Getting your Trinity Audio player ready...
|
உண்மை என்பது,
உருவமைப்பிற்குரிய
துல்லியத் தன்மைகளின்
துல்லியமற்ற பிரதிபலிப்பு.
–பிளேட்டோ
(கிரேக்க தத்துவ ஞானி)
428-348 BC
மறைபொருள், உருவகம் இவ்விரண்டிற்கும் ஓர் ஒட்டுறவு உள்ளது. அதனையொட்டி ஒரு மறைபொருள் நவீனத்துவக்கவிதைக்குள் கையாளப்படுகின்ற விதம் குறித்து இந்த அத்தியாயத்தில் உரையாடலாம்.
முதலில், மறைபொருள் என்றால் என்ன?
மேலோட்டமாக ஒன்றைச் சொல்லியபடியே நீரோட்டமாக அதனடியில் வேறொன்றைச் சொல்லி வைப்பது. அல்லது இப்படிச் சொல்லலாம், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று சொல்லுதல்.
மிக எளிமையாக இதனை ‘சிலேடை’ என்று புரிந்துவிடக்கூடாது. மறைபொருளை சிலேடையும் கையாளும். ஆனால் சிலேடையோ, பதிலுக்குப் பதில் என நேரிடையாக இடித்துரைத்துவிடும். சிலேடையை வெகுஜன புழங்கு சொல்வழக்காக ‘ஜாடை பேசுதல்’ என்பதாக இப்போதும் பயன்படுத்துகிறோம்.
பொதுவில், மறைபொருள் ஓர் உத்தியெனக் கதைக்கூறல்களில் பரவலாய் செல்லுபடியாகின்ற ஒன்றாகும். நெடுங்காலந்தொட்டு நீதிக்கதைகள் ‘மறைபொருளை’ கையாண்டுள்ளன.
அப்படியே கவிதையின் தளத்திற்கு என வரும்போது, கவித்துவம் கோருகிற கண்டடைதலில் வகைமைகள் உள்ளன. அதாவது, மனிதப் பார்வையின் அகத்திலோ புறத்திலோ ஏதொன்றையும் கண்டு, உணர்ந்து சேகரித்துக்கொள்ளும் உணர்ச்சிநிலைகளின் வெளிப்பாட்டில் படைப்பின் தன்மைகளாகப் பயன்படும் கருவிகளாகவோ உத்திகளாகவோ கவித்துவங்கள் உருப்பெறுகின்றன அல்லது கருக்கொள்கின்றன.
ஒரு காட்சிப்படிமத்தின் உள்ளடக்கம் இன்னொரு காட்சிப்படிமத்தோடு படிந்து புதிய அர்த்தக் கோணத்தைத் தரும்போது அதுவே உருவகம் (Metaphor) என்று முன்னேயே பார்த்திருந்தோம். அத்தகைய உருவகமானது மறைபொருளுடன் ஒட்டுறவு பேணும்போது கவிதைக்குள் புதிய அனுபவங்கள் எழுகின்றன.
அது எப்படி?
கவிதைக்குள் மறைபொருளாக இடம் பிடித்துக்கொள்கின்ற கூற்று ஒரு குறியீட்டுத் தன்மையோடு இருக்கும். குறியீட்டைத்தான் ‘உள்ளொன்றாக’ அல்லது ‘மறைபொருளாக’ வைத்திருக்கவும் முடியும். அப்படியென்றால் குறியீட்டுத்தன்மையோடு துலங்கும் அக்கூற்றுதான் வாசகர் கண்டடைகின்ற கவித்துவத்திற்கு சான்று.
நம்முடைய அன்றாடத்தின் கவன ஈர்ப்புகளில் ஒரு யோசனை (Idea) என்பது மிகவும் அடிப்படையான இயல்பான விஷயம். அது பல சமயங்களில் மேலெழுந்தவாரியாக எளிமையாக இருப்பதில்லை. இயல்பைத் தாண்டி சற்றே ஆழமாக இருக்கக்கூடும். அப்போது கூடுதல் கவனத்தோடு அந்த யோசனையை உற்றுநோக்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டாகிறது.
அக்கூடுதல் கவனம் வேண்டுவதோ காலத்தை அல்லது மணி நேரத்தை. அதன்வழி கவனிப்பு (அ) அவதானிப்பு கூடுதலாகும்போதே நம்முடைய மதி, நுட்பம் வாய்ந்ததாகிறது. இதெல்லாம் ஒன்றினுள் ஒன்றென ஊடுருவி இயங்குபவை. அதனால்தான் கலைத்தன்மை இவ்வகைமைகளில் இயல்பூக்கம் அடைகின்றன.
