நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத் திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த சில கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை முன் வைத்தோம்.
நுட்பம் இதழின் கேள்விகளும் கவிஞர்களின் பதிலும் இதோ..!
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
+2 படிக்கையில், உடன் படிக்கும் தோழி change rose என்ற மலரைச் சூடி வருவார். அது காலையில் வெண்மையாகவும் மதியத்தில் ரோஸ் நிறமாகவும் மாற்றம் கொள்ளும். அது குறித்து கவிதை எழுதினேன்.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
வருடம் நினைவில் இல்லை. பல்சுவை நாவலில்.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
நானாகவே எல்.ஐ.சி பாண்ட்டை அடகு வைத்து நிவேதிதா பதிப்பகம் எனத் துவங்கி நதிச்சிறை எனும் தொகுப்பை 2004 ல் கொண்டுவந்தேன். ஓசூரில் பிரளயன் வெளியிட்டார். ச.தமிழ்ச்செல்வன் வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். கலாப்ரியாவும் பாராட்டி கடிதம் அனுப்பினர். இவையெல்லாம் எழுதவேண்டும் என ஆர்வத்தைத் தந்தது. நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்தது. சிறகு முளைத்த காலமது.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
உடன் வேலை பார்த்த தொழிலாளர் தோழர்களிடம்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ். அருணாச்சலம் நினைவு விருது தோட்டாக்கள் பாயும் வெளி கவிதைத் தொகுப்புக்காக கிடைத்தது.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
பள்ளி விடுமுறை நாட்களில் கடலை பிடுங்க, களை எடுக்கவென வேலைக்குப் போவேன், அங்கு வேலை பார்க்கும் பெண்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்களும், ஒப்பாரிகளையும் கேட்டு ரசித்துக் கிடந்ததுண்டு. கவிதை நினைவில் இல்லை.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
எனது 15வது வயதில் அப்போது நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நிலவையும் பெண்ணையும் ஒப்புமைப்படுத்தி எழுதியது. கீழே உள்ளது அதன் இறுதி வரிகள் மட்டும் என் நினைவிலிருந்து.
நீல வான் பாதையில்
வெள்ளை நிலா என்கிறார்கள்
அந்த கருப்பியை மட்டும்
ஏன்
அந்தப் பாதையில் காணவில்லை?
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
எம் இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களுக்கென மாதாந்திர இதழான மாணவர் விடியல் என்ற இதழ் திண்டுக்கல் பெஸ்கி இல்லத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அது இயேசு சபை அகதிப் பணியினரால் நடத்தப்பட்டு வந்தது. அதில்தான் “வெற்றி” என்ற தலைப்பில் முதல் கவிதை வெளியாகியது. 2000வது ஆண்டின் நவம்பர் இதழில் அச்சில் பார்த்த முதல் கவிதை, அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு மாணவன். பிறகு வேர்விடும் நம்பிக்கை, சிவகங்கையிலிருந்து வெளிவருகின்ற வளரி, திருச்சி இனிய நந்தவனம், இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம், தோழர் சுதீர் செந்திலின் உயிர் எழுத்து, பரணி, புதுப்புனல், மாதவம் போன்ற சிற்றிதழ்களில் தொடர்ந்து படைப்புகள் வெளியாகின. இணையத்தில் கொலுசு, கவிஞர் வைகறையின் நந்தலாலா, பிரான்சு நாட்டிலிருந்து வெளிவருகின்ற நடு, லண்டன் முல்லை அமுதன் ஐயாவின் காற்று வெளி, அகம், நான் என் இணைய இதழ்களின் பங்களிப்பில் என்னை வளர்த்தெடுத்தேன்.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
எனது முதல் கவிதைப் புத்தகம் “அலைகளின் மீதலைதல்” 2008 மார்ச் மாதம் நான் முதுகலை அறிவியல் பட்டம் படித்த இறுதியாண்டு கல்லூரி ஆண்டு விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறையினரால் வெளியீடு செய்யப்பட்டது. புத்தகத்தின் அட்டை வடிவமைப்பிலிருந்து தலைப்பு தேர்விலிருந்து, அச்சகத்திலிருந்து மேடைக்கு கொண்டுவந்தது என அனைத்தையும் ஐயா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அவர்களே செய்தார். அழகான வாழ்த்துரையோடு. இளங்கலை அறிவியல் படிக்கையில் கவியரங்கங்களில் என்னை பாராட்டி தொகுப்பு ஒன்றினை கொண்டு வா நான் முன்னுரை எழுதித் தருகிறேன் என்றவர் அப்படியே உண்மையாக்கியவர் புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்தவர், புதுக்கோட்டை மாவட்ட கெல்த் இன்பெக்டர் ஐயா ரமா. ராமநாதன் அவர்கள். கொட்டிய கோடை மழையில் நூலினை வெளியிட்டு மூன்று மணி நேரம் சிறப்புரை ஆற்றியவர் இயக்குநர் சீமான் அவர்களே.
