cropped-logo-150x150-copy.png
0%
Editor's Pick இதழ் 32 கவிதைகள்

சொல்லெனும் தானியம்


என்னை நேசிக்கிறேன்
என்னிலிருந்து துவங்குகிற என் காதல்
பறவையைப் போல திசையெங்கும் பறந்து
அன்பின் முதிர் தானியத்தை விதைக்கிறது

தனிமையின் வெளி
அடர் கானகம்
கரும்பாறை
பாழ்நிலம்
பாகுபாடு ஒன்றும் இல்லை

கட்டுப்பாடுகளின் பிடியில் சிக்குண்டிருப்பினும்
காதலுக்கும் யதார்த்தத்திற்கும்
இடையே காற்றைப் போல
ஊடாடிக்கொண்டிருக்கிறேன்

என் சிறு புறாக்கள்
விடியல் துவங்குகிற அதிகாலையில்
தெளிவுடைய ஒற்றைச் சொல்லின் திறவு கோலில்
பரிதாபத்திற்கு உரிய ஒரு உயிரை மீட்டெடுத்திருக்கும்

என்னிலிருந்து
என்னை விடுவித்துக்கொள்கிறேன்
யாவற்றையும் நேசிப்பதன் வழியாக.


கவிதைகள் வாசித்த குரல்:
பிருந்தா ராஜகோபாலன்
Listen On Spotify :

 குறிப்பு :  2013 ஆம் ஆண்டு ‘விகடன் தீபாவளி மலரில்’ வெளியான கவிஞர் சக்திஜோதியின் கவிதை  “சொல்லெனும் தானியம்”  நுட்பம் இணைய இதழில் “editor’s choice” பகுதிக்காக கவிஞரின் உரிய அனுமதியுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

About the author

சக்தி ஜோதி

சக்தி ஜோதி

சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி, 2021 ஆம் ஆண்டில் கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும்.

அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.

Leave a Comment

You cannot copy content of this Website