cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவித்துவம், கவிதை, கவிஞன் தொடர் கட்டுரைகள்

கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 1]


 

கவிதை என்பது வாழ்வுக்கு மாற்றல்ல. 

வாழ்வைக் குறைநிறைப்புவதில் அது ஒரு வழி மட்டுமே.

கிறிஸ்டோபர் ஓக்கிக்போ.

(நைஜீரிய கவி)

மொ.பெ –பிரம்மராஜன்.

(நூல்: சமகால உலகக் கவிதை)

வெவ்வேறு சமயங்களில் புதிய வாசகர்களோ தொடர்ந்து கவிதை வாசிப்பில் நாட்டம் கொண்டிருப்பவர்களோ சில கேள்விகளை என்னிடம் கேட்பதுண்டு. அவற்றில், தனிப்பட்ட சந்தேகம் என்பதையும் தாண்டி ஜஸ்ட் தெரிந்துவைத்துக்கொள்ளலாமே என்கிற ஆசையில் கேட்கப்பட்டவையும் உண்டு. இங்கே, அப்படிப்பட்ட அடிப்படையான ஒற்றைக்கேள்வியோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கிடலாம் என நினைக்கிறேன். வாசகர்களுக்கு, இது காஃபி டேபிள் உரையாடலைப் போல ஒரு பகிர்வாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.சரி, நேரே விஷயத்துக்கு வந்துவிடலாம். ஒரு நவீனக் கவிதை, வாசகரின் கைக்கு வந்து சேர்ந்தபிறகு அவர் அதனை மேலும் முன்னேறி அணுகுவதில் ஏற்படக்கூடிய முதல் ஈர்ப்பு என்னவாக இருக்க முடியும்?

சில கவிதைகள் தலைப்பின் வழியே ஈர்க்கும். அது ஒரு First Look. சில கவிதைகள் அவற்றின் தோற்ற அளவைக்கொண்டு ஈர்க்கும். இன்றைய காலக்கட்டத்திற்கு அவ்வளவுதான் விஷயமே. இந்த இரண்டுதான். மற்றபடி செறிவான சொற்களோ செறிவான பாடுபொருளோ அவற்றுக்காக இணைந்து இயங்கும் அடர்த்தியான படிமங்களோ உருவகங்களோ –இவை யாவும் கவிதைக்குள்ளே நிகழ்பவை. அதாவது, அந்த முதல் ஈர்ப்புக்கு அடுத்ததாக நிகழ்பவை.

பொதுவாக ஒரு வாசகர், வாசிக்க வாசிக்க ஒரு கவிதைக்குள்ளேயே தங்கிவிடுவதற்கும்.. இது நமக்கு சரிப்பட்டு வராது என்றபடி வாசிக்கும்போதே வெளியேறிவிடுவதற்கும் குறைந்தபட்சமாக இரண்டு வாய்ப்புகளையாவது அவை உருவாக்குகின்றன. (வாசிப்பு மனநிலையைத் தவிர்த்து). அதில் ஒன்று கவிதையை மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்பது. இரண்டாவது, கண்ணயர்ந்து புத்தி மயங்கி அதன்மீதே தூங்கி விழுந்துவிடுவது. இரண்டுமே கவிஞருக்கு ஆகாதவை.

இந்த விஷயங்களைக் குறித்து எதுவுமே அறுதியிட்டு சொல்லிட முடியாது என்கிற பேச்சும் இருக்கிறது. ஆனாலும், சிலவற்றை அதன் அடிப்படைகளிலிருந்து Analysis செய்து பார்க்கலாம் என்று எனக்குப் படுகிறது.

ஒரு கவிதையை இது கவிதைத்தான் என்று வரையறை செய்துகொள்ள முதற்கண் அதன் வடிவம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது (சொற்களின் கூட்டு அமைப்பு + அதன் உடைக்கப்பட்ட படிக்கட்டு அடுக்குகள் போன்ற தோற்றம்). ஆனால், ‘ஒரு நல்ல கவிதை’யை வரையறை செய்வதில் சிக்கல்கள் உள்ளன. ‘நல்ல’ என்கிற அபிப்பிராயம் ஆள் ஆளுக்கு மாறும். தனிப்பட்ட ரசனையைப் பொருத்தும் அமையும். ஒரு நல்ல கவிதை, தாம் சொல்ல வரும் விஷயத்தை அதன் மையத்தை சுற்றிவளைக்காமல் பளிச்சென்று நேரிடையாக சொல்ல வேண்டும் என்பவர்கள் உண்டு. ஒரு தொடக்க நிலைக்கு.. இதைக்கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம் என்று நினைக்கும்போதே..

அதற்கு எதற்கு கவிதை? இன்றைய மெஷின் லாங்வேஜ் காலத்தில்.. ஒரு ஸ்டேடஸ் போதுமே என்கிற கேள்வி குதர்க்கமாக எழுமேயானால்.. அச்சச்சோ.. அப்படியென்றால்.. கவிதை என்பதை கொஞ்சம் நீட்டித்தான் சொல்ல வேண்டுமோ? என்று ஒரு துணை சந்தேகமும் எழும்.

அட..! சுற்றியும் வளைக்கக்கூடாது, பளிச்சென்று கன்னத்தில் அறைந்ததை போல சொல்லவும்கூடாது. பின்ன என்னத்தான் செய்வதாம்? எப்படி அதைக் கண்டுபிடிப்பது?

