இரா.பூபாலன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பெத்தநாயக்கனூர் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சூலக்கல் கிராமத்தில் வசிக்கிறார். கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி. பொம்மைகளின் மொழி, பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆதிமுகத்தின் காலப்பிரதி, தீ நுண்மிகளின் காலம், அரூபத்தின் வாசனை, திரும்புதல் சாத்தியமற்ற பாதை ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பொம்மைகளின் மொழி தொகுப்பு யூத் கிளப் இந்தியா அமைப்பின் சிறந்த இளம் எழுத்தாளர் விருதைப் பெற்றது. பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு தொகுப்புக்கு உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார். ஆதிமுகத்தின் காலப் பிரதி கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில அளவிலான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில அளவிலான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, நாங்கள் மூன்று இலக்கியகத்தின் சிறந்த புதுக்கவிதைக்கான விருது என விருதுகளைப் பெற்றது. மேலும் இவர் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் இளம் எழுத்தாளர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பொள்ளாச்சியில் நண்பர்களுடன் இணைந்து பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பைத் துவங்கி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறார். கொலுக என்கிற மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறார். சாகித்ய அகாடெமி சார்பில் டெல்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருக்கிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கப்பட்டிருக்கின்றன.