொடர்பை ஏற்படுத்த விரும்பினால்.. இரண்டிற்குமிடையே பாலமிட்டு முயற்சித்துப் பார்ப்பதற்கு ஆங்கே உருவகம் என்கிற கவித்துவக் கருவி நிச்சயம் பயன்படும்.
  • ஓர் எண்ணவோட்டத்திற்குள்ளே..
    • இடையறாத துடிப்புடன் இருக்கிற சுயபிரக்ஞை (Self-consciousness)
    • கூர்மைப்பட்டுக்கொண்டே இருக்கிற மைய உணர்ச்சி (Sharpen Emotions)
    • கழிவிரக்கத்திற்கு எதிரான தன்னடையாளம் குறித்த யோசனை (Self-identity)

போன்றவற்றை ஒரு கதாபாத்திரம் வழியாக வெளிப்படுத்திட அப்ஸ்ட்ராக்ட் என்கிற சொல்லாடல் உத்தி செம்மையாக பயன்படும். அது நான்/என்/எனது என்கிற First person subjective–ஆக இருந்தாலும் சரி, அல்லது அவன்/அவள்/அது என்கிற Third person subjective–ஆக இருந்தாலும் சரி.

(முன்னர், அப்ஸ்ட்ராக்ட் பற்றி தொடங்கும்போது.. சுயத்திலிருந்து உணர வேண்டி எழுகின்ற தனிப்பட்ட மனோநிலை என்று ஒன்றினை குறிப்பிட்டோம் அல்லவா? அதன் விரிவான சுருக்கம் இதுதான்)

  • கவிதையின் பாடுபொருளுக்கேற்ப தத்துவம் போன்ற குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கோ.. இருபொருள்பட ஓர் இடித்துரைப்பை செய்துபார்க்கவோ அல்லது எளிமையான ஒரு சிலேடையைக் கொண்டு மையமான விஷயத்தை ஒரு படிமத்திலிருந்து அடுத்த படிமத்திற்கு கடத்திடவோ மறைபொருள் (Allegory) என்னும் கவித்துவக் கருவிக்கு இந்த அப்ஸ்ட்ராக்ட் உத்தி பயன்படும்.

இவற்றைத் தவிர நேரம், பொழுது, வண்ணங்கள், வடிவங்கள், என எதனையும் ஒரு அப்ஸ்ட்ராக்ட் உடன் இணைத்து அவற்றின் உதவியோடு புதிய படிமங்களையும் விதவிதமான உருவகங்களையும் எழுதிப் பார்க்க முடியும். ஆனால், ஏன்? எதற்கு? எதனை? என்கிற தேர்வுமுறை கவிஞருக்கு இருத்தல் அவசியம். அதனை அப்படியே ஒரு வாசகரும் இந்தத் தரப்பிலிருந்து அதனை எளிதில் அடையாளங்கண்டுகொள்ள முடியும்.

ஒரு கை ஓசை எழுப்பாது.

● ● ● 

சரி, 2021 மே மாதத்தில், என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு கவிதையை வாசித்துப் பார்ப்போம்.

ரத்து செய்யப்படும் முகங்கள்

விஷயத்தை விட்டு கீழிறங்கியபடி
உறவைத் துண்டித்துவிட்டு
அண்ணாந்து பார்க்கிறேன்
உங்கள் கேலி சிரிப்பின் அர்த்தங்கள் யாவும்
ஆவியாகின்றன

அதன்பின்
இருளைப் பொழியும் பொழுதை
யாரோ இரவென்று சொல்லி வைத்தார்

பொய்

அந்நகைப்புகளின் இளஞ்சூட்டு ஒழுங்கின்மை
அறையின் இண்டு இடுக்கெங்கும் பரவி
வியாபிப்பதை
எழுத எழுத மாய்வதாக இல்லை

இத்தனிமை என்பதாகவும்

மீண்டுமொரு எத்தனிப்போடு
மேலேறிப் போக
வாகு செய்யும் புதிய விஷயங்களில் அலுங்குகின்றன
அத்தனைப் பழைய முகங்களும்

மனத்தின் ஒதுக்குக்கு அப்பால்
புறம்போக்காக குவிந்து கிடக்கும் குப்பைகளைக்
கிளறினால்
சிக்குமாக இருக்கும்
சுயத்தில் நைந்த ஒன்றிரண்டு முகமாவது