கவிதைகளில் ஹைக்கூ வகையறாக்கள் (உபயம் – ஜென் கவிதைகள்) நம் இலக்கியச் சூழலில் பளிச் பளிச்சென்று கண்கூசச்செய்து வாசகரை ஆக்சிடெண்ட் வரைக்கும் கொண்டுபோய்விடுபவை. அவ்வளவு ‘பளிச்’ எல்லாம் ஓர் ஆழ்ந்த மேம்பட்ட வாசிப்புக்கு உதவாது. அவசர அவசரமாக உணவை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு அடுத்த வேலையைக் கவனிப்பதற்கு ஓடிட உதவுகின்ற ஃபாஸ்ட் ஃபுட்டை போல மேம்போக்கு வாசிப்புக்கு வேண்டுமானால் அவை உதவலாம். ஜீரணக்கோளாறுகளுக்கு கியாரண்டி உண்டு.

(கவனிக்கவும், விஷயம் இங்கே அளவு சம்பந்தப்பட்டதும் அல்ல) ஒரு நல்ல நவீனத்துவக்கவிதையை வரையறுக்க எத்தனிக்கும்போது கவனிக்க வேண்டியவைகளைத்தான் சொல்ல முயற்சிக்கிறேன்.

கருப்பொருள் (அல்லது) பாடுபொருள் என்பதையே நவீனத்துவக்கவிதைக்குரிய மையம் என்பதாக வைத்துக்கொண்டால்.. அந்த மையத்தை நோக்கியே ஒவ்வொன்றும் குவியும். குவிந்தாக வேண்டும். இப்படி சிம்பிளாக நினைவில் வைத்துக்கொண்டால் போதும். சரி, அப்படி குவிகின்ற ‘ஒவ்வொன்று’ என்பவை எவை? நிறைய உண்டு. 

ஆனால், இந்த உரையாடலில் இப்போதைக்கு.. அடிப்படையான இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டால் கொஞ்சம் விவரித்துக்கொண்டே போவதற்கு சுலபமாக இருக்கும்.

அந்த இரண்டில் ஒன்று உவமை. இன்னொன்று உருவகம். உவமை என்பது ஆங்கிலத்தில் Simile. உருவகம் என்பது ஆங்கிலத்தில் Metaphor. இதனை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இவை இரண்டிற்கும் வக்காலத்து வாங்கி நியாயம் செய்கின்ற ஒன்று உண்டு அது காட்சி (அ) படிமம். ஆங்கிலத்தில் Image (or) Imagery. அந்தப் படிமம் என்பது கிட்டத்தட்ட ஒரு பாலம் போன்றது. அதாவது, கவிதையின் கருப்பொருளான மையத்திற்கு அழைத்துப்போகிற, அல்லது அந்த மையத்தை –அது வீற்றிருக்கும் சரியான திசையை– எட்டிப்பார்க்க உதவுகின்ற பாலம். அந்தரத்தில் எழும்பி நிற்கின்ற Surface level of the Poem என்று சொல்லலாம். அந்தப்பாலத்தின் உறுதித்தன்மைக்கு திடம் சேர்த்திட கவிஞரானவர் சிமெண்ட் ஸ்லாப்களைப் போல உவமையையோ உருவகத்தையோ அடுக்கி வைப்பார். அதன் அளவுதான், அந்த அடுக்குவரிசைதான் கவிதையின் நீளத்தை முடிவு செய்கிறது. அதேவேளை அவற்றின் அடர்த்திதான் பாலத்தின் உறுதிக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. (அந்த அடர்த்திக்கான கியாரண்டி என்பது கவிஞருக்கு கவிஞர் மாறுபடும்)

அந்தோ.! ஒரு பாலத்திற்கு திட்டமிட்டு, இரண்டுக்கு மூன்றடி பால்கனி அளவுக்கு மட்டுமே அது முடிந்து போகுமேயானால் மையம் தம்மாத்தூண்டு தான் புலப்படும். அதுக்கூட சந்தேகம். பால்கனி அளவிலான படிமம் ரொம்ப உயரத்துக்கு தூக்கிவைத்து அந்தரத்தில் நிறுவப்பட்டுவிட்டால் மையத்தின் துல்லியங்கள் மிஸ் ஆகும். ஆனால் அதுவே ஒரு நூறடி நீளத்திற்கு கையைக் காலை வீசி முன்னும் பின்னும் நடந்து பார்க்கும் அளவிற்கு அந்தப் படிமப் பாலம் இருந்துவிட்டால் வாசகருக்கு கூடுதல் சௌகரியம்.

அப்படியான அந்தப்பாலம் தகுந்தவொரு திசைநோக்குடன் கவிதைப்பயணத்துக்குரிய பாடுபொருளின் மையத்தைத்தான் காட்டியாக வேண்டும். மாறாக சம்பந்தமேயில்லாமல் பக்கத்து சந்தைக் காட்டக்கூடாது. பக்கத்து சந்து என்னத்தான் பிரமாதமான அழகாகவே இருந்தாலும்.. அதற்கு தனி டெண்டர் விட்டு அப்ரூவல் வாங்கி வேறு பாலம்தான் கட்டிக்கொள்ள வேண்டும். அதற்குரிய கல்லு மண்ணு சிமெண்ட் எல்லாம் அள்ளிக்கொண்டு வந்து இங்கே கொட்டி வைக்கக்கூடாது.

சரி அடுத்ததாக.. கட்டுரையின் இப்பகுதியில், எளிமையாக மூன்று விஷயங்களைப் பார்த்துவிட்டு சீக்கிரமே கடந்துவிடலாம். அவை முக்கியமானவை. அடிப்படையானவை.

உவமை:

இது, ‘போல’ / ‘மாதிரி’ என்கிற ஒப்பீட்டு வகையைச் சேர்ந்தது.