கலை வேண்டுவதோ நுட்பத்தை.
ஒரு நவீனத்துவக்கவிதைக்குள்ளே அதன் கவித்துவத்திற்குள் ஊடுபாவாக உறைந்திருக்கும் மறைபொருளை அடையாளங்கண்டுகொள்ள வாசகருக்கு உதவுபவை எனச் சில உண்டு.
ஒரு புற/அகக் கண்டெடுப்பில் இருந்து, துளி யோசனையில் இருந்து, கூர்ந்த ஓர் அவதானிப்பிலிருந்து உருக்கொள்ளும் கவித்துவக் கருவானது, தம்முள் அனுமதிக்கின்ற:
- தருணங்கள்
- தன்மைகள்
- காரணப் பாத்திரங்கள்
- நிகழ்விடம்
- ஸ்தூலப் பொருட்கள்.
இவை யாவும் வாசகருக்கான கையேட்டு வழித்துணை. ஒரு நவீனத்துவக்கவிதைக்குள் மேற்குறிப்பிட்டுள்ளவையோ அவற்றில் ஒன்றிரண்டோ கூட போதுமானது. எதற்கு? –கவித்துவம் இயங்கும் தளம் எது என்று அடையாளங் கண்டிட; இதனால் கருப்பொருளின் மேலோட்ட அர்த்தங்களின் மீது சற்றுநேரம் வாசிப்பளவில் தங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும். அடுத்து, அப்படி இருந்துகொண்டே அடுத்த படிநிலை அர்த்தங்களை மறைபொருளாக கவிதை தன்னகத்தே கொண்டுள்ளதா என ஆராயவும் உதவும்.
படிமம் & உருவகம் இரண்டுமே மறைபொருளை உணர வழிவகுக்கின்றன. அதனை அடைந்து தரிசிக்கும் பொறுப்பு வாசகரிடம் மட்டுமே உள்ளது. முழுமையான கவிதை அனுபவத்தை எய்த மெனக்கிடும்போது புதிய கோணங்களில் புதிய அனுபவங்கள் வாசகருக்கு கிடைக்கிறது. அதற்கான உழைப்பு மொழிவழியாக கவிஞனால் ஆழ உழப்பட்டிருந்தால் அதன் செழிப்பை வாசகர் தன் வாசிப்பின் வழியே அறுவடை செய்வார்.
அவ்வாறாக பெறுகின்ற அனுபவம் பகிர்தலுக்கானது. அதுவே ஒரு நவீனக்கவிதைவெளியின் கவித்துவப் பார்வைக் குறித்த உரையாடலுக்கானதும் கூட.
ஆங்கிலத்தில் The End User என்பார்கள். எந்த ஒரு படைப்பின் இறுதியிலும் இருப்பவர் ஒரு பயனாளரே. படைப்பிற்குள் உத்திகளைக் கையாளும் முனைப்புத் தொழில்படுவது கவிஞரின் உழைப்புக்குரியது. அதனைக் குறியீட்டுமுறை (Coding) என்று உருவகப்படுத்திக்கொண்டால், குறிவிலக்கம் (Decoding) செய்ய வேண்டியவர் வாசகர் ஆவார்.
அப்படி Decoding செய்துகொள்ளவதற்கு உதவிபுரிய ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்தவையான:
படிமம்; உருவகம்; மைய உணர்ச்சி; உணர்வுநிலை; உடல் & புலன்களால் உணர்தல்; முரண்; மாறுபாடு (The Contrast) –என அத்தனையும் அல்லது சிலது (கவிதைக்கேற்ப) கைக்கொடுக்கும் என உறுதியாக நம்பலாம்.
அடுத்து-
இரண்டு உதாரணங்களைச் சொல்லியாக வேண்டும் (இவற்றைக் கேள்விப்பட்டிருப்போம்)
1.மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை.
2.நடுவில் பிஞ்சுமிருக்கிறது.
முதலாம் உதாரணம்:
திருமூலர் அருளிய திருமந்திரத்தில் உள்ள ஒரு செய்யுளின் முதல் இரண்டு அடிகள். காட்சி, ஒரு படிமத்தினை முன்வைத்து அதனுள் மாமத யானையை உருவகப்படுத்துகிறது. மரம்தான் இங்கு கவித்துவத்திற்கான இயங்கு தளம். a base Material. யானை ஒரு Metaphor. ‘மாமத’ என்கிற சொற்பதத்தில் கவிதைக்கான கருப்பொருள் மறைந்துள்ளது. அதுவே இங்கு மறைபொருள்.