அந்த நாளை விவரிக்கவே முடியாத பேரானந்தமான நாளது. என் பெற்றோருக்கு நான் ஏதோவொரு சாதனையை நிகழ்த்தியதாக பெருமைப்பட்டுக்கொண்ட மறக்கமுடியாத நாள். அகதி முகாமுக்குள்ளிருந்து ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டதாக நினைத்துக்கொண்ட நாட்கள். கவிதையின் அகம் புறம், இலக்கியத்தின் அகம் புறம் எதுவும் தெரியாமலே சிக்கிக்கொண்ட விசித்திரப் பிராணியின் மனநிலை அது. முதிர்ச்சியற்ற விடலையின் கொண்டாட்ட மனநிலையை இரசித்தோர் மட்டுமே உணருவர்.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என் அம்மா அப்பாதான் முதல் வாசகர்கள். எழுதியதும் அவர்களிடமே வாசித்துக் காட்டுவேன். இதழ்களில் வெளிவந்த கவிதைகளை அவர்கள் அவ்வளவு பரவசமாக பார்ப்பார்கள். எனது முதல் தொகுப்பு வெளிவந்தபோது மேடையில் முதல் மரியாதை அவர்களுக்கே செய்து நிறைவேற்றினேன். இளங்கலை அறிவியல் பட்டம் படித்த கல்லூரி சார்பில் புதுக்கோட்டை மாவட்ட (ரோட்டரி கிளப் என நினைக்கிறேன்) அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அது ஈராக் போருக்கு எதிராக எழுதப்பட்ட கவிதைக்கு கிடைத்தது. அலைகளின்மீதலைதல் தொகுப்பிலும் உள்ளது. அதன்பிறகு 20014ல் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மாநில அளவில் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசாக ₹1000 பணமுடிப்பும், சான்றிதழும், புத்தகங்களும் பரிசாக கிடைக்கப் பெற்றேன். இந்தக் கவிதை நாடிலி தொகுப்பின் முதல் கவிதையாக இருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈழ யுத்தத்தில் ஷெல் அடியில் மரணமுற்ற என் பாட்டியை இன்னமும் நினைவுறுத்துகிறது இக்கவிதை.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
நாடிலி தொகுப்புக்காக 2021 ல் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தேனி அமைப்பு வழங்கிய அசோகமித்திரன் படைப்பூக்க விருதே இப்போதைக்கு இலக்கியத்தில் கிடைத்த முதல் விருது.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
எனது முதல் தொகுப்பு வரும்வரை பாரதியாரையும் பாரதிதாசனையும், கண்ணதாசனையும், வைரமுத்துவையும் மட்டுமே அறிந்தேன். நாடிலி வருவதற்குள் முறையான படைப்புகளை தேடி வாசிக்கும் பக்குவத்திற்குள் வந்துவிட்டேன். ஈழம், தமிழகம், உலகம் என பல படைப்புகளை வாசிக்கும் மனப்பக்குவமும் முதிர்ச்சியும் இப்போது கைவரப்பெற்றுள்ளதை உணர்கிறேன். பின்நவீனம், பின்காலனியக் கவிதை என முதல் கவிதைக்கு எடுத்துக்காட்டி மிரட்டமாட்டேன். ஓடி விளையாடு பாப்பா, அகரமுதல எழுத்தெல்லாம், அறம் செய்ய விரும்பு போன்ற கவிதைகளே முதன்முதலில் நான் வாசித்தேன் எனச் சொல்வதில் எந்தக் கூச்சமும் இல்லை. விபரம் தெரிந்து பிரமிளின் E=Mc^2 எனும் குவாண்டம் கவிதை எப்போதும் என்னை ஆச்சரியத்துள் ஆழ்த்தும் கவிதை. ஒரு கவிஞன் தமிழைத் தாண்டி எல்லாத் துறைகளிலும் ஓரளவேனும் திறமுடையவனாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு வலியுறுத்திய கவிதை. மொழிபெயர்ப்பு கவிதைகளில் பிரம்மராஜன் தொகுத்த உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுதி எனக்குள் திருப்பத்தினை உருவாக்கிய தொகுப்பு. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். காலம் கருதி நிறுத்துகிறேன்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
பதின்ம வயதில் எழுத ஆரம்பித்தேன்.