அதனுள் புனைவாய் சுருண்டபடியே

தகுதிக்கான வெறிக் கூத்தில்
ஒரு கெட்ட ஆட்டம் போட்டு பார்த்துவிட
பலகீனமான கால்களை வலுபெற செய்துகொண்டுவிட்டதான
உலகின் மாய்மாலத்தோடு

அவ்விஷயத்தின் படியை
ஒரே ஒரு மிதி மிதித்தால் தான் என்ன

●●●

இதுவரையில் எட்டு அத்தியாயங்களின் வழியாக பேசியவற்றின் தொடர்ச்சியில் படிமம்; உருவகம்; மைய உணர்ச்சி; உணர்வுநிலை; உடல் & புலன்களால் உணர்தல்; மறைபொருள்; அகம்Xபுறம்; ரூபம்Xஅரூபம்; முரண்பாடு –என அனைத்தையும் மனத்தில் ஒரு ரீ-கால் செய்துகொண்டால்.. இங்கே மீண்டும் இவற்றினூடே இந்தக் கவிதையில் அப்ஸ்ட்ராக்ட் ஓர் உத்தியாகக் கையாளப்பட்டிருக்கும் விதத்தை அனலைஸ் செய்து பார்க்கலாம்.

கவிதை First person subjective–ல் எழுதப்பட்டிருக்கிறது. எனும்போதே, தனிமனித உள்ளக்கிடக்கையா? அல்லது புற உலகின் அவதானிப்பு /தரிசனம் மட்டும்தானா? என்கிற இரண்டில் ஒன்றிற்கு தயாராகிவிடலாம்.

