cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவித்துவம், கவிதை, கவிஞன் தொடர் கட்டுரைகள்

கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 6]

Getting your Trinity Audio player ready...

ஆனால்.. 
நாம் எப்போதைக்கும் 
வெறுமனே  உட்கார்ந்தபடியும் 
நம் காயங்களை வெறித்தபடியும் இருந்திட முடியாது..

-ஹருகி முரகாமி
(ஜப்பானிய எழுத்தாளர்)
12 Jan 1949 [74 வயது]

Cliché – க்ளீஷே. 

இச்சொல் ஃபிரெஞ்ச் மொழிக்கு சொந்தமானது. ஆனால் இந்தச் சொல்லை இலக்கியச் சூழலில் ஆங்காங்கே கேள்விப்பட்டிருப்போம். இதனைத் தமிழில் ‘தேய்வழக்கு’ அல்லது ‘கூறுவதைக் கூறல்’ எனக் குறிப்பிடலாம்.

சொல்லப்போனால் Cliché என்கிற சொல்லே ஓர் ஒலிக்குறிப்புதான். அதன் பயன்பாட்டு மூலம் சுவாரஸியமான ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரத்தில் எழுத்துக்களோ ஓவியங்களோ குடையப்பட்ட ஓர் இயந்திர தட்டு (Cast Plate) உண்டு. அது ஒரு குறிப்பிட்ட தகவல் பிரதியை பல்லாயிரம் பிரதிகளாக அச்சிடும். அத்தனையும் ஒரே பிரதிதானே (The Repeated Verse). அது அச்சிடும்போது ஏற்படும் அழுத்த மோதலில் உருவாகும் ஓர் ஒலியைத்தான் Cliché என்கிற சொல்லாக்கினார்கள்.

அதுவல்ல விஷயம்.

அது எப்படி கலை & இலக்கியத்திற்குள் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது என்பதுவே முக்கியம் அல்லவா. ஓர் ஒலிக்குறிப்பின் தன்மை எவ்வாறு பரவலான அங்கீகாரத்தை பெற்றுள்ளது? அது ஒரு கலைப் பிரதியின் மதிப்புரைக்கோ விமர்சனத்திற்கோ எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்கிற விதங்கள் கவனத்திற்கு உரியது ஆகும்.

ஒன்றைப் போலவே வார்த்து எடுத்து அடுத்தடுத்து பயன்படுத்தப்படுகின்ற எதுவொன்றையும் Cliché என்கிற பதத்தோடு ஒப்பிட்டார்கள். 

(ரொம்ப விரிவாக வேண்டாம். இது போதும் என்று கருதுகிறேன்)

 

விதைகளுக்குள் கருப்பொருளைக் கையாளும்போது சில சொற்களோ சொற்றொடரோ முன்னிறுத்தும் அர்த்தங்கள் மிக எளிமையாக இருப்பது நல்லது என கவிஞர் தீர்மானித்திருந்தால் க்ளீஷேக்கள் உருவாக நேரிடலாம். உரைநடை இலக்கியத்திற்கும் கலையின் இன்ன பிற அம்சங்களுக்கும் இது பொருந்திப் போகின்றது.

தொடர் வாசிப்புத்திறன், ஒரு தேர்ந்த வாசகருக்கு பலவற்றை அறியச் செய்திருக்கும். வாசிப்பின்போது அனுபவமாகின்ற வேகம் அல்லது தொய்வு எனப் பொதுவாக அதிலொரு தேர்ச்சி கூடியிருக்கும். கிடைக்கும் பிரதிகளில் அதனால், ஏற்கனவே சொல்லப்பட்டவைகளின் சாயலை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். அப்படியிருக்க, ஏற்கனவே சொல்லப்பட்டவைகளையே அடுத்தடுத்து எதிர்கொள்ளும்போது ஏற்படுகிற சலிப்புணர்வு தொனிப்பது எதை? க்ளீஷேவைதான். (இந்தப் பத்தியில் இருப்பதும் அதுவே)

கவிதைப் படைப்பு முகிழும் தருணத்தை கவித்துவம் வெளிப்படுத்துகிறது. அதனைப் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டியது யாரென்றால் மொழியைக் கையாளும் கவிஞர்தான். எழுதி முடித்த கவிதைக்குள் என்ன நடந்திருக்கிறது என்பதை கவிஞர் கவனிக்கத் தவறினாலோ அல்லது அவருக்குத் தெரியாமலேயே போயிருந்தாலோ இறுதியில் வாசகரை சென்றடையும்போது அதனை வாசகர் கண்டுகொள்வார்.