எத்தனை வேண்டுமானாலும்
விரித்துக் கொள்ளலாம்
என் சிறகுகளை
கூண்டுக்குள்…
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
முதன் முதலாக கவிதை வெளிவந்தது “புதிய அகராதி” என்ற அச்சு இதழில்..
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
முகநூலில் பதிவிட்ட கவிதைகள் நட்புகளால் ரசிக்கப்பட்டதால் தொகுப்பாக்க முனைந்தேன்.
முதல் தொகுப்பு வெளியானது படைப்பு குழுமம் மூலம் படைப்பு ஆண்டுவிழாவில்.
பல ஆளுமைகள் முன்னிலையில் இந்திரன் சார் வெளியிட என் அம்மா சரஸ்வதி ராசேந்திரன் பெற்றுக் கொண்டார். அவரும் ஒரு எழுத்தாளரே. மிக நெகிழ்வாக இருந்தது.
முதல் நூல் வெளியான அன்றே அது குறித்த சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் விமர்சனம் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அத்தனை படைப்பாளிகள் முன்னிலையில் முதன் முதலில் மேடையேறி பேசியதும் அதைப் பலரும் பாராட்டியதும் இனிய தருணம்.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என் முதல் கவிதையைப் படித்த, 15000 கவிதைகளுக்கு மேல் எழுதியவரும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி கவிஞர் கோ.பல்துறை செந்நாப்பாவலர் என்ற பட்டங்களைப் பெற்றவருமான பொற்கிழிக் கவிஞர் காசிஸ்ரீ அரு.சோமசுந்தரன் அவர்களின் பாராட்டே எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
கவிதைக்காக நிறைய விருதுகளை நிறைய பேர் எனக்கு அளித்திருந்தாலும் படைப்புக் குழுமத்தின் கவிச்சுடர் விருதும், மரபுக் கவிதைக்காக என் ஆசான் மரபுமாமணி பாவலர் வரதராசன் அளித்த காரிகை வேந்தர் விருதும் மிக மகிழ்ச்சியை அளித்தவை.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
முதன் முதலில் வாசித்த கவிதைகள் பாரதியாருடையவை. நான்காம் வகுப்பில் பேச்சுப் போட்டியில் பரிசாகக் கிடைத்த பாரதியார் கவிதைகள் நூலிலிருந்து ”அச்சமில்லை அச்சமில்லை.. ”
இதைத்தவிர கல்யாண்ஜி கவிதைகள்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
21 வது வயதில். முதுகலை இரண்டாவது வருடம் படிக்கும் போது கவிதைப்போட்டிக்காக எழுதினது.கவிதை ஞாபகமில்லை.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
இனிய உதயம் அச்சு இதழில் வெளி வந்தது
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
கவிதைகள் நிறைய நிறைய எழுதி வச்சிருந்தாலும் புத்தகமாக வெளியிடும் சூழல் வாய்க்கவில்லை. புத்தகமாகக் கொண்டு வர மனதில் எதும் தோன்றவில்லை. இலக்கிய அமைப்புகள் சார்ந்த கூட்டங்களை நடத்திய போது, பல புத்தகங்களைத் தேடி வாங்கிய போது, நம் கவிதைகளை புத்தகமாக்கலாமென அப்போது தான் தோன்றியது மனதில்.