  • ‘ரத்து செய்யப்படும் முகங்கள்’ என்கிற தலைப்பு நேரிடையான அர்த்தத்தில் உள்ளது. ஆனால், கவிதையின் முதல் வரியின் முதல் வார்த்தையே ‘விஷயத்தை விட்டு கீழிறங்கியபடி’ எனத் தொடங்கும்போது, அதென்ன விஷயம்? என்கிற கேள்வி எழுகிறது. கவிதையை மேற்கொண்டு தொடர்ந்து செல்வதற்கான சாவியாக அந்த வார்த்தை உள்ளது. அந்த வார்த்தை ஒரு அப்ஸ்ட்ராக்டான வார்த்தை. அந்த விஷயம் எதுவாகவும் இருக்கலாம் என்னவாகவும் இருக்கலாம்.
  • ‘கீழிறங்கியபடி’ எனும்போதே அங்கே அந்த ‘விஷயம்’ ஒரு படிக்கட்டாக நமக்கு அரூபம் கொள்கிறது. காரணம், ‘அண்ணாந்து பார்த்தல்’ அதில் உள்ளது.
  • ‘கேலி சிரிப்பு’ ஒரு புறச் செயல். அச்சிரிப்பிற்கான ‘அர்த்தங்கள்’ ஒரு அப்ஸ்ட்ராக்ட் சொல். இதில், ‘அர்த்தங்கள் ஆவியாதல்’ என்பது அப்ஸ்ட்ராக்டே படிமமாகவும் பரிணமித்து உள்ளது.
  • இக்கவிதை First person subjective–லிருந்து புறத்தில் உள்ள பிற Subject–களை நோக்கி உரையாடுகிறது.
  • ‘கேலிச் சிரிப்பின் அர்த்தங்கள் அனைத்துமே ஆவியாகிய பின்னே இருளைப் பொழியும் பொழுதை யாரோ இரவென்று சொல்லி வைத்தார்’ என்பதாகவும்.. அது ‘பொய்’ என்கிற ஜட்ஜ்மெண்ட்டும் இருப்பதால் ‘பொய்’ ஒரு அப்ஸ்ட்ராக்ட்.
  • காரணம் என்னவென்றால், அந்த ‘இருளை’ –என்னும் இடத்தில் அது அரூபமான ஓர் இருளைத்தான் சொல்லியுள்ளது. அதனால் அந்த இருளும் ஒரு அப்ஸ்ட்ராக்ட் தனத்தை எட்டுகிறது. அப்படியாகும்போது அங்கே இரவு எனும் பொழுது இல்லை.
  • கவிதைசொல்லியின் மனத்தில் உள்ள வெப்பம்தான் அங்கே பொழுதாக சூழ்ந்திட எத்தனிக்கிறது. ஆனால், அது இருளத் தொடங்கியுள்ளது. எனவே, அகவுலகின் கொந்தளிப்பை புறவுலகு நோக்கி அறைகூவிட கவிதைசொல்லி முனைகிறான்.
  • கவிதைசொல்லியின் கழிவிரக்கம் (self-pity) அதனை எதிர்த்து ஒரு தன்னடையாளத்திற்காக (Self-identity) போராடுகிறது. அதனால்தான், அந்த கேலிச் சிரிப்புகளின் இளஞ்சூட்டு ஒழுங்கின்மை அறையின் இண்டு இடுக்கெல்லாம் பரவி கொஞ்சம் கொஞ்சமாக வியாபித்துக்கொண்டிருப்பதை எவ்வளவு எழுதினாலும் அது மாண்டு போவதாக இல்லை. அதனைத் தனிமை எனச் சொல்லிக்கொண்டாலும் அது நிகழ்வதில்லை.
  • மனத்தின் ஒதுக்கில் குவிந்து கிடக்கின்ற குப்பையைக் கிளறினால் ஏற்கனவே சுயத்தில் நைந்துபோன ஒன்றிரண்டு முகங்களாவது சிக்கும் என்று யோசிக்கும்போதே புதிய விஷயங்களிலும் அலுங்குகிறது அத்தனைப் பழைய முகங்களும்.
  • இப்படி கூர்மைப்பட்டுக்கொண்டே இருக்கிற மைய உணர்ச்சியும் இடையறாத துடிப்புடன் இருக்கிற சுயபிரக்ஞையும் ஓர் எண்ண ஓட்டத்திற்குள்ளே நிகழ்த்த நினைக்கிற உருமாற்றத்தை இக்கவிதை நவீனச் சித்திரமாக்கிட எத்தனிக்கிறது.
  • இறுதியில் இந்த உலகின் ‘மாய்மாலத்தோடு’ அவ்விஷயத்தின் படியை ஒரே ஒரு மிதி மித்தால்தான் என்ன? என்கிற தீர்க்கத்திற்கு கவிதைசொல்லி வந்துவிடுகிறான். (மற்றவர்களின் அனுதாபம் கிடைக்கிறதுக்காக உள்ளதை மறைச்சு வச்சு செய்யுற பாசாங்குக்கு பேருதான் ‘மாய்மாலம்’) என்கிற அர்த்தம், இந்தக் கவிதைக்குரிய ‘மாய்மாலம்’ என்கிற அப்ஸ்ட்ராக்டாக பயன்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த கவிதையில் ‘விஷயம்’ –என்பது ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • அர்த்தங்கள் ஆவியாதல் –ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • பொழுது –ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • இருளைப் பொழிதல் –படிமம்
  • பொய் –ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • இளஞ்சூட்டு ஒழுங்கின்மை –ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • தனிமை –ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • ‘புதிய விஷயங்களில் அலுங்கும் பழைய முகங்கள்’ –என்பது படிமம் (அதில் ‘புதிய விஷயங்கள்’ –ஒரு அப்ஸ்ட்ராக்ட்)
  • மனத்தின் ஒதுக்கு –ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • ‘சுயத்தில் நைந்த ஒன்றிரண்டு முகமாவது’ –படிமம் (அதில் ‘சுயம்’ –ஒரு அப்ஸ்ட்ராக்ட்)
  • ‘அதனுள் புனைவாய் சுருண்டபடியே’ –படிமம் (அதில் ‘புனைவு’ –ஒரு அப்ஸ்ட்ராக்ட்)
  • ‘தகுதிக்கான வெறிக் கூத்தில்’ –இதில் ‘தகுதி’ ஒரு அப்ஸ்ட்ராக்ட்
  • ‘மாய்மாலம்’ –ஒரு அப்ஸ்ட்ராக்ட்.
  • பருப்பொருட்களாக (Concrete Objects) ‘அறையின் இண்டு இடுக்குகள்’, ‘படி’ என இரண்டு உள்ளன. ‘எழுத எழுத’ என்கிற ஒரு புறச் செயலும் உள்ளது.

இந்தக் கவிதையில் எங்குமே ஓர் உருவகம்கூட காணப்படவில்லை. படிமங்களும் அப்ஸ்ட்ராக்ட்களும் நிறைந்த ஒரு கவிதை. சென்ற அத்தியாயத்திலும் இந்த அத்தியாயத்திலும் அப்ஸ்ட்ராக்ட் குறித்து உரையாடியதனையொட்டி ‘ரத்து செய்யப்படும் முகங்கள்’ என்கிற தலைப்பையும் யோசித்துப் பார்த்தால்.. புதிய பாயிண்ட் ஆஃப் வியூ கிடைக்கும் வாய்ப்புள்ளது. ‘விஷயம்’ என்கிற ஒற்றைச் சொல் வாசகருக்கான பன்முகக் கோணத்திற்கு பாதைகள் அமைத்துக் கொடுக்கிறது. அது, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்களாக பெருகிக்கொண்டே போக வேண்டும் என்கிற ஓர் எளிய ஏற்பாடுதான் இக்கவிதை.