கண்டுகொள்ள வேண்டும்.

எளிமையை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுகின்ற கவிதைகள் பெரும்பாலும் இந்த க்ளீஷேவில் மோதி வலுவிழக்கும். எளிமையாக எழுதுவதென்பது ஒரு தேர்ந்தெடுப்பு அல்லது கவிஞரின் எழுதும் உரிமை எனச் சொல்லப்படுவதுண்டு. அதே நிலைப்பாடு எதிர்பக்கம் இருக்கிற வாசகருக்கும் உண்டு அல்லவா.

வாசிப்பின் தரம் அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர்ந்துபோகும்போது எளிமை என்கிற முதல்படியைத் தாண்டி வாசக மனநிலை கடந்துபோகத்தான் வேண்டும். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடலாகாது. தேடல் விரிவடைய வேண்டுமென்றால் பார்வை விசாலமாக வேண்டும். பார்வை விசாலமாக வேண்டுமென்றால் பார்வையின் நோக்கு கூர்மை காண வேண்டும். அதற்கு முதற்கண் பிரதிகளில் புதைந்து கிடக்கும் நூதனமானத் தடைகளை அடையாளங்காண வேண்டும். அத்தடைகள், வாசிப்பு அனுபவத்திற்கான புதிய சந்தர்ப்பங்களை வாசகருக்கு தருவதில்லை. அவை வாசகரின் தொடர் வாசிப்பு பழக்கத்தில் ஓரிடத்திலேயே தேங்கிவிடச் செய்யும்.

க்ளீஷேவுக்கான சில உதாரணங்களைத் தொட்டுப் போகலாம்:

“‘நிலவைப் போன்ற முகம்’, ‘தேன் தடவிய வார்த்தை’ ‘நடனமிடும் விரல்கள்’, ‘குழந்தையின் சிரிப்பைப் போல,’ ‘மாடு போல உழைத்தான்’, ‘காந்தமாக ஈர்க்கும் சிரிப்பு’

இவைப் போன்றவை தேய்வழக்கு சொற்றொடர்கள். வாசகருக்கு சலிப்பை ஏற்படுத்துபவை. முன்னரே கவித்துவமாக செம்மையாக கையாளப்பட்டிருக்கும் இந்த எளிய உவமைகள் இன்றைய சமகால வாசிப்பில் புதிய பாய்ச்சலையோ ஓர் அழுத்தத்தையோ ஏற்படுத்தாது. வாசகரிடம் தாக்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக அது வாசிப்பு சலிப்பையே ஏற்படுத்தும்.

நவீனக் கண்டடைதல் வேண்டுவது நுட்பமான கிரகிப்பை. என்றென்றைக்கும் Keen Observations மட்டுமே அதனை அருளும். புதிய உவமைகளோ உருவகங்களோ எழவேண்டிய நவீனக் கவித்துவத்தின் தளம் சற்று சவாலானதுதான். ஆனால் சுவாரசியமானது.

கவிதைக்குரிய கருப்பொருளின் வீரியத்தை க்ளீஷேவான சொற்றொடர்கள் கீழே இறக்கிவிடாமல் கவனமாக இருக்க வேண்டிய நபர் கவிஞர்தான். எதிர்ப்பக்கத்தில் அதனை அடையாளங்கண்டுகொள்ள வேண்டிய நபர் வாசகர். இது குறித்து இருவருக்குமே தெரிந்திருக்காத பட்சத்தில் அவ்விருவருமே அனுபவரீதியாக ஏமாந்து போகிறார்கள் என்று தீர்க்கமாக சொல்லிவிடலாம்.