[நிலா போல முகம்]

[கடுகு மாதிரி புத்தி]

[கல்லு மாதிரி மனசு]

[தாயைப் போல பிள்ளை ; நூலைப் போல சேலை] – இப்படி.

உருவகம்:

இது, ‘போல’ & ‘மாதிரி’ என்கிற இரண்டு சொற்பதங்களையுமே பயன்படுத்தாது. ஓர் ஒப்பீட்டையே அலாக்காகத் தூக்கி ஒன்றின்மீது ஒன்றென படியச் செய்துவிடும்.

[நிலா முகம்]

[கல்லு மனசு]

[கடுகு புத்தி] –இப்படி. (இந்த உதாரணங்கள் மிக எளிமையானவை).

படிமம்:

இதைப்பற்றி கொஞ்சம் எக்ஸ்ட்ரா சொல்லித்தான் ஆகவேண்டும். படிமம் வெறும் ஒரு காட்சி (Image) அல்ல. மாறாக, அது ஒரு காட்சியின் தன்மையை (Imagery) குறிக்கின்றது. அதாவது, வெறுமனே கண்ணால் பார்ப்பது என்பது ஒரு காட்சி மட்டுமே (அதில் எந்த விசேஷமும் இல்லை. அது ஓர் ஈர்ப்பு. அவ்ளோதான்). அதுவே, காட்சியின் தன்மை என்று வரும்போது.. ஒரு காட்சியை அவதானிக்கும் மனிதனின் ஐம்புலன் சார்ந்த உணர்வுநிலைகளும் ரசனைத்தேர்வுக்கு ஏற்ப.. அக்காட்சியின் தன்மையோடு அவனைத் தொடர்புகொள்ளச் செய்யும். அப்போதுதான் அது படிமம் ஆகிறது.

அப்படியென்றால் ஒரு வாசகருக்கு முதற்கண் ஒரு கவிதையை பிடித்துப்போக வெறும் காட்சி மட்டும் போதுமானதாக இருக்காதா? இருக்கும். அதன் விளைவாக படைக்கப்பட்ட நவீனத்துவக்கவிதையை ஓர் ஆரம்பநிலை வாசகர் டக்கென்று பிடித்துக்கொள்ள இலகுவாக இருக்கும் என்பதும்கூட உண்மையே. மறுப்பதற்கில்லை. ஆனால், தன்னுடைய அடுத்தக்கட்ட வாசிப்புநிலைக்கு முன்னேற.. படிமம் குறித்த பார்வையை நன்கு அறிந்து வைத்துக்கொண்டால்.. ‘நல்ல கவிதை’க்கு படிமம் ஒரு முக்கியமான வஸ்து என்கிற முடிவுக்கு அந்த வாசகர் சுலபமாக வந்துவிட முடியும்.

இங்கே இன்னொன்று சொல்லவேண்டும். வாசிப்பு அனுபவத்தின் படிநிலை வளர்ச்சியில், ‘நல்ல கவிதை’ கோருவது பொருத்தமான ஒற்றைப் படிமத்தையோ அல்லது சில படிமங்களையோ மட்டுமே. அந்தப் படிமங்கள் அமைத்துக்கொடுக்கும் பாலத்தில் கவிஞருக்கு கைக்கொடுப்பது உவமையை விட உருவகம்தான். அப்படியான உருவகங்களே அந்தப்பாலத்தில் வாசகரை நிறுத்தி வைத்தோ, தடதடவென முன்னும் பின்னும் ஓடச்செய்தபடியோ கவிதையின் மையத்தை அவதானிக்க உத்தரவாதம் தருகின்ற வலிமையான சிமெண்ட் ஸ்லாப்கள். இப்போது நவீனத்துவக்கவிதையின் கருப்பொருளான மையத்தை நோக்கி வாசகரை அந்தப் பாலம்  இட்டுச் செல்கின்றதா இல்லையா என்பதை சிரமப்படாமல் தொட்டுக்காட்டிவிட முடியும்.

கவனத்தில் வைக்க வேண்டிய அடிக்குறிப்பு: நன்றாக எழுதவருகிறது என்பதற்காக அதிகமான படிமங்களை கவிஞர் அடுக்கிக்கொண்டே போகும்போது வாசகருக்கு கொட்டாவி வருவதை தவிர்க்க முடியாமல் போகலாம். அதுமாதிரியே, உருவகத்தை அடுக்கி அடுக்கிப் பார்ப்பதில் கிடைக்கின்ற ஜாலியும் அதே ஜோலியைப் பார்த்திருந்தால்.. ‘அட விஷயத்துக்கு வராம கிரிவலம் சுத்திக்கிட்டே இருக்காரே கவிஞர்’னு தோனலாம். அந்த வகையில்.. முதற்கண் வாய்ப்பு கவிஞர் கையில் இருக்கிறது. தவறவிட்டாலோ அந்த வாய்ப்பு வாசகர் கைக்கு போய்விடுகின்றது. அப்படி சமயத்தில் கவிதையை அம்போவென்று விட்டுவிட்டு பாதியிலேயே வெளியேறிவிடும் வாசகரை யார் தான் தடுத்து நிறுத்த முடியும்? No Way.