இதுபோலன்றி எளிமையான வடிவில் ஒரு பழமொழி நம்மிடம் உண்டு.
‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’.
இதில் ஒரு நேரடித்தன்மை இருக்கிறது. கல் – நாய், என்கிற உருவக விளையாட்டு கையாளப்பட்டுள்ளது. இந்தப் பழமொழிக்கு இன்றுவரையில் மேலோட்ட அர்த்தத்தையே சொலவடை உதாரணங்களுக்கு பொருள்கொள்கிறார்கள். ஆனால் மறைபொருள் இங்கே தத்துவார்த்தமாகவும் உள்ளதை சற்று நின்று உற்று நோக்கினால் கிடைத்துவிடுகிறது.
இணையாக திரைப்பாடல் ஒன்றில் கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகளும் நம்மிடம் உண்டு.
‘தெய்வமென்றால் அது தெய்வம்.. அது சிலையென்றால் வெறும் சிலைதான்..
உண்டென்றால் அது உண்டு.. இல்லையென்றால் அது இல்லை’
ஆக, எல்லாமே இங்கு ஒரு Choice மட்டுமே என்கிற பிரகடனமும் உள்ளது.
அடுத்து, இரண்டாவது உதாரணத்தை பார்ப்போம்:
2.நடுவில் பிஞ்சுமிருக்கிறது.
கவிதைப் பாடிய புலவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு பட்டாடையில் மரம், செடி, கொடி, காய், கனி வரையப்பட்டிருக்கிறது. ஆனால், பட்டாடையோ நடுவில் மிகச் சிறியதாகப் பிய்ந்திருக்கிறது. அதை யாரும் கவனித்திருக்கவில்லை. ஆனால் சிரித்துக்கொண்டே சிலேடையாகப் புலவன் சொல்கிறான். ‘பிரமாதமான பட்டாடை, நல்ல வடிவமைப்பு. இதில் காய், கனி கொடிகளுக்கு நடுவில் பிஞ்சுமிருக்கிறது’ இங்கே, குறிப்புணர்த்துதல் நூதனமாக இருந்தாலும் அது பளிச்சென்று நேரிடையாகச் சுட்டிக்காட்டி விடுகிறது.
சரி.. மேலே எடுத்துக்கொண்ட அத்தனை உதாரணங்களிலும் இருப்பது மறைபொருள்தான். ஆனால் கவித்துவத்திற்கான இடம், பொருள், சூழலைப் பொருத்து கருப்பொருளாக அவை வெளிப்பட்டுள்ள தன்மை வித்தியாசப்படுகின்றது. அதே வேளை சமயங்களில், இருபொருள்படக் கூறுகின்ற வகைமையாக நேரிடையாகவும் சுட்டி விடுகின்றது.
இதன் தொடர்ச்சியில் நாம் நவீனத்துவத்திற்குள் போயாக வேண்டும். அதற்கும் முன்னே இன்னொரு விஷயத்தைப் பார்த்துவிடுவோம்.
Allegory of the Cave (குகையின் உருவகம்) என்பது கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ தன்னுடைய The Republic என்கிற நூலில் தந்தருளியது. பிளேட்டோவின் காலம் கிறிஸ்துவிற்கு முன்பு ஆறாம் நூற்றாண்டு என்பதை ஒருமுறை நினைவுப்படுத்திக் கொள்வோம்.
இலக்கிய வகைமைகளில் பயன்படுகின்ற Allegory என்பது நேரிடையாக ஓர் உருவகம் மட்டுமே அல்ல, அதனை ஒரு மறைபொருள் எனவும் கொள்ளலாம். இது என்னுடைய பார்வை. இந்தக் கோணத்தில் எனக்குத் தனிப்பட்ட முறையில் வாசிப்பு வழக்கத்திற்குள் சிந்தனையளவில் நிறையத் திறப்புகள் கிடைத்தன. அதனால் உங்களோடு பகிர்ந்துகொள்ளுகிறேன்.