 

வாசித்து முடித்த கவிதைக்குள் வாசகர் பங்கு பெறுவதற்கான இடம் இருந்தால் நல்லது. நவீனத்துவக் கவிதையில் அதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு கவிதை தன்னளவில் கடைசி வரியோடு முடிந்துவிடாமல் அது வாசகர் மனதில் நீட்சியாக வளரமுடியும். அதற்கான தடைகள் அக்கவிதைக்குள் இருந்தால் அந்த அனுபவம் நிகழாது. அதனை வாசகர் கண்டுணர்ந்துகொள்ள முடிய வேண்டும். அப்படி முடிந்தால் சிலர் சொல்லுவார்கள் ‘This is not my cup of tea’.

சரி.. விஷயத்திற்கு வருவோம்.

அப்படியான சிலத் தடைகளில் ஒன்று இந்த க்ளீஷே.

நவீனத்துவக் கவிதை வாழ்வின் போக்கை, புறம் சார்ந்தோ அகம் சார்ந்தோ கைப்பற்றி எடுத்துச் செல்லும்போது வாசக மனம் அதனுள்ளே இயல்பாக சஞ்சாரம் செய்வதற்கான தருணங்கள் அங்கே படர்ந்திருக்கும்.

வேறெங்கோ நிகழ்ந்திருக்கும் ஓர் அனுபவம் வாசிப்பின் வழியே அங்கேயும் நிகழும் அதிசயத்திற்கு பல கவித்துவக் காரணிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். ஒவ்வொன்றும் தம்மை வெவ்வேறு கண்ணிகளாக்கிக்கொண்டு  ஏதோ ஒரு படைப்புத் தருணத்தில் ஒருங்கே பிணைத்துக்கொள்ளும் தன்மை உடையவை. அவை அளவில் சிறியதோ பெரியதோ, கவிதையின் கட்டமைப்பில் கையாளப்பட்டிருக்கும் மையக்கருவைப் பொருத்து அமையும்.

 

தைகளைப் போல விவரித்து விரிந்து செல்லும் பல கவிதைகள் இறுதியில் ஒரு திருப்பத்துடன் (Twist) முடிந்து போவதை இன்று பரவலாக பார்க்க முடிகிறது. அவை அங்கேயே அந்த திருப்பங்களிலேயே முடிந்துவிடுகின்றன. வாசகர் மேற்கொண்டு கிளை அனுபவங்கள் பெறுவதற்கான பாதைகள் அங்கே இருப்பதில்லை. காட்சி முடிந்ததும் திரை இறங்கிவிடும். வாசகர் உடனடியாக வெளியேறியாக வேண்டும். அதனுள்ளே சற்று நேரம் இருந்து சஞ்சாரம் செய்வதற்கான வாய்ப்புகள் அவற்றில் இருப்பதில்லை. அது தனி ரகம் (பிறிதொரு சமயம் அவற்றைக் குறித்து இன்னும் விரிவாகப் பேசலாம்).

நவீனத்துவக்கவிதை எளிமையாக இருக்கக்கூடாது என்பதன் பொருள், அவை கடினமாக இருக்க வேண்டும் என்பதல்ல. That’s not a Rule. இதனை நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு கவிதையை எழுதிக்கொண்டிருக்கும்போதே அவை எளிமையாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில், வாசகருக்குப் புரியாது என்கிற அக்கறையில் கோட்டைவிட்டு விடுகின்ற தருணங்கள்தான் ஏராளம். மீண்டும் சொல்லுகிறேன். அதுவும் Rule அல்ல. எதிர்ப்பக்கத்தில் காத்திருக்கிற வாசகரை நம்பலாம். நம்ப வேண்டும். அவருக்கு மொழியின் பரிச்சயம் உண்டு. இன்னும் கூட அவர் தன் மொழியின் பரிச்சயத்தை செழுமைப்படுத்திக் கொள்வார்.

சொல்லப்போனால், எழுதுபவர் & வாசிப்பவர் என ஒரு பெரிய மெனக்கெடல் இருமுனையிலும் அவசியமாகிறது.