ஆக, வார்த்தைகளால் சுற்றி வளைக்காமல்.. ‘பளிச்’ என்று சொல்லுகிறேன் பேர்வழி என்று கன்னத்திலும் அறைந்துவிடாமல்.. கொஞ்ச நேரமாவது வாசகரை கவிதைக்குள் தங்கிக்கொள்ள அனுமதிக்கின்ற கவிதையை ‘ஓரளவுக்கு நல்ல கவிதை தான்பா’ என்று சான்றிதழ் கொடுக்கலாம். அதற்காகத்தான், பொருத்தமான படிமப்பாலத்தை தேர்ந்தெடுத்து அதில் உருவகத்தையும் பொருத்தமாக பயன்படுத்தி இருக்கிறாரா கவிஞர் என்று கவனிக்கவேண்டும். ரைட், இரண்டுமே பொருத்தமாக இருக்குத்தான். ‘ஆனா, நிறையல்ல இருக்கு’ன்னு படுகிறதா? அப்போ அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாகணும். அந்தப் படிமங்களோ உருவகங்களோ பொருந்தி இருக்கு சரி, ஆனால்.. கச்சிதமாக இருக்கா? இதைப் பார்க்கணும். அது எப்படி?

(டிஸ்கி – பால்கனின்னு முடிவு பண்ணிட்டா பாலம் அளவுக்கு அது நீளமா இருக்கக்கூடாது. இந்த முனைலருந்து அந்த முனைக்கு ஷேர் ஆட்டோல டிராப் பண்ணுறதுலாம் கஷ்டகாலம். அதேமாதிரி, பாலம்னு முடிவு பண்ணிட்டா அது பால்கனி அளவுக்கு குட்டியா இருந்துகிட்டு போக்கு காட்டக்கூடாது. கீழே குதிச்சிடலாம்னு தோனிடும்)

அப்படியான முடிவுகள்தான் வாசக மனம். பாயிண்ட் என்னவென்றால்.. அவர்களை அல்லாட வைக்கக்கூடாது.

விஷயத்துக்கு வருவோம். அப்படியென்றால்.. மேலே குறிப்பிட்ட அந்தக் கச்சிதத்தை எப்படி அடையாளங்காணுவது? அதற்கு, கவிதையின் கைக்கருவியாக பயன்படுகிற மொழியின்மீது வாசகருக்கு நிறைய பற்றும் கொஞ்சம் கிறுக்கும் தேவைப்படுகிறது.

இதற்கு தயாராகி ஒத்துக்கொண்டால், கவிஞர் எங்கெல்லாம் டபாய்க்கிறார் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இல்லாமல்போனாலோ கவிஞருக்கு அது ஒளிவட்டம், வாசகருக்கோ அது பல்பு. தனக்குக் கிடைத்த தரிசனம் வெறும் பல்புதான் என்று கண்டுபிடிக்கவே லேட்டாகிவிடும்போது கவிஞர் விருதெல்லாம் வாங்கிக்கொண்டு மேடைக்கு அப்பால் போய்விட்டிருப்பார். இன்னும் லேட்டாக்கினால் அவருடைய சிலையைச் சுற்றிக்கொண்டு பஸ் எல்லாம் போக ஆரம்பித்திருக்கும். அப்புறம், நடந்துபோகும் வாசகரைப் பார்த்து விமர்சக சார்ஜெண்ட் ‘ஹெல்மெட் போடாம எப்படி கவிஞரோட சாலையில நடக்கறீங்க? ஃபைனை கட்டுங்க’ன்னு சொல்லிவிட்டால்.. குழம்பிப்போய் கேள்வி கேட்காமல் தண்டம் அழவும் நேரிடலாம்.

ஆக, மொழி என்னும் கருவியே வாசகர் தன்னுடைய கையில் வைத்துக்கொள்ள வேண்டிய பூதக்கண்ணாடி. அதன்வழியே நவீனத்துவக்கவிதையை உற்றுநோக்கும் தொடர் பழக்கத்தில்.. அதற்குப் பொருத்தமான படிமங்களும் கச்சிதமான உருவகங்களும் மையப்பீடமாக அமையப்பெற்றிருக்கும் கருப்பொருளின் திசையை ஒழுங்காக சுட்டுகிறதா இல்லையா என்று சரியாக தரிசித்துவிடலாம். இப்படியாக வாசகத் தகுதி உயர உயர.. தயக்கங்கள் நீங்கிய மனநிலையோடு நவீனத்துவக்கவிதை குறித்து ஒத்த சிந்தனை அலைவரிசை உள்ள நண்பர்களிடமோ சக வாசகர்களிடமோ ஓர் ஆரோக்கியமான Point Of View-வை உரையாடிக்கொள்ளுவதற்கு அந்த முயற்சி.. புதிய பாதையொன்றை போட்டுக்கொடுக்கும். அல்லது குறைந்தபட்சம் ஓர் இலக்கிய கூட்டத்தில் பார்வையாளர் பகுதியில் தமக்கென்று ஓர் இடத்தை கெத்தாகப் பிடித்துக்கொள்ள வழி வகுக்கும். (கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கோயிந்தா போட்டுவிட்டு வருகிற ஆட்டம் இங்கே கணக்கில் வரவே வராது). மற்றபடி காலப்போக்கில் வெகுசீக்கிரமாகவே மேடை, போடியம், மைக் எல்லாம் தாமாகவே அப்படியான சிறப்பு வாசகரை சுவீகரித்துவிடும்.