சரி, பிளேட்டோ விவரித்த ‘குகையின் உருவகம்’ என்பது என்ன? என்று சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
மனிதர்கள் காண்பது / கண்டு அறிந்துகொள்வதில் ‘எது உண்மை?’ என்கிற உரையாக.. சாக்ரடீஸூக்கும் பிளேட்டோவின் சகோதரன் க்ளாகனுக்கும் இடையே நடைபெற்ற மிக நீண்ட உரையாடலின் ஓரிடத்தில் (புத்தகம்-7) சொல்லப்பட்ட சிறிய ஓர் உதாரணம்தான் அது.
ஆனால், வலுவானது.
*குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு குகைக்குள் சிலரை அவர்கள் தம் தலையைத் திருப்பி பின்னால் என்ன நடக்கிறது என்றுகூட அறியாத வண்ணம் சங்கிலிகளால் கழுத்து, கை, கால்களைப் பிணைத்து சுவருக்கு முன்னே சிறைவைத்து.. பின்னுக்குப் பல அடிகளுக்கு அப்பால் சிறு சுவர் அளவிற்கு உயர்த்திய பாதை அமைத்து அதற்கும் பின்னே பெருநெருப்பு மூட்டினால் அந்தப் பாதை வழியே கடந்து போவோர்களின் கருநிழல்கள் கைதிகளின் முன்னே இருக்கும் சுவரில் நிழலாடியும் அசைந்தும் கடந்துகொண்டு இருக்கும். யாராவது பேசினாலும் வெளிக்குரல்கள் குகைக்குள் வித்தியாசமாக எதிரொலிக்கும். அப்போது அந்நிழல்களின் குரல்தான் அவை என்றும் அவையெல்லாம் வெவ்வேறு உயிரினங்கள் போலும் என்றும் கைதிகள் நம்பியிருப்பார்கள். கடந்து போவோரின் கைகளில் இருக்கும் விதவிதமான பொருட்கள் கூட வெவ்வேறு உருவங்களை நிழலாக கண்முன்னே இருக்கும் சுவரில் பிரதிபலித்திடும்போது அவர்களின் உலகின் நிஜம் முற்றிலும் வேறாகிவிடுகிறது. வெகுகாலத்திற்கு பின்னர், ஒரு நாள் கைதிகளில் ஒருவனை விடுவித்து பின்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவனால் முதன்முதலாக அந்த வெளிச்சத்தை நேர்கொண்டு பார்க்கவியலாது. அதுவரையிலான அவனுடைய நிஜம் சிதைந்தும் போகும். புதியது மனதில் பதிந்து வேறு ஓர் அர்த்தத்தையோ உருவகத்தையோ பின்னர் அவன் மெல்ல அடைவான்.
*(உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கப்படவில்லை. சாராம்சம் மட்டுமே தரப்பட்டுள்ளது)
அடுத்ததாக-
இதுவரை வெவ்வேறு விதமாக விவரித்து வந்த மறைபொருள் என்கிற பதத்தைத்தான் நவீனத்துவக்கவிதைக்குள் நாம் இனங்காண முயலவேண்டும்.
அதற்கு இரண்டு கவிதைகளை அனலைஸ் செய்து பார்க்கலாம்.
பின்வரும் கவிதை.. 2023 மார்ச் 21-ல் உலகக் கவிதைத் தினத்தன்று எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொன்டது.
ஒரு கால இடைவெளியை ரிப்பேர் செய்துகொண்டிருந்த
குறிப்புகள்
தினம் தேய்ந்து பாதம் தொலைத்த
வெராண்டாவின் காற்றை உருட்டி அகன்ற ஜன்னல் திறப்புக்கு
அப்பால்
தூக்கி வீசுவதைப் பார்க்க முடிகிறது
வருந்தும் காலங்களில்
விட்டு விட்டு அழுத்திய காலிங் பெல்லுக்கு
எந்த பதிலும் இல்லை
கதவின் க்ளிக் ஒலி கேட்கும்வரை நின்றுகொண்டிருப்பதா
காத்திருத்தலின் அசௌகரியத்தில்
ஒரே ஆறுதல் அந்த காலிங் பெல் தான்