 

ன்றாட மனித வாழ்க்கை’ – எனும்போதே பெரிய மாற்றங்கள் இல்லாத காரியங்கள்தான் பொழுது புலர்ந்து பொழுது அடையும்வரை இருந்திருக்கிறது, இருக்கிறது, இனியும் இருக்கப்போகிறது. ஆனாலும், ஓர் அட்டவணையைப் போல நிகழும் இவ்வாழ்க்கை எந்தெந்த நிமிடங்களில் கணிப்புக்கு அப்பாற்பட்டு வேறொன்று நடந்துவிடுகிறதோ அந்தந்த நிமிட விளைவுகள்தாம் மிச்ச பொழுதுகளை, மிச்ச வாழ்வை செலுத்துகின்றன அல்லவா. ஆம் என்றால், அவற்றை உற்று நோக்கும்போது புலப்படுகின்ற சின்னஞ்சிறிய வித்தியாசங்கள் வேறு புதிய செய்திகளை எழுதி வைக்கின்றன. இந்த அவதானிப்பைக் கோருகின்ற நவீன வாழ்வு சவாலானதே. ஏனென்றால் யதார்த்தத்தில் நம்மிடம் புறக்கணிக்க முடியாத அளவிற்கு வலுவான வேறு சில காரணங்கள் இருக்கின்றன. அதிலொன்று, ‘எனக்கு நேரமில்லை’.

இருந்தாலும், நவீன வாழ்வு வழங்கும் சவாலையும் அனுசரித்து..

அதன்வழியே ஒரு தேடல் தொடங்கி சேகரமாகிற கண்டடைதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வெளிப்படுத்த ஒரு படைப்பு மனமும் இருந்து, கையில் நவீனத்துவ வடிவில் கவிதைக்குரிய கருவிகளும் இருக்கும்பட்சத்தில் என்னவாகும்? கவித்துவ வார்ப்பாக சூல் கொள்ளும் நுட்பம், கடைசியில் அதற்குரிய வாசகரைச் சென்றடையும்.

சமூகவாழ்க்கை என்கிற அமைப்பு எல்லோருக்கும் பொதுவானது. அதனை உள்வாங்கிக்கொள்ளும் விதம்தான் ஆள் ஆளுக்கு மாறுகிறது. அதில் முதற்கண் Claim ஆக முன்வந்து நிற்பது அனுபவம் மட்டுமே. வாசகர் தன் அனுபவத்திற்கு இணையான சாயலை ஒரு படைப்பில் அடையாளங்காணும்போது அவர் அதுவாகிறார். கூடுதல் மைலேஜாக அங்கே ஓர் அனுபவம் இன்னும் சற்றுநேரம் நீடிக்கிறது.

நவீனத்துவக் கவிதைகள் வாசகருக்கு அதனுள்ளே பங்குபெற இடமளிக்கிறது. வாசகர் அதனை, வேறொரு கோணத்திலிருந்து அணுகிக்கொள்ளலாம் என்கிற வசதியை தமக்குரிய பிரத்யேகமான ஒரு வடிவில் வார்த்து கொடுக்கிறது.

புறத்தைக் கையாளும் கவிதைகளில் உடனடியாக ஒன்றிவிடும் வாய்ப்பு எப்போதுமே ஒரு வாசகருக்கு உள்ளது. காரணம், புறத்தின் பெரும்பகுதிகள் பொருட்களால் நிறைந்துள்ளன. மனிதன் பொருட்களைக் கையாளும் தகவலறிவு உள்ளவன் என்பதால் எளிதாக அவற்றோடு ஒன்றிவிடமுடியும். அவை ஸ்தூலமாக புலன்களுக்கு காணவோ உணரவோ கிடைப்பவை. அதில் நிகழும் ஒப்பீடுகள், காட்சிகள் யாவும் சுலபமான படிமங்களைக் கட்டியெழுப்பி நிறுவும் திறன் உள்ளவை.

அகம் சார்ந்த நவீனத்துவக் கவிதைகளில் நிகழும் கவித்துவத் தருணங்கள் மட்டுமே சவாலானவை. அந்தச் சவால்கள்கூட கவித்துவத்திற்கான கருவிகள் குறித்து அறியாமல் இருக்கும்வரைதான். அவற்றை அறிந்துகொள்ளும்போது, புறத்திலிருந்து அகத்திற்கும் அகத்திலிருந்து புறத்திற்கும் உருவாகின்ற பாலத்தில் புதிய கோணங்களும் மனப்போக்குகளும் புலப்படும்.

சரி..

அன்றாடம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா?