சொற்கள் என்பவை அர்த்தங்களின் பிரதிநிதிகள். அவற்றை அகர வரிசையில் தொகுத்து அகராதிகளாக வைத்திருக்கிறோம். சொற்களின் மேலோட்டமான அர்த்தங்கள் சாதாரண புழக்கத்தில் சமூக உரையாடல்களுக்குரிய (தனி நபர் அல்லது குழு) தொடர்பு சாதனங்களாக பயன்படுகின்றன. அங்கு அது போதுமானதாக இருக்கின்றது. ஆனால், அது இலக்கியத்திற்கு போதவில்லை. குறிப்பாக நவீனத்துவக்கவிதைக்குள் அந்த மேலோட்டமான அர்த்தங்கள் போதவேயில்லை. சொற்கள் தம்முள் அமுக்கி வைத்திருக்கும் வெவ்வேறு அர்த்த அடுக்குகள் சூழலுக்கு ஏற்ப மாறுகின்ற குணம் உள்ளவை.

இந்நிலையில், ஒரு நவீனத்துவக்கவிதைக்குள் உருவாகி இருக்கும் சூழலை எவ்வித அர்த்தங்களோடு ஒரு சொல் பிரதிபலிக்கிறது என்கிற எக்ஸ்ட்ரா கவனம் வாசகருக்கு அவசியமாகிறது. அச்சூழல்கள் புறவயமானவை என்பதில் சிக்கல்கள் குறைவாகவும். அச்சூழலோ அதன் தாக்கமோ அகவயமாக அதாவது உள்வயமாக இருக்கும்பட்சத்தில் வாசகர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. இங்கே, மீண்டும் மீண்டும் சாட்சியாக நிற்பவை சொற்கள் மட்டுமே (அதனுள் புதையுண்டு கிடக்கின்ற அர்த்தக்கூட்டங்கள் மட்டுமே). இப்போது, மொழி என்னும் பூதக்கண்ணாடியின் வேலை என்னவென்று பிடிபட்டுவிடுகிறது அல்லவா.

சொல்ல நினைத்த மையச்சரடை விட்டு அர்த்தம் பிசகும்போது கவிதைக்குள் கையாளப்பட்ட பாடுபொருளும் தம் மையத்தின் அச்சிலிருந்து விலகி குடை சாய்ந்துவிடும்.

பல வேளைகளில், வாசகருக்குப் புரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற கவலையில் அல்லது அக்கறையில் கவிஞர் நிறைய விளக்கங்களை வாரி வழங்கிவிடுவார். அப்படியான மேலதிக விவரணைகள் அல்லது விளக்கங்கள் என்ன செய்துவிடும் என்றால்.. அதுவே கவிதையின் அனாவசிய நீளத்திற்கான அடிப்படைக் காரணமாக அமைந்துவிடும். அந்த நீளத்தன்மை.. கவிதைக்கான கருவிகளாக வகுத்து வைத்திருக்கிற உவமை, உருவகம், படிமம் இவற்றின் ஏதோ ஒன்றை உருக்குலைத்துவிட்டிருக்கும் அல்லது நீர்த்துப்போகச் செய்துவிட்டிருக்கும்.

ரு நல்ல கவிதையை வரையறை செய்துக்கொள்ளுவதற்கு.. குறைந்தபட்ச அளவீடுகளாக மேலே சொன்னவை இருக்கலாம். அதையொட்டி எழக்கூடிய அடுத்த கேள்வி இதுதான். எதனைக்கொண்டு அந்தக் கவிதையை மதிப்பீடு செய்வீர்கள்?

ஒரு தொடக்கம் போல அந்த அளவீடுகளை டிக் அடித்துவிட்டோம் என்றால்.. அடுத்து செய்ய விரும்புவது மதிப்பீடு. கவிதையின் மதிப்பீட்டுக்கு உதவுவது அதில் உள்ள ‘கவித்துவம்’. கவித்துவம் ஒரு தனி வஸ்து அல்ல. அது ஒரு கலவை. (மரபு)கவிதை தொன்றுதொட்டு, இலக்கணமாக லட்சணமாக வரிந்து வைத்திருந்த பலவற்றிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டதுதான் நவீனத்துவக்கவிதை. அதனால், வடிவ ரீதியாகவோ, ஓசை நயம், தாளம் என்கிற இசைத்தன்மைகளோ நவீனத்துவக்கவிதைக்குள் அதன் கருப்பொருளான மையத்தை தொந்தரவு செய்தபடி ஆட்சிசெய்து கோலோச்சிக் கொண்டிருந்தால்.. அப்படியான கவிதைகளைத் தைரியமாக இடப்பக்கம் தள்ளி வைத்துவிட்டு இப்போது மதிப்பீட்டின் முதல் ஸ்டெப்பாக ஒரு டிக் அடித்துக்கொள்ளலாம்.

சரி, மையக்கருவை தொந்தரவு செய்யாமல் அவை இடம்பெற்றால் ஓகேவா என்றால்.. அது ஓர் அரைமனசு ஓகேதான் என்பதாக சாய்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு நவீனத்துவக்கவிதைக்குள் அதன் கவித்துவம் இயங்குகின்ற தன்மைத்தான் கவிஞரின் இருப்பு நிலை. பாடுபொருளுக்குரிய (அ) மையக்கருவிற்குரிய (அ) மையத்திற்குரிய உருவகத் தேர்வில் கவிஞருடைய ஐம்புலன்களின் உணர்வு நிலையோ, உணர்ச்சி நிலையோ உச்சமாக செயல்பட்டிருக்கும். அப்போது அந்த ஐந்தில் ஏதோ ஒன்று மட்டும் பிரதானமாக இருந்துகொண்டு அந்தக் கவிதையை ஆட்சி செய்யும். அந்தத் தரிசனம் வாசகருக்கு கிடைக்கும்போது அவர் பரவசம் எய்துவார். அந்த தரிசனம் என்பது அக்கவிதைக்குரிய ஒரு கவித்துவம்.