2019 – இல் டிஸ்கவரி பதிப்பகத்தால் சன்னத்தூறல் சென்னை புத்தகக்கண்காட்சியில்
வெளியிடப்பட்டது. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எதுவெனக் கேட்டால் புத்தகம் தான். அந்தப்பெரிய விழா மேடையில் என்னுடைய எழுத்தை புத்தகமாகக் கையில் பெற்ற போது தோன்றிய உணர்வு எதனாலும் நிரப்பமுடியாது.
பழம் பெருமை கொண்ட மொழியில் ஒரு மாணவியாகவும் பின் பேராசிரியராகவும் கவிதைகளை வாசித்தும், கற்பித்தும் இருந்தாலும் நான் எழுதிய கவிதைகளை அச்சு நூலாக பார்த்த தருணம் மறக்க இயலாதது
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என் அண்ணன் பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள் சன்னத்தூறலை வாசித்து விட்டு சொன்ன முதல் வார்த்தையினை மிகப்பெரும் அங்கீகாரமாக நினைக்கிறேன்.
கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து இந்த நிமிடம் வரையிலான என்னுடைய கல்விச் சார்ந்த பணிகளுக்கு என் குடும்பத்தினரும் முக்கியக் காரணம்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
“பாயுமொளி நீ யெனக்குப்
பார்க்கும் விழி நானுக்கு”
என்ற கவிதையைத் தந்த ஊறு சுவைஞன் “பாரதியார்” என்னின் மிகப்பிடித்தமான கவிஞன்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
நான் பத்தாம் வகுப்புப் படிக்கும் போதுதான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என் பள்ளித் தோழனின் கவிதைகளைப் படித்து அவன் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் எழுதியது.
குவளையின்மீது
கோவம் வருகிறது
எத்தனை முறைதான்
உன்னை முத்தமிடுமோ’
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
முதன்முதலாக எனது கவிதைகள் வெளியானது குடும்பமலர். பிறகு, மருதாணி மாத இதழ், பிறகு தொடர்ச்சியாக இனிய உதயம், தமிழ்நெஞ்சம் போன்ற இதழ்களிலும் வெளி வருகின்றன.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
கவிதைகள் எழுத ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், மரபுக் கவிதைகளைக் கற்றுக் கொண்டு எழுத ஆரம்பித்த பிறகுதான் தொகுப்புக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பல்வேறு அலைச்சல்களுக்கிடையே கவிதைத் தொகுப்பிற்கென செலவு செய்ய முடியாத சூழலும் இருந்தது. அப்போதுதான் தமிழ்ப்பட்டறைப் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் புதிதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் தொகுப்பை இலவசமாகப் பதிப்பித்துத் தருவதாக அறிவித்திருந்தார். அதன்படி, எனது முதல் கவிதைத் தொகுப்பு “வெளிதேடும் சொற்கள்”
என்ற தலைப்பில் மரபுக் கவிதைகளோடு தமிழ்ப்பட்டறைப் பதிப்பகத்தின் வழியாக வெளியானது.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
2017 -ஆம் ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் கவிதைப் போட்டி சூரியப் பண்பலை வாயிலாக நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது பரிசாக ரூபாய் 15000 – த்தை கவிப்பேரரசு அவர்களின் கைகளால் பெற்றதே என் கவிதைக்கான முதல் அங்கீகாரம். அதன்பிறகு தான் அனைவருக்கும் அறிமுகமானேன்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
பன்னிரெண்டாம் வகுப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இயற்கை பற்றிய கவிதை எழுதியதற்காக ஆயிரம் ரூபாயும் ,பரிசுக் கோப்பையும், சான்றிதழும் பெற்றேன். அதுவே, இதுவரை பெற்றதில் உயரிய விருதாக எண்ணுகிறேன். இன்னும் ஒன்று சொல்வதானால் ஆரம்ப காலத்தில் என் கவிதைகளை ஊக்குவித்து திருப்பூர் படைப்பாளிகள் சங்கம் வழங்கிய கவிச்சுடர் விருதைச் சொல்லலாம்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி.
அம்மா என்குது வௌ்ளைப் பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வள்ளைப் பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு – மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.”