அதில் க்ளீஷே என்பது எதுவாகவும் இருக்கலாம். தனிப்பட்ட பர்சனல் வாழ்வோ அல்லது சமூகவெளியின் பெருங்கூட்டத்தின் நடுவே நிற்கின்ற உதிரியான வாழ்வோ, அது எதுவாகவும் இருக்கலாம். நாம் உற்றுக் கவனிக்கத் தவறும் க்ளீஷே செயல்கள் நம்மிடமும் உண்டு. அவை, நம்மைவிட்டு சற்றுத் தள்ளி வெளியிலும் உண்டு. அதனையொட்டி, இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

  1. நம்மிடம் பிச்சைக்காக கையேந்தும் கைகள் – பெரும்பாலும் நமது பார்வை, அந்தக் கைகளைத் தாண்டி அவற்றுக்குச் சொந்தமான முகம்வரை போவது அரிது. அவ்வகைக் கைகளைக் கண்டதுமே முகத்தைத் திருப்பிக்கொள்ளும் இந்த நூற்றாண்டில் நம்மை நோக்கி ஏந்தும் அக்கைகளின் அர்த்தம்தான் என்ன? அதன் பின்னணியாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் என்ன? பொருளாதாரம், அரசு, அரசியல் என நூற்றாண்டுகள் கடந்த தகவல்கள் மூளைக்குள் அலைமோதுமே அது என்ன? ‘எல்லாம் தெரியும்’ என்கிற மனப்போக்கின் அடியாழத்தில் எழுதப்பட்டிருக்கும் சுயத் தீர்மானமான இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்திருக்கிறோம் என்கிற கேள்வி பலவிதங்களில் பேசப்பட இன்னும் மிச்சம் உள்ளது. ஏந்தும் கைகள் ஒரு குழந்தையினுடையதாக இருந்தால் ஏற்படுகிற மனநிலையின் அன்றாட உணர்வை அட்டவணையின் எந்த வகைப்பாட்டில் குறித்து வைப்பது? என்னவென்று சுழியிட்டுக்கொள்வது?
  2. நாம் பிறரிடம் கடன் வேண்டி நிற்பது – இதில் கையேந்துதல் அகத்தில் தொக்கி நிற்கிறது. அது கண்ணுக்குப் புலப்படப்போவதில்லை. புத்திக்குள் உறைந்திருக்கிறது. பின்னர், சம்பவங்கள் விளைவுகளாக எழும்போது புறத்தில் தெரியப்போகிறது. அதுவரை, உடல்மொழியும் மனநிலையும் வேறுபடுகிற இடம் கேள்விக்குரியதாகிறது. 

இவற்றை வைத்துக்கொண்டு பேசப் போனால்..‘யாரோ’ என்கிற Strange thing மீது படரும் தீர்மானங்களும் ‘இன்னாரிடம்’ என்கிற Known thing மீது படரும் தீர்மானங்களும் எதனைச் சுட்டுகின்றன? ஒப்பீட்டு அளவில் இவ்விரண்டு உதாரணங்களில் இயங்குகின்ற வித்தியாசங்களை எப்படி அறுதியிடுவது? அல்லது வரையறுப்பது?

மனித நடத்தைகளில் வெளிப்படுகின்ற உடல்மொழிகளுக்கு (புறத்தோற்றம்) மனதில் நிகழும் தீர்மானங்கள் (அகநிலை) காரணங்களாக இருக்கின்றன. இவற்றில் அன்றாடச் சலிப்புகளைத் தாண்டி மேம்போக்காகக் கடந்துவிடுகிற தனிமனித அவதானிப்புகளை கையில் எடுத்துக்கொண்டு ஒரு கவனத்தைப் பாய்ச்சுவதற்கு நவீனத்துவப் பார்வையில் இடம் உள்ளது.

அவை எழுத்தாக பரிணமிக்கும்போது மொழிவழியிலான தேய்வழக்கு (Cliché) இருக்கிறதா என்பதை வாசகர் கண்டுகொள்ள வேண்டும். பின்னர், அவையே வாசிப்பு அனுபவத்தை கெடுக்கும் வகையில் தடையாகவும் உள்ளனவா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

அதே போல-

கூறுவதைக் கூறல் (Repetition) என்கிற ஒரு பதம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சொல்லோ அல்லது சொற்றொடரோ கவிதைக்குள் மீண்டும் மீண்டும் இடம்பெறும்போது, அதன் அர்த்த தொனி மாறிக்கொண்டே இருக்கும்பட்சத்தில் சலிப்பை ஏற்படுத்தாது.