Glimpse என்று ஒரு சொல் ஆங்கிலத்தில் உள்ளது. ‘தெறிப்பு’ என்று அதனைப் புரிந்துகொண்டோம் என்றால்.. அத்தெறிப்பு ஒரு கவிதைக் கணத்துக்கானதாக இருக்கக்கூடும். அப்படியான தெறிப்புக்குள் கவித்துவம் சூல் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பை பெற்றுத்தருவது எதுவென்றால்.. அதற்குரிய ஒரு சொல்லோ அல்லது சொற்களின் கூட்டமைப்போ தான். செறிவான அர்த்தத்தை உள்ளடக்கிய ஒரு சொல் அந்தக் கவித்துவத் தெறிப்பை கவிஞரின் கையில் தந்துவிட்டிருக்கும். அது வாசகருக்கு கிடைக்கும்போது அவருடைய மதிப்பீட்டில் அந்தக் கவிதை இன்னுமொரு டிக்கை பெற்றுவிடும்.

பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுஉணர்வு –இந்த ஐம்புலன்கள் நவீனத்துவக்கவிதைக்குள் முக்கியமானவை. அவற்றின் ரசவாதம்தான் கவிரசனையின் போக்கை முடிவு செய்கிறது. அவற்றின் வழியே கவித்துவத்தை அடையாளங்காணவே ஒரு படிமமோ அல்லது ஓர் உருவகமோ அவசியமாகிறது. இவற்றைக்கொண்டுதான் கவிதையை சமைக்க ஒருவர் காரணமாகிறார். அதனாலேயே அவர் கவிஞராகிறார்.

இந்த அடுக்கை உற்றுக்கவனித்து தனது வாசிப்பின் வகைமையைப் பிரித்துக்கொண்டு.. ஒரு தொடக்கநிலை மதிப்பீட்டை எந்தவொரு கூர்நோக்கு வாசகரும் செய்துவிட முடியும். (அட்வான்ஸ் ஸ்டேஜை எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்). வாசிப்பில் ரசனை மட்டம் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உயரும். அந்த சீரான வேகம் ஆரோக்கியமானது. தொடர்ந்த வாசிப்பு முக்கியமானது என்றால்.. அதனினும் முக்கியமானது ஒரு கவிதையை பொறுமையாக வாசிப்பது. (அது எத்தனை வரிகளில் படைக்கப்பட்டிருந்தாலும்). வாசிப்பதற்கு நன்றாக நேரம் எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும்.

இது 2013-ல் நான் எழுதிய ஒரு முகநூல் ஸ்டேட்டஸ்:

விட்டுக்கொடுத்தலின் நதியில் மௌனப் படகு மூழ்கினால் என்ன..?

துடுப்பிருக்கு மெல்ல கரை ஒதுங்க..

-இதன் சொல்முறையில் நவீனம் கூடிவந்துள்ள கவித்துவம் இருக்கிறது. ஆனால் கவிதையாகவில்லை. இதைக் கவிதை என்று முடிவு செய்துவிடுவது சரியுமல்ல. ஏன் சரியல்ல? பார்ப்போம்.

விட்டுக்கொடுத்தல் ஒரு மனித குணம்.

இங்கே அதனை நதியாக வரிந்துகொள்வது உருவகம்.

மௌனம் ஒரு மனத்தீர்மானம் (State of presence). மனித இருப்பு.

இங்கே அதனைப் படகாக வரிந்துகொள்வது உருவகம்.

துடுப்பு ஒரு புறப்பொருள். அதன் வடிவம் நமக்கு அறிவாக ஞாபகத்தில் உள்ளது. 

ஆனால், இங்கே மௌனம் ஒரு படகாக இருப்பதால்.. துடுப்பு என்னவாக இருக்கும்?

இந்த யூகம் வாசகரிடம் விடப்பட்டுள்ளது. 

அதைப்பொருத்து தான் ‘கரை’ என்பது எது என்று முடிவாகும். (வாசகர் சாய்ஸ்)

அதேசமயம்.. இது ஒரு ஸ்டேட்டஸ் தான் என்றாலும் அது வெறும் ஒரு காட்சியாக (Image) மட்டும் தேங்கிவிடாமல் ஒரு படிமமாக உயர்ந்தெழ (Imagery) முயன்றுள்ளது. ஆனால் கவிதையாகாமல் தோற்றுவிட்டது. ஏன்? எப்படி? [இந்தக் கட்டுரையை கவனமாக வாசித்துவிடுகிற வாசகர் அதற்குரிய பதில்களை தாமே கண்டுபிடித்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட முடியும்.]

அடுத்தது ஒரு கவிதை. 2014-ல் எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது. இது சர்வநிச்சயமாக ஒரு நவீனத்துவக்கவிதையாக பரிமளித்துள்ளது. எப்படி என்று அடையாளங்காண முடிகிறதா என்று பார்ப்போம்.

கொடுக்கு 

மரணத்தின் மீது மழை பெய்தது

முதலில் கால்கள் பிய்ந்து நகர்ந்தன 

வாய் எதையோ முணுமுணுத்ததைப் போலிருந்தது 

கடுகு வடிவில் உருளும் தலையில் இருக்கும் கண்கள் மட்டும் 

உலகை வெறித்தபடி 

நகர்கிறது 

நீரில் 

****

ஒரு தலைப்போடு தொடங்குகிறது கவிதை.

இதிலிருக்கும் கால்கள், வாய், தலை, கண்கள் எல்லாமே ஓர் உயிரின் உறுப்புகள்.

அவை நேரிடையாகவே உள்ளன.