அடுத்து-

இன்னொரு கவிதையைப் பார்ப்போம். 2019 மே மாதத்தில் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது.

  • TRIANGLE அந்தரம்

நம்பும் விதமொன்றை பழைய டைரியிலிருந்து
கிழித்து மடித்து ராக்கெட் செய்தேன்

பதிமூன்றாம் மாடியிலிருந்து அதைக்
காற்றில் ஏவியபோது

எதிர் பிளாக் சுவரை முட்டாமல் வளைந்துத் திரும்பி
நடுவே அந்தரத்தில் சுற்றுப்பாதை அமைத்து
சுழன்று சுழன்று
நின்ற பால்கனிக்கே திரும்பி காலடியில் வந்து மோதியது

குனிந்து எடுத்துப் பிரித்தபோது
நம்பும் விதமாய் இல்லை

●●●

சிறிய கவிதை. இதனை அனலைஸ் பண்ணுவது எளிதுதான். ஆனால், நுணுக்கமாக அவதானித்து அனலைஸ் செய்தால் சில அடுக்குகள் புலப்படும் என நம்புகிறேன்.

  • வழக்கம் போல ‘TRIANGLE அந்தரம்’ தலைப்பின் முக்கியத்துவத்தை மனத்தில் வைத்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அது ஏன்?
  • ‘நம்பும் விதம்’ என்கிற முதல் சொல்லே இதில் ஒரு அப்ஸ்ட்ராக்ட் தான் (முந்தைய கவிதையைப் போலவே)
  • இதிலும் பருப்பொருட்கள் (Concrete Objects) புறத்திலிருந்து அகத்திற்கும், புறம் நோக்கி அகம் பயணப்படுவதற்கு அவை பாலமெனவும் பயன்படுவதை அவதானிக்க முடிகிறதல்லவா?
  • ‘அந்தரம்’ என்பதும் ஒரு அப்ஸ்ட்ராக்ட்.
  • இதிலும் உருவகங்கள் இல்லை.

இந்தக் கவிதையின் பன்முகத் திறப்பிற்கு ‘பழைய டைரி’ என்பது ஒரு Key word-ஆக இருக்கலாம். மற்றபடி இதிலுள்ள படிமங்களின் கட்டுமானத்தை உள்வாங்கிக்கொள்ளும்போது அப்ஸ்ட்ராக்டின் பங்களிப்பு புற அடுக்கில் செயல்படும் விதத்தையும், அகத்தின் அடுக்கில் செயல்படுகின்ற விதத்தையும் பகுத்து வைத்து பார்க்கலாம். அப்படித்தான் வாசகர்களுக்கு தத்தம் ரசனைக்குரிய Perceptions கிடைக்கும்.

தொடர்ந்து பேசுவோம்.


About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ரேவதி

abstract பற்றிய இரண்டு கட்டுரைகளையும் மீண்டும் வாசித்துவிட்டேன். உணர்வுக்கும் உணர்ச்சி நிலைக்கும், அகமும் புறமுமாக உலவும் ஒன்றை இணைக்க ஒரு சிந்தனை உழைப்பு அவசியம் வேண்டும் என்பதை அதே போல கவிதைகள் எளிதில் புரியவில்லை என்பதை உங்கள் கவிதைகள் அப்ஸ்ட்ராக்டா இருக்கு புரிஞ்சுக்க கடினமா இருக்குன்னு சொல்லுற நிறைய பேர கடந்திருக்கோம்.. அது அப்படி மட்டும் தானா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் தனிமானிதனை நோக்கி அல்லது தனிமனித மனதை நோக்கி கையாளப்படுற சொல் ஒவ்வொன்றும் சொல்லப்படுற உணர்வு + உணர்வு நிலைகளின் அளவில் இருந்து , யாருக்காய் எதன் பொருட்டு என்ற தன்மையில் அந்த அப்ஸ்ட்ராக்ட்டை எடுத்துவிடும் என்பதை ரொம்ப விளக்கமாக சொல்லியிருக்கிறது கட்டுரை.. மறுபடியும் கவிதையும் வாழ்வும் வேற வேற இல்லை என்பதை கட்டுரை எனக்கு காண்பித்திருக்கிறது. ரொம்ப நல்லா இருக்கு அண்ணா

You cannot copy content of this Website