வெறுமனே இட்டு நிரப்பி இடத்தை அடைத்துக்கொள்ளும் நோக்குடன் கவிதைப்பரப்பில் அடுத்தடுத்து இடம்பெறும் ஒரேவித சொற்கள் கவித்துவ அனுபவத்தைக் கெடுக்கும். சலிப்பையும் உருவாக்கும். அவை கவனமாகக் களையப்பட்டிருக்க வேண்டியவை. அல்லாமல் போனால், வாசகர் அக்கவிதையை நிராகரித்துவிடலாம். 

நவீனத்துவக் கவிதைகளில் செறிவான சொற்களில் உருவகங்களையோ படிமங்களையோ கட்டமைத்து வைக்கும்போது, அவை வாசக அனுபவத்தை மேம்படச் செய்கிறது. புதிய கோணங்களுக்கான பாதைகளைத் திறந்து வைக்கிறது.


டுத்ததாக

மூன்று கவிதைகளை அனலைஸ் செய்து பார்ப்போம்.

பின்வரும் கவிதை 2017-ல் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது.

  • யாதும் ஊரே..

யாரோ யாரிடமோ தோற்றுப்போய் திரும்புகிறார்கள்

யாரோ யாரிடமோ தலை குனிந்து செய்வதறியாமல் திகைக்கிறார்கள்

யாரோ யாரிடமோ முணுமுணுக்க மட்டுமே முடிவதை நொந்துகொள்கிறார்கள்

யாரோ யாரிடமோ கைவிடப்பட்டதைக் குறித்து புகார் சொல்கிறார்கள்

யாரோ யாரிடமோ பெற முடியாத முத்தத்துக்காக வருத்தப்படுகிறார்கள்

யாரோ யாரிடமோ போகும் திசையை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்

யாரோ யாரிடமோ அதுவரைக் காத்த மௌனத்தை ஓசையின்றி உடைக்கிறார்கள்

யாரோ எவரிடத்திலோ ஒரு முடிவை எடுக்கும்படி அவசரப்படுத்துகிறார்கள்

யாரோ எவரையோ திட்டமிட்டபடியே தொலைக்கிறார்கள்

யாரோ யார் யாரிடமோ தஞ்சமடைவதைத் தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்

யாரோ எவரின் காயங்களையோ புறக்கணிக்கும் தந்திரங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்

யாரோ யார் வாசலிலோ வழக்கத்துக்கு மாறான மன உளைச்சலோடு நிற்கிறார்கள்

யாரோ யாரிடமிருந்தோ வீசப்பட்ட சொற் கூர்மையால் கச்சிதமாக வெட்டுப்படுகிறார்கள்

யாரோ யாரிடமோ மூர்க்கத்தின் முகமணிந்து புன்னகைக்கிறார்கள்

யாரோ யாரிடமோ பட்ட அவமானத்தைப் பகிரங்கமாய் பகிர 

யாரோவால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்

யாரோ யாரிடமோ ஒரு பசியை மட்டுமே யாசிக்கிறார்கள்

யாரோ எவருக்கோ ஒரு தத்துவத்தை மட்டுமே பிச்சையிடுகிறார்கள்

யாரோ யாரிடமோ எப்போதும் யாரோ போலவே தோன்றி 

மறைகிறார்கள்

****

பெருவாரியான மனித வாழ்வின் அகம்/புறம் சார்ந்த நேரிடையான பல தருணங்களை படிமங்களாக வார்த்தெடுத்திருக்கும் கவிதை இது. சின்னஞ்சிறு உருவகங்களும் Metonymy-களும் வாசிப்பின்போது அவரவர் பர்சனல் தருணங்களாகும் வாய்ப்பிற்கு வழிகோலுகின்றன, வலு சேர்க்கின்றன.