என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலே என்னை ஈர்த்தது
பிறகு பாரதியார் பாடல்கள் தொடங்கி படிப்படியாக இன்றுவரை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்துக் கவிதைகளும் ரசித்து வாசிப்பவைதான்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
11 வயதில். ‘இனிமையான விருந்து’ என்ற கவிதை.
அது காதல் கவிதை தான். ஆனால், அது காதலிக்காக எழுதியதல்ல. என் பள்ளி நாட்களில், வகுப்பாசிரியர் தலைக்கு ஒரு கவிதை எழுதி வரும்படி கேட்டிருந்தார்.
முதலில் நான் பக்கத்து வீட்டு அண்ணன் நன்றாக கவிதை எழுதுவார் என அறிந்து அவரிடம் கேட்கலாம் என்றிருந்தேன். அன்று அவர் இல்லாததால் நானே ஒன்றை முயற்சி செய்தேன்.
முயற்சி என்றில்லை வழக்கமாக எல்லா விடலைப் பருவத்தினரும் செய்யும் யுக்தி தான். பத்திரிகையில் படித்த கவிதையை நமக்குத் தோன்றுவது போல் மொழியை மாற்றி எழுதி சமர்ப்பிப்பதை தான் அன்று செய்தேன். அந்தப் பத்திரிகையில் வாசித்த கவிதை கூட நினைவில் உள்ளது. பத்திரிக்கையில், “கண்ணுக்கு விருந்து அவளது காட்சி, காதுக்கு விருந்து அவளது பேச்சு” என்றிருந்தது. அதனை நான் கொஞ்சம் மாற்றி, “கண்ணுக்கு விருந்து இரவின் காட்சி, காதுக்கு விருது பகலின் பேச்சு” என்று எழுதினேன். ஒரு காதல் கவிதையை, இயற்கையின் மீதான காதலாக மாற்றிப் பார்ப்பது.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
தினத்தந்தி மாணவர் மலரில் 2005 ஆம் ஆண்டில் வெளியானது. ‘வாழ்க்கை என்றால்….’ என துவங்கும் கவிதை
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
முதல் கவிதை தொகுப்பு ‘வெயில் பறந்தது’. தொகுப்பு வெளிவருவதற்கு முன்பு பல கவிஞர்களிடம் கவிதையின் நகலை அனுப்பி அபிப்ராயம் கேட்டேன். தேவதேவனின் வீட்டிற்கு சென்று அதிக முறை உரையாடியிருக்கிறேன். ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு நாள் முழுக்க பேசுவார். அந்த கவிதையின் சாத்தியங்கள் பற்றி பேசுவார். கல்யாண்ஜி தொகுப்பில் தனக்கு பிடித்த கவிதைகளைச் சுட்டி உற்சாகப்படுத்தினார். வெளிநாட்டிற்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தேவதச்சனை அவரது வீட்டில் சந்தித்தேன். ஒரு கேள்விக்கு ஒரு மணி நேரம் பேசினார். ஒரே ஒரு தடவைதான் அவரை சந்தித்தேன். அவர் ஏற்படுத்திய தாக்கம் அபாரமானது. வெளிநாட்டில் இருந்தபடியே ‘எலிசா மடகாஸ்கர்’ என்ற பெயரில் கிண்டிலில் முதல் தொகுப்பை நண்பர் அழிசி ஸ்ரீநிவாசன் உதவியுடன் வெளியிட்டேன். அச்சுப்புத்தகமாக வெளியிடத்தான் ஆசை. அந்த ஆசை கைகூடவில்லை. கிண்டில் பதிப்பின் முன்னுரையிலேயே இந்த தொகுப்பு நிச்சயம் ஒரு நாள் அச்சுப் புத்தகமாக வெளிவரும் என்று எழுதியிருந்தேன்.
