cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 24 உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர் வேல்கண்ணனின் பதில்களும் – ( பகுதி 9)


நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன   எழுந்த எண்ணத்தின்  உரையாடல் வடிவமே இந்த “முதன் முதலாக – கேள்விகளும் கவிஞர்களும் பதில்களும்” பகுதியாகும். ஜனவரி 2023 வரை தொடர்ந்து வெளியாகிய இந்த உரையாடல் பகுதி  நீண்ட  இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்கிறது. இந்த பகுதியில் நுட்பம் இணைய இதழ் முன் வைத்த கேள்விகளுக்கு கவிஞர் வேல்கண்ணன் அளித்த பதில்கள் இதோ..!

வேல்கண்ணன்:
  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

பதினான்கு வயதில் எழுதிய காதல் கவிதை. கவிதை நினைவில் இல்லை. ஆனால், யாருக்காக எழுதினேன் என்று தெரியும்.

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 

இணைய இதழ் : உயிரோசை ( 07.09.2009).
அச்சு இதழ் : அகநாழிகை (அக்டோபர்’ 2009).

  • முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பகம் எது.?  அந்த  முதல்  கவிதைத் தொகுப்பு வெளியானதன் பின்னணி  என்னவாக இருந்தது. ?  அந்த முதல் புத்தக வெளியீட்டை எவ்வாறு உணர்கிறீர்கள் ? 

2013-ஆம் ஆண்டு முதல் கவிதைத் தொகுப்பு “இசைக்காத இசைக் குறிப்பு” வம்சி பதிப்பகம் வெளியிட்டது.  காரணம்: கையிருப்பு கவிதைகள் தீர்ந்து போக வேண்டும். ஆதலினால், காற்று நிரம்பியிருக்கும் வெற்றிடத்தை கவிதைகள் கொண்டு நிரப்ப முடியும்.

முதல் புத்தக வெளியீடு : இன்னும் காலத்தைத் தள்ளிப் போட்டு இருக்கலாம்.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

இது குறித்து இங்கே கொஞ்சம் பேசலாம் என்று கருதுகிறேன்.

ஆரம்பித்திலிருந்து “அங்கீகாரம்” என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. கவிதைக்கான அங்கீகாரம் என்பதை, நிச்சயமாகத் தனி நபரோ, நிறுவனமோ, குழுவோ, விருதுகளோ தந்து விட முடியாது. கவிதைக்கு அங்கீகாரம் கொடுக்கும் உரிமை காலத்துக்கே உண்டு என்று நம்புகிறேன். பிறருக்கு இது குறித்து வேறு கருத்துகள் இருக்கலாம்.  கவிதைத் தொகுப்பைத் துருப்பு சீட்டாகக் கொண்டு  திரை இசை பாடல்கள் எழுதுபவர்களை, விருதுகள் வாங்கி குவிப்பவர்களை என்று யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை. அது அவரவர் விருப்பம், தேடல். இதை அவர்கள் அங்கீகாரம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

அதே போல், காலங்காலமாகத் தமிழ் இலக்கிய சூழலில் முரணாகவும்  நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் கவிதைகள் அது வெளிவந்த சமயத்தில் கொண்டாடப்படவில்லை என்பதை அறிவோம். ஏன் இன்றளவும் ஆத்மாநாம், பிரமிள், நகுலன், சி.மணி போன்றவர்களின் பல தமிழ் முன்னோடி கவிதைகள் பரவலாகப் போய்ச் சேரவில்லை என்பதால் அவை கவிதை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? எளிதில் புரியக் கூடிய கவிதைகள் மட்டும் கவிதைகள் என்றால், வற்றாத பெரும் ஊற்று எனப் பொங்கிப் பெருகி பிரவாகம் எடுக்கும் சங்க இலக்கியத்தை நெருங்கவே முடியாது.

கலை அதற்கான களத்தைத் தேர்ந்தெடுப்பது போலவே, அதற்கான காலத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. நமக்கு அஃது புரிபடுவதில்லை போலவே, நிர்ணயம் பண்ணும் இடத்தில் இங்கு யாருக்கும் எதற்கும் அதிகாரமில்லை. வேண்டுமானால், ஒருவர் நம்பும் வடிவத்தை உள்ளடக்கத்தை, வெளிப்பாட்டின் தன்மையை இன்னும் சிலவற்றை வைத்துக் கொண்டு ‘ஒரு விதமான கவித்தமையை’ வகுத்துக் கொள்ளலாம். அதனைக் கொண்டு எல்லோருக்கும் ‘இது கவிதை என்று’ பொதுவான விதியை உருவாக்கி விட முடியாது. எனக்குப் பிடித்த, என் சூழலுக்கு ஏற்ற உடை, உணவு உங்களுக்கு அப்படியே பொருந்திப் போக வேண்டும் என்ற எவ்வித கட்டாயம் இல்லை தானே ?

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?

இன்று வரை விருது பெற்றதில்லை.

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

வைரமுத்துவின் ஏதோ ஒரு கவிதை. கவிதை நினைவில் இல்லை. .

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments

அந்த முதல் காதல் கவிதை….. ???

You cannot copy content of this Website