மழை மழையாகவே இருக்கிறது. நீர் நீராகவே இருக்கிறது.

அவையும் உவமையாகவோ உருவகமாகவோ இல்லை.

மரணம் ஒரு நிகழ்வு. State of the moment.

கடுகு ஒரு பொருள். அது மட்டுமே தலைக்கு உருவகமாகியுள்ளது.

உலகு என்பது எல்லாமுமாக குவிகிறது அல்லது விரிகிறது.

மொத்தம் இரண்டு நகர்வுகள் இருக்கின்றன. அது Movement.

ஓர் அனுமானம் இருக்கிறது – அது முணுமுணுப்பைச் சுட்டுகிறது.

அந்த ‘எதையோ’ வுக்குள் வாசகர் நின்றுகொள்ளலாம்.

அதில்தான் வாசகருக்குரிய Perceptions உருவாகும் பிளாட்ஃபார்ம் அமைந்திருக்கிறது.

அந்த இடம்தான் காட்சியை மீறின படிமமாக ஒரு பாலம் அமைகிறது.

அதில் நின்று கவனிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

‘கொடுக்கு’ என்கிற தலைப்பின் ஒற்றை அர்த்தம் போதுமா என்கிற சுயகேள்வி முக்கியம்.

ஆனால், அதுவும் ஒரு சாய்ஸ் தான்.

இந்தக் கவிதையில் உள்ள உயிர் எதுவாகவும் இருக்கலாம் என்கிற இடத்தில் இது நவீனத்துவத்தைக் கோரிவிடுகிறது.

கவிதை முழுவதிலும் இருக்கின்ற ‘நகர்வில்’ ஒரு Live இருக்கிறது.

உற்று நோக்கினால்.. அது ஒரு முரண் அல்லவா?

இந்தக் கவிதையை எழுதியவனாக என்னுடைய தரப்பிலிருந்து.. நீங்கள் யோசித்துக்கொள்வதற்கான அத்தனை க்ளூவையும் உங்களுக்கு தந்துவிட்டேன். இந்தக் கவிதையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற படிமப்பாலம் எந்த அளவில் பயன்பட்டுள்ளள்ளது? அது நூறடி அகலமா? அல்லது பால்கனி அளவு குறுகலா? கவிதையின் மையத்தை அது அடையாளங்காட்டுகிறதா? இதன் மையக்கருவை அல்லது பாடுபொருளை உணர்ந்துவிட முடிகிறதா? மொழி என்னும் பூதக்கண்ணாடி உதவுகிறதா? ‘மரணத்தின் மீது பெய்யும் மழை’ என்கிற முதல்வரியின் காட்சியை நியாயப்படுத்துகின்ற பிற அம்சங்கள் ஏமாற்றாம் செய்யாமல் கொஞ்சம் நேரமாவது கவிதைக்குள் நிற்க விடுகிறதா? அல்லது வெளியேறிவிட தோன்றுகிறதா? –இவை யாவற்றுக்குமான பதில்கள்.. இந்தக்கவிதையை உங்கள் ரசனைக்கு ஏற்ப வரையறைப்படுத்தவோ மதிப்பீடு செய்துகொள்ளவோ உதவும். அதற்கு இந்தக் கட்டுரை துணை புரியும் என்று நம்புகிறேன். இதன்வழியாக நாம் எப்பேற்பட்ட வாசகராக இருக்கிறோம் என்பதையும் கொஞ்சம் Identify பண்ணிப் பார்த்துக்கொள்ள முடியும்.

மூன்றாவதாக ஒரு குட்டிக் கவிதை. இது எழுதப்பட்டது 2022-ல். என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட கவிதை.

திருப்பித் தருவதாக திட்டமேயில்லை

இத்தனை நாள் தனிமையை

மீன்கள் நீந்தும் நீர்த் தொட்டிக்குள்

இறக்கிவிட்டு விட்டேன்

***

இது கவிதைதான். ஸ்டேட்டஸ் அல்ல என்கிறேன். ஏன்? முதல் உதாரணமாக பார்த்த ‘ஸ்டேட்டஸில்’ இல்லாத மையம் இதில் எங்கே உள்ளது? கிட்டத்தட்ட அதே அளவுதானே! ஆனால் இதில் மட்டுமே எங்கே அந்த மையம் உள்ளது? அதனால்தான் இது கவிதையாகி உள்ளது என்றால் அது எங்கே? சரி பார்ப்போம்.

இது பால்கனி அளவே உள்ள படிமம் ஆகிறது.

ஆனால், இதனுள்ளே இரண்டு சிறிய குறுகலான படிமங்கள் ஒன்றிணைந்துள்ளன.

ஒன்று சாதாரணமாகவே காணக்கிடைக்கக்கூடியது.

அது கவிதையின் கடைசியில் –மீன்கள் நீந்தும் நீர்த்தொட்டி.

(ஜஸ்ட் ஒரு காட்சி. அதாவது an Image)

 

இன்னொன்று ‘இத்தனை நாள் தனிமை’

ஆனால், இந்த வரிக்குள்ளே ஓர் ‘அறை’ மறைந்துள்ளது.

அதுவே அந்த இரண்டாவது படிமம்.

 

இப்போது என்ன நடந்துவிட்டது என்றால்..

ஜஸ்ட் ஒரு காட்சியாக மட்டுமே இருந்த ‘மீன்கள் நீந்தும் நீர்த்தொட்டி’… இப்போது ஒரு படிமமாக உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் ‘இத்தனை நாள் தனிமையை’ அதனுள்ளே இறக்கிவிட்டதுதான். கவனியுங்கள். தனிமை அங்கே ஒருமையில் இல்லை. பன்மையில் உள்ளது. (இத்தனை நாள் என்பதாக)

அத் தனிமை என்னும் படிமமே.. ஓர் உருவகமாக மாறுகிறதே. அது எப்படி? எப்போது?