ஊருக்கு திரும்பிய பிறகு கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணனுக்கு கவிதையின் நகலை அனுப்பி வைத்தேன். அவர் படித்துவிட்டு அழைத்து பேசினார். அந்த தொலைபேசி உரையாடல் மறக்க முடியாதது. பெரும் தன்னம்பிக்கை அளித்தது. பிறகு நாகர்கோவில் சென்று கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணனை நேரில் சந்தித்தேன். கவிதைகளை தொகுப்பாக வெளியிடலாம் என்றார். குறிப்பிட்ட கவிதைகளை தேர்வு செய்தார்.150 க்கும் மேற்பட்ட கவிதைகளில் 39 கவிதைகள் தேர்வானது. அந்த 39 கவிதைகளை மட்டும் தொகுப்பாக வெளியிடலாம் என்று இருந்தோம். பின்னர் சில காரணங்களால் அது தள்ளிப் போனது. அந்த ஒன்றரை வருட இடைவெளியில் சில கவிதைகளை எழுதினேன். அதில் 21 கவிதைகளை தேர்வு செய்து ‘வெயில் பறந்தது’ தொகுப்பானது. தொகுப்பை வெளியிட எழுத்தாளர் ஜெயமோகன் நெல்லை வந்தார். அந்த நிகழ்வு மறக்க முடியாதது. தமிழின் மிக முக்கிய எழுத்தாளர் என் முதல் தொகுப்பை வெளியிட்டு பேசியது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
நண்பர் அழிசி ஸ்ரீநிவாசன். ஒரு கவிதையை எழுதியதும் நான் முதலில் காட்ட நினைப்பது அவரிடம் தான். அவர் மிகச்சிறந்த வாசகர் என்பதால் முதல் வாசிப்பிலேயே சரியான கணிப்பை சொல்லிவிடுவார். என் கவிதைகளில் அழிசி ஸ்ரீநிவாசனின் பங்களிப்பு முக்கியமானது. கவிஞர்கள் தரப்பிலிருந்து வந்த முதல் அங்கீகாரம் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணனுடையது. அவர் இளம் கவிஞர்களை தொடர்ந்து அடையாளப்படுத்துகிறார். இளையவர்களோடு அதிகம் உரையாடுகிறார். அவருக்கு என் நன்றியும் மரியாதையும்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
பறவையின் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது.
– பிரமிள்
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
எனது இலக்கிய பிரவேசம் பதினாறு வயது,முதல் கவிதை நினைவு இருக்கிறது அனைத்துமே என்னை என்ற தலைப்பில் எனக்கு கருவறை தேசத்தை அறிமுகம் செய்த உம்மாவைப்பற்றி எழுதிய கவிதை இலங்கையில் ஜனனி எனும் வாரப் பத்திரிகையில் பிரசுரம் பெற்றது.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு எப்போது வெளியானது ?
எனது முதல் கவிதைத் தொகுப்பு 2009 ஆம் ஆண்டு வெளியானது அப்போது என் தேசம் ஈழப் போராட்டத்தில் சிக்குண்டு இருந்தது அந்த சூழ் நிலையில் சிறுபான்மையாக வாழ்ந்த நாங்கள் எதிர் நோக்கிய வாழ்வியல் பிரச்சினை பொருளாதார நிலை குலைவுக்கு பெரும் வரட்சி கண்ட தருணங்களில் வெளிவந்து அந்த கவிதை நூலின் தலைப்பு” இதுவும் பிந்திய இரவின் கனவுதான்”என் முதல் கவிதை தொகுப்பு அது வெறும் போர் மட்டும் பேசவில்லை எனது வயதின் துடிப்பில் எழுந்த பருவ வரிகளிலும் கலந்திருந்தது.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
உண்மையில் எனது முதல் நூல் வெளியீடும் போது மேலே சொன்னது போல மிக பொருளாதார நெருக்கடியில் தேசம் மட்டுமல்ல, எனது குடும்ப பின்னனியும் அவ்வாறே இருந்தது எனது தந்தையொரு சாதாராண மீனவர்தான்.கவிதை நூல் ஒன்றை அப்போதே கொண்டு வர பெருந்தொகை தேவைப்பட்டது இப்படியிருந்தும் எனது தந்தை எனது திறமையை வறுமையைக்காட்டி தடுக்கவில்லை தட்டிக்கொடுத்தார்.அதுவே நிரைவாக இருந்தது.அந்த உணர்வே என்னை இன்னும் இன்னுமாக எழுத தூண்டியது.அப்படியிருந்தும் எனது இரண்டாவது நூல் தீக் குளிக்கும் ஆண்மரம் மூன்று வருடங்களின் பின்னர்தான் வெளிவந்தது.நிஜத்தை சொல்லனும்டா அந்த உணர்வு தாய்மையை விட மேலானது.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