பக்கத்து பிளாட் கதவின் ஓசையற்ற திறப்புக்கு அடுத்து
எட்டிப் பார்த்த முகத்தில்
பிள்ளைப் பட்டாம்பூச்சி ஒன்று
சிறு புன்னகையை அசைத்தது
லேசாக
கண்ணாடி குடுவைகளேதான் இவ்வாழ்வின் போக்குகள்
ஒவ்வொன்றும்
எல்லாம் தெரியும்படியான ஓர் ஊடுருவல்
அவ்வளவுதானா
ஒரு கேயாஸின் விளைவு என்பதாக
மண்டைக்குள் பதிவேறியது விரும்பத்தகாத அனர்த்தம்
போன பருவத்தைப் போலவே இந்தப் பருவத்திலும்
உரையாடல் கருவி பழுதுபட்டுள்ளது
அதனை
ராவி ராவி சுரண்டி ரிப்பேர் செய்வதற்கு
தேவைப்படுகிறது சொரசொரப்பாக ஒரே ஒரு வார்த்தை
ஆனால்
சேமிப்பில் இல்லாதது
இன்னொருமுறை
பக்கத்து பிளாட்டின் க்ளிக் ஒலியோடு
அந்த மூஞ்சி வெளிப்பட்டு
வா வந்து ஒரு காபி சாப்பிட்டு போ என்பதற்குள்
அழுத்தம் கொடுக்காமல்
காலிங் பெல்லை சும்மா தொட்டுவிட்டு
வெராண்டா காற்றென கடைசிக்கு உருண்டு போய்
அகன்ற ஜன்னல் விளிம்பில் காலூன்றி வானத்தில் எவ்வினேன்
படபடவென அடித்து வண்ணங்களை உதிர்த்துக்கொண்டது
பட்டாம்பூச்சி
சற்றே பெரிய கவிதை என்றபோதிலும் வாசகரைத் தன்னுள் இழுத்துக்கொண்ட கவிதை. படிமங்களும் உருவகங்களும் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்படுகின்றது இக்கவிதையில்.
முந்தைய அத்தியாயங்களில் நாம் எடுத்து உரையாடிய அனைத்து கவித்துவக் கருவிகளும் இந்தக் கவிதைக்குள் ஊடுபாவி உள்ளன. அவற்றை அடையாளங் காண முடிகிறதா என்பதை சோதித்துப் பார்த்துவிடுங்கள். இந்த அத்தியாயத்தில் பேசுபொருளாக எடுத்துக்கொண்ட ‘மறைபொருள்’ நவீனத்துவப் போக்கில் இக்கவிதையில் எப்படித் தொழில்பட்டிருக்கிறது என்பதை இனி பார்க்கலாம்.
- புறக்கணிப்பின் பொருட்டு கவிதைசொல்லியின் காலமும் மனமும் கருப்பொருளாக கையாளப்பட்டுள்ளன.
- கவிதையின் தலைப்பு அறிவிக்கும் குறிப்புகள் கவிதைக்குள் எப்படியெப்படி உருவங் கொண்டுள்ளன என்பதை நேரிடைக் காட்சியாகவே காண முடிகிறது.
- காத்திருப்புக்கு ஓர் அர்த்தம் இல்லாமல் போவதின் வலி, திறக்கப்படாத கதவின் முன்னே வந்து நிற்பதற்காக பாதம் தேய்ந்து மீந்த காற்றை என்ன செய்வது? அதற்கான பதில் கவிதையின் கடைசியில் நிகழ்ந்துவிடுகிறது. (கவிதையின் காட்சிப் படிமம் தொடங்கிய இடத்தில் கவிதைக்கான உருவகம் இறுதியில் உருமாற்றமாகி விட்டிருக்கிறது)
- இரண்டு பருவங்களுக்கு நடுவே பழுதுபட்டுவிட்ட உரையாடல் கருவியை ராவி சுரண்டி சரி செய்வதற்கு ஒரு சொரசொரப்பான வார்த்தைத் தேவைப்படுகிறது. ஆனால் அது சேமிப்பில் இல்லாதது. அப்படியென்றால் அது என்ன வார்த்தையாக இருக்கும்? மறைபொருளாக கவிதைக்குள் எங்கும் ஒளிந்துகொண்டுள்ளதா? ஆறுதல் பகர ஒரு வார்த்தை. அல்லது பதில் சொல்ல ஒரு வார்த்தை. அல்லது தீர்வு போல ஒரு தற்காலிக தப்பித்துக்கொள்ளுதலுக்கு கதவு திறக்க உதவும் ஒரு வார்த்தை. கவிதை மனம் அதில்தான் அல்லாடிக்கொண்டு காலிங் பெல்லைத் தொட்டபடி நின்றுகொண்டிருக்கிறது.