  • க்ளீஷேவாகிவிடும் அபாயத்தோடு இயங்குகிற இரண்டு சொற்கள் இக்கவிதை முழுவதும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன: அவை- ‘யாரோ’ & ‘யாரிடமோ’.
  • ஏன் அவை க்ளீஷே ஆகவில்லை?
  • எவ்விதத் தருணங்களை அவை முன்னெடுத்து வைக்கின்றன என்பதைப் பொருத்து அவை க்ளீஷே ஆகாமல் தப்பிவிடுகின்றன. தருணங்களின் வலுவை நிர்ணயம் செய்திருப்பவை படிமங்களும் உருவகங்களும். செறிவான சொற்களின் துணைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட இக்கவிதை புறத்திலிருந்து அகத்திற்கும், அகத்திலிருந்து புறத்திற்கும் பயணிக்கின்றது.
  • கொஞ்சம் பிசகினாலும் வாசிப்பு அனுபவத்தை சரிவில் உருட்டிவிடும் அபாயம் இதுபோன்ற கவிதைகளில் நிகழும்.
  • கூறுவதைக் கூறல் (Repetition) என்பதாக இல்லாமல், அதேவேளை எளிமையானத் தோற்றத்தில் இருந்தபடி ஒரு சவாலான அனுபவத்திற்கு வாசகரை இட்டுச் செல்கிறது. காரணம், அன்றாடங்களின் வித்தியாசத்தில் நிகழ்ந்துவிடக்கூடிய அபத்த நுணுக்கங்கள் யாவுமே உணர்வுரீதியாக அனைவருக்குமான ஒரு பொதுசொத்துதான்.
  • பரஸ்பரம் மனித மனம் அனுபவங்களின் வழியே உணர்வுநிலைகளை அடையாளங்காண உதவிடும் படைப்புச் சாதனங்கள் இவற்றைச் சாத்தியப்படுத்துகின்றன.
  • ‘யாதும் ஊரே..’ என்கிற இக்கவிதைத் தலைப்பு கணியன் பூங்குன்றனாரின் கவிதை வரிகளின் அடுத்த சொற்றொடரான ‘யாவரும் கேளிர்’ என்பதை வாசிப்பு அனுபவம் உள்ளோரின் மனதுக்குள் தாமாகவே இட்டு நிரப்புகிறது. இக்கவிதையின் சவால் அந்த ‘யாவரும் கேளிர்’ தான்.
  • அர்த்தப்பாடு என்று வரும்போது, ‘யாதும் ஊரே..’ என்கிற தலைப்பில் தொடங்கி அதன் நீட்சியாக ஒரு மாற்றை (Contrast) கருப்பொருளாக கையாளுகின்றது.
  • இருபத்தோராம் நூற்றாண்டின் நவீன மனிதனின் அகம்/புறம் இரண்டையும் மாற்றுக்கோணத்தில் அவதானித்து நிற்கிறது. ‘யாவரும் கேளிர்’தானா? என்கிற எதிர்முனையை அல்லது இணைக்கோட்டை அது பல்வேறு தருணங்களை முன்வைத்து சற்றே ஆழமாகக் கீறிப் பார்க்கிறது. மிகக் கவனமாக தனிமனித அனுபவச் சாரத்தை பொதுச்சொத்தாக்கிட முயல்கிறது. அதன் நோக்கத்தை அடைந்ததா என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும் அல்லவா. அதற்குத்தான் ஒரு வாசகர் தம் வாசக அனுபவத்தின் வழியே இதுபோன்ற கவிதைகளுக்கான சாட்சியாகிறார்.

இன்னொரு கவிதை மிகவும் சிறியது:

2023-ல் பிப்ரவரி மாதம் முகநூலில் பகிர்ந்துகொண்டது.