முதல் அங்கீகாரம் எனது சக எழுத்தாளர்களிடமிருந்துதான் கிடைத்தது.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
முதல் விருது கவிதைக்கு என்றால் எமது கிண்ணியா பிரதேச சாகித்ய விழாவில் சிறந்த கவிதைக்கான விருது கிடைத்தது. கவிதை நூலுக்கென்றால் முதல் விருது கொடகே தேசிய சாகித்ய விருது 50000 ரூபாய் பணப்பரிசுடன் கிடைத்தது 2019 எனது நாக்கு எனும் கவிதை நூலுக்காக.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
சத்தியமாக நினைவில்லை எந்த கவிதையென. ஆனால், பிரமிள் அவர்களுடைய கவிதையென நினைக்கிறேன்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
எப்போதுமே மறக்க முடியாது அந்த நிகழ்வை. என்னுடைய பதினைந்தாவது வயதில் டெல்லியில் நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தியை பார்த்ததும் அந்த கோபத்தில் எழுதியது தான் என் முதல் கவிதை.
இமயம் முதல் குமரி வரை
தினமும் நடக்குது
என் மனமோ பதைக்குது
நங்கையரை நாசமாக்கும்
மண்ணில் அமைப்போம் மடம்
இரவில்சுதந்திரம் பெற்றதால்
இன்னும் விடியவில்லையோ?
பிஞ்சு பூக்களையும்
பறித்து எறியும் பிசாசுகளுக்கு
காந்தி வழியில் இடமில்லை.
கத்தி வழிதான் இடம்
தூண்டில் மீனாய் துடிக்கும் நாங்கள்
துன்பம் துறப்பது எப்போது?
துக்கம் தொண்டையை அடைக்க,
உனக்கு தூக்கம் வருதா இப்போது?
பொறுத்தது போதும் பொங்கி எழு
ஜான்சி ராணியாய் ஜனனம் எடு
தலைக்கணம் கொண்டவன்
தாண்டவம் ஆடினால்
தன்மான சிங்கங்கள்
தயங்குவதோ?…
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு எப்போது வெளியானது ?
“அம்மாவிற்கு சில கேள்விகள்” கவிதையே முதன் முதலாக அச்சு இதழில் வெளியான கவிதையாகும். நவம்பர் 2021 – இல் வாசகசாலையின் “ புரவி” அச்சு இதழில் இந்தக் கவிதை வெளியாகி இருந்தது.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
அது ஏதோ ஒரு விளையாட்டு போலத்தான் நடந்தது. அதன் பின்னர்தான் என் மேல் சுமத்தப்பட்ட பொறுப்பின் கனம் உணர்ந்து அதற்கான வேலைகளைப் பொறுப்பாகச் செய்யத் தொடங்கினேன். சவலைப் பிள்ளையானாலும் அது என் முதல் குழந்தை.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
அங்கீகாரம், அடையாளம் என எல்லாமுமே எனக்கு என் ஆசிரியர்களிடம் இருந்து கிடைத்தது தான். ஒரு ஆசிரியர் நினைத்தால் மாணவனை எவ்வளவு தூரம் உயர்த்திவிட முடியும் என்பதற்கு நானே நல்ல உதாரணம்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
பணி அமைப்பின் “பணி தாய் மொழி” விருது 2019 ஆம் ஆண்டு கவிதைக்காக எனக்கு கிடைத்தது. அதுவே என் முதல் அங்கீகாரம்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
எந்த கவிதை என்பது சரியாக நினைவில் இல்லை. ஆனால் கண்டிப்பாக அது பாரதியார் கவிதை தான். பாரதி எப்போதைக்குமானவர்.
கவிதைகள் மட்டுமல்லாமல், கேள்வி பதில் அற்புதமான முயற்சி, நெகிழ்வூட்டும் நினைவை மீட்டெடுக்கும் பதில்கள். நுட்பத்தின் நுட்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்