அதுவும்.. நீர்த்தொட்டிக்குள் இறக்கிவிடும்போதுதான் நிகழ்கிறது.

ஆம். இறக்கிவிடுவதாலே அந்தத் ‘தனிமை’ மீன்களோடு மீன்களாக நீந்தத் தொடங்கி இருக்கலாம். அல்லது மீன்களுக்கு உணவாகி இருக்கலாம். (வாசகர் சாய்ஸ்)

இப்படி –தனிமையும் இங்கே.. மீனாகி பிற மீன்களோடு நீந்துமேயானால் அது உருவகம்.

அல்லது மீன்களுக்கு உணவாகுமானால் அப்போதும் அது உருவகம்.

(ஒன்றின் மீது இன்னொன்றாகப் படர்ந்து உருமாறியது)

சரி, அதெல்லாம் இருக்கட்டும். இந்த நவீனத்துவக்கவிதை வெறும் ஸ்டேட்டஸ் ஆகாமல் கவிதையாக டிக்ளேர் செய்யப்பட்ட அந்த மையம் எங்கேதான் இருக்கிறது? அதனை பால்கனி அளவே வடிவமைக்கப்பட்ட இந்தப் படிமத்தில் இருந்து எட்டிப்பார்க்கும்போது கண்ணுக்கு புலப்பட்டதா இல்லையா? சர்வ நிச்சயமாக மையம் உள்ளது. அதற்கு இந்தக் கட்டுரை உதவுகிறதா என்று சோதியுங்கள். கண்டுபிடித்துவிடுவீர்கள். நம்புவோமாக.

(ஒரே ஒரு க்ளூ கொடுத்துவிடுகிறேன். இத்தனை நாள் தொட்டிக்கு வெளியே இருந்த தனிமை, அந்த அறையையும் கொஞ்சமாக தம்மோடு எடுத்துக்கொண்டு நீருக்குள் இறங்கிவிட்டது. இனி வேடிக்கைப்பார்த்தல் நீரிலிருந்துகொண்டே முன்னும்பின்னும் பக்கவாட்டிலும் மேலும் கீழுமென நீந்தியபடியே நடக்கும்)

அதுபோலவே, ‘திருப்பித் தருவதாக திட்டமேயில்லை’ என்கிற கவிதைசொல்லியின் முதல் வரியின் தீர்மானத்தையும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? ஆல் த பெஸ்ட்.


‘நவீனக்கவிதைகள் புரியவில்லை’ என்கிற ஸ்டேட்மெண்டிற்குரிய உரையாடலை (மேலும் இந்தக் கட்டுரைவடிவம் தொடரும்பட்சத்தில்.. அப்படியே போகிற போக்கில்) கட்டக்கடைசியாக வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நவீனத்துவக்கவிதைக்குரிய சில Elements-களை தகுந்த உதாரணங்களோடு பிற்பாடு நிதானமாக பேசிப்பார்க்கலாம் என்கிற யோசனையும் உள்ளது.

ரொம்பவும் அடர்த்தியாக ஒரு பேச்சு இருந்துவிட்டால் போரடித்துவிடும். கொஞ்சம் லைட் வெயிட்டாக இதைக் கையாண்டால் எப்படி இருக்கும்? அதனாலே No offense ரீதியில் அங்கங்கே கமெண்ட் அடித்துக்கொண்டே பேசிப்பார்க்கத் தோன்றியது. கட்டுரைக்கு Irrelevant-ஆக மடைமாற்றம் செய்துவிடும்படியான ஜாலி கமெண்ட்ஸ் எதையும் பண்ணிவிடாமல் இந்த உரையாடலை இலகுவாக்கிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திக்கொண்டால் எப்படி இருக்கும்?

ஓகே என்றால் சொல்லுங்கள் தொடரலாம்.

தொடர்ந்து பேசலாம்.


About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
4 Comments
Inline Feedbacks
View all comments
அசோகன்

நல்ல கட்டுரை. தயவுச் செய்து தொடருங்க ஐயா.
இதுதான் கவிதை சொன்னாலும் திட்டுறாங்க. இது கவிதையே இல்லன்னாலும் திட்டுறாய்ங்க . கவிதைன்னாலே புரியாம எழுதுவதா, புரிந்துக் கொள்ள ஒரு வாசகன் ஏன் மெனக்கெட வேணும். மனுஷ் கவிதை போல எல்லாமே ஏன் எளிமையாவதில்ல. கவிதை ஏன் எளிமையா இருக்ககூடாது. நிறைய கேள்வி இருக்கு. அதுக்கு இந்த கட்டுரை தொடரா வந்தா உதவலாம்.

அப்புறம் நுட்பம் இணையதளத்திற்கு வாழ்த்துகள். சட்டென்னு பெய்ஞ்ச மழ போல வெகு சாதாரணமா ஆரம்பிச்சி ஒஞ்சிடுமுன்னு நினைச்சப்ப… இப்போ பெரிய அறிமுகத்தோடு வளர்ந்து இருக்கு. நல்லா இருங்க

மகிழ்மதி

மிக சிறப்பு

Rani Ganesh

அருமையான பதிவு. புதிய கவிஞர்களுக்கு நிச்சயமாய் உபயோகமாய் இருக்கும். நன்றி!

You cannot copy content of this Website