மழை பெய்து
வெற்றுடம்பில் கசடு நீங்குவது போல
மனம் பெய்து
நீ
நீங்கினால் என்ன

****

  • தலைப்பில்லாத இக்கவிதை ஒரு புகைப்படத்தோடு பகிரப்பட்டுள்ளது. அப்புகைப்படமே இக்கவிதைக்குரிய படிமமென பரிந்துரையாகியிருந்தது. வெறும் மொழி வடிவில் இப்போது இங்கே கவிதைப் புலப்படும்போது நூறு சதவீதம் பலவீனமாக உள்ளது. கருப்பொருளாக சிறிய கவித்துவத் தெறிப்பு (Poetic Glimpse) மட்டுமே இதில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
  • மிக எளிமையான உவமை; ‘போல’ என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறது. ‘நீங்குவது’ & ‘நீங்கினால்’ என்கிற சொற்கள் விசேஷமாக இல்லை.
  • ‘வெற்றுடம்பில் கசடு’ என்கிற புற அடையாளப் பொருள், அகம் நோக்கிப் புக முயலுகிறது. இருந்தாலும் அது நிகழவில்லை. உணர்ச்சியின் வெளிப்பாட்டு போதாமையாலும் அது தேங்கி நிற்கிறது. புறத்திலிருந்து அகத்திற்குள் நுழைவதற்கு ‘மனம்’ துணை செய்கிறது.
  • ஆனால்- மழை பெய்து, மனம் பெய்து – எனும்போது க்ளீஷே உருவாகி ஒரு சலிப்பை ஏற்படுத்திவிட்டது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

பெய்யெனப் பெய்யும் மழை – என்கிற திருக்குறளில் இருக்கிற இல்லறவியல் நோக்கை மாற்று செய்ய இக்கவிதை முயன்றாலும் அதே காரணத்தாலேயே.. மொழியோடு இயைந்து வாசிப்பு பழக்கத்தில் நம் மனதில் நன்கு பதிந்துவிட்ட அச்சொற்றொடர் இங்கு எடுபடவில்லை.

  • இவ்வகையினைத் தேய்வழக்கு என்றும் சொல்லலாம். (நன்கு பரிச்சயம் உள்ளவை எனும் பொருளில் சொல்வதாக)

க்ளீஷே உதாரணத்திற்கு உதவியாக மூன்றாவது கவிதை. 

இது 2018-ல் எழுதியது.. முகநூலில் பகிர்ந்தேனா என்பது நினைவில் இல்லை.

நாங்கள்
கொஞ்சம் மனிதர்களைத் தான்
மனிதர்கள் என்றோம்

அம்மனிதர்கள்

கொஞ்சம்
மனிதர்களாக இருந்திருக்கலாம்.

****

  • இதுவும் தலைப்பில்லாத கவிதைத்தான். தலைப்பு அவசியப்படவில்லை. இது மேலே எடுத்தாளப்பட்ட உதாரணத்திலிருந்து சற்றே மாறுபடுகிறது. இதில் உள்ள பாடுபொருள் வெறுமனே ஒரு தெறிப்பு அல்ல.
  • அதேவேளை முழுமையடையாத கவிதை இது. கவித்துவக் கருவிகளின் எந்தத் துணையுமில்லாமல், கவிதையின் வடிவினருகே போய் தேங்கி நின்றுவிட்ட ஒன்று.
  • சொல் மயக்கும் வித்தையை நம்பி எழுதப்பட்ட ஒன்று. ‘மனிதர்கள்’ & ‘கொஞ்சம்’ என்கிற இரு சொற்கள், சொல்லப்பட்ட விதத்தையொட்டி வெவ்வேறு அர்த்த பாவனைகள் கொண்டு சற்றே இடக்கு செய்கின்றன. அதனால், அட! என்கிற ஒரு விளிப்பைத் தவிர வேறெதையும் அடைய முடியாது.
  • Repetition (கூறுவதைக் கூறல்) இங்கே க்ளீஷே ஆகியுள்ளது. ஆனால், அரசியலாகக் கையாளப்பட எத்தனித்த எளிய வடிவம் அது. நவீனத்துவத்தின் நுனியைக்கூட தொடமுடியாமல் வீழ்ந்துவிட்ட கவிதைக்கான உதாரணமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

‘யாதும் ஊரே..’ கவிதை மட்டுமல்ல தலைப்பில்லாத இச்சிறு கவிதைகளும் தொடரின் இந்த அத்தியாயத்தில் பேசுபொருளாக எடுத்துக்கொண்ட க்ளீஷேவின் தன்மைகளை அடையாளங்கண்டு கொள்ளவும், புரிந்துகொள்ளவும் உதவும் என்று நம்புகிறேன். இதனை ஒரு சிறிய அளவுகோலாக வைத்துக்கொண்டு உங்கள் பார்வைக்கு காணக்கிடைக்கும் கவிதைகளில் க்ளீஷேக்களை தேடிப் பார்க்கலாம். நிறையவே சிக்கும்.

தொடர்ந்து பேசுவோம்.


About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website