cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர் பாலைவனலாந்தர் பதில்களும் – ( பகுதி 10)


நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன   எழுந்த எண்ணத்தின்  உரையாடல் வடிவமே இந்த “முதன் முதலாக – கேள்விகளும் கவிஞர்களும் பதில்களும்” பகுதியாகும்.  இந்த பகுதியில் நுட்பம் இணைய இதழ் முன் வைத்த கேள்விகளுக்கு கவிஞர் பாலைவனலாந்தர் அளித்த பதில்கள் இதோ..!

  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

முதல் கவிதையை ஞாபகப்படுத்திக்கொள்ள எத்தனையோ முறை முயன்றிருக்கிறேன். முடியவில்லை. நினைவில் உள்ள கவிதையென்றால்; பள்ளிக்காலத்தில் எழுதிய ஒரு கவிதையைத் தருகிறேன்.

 “இருளாகவே இருந்தாலும்

ஈரமாக இருந்தாலும்

அம்மாவின் கருவறைபோல்

சுகமான படுக்கை

வேறில்லை”

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 

பள்ளியின் பெரும்பாலான ஆண்டு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றிருக்கும்.  “பாலைவன லாந்தர்” என்ற புனைபெயருடன் முதன் முதலாக கல்கியில் என்னுடைய கவிதை வெளியானது. அதே காலகட்டத்தில் கொலுசு, எதுவரை, நடு, திணை போன்ற இணைய இதழ்களிலும் உயிர்மை, குங்குமம், விகடன் போன்ற அச்சு இதழ்களிலும் கவிதைகள் தொடர்ந்து வெளியானது.

  • முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பகம் எது.?  அந்த  முதல்  கவிதைத் தொகுப்பு வெளியானதன் பின்னணி  என்னவாக இருந்தது. ?  அந்த முதல் புத்தக வெளியீட்டை எவ்வாறு உணர்கிறீர்கள் ? 

பாலைவன லாந்தர் என்ற பெயருடன் அறியப்பட்ட பொழுதில் அதுவரையான கவிதைகளைத் தொகுப்பாக்க எண்ணினேன். ‘சால்ட் ’பதிப்பகத்தில் முதல் தொகுப்பு ( உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்) வெளியானது. அதுவரை  லாந்தர் ஆணா பெண்ணா என்ற குழப்பங்களோடு என் எழுத்துக்களை அணுகியிருந்ததாக அறியப்பட்டேன். கவிதைகளின் மொழி அவர்களை அவ்வாறு எண்ணச் செய்திருந்தது. அதுவே எனக்கான வரவேற்பாக ஏந்திக்கொண்டேன். என் அழைப்பை ஏற்று தமிழின் மிக முக்கிய கவிகள், எழுத்தாளர்கள் எனது முதல் தொகுப்பை வெளியிட்டார்கள். மகிழ்வோடு பொறுப்பும் கூடிய தருணம் அது.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

அம்மாவிடம்,

தோழர்களிடம்,

ஆசிரியர்களிடம்,

உங்களிடம்.

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?

பெண் விடுதலை என்ற தலைப்பில் எழுதிய கவிதைக்கு பள்ளியில் பெற்ற விருது (ஆறாம் வகுப்பென நினைக்கிறேன்). பச்சை வண்ண நைலான் ரிப்பனில் தங்கமென நம்பிய டாலரை கழுத்தில் அணிவித்தார்கள். இலக்கிய வெளியில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் அழைத்து விருதளித்தார்கள்.

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

மகாகவி பாரதியார்.( குறிப்பிட்டு எதைச்சொல்ல, வாசித்தவை அனைத்தும்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (All the world’s a stage, and all the men and women merely players) ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் மனப்பாடப்பகுதியாக இருந்தது.

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
அன்பு மணிவேல்

அருமை..
வாழ்த்துகள்.

நன்றி

You cannot copy content of this Website