- எது எப்படியாக இருந்தாலும் ரிப்பேர் செய்யமுடியாத தருணங்களும் இந்தக் கவிதைக்குள் மறைபொருளாக பாதரசத்துளி போல முன்னும் பின்னும் அசைந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
- பக்கத்து ஃபிளாட்டின் கதவு சிறு கீற்றென திறந்து எட்டிப் பார்க்கும் முகத்தில் பிள்ளைப் பட்டாம்பூச்சி ஒன்று சிறு புன்னகையை அசைப்பதில் உள்ள நுட்பம், திறந்திருக்க வேண்டிய கதவின் முன்னே வெறுமனே காலிங்பெல்லை மட்டும் அழுத்தியபடி நிற்க நேர்ந்த காலவெளியை இரண்டு பருவங்களுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் கவிதைசொல்லியின் மனதைத் தூக்கி எறிகிறது. அங்கே கவிதைக்கான சூட்சுமம் ஒளிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
- முந்தையதில் ‘முகம்’ என்கிற விளிப்பு பிந்தைய யோசனையில் ‘மூஞ்சி’ யாக மாறிவிட்டதில் சுயத்தின் காயம் வெளிப்படுகின்றது.
- இன்னொரு முறை பக்கத்து ஃபிளாட்டின் கதவு திறந்து ‘வா வந்து ஒரு காபி சாப்பிட்டு போ’ என்று அழைத்துவிடும் முன்னே அங்கிருந்து காற்றோடு காற்றாக வானில் கலந்துவிடத் துடிக்கும் மனம், காலிங் பெல்லை அழுத்தியும் அழுத்தாமலும் சும்மா தொட்டுவிட்டு மாயமாகிவிடவே விரும்புகிறது. ஏன்?
- எல்லாமே தெரியும்படியான ஓர் ஊடுருவலாக இருக்கிறது இவ்வாழ்வு. அவ்வளவு அப்பட்டமாக ஓர் இருப்பு இங்கு வாழ்வு என்பதாக உள்ளது.
- ஆனால், கேயாஸ் போல ஒன்று இன்னொன்றோடு தொட்டுத் துலங்கும் தன்மையோடு அது நகர்ந்துகொண்டோ அல்லது நம்மை நகர்த்திக்கொண்டோ இருக்கிறது.
- என்னுடைய பெரும்பாலுமான நவீனத்துவக்கவிதைகளில் வாசகருக்கான Clue வை நான் நேரிடையாகவும் மறைபொருளாகவும் வைத்துவிடுவதுண்டு. மேலோட்டமான வாசிப்புக்கு உரியதாக ஒன்றும் ஆழ்ந்த வாசிப்புக்கு உரியதாக ஒன்றும் என ஒரு Choice இருக்கும். கவிதைக்குள் நுழைந்துவிட்டால் தன் சௌகரியம் போல எப்படி வேண்டுமானாலும் சஞ்சாரம் செய்து வெளியேறிக் கொள்ளலாம். இந்தக் கவிதையில் கேயாஸ் (Chaos Theory) யை நேரிடையாகச் சுட்டுகிறது. கவிதையின் தன்மைக்குள் ‘பிள்ளைப் பட்டாம்பூச்சி’ & ‘வண்ணங்களை உதிர்த்துக்கொண்டது பட்டாம்பூச்சி’ என கவிதையின் பாடுபொருளைத் தொந்தரவு செய்திடாமல், அதே வேளை மறைபொருள் க்ளூவாக Butterfly Effect என்கிற Chaos Theory யைக் குறியீடு செய்திருக்கிறேன்.
- இந்த Coding-ஐ தன் வாசிப்பு அனுபவத்தொடர்ச்சியில் வாசகர் Decoding செய்துகொள்ளும்போது அவருக்கே உரிய பிரத்யேக வாசிப்பனுபவத் திறப்புகள் நிகழும். இப்போது இக்கட்டுரைக்காக வாசிக்கும்போது என் கவிதை எனக்கு வெவ்வேறு அர்த்தப் போக்குகளை, சிந்தனைக் கோணங்களைத் தருகிறது.
- இன்னொரு Declaration-ம் இவற்றையொட்டி இங்கே சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரை அதற்குப் பொருத்தமானதாக உள்ளது. என்னுடைய எண்பது சதவீதக் கவிதைகளில் ஆண், பெண், என்கிற Genre பிரிவு இருக்காது. அப்படி எழுதப்படுகிற கவிதைகள் பிரத்யேகமாக ஒரு யூனிவர்ஸல் உணர்வோடு எழுதப்படுவை. அவை எல்லோருக்குமானவை. இந்தக் கவிதையிலும் அது நிகழ்ந்துள்ளதை நீங்கள் அவதானிக்கலாம். நீங்கள் யாராக உங்களை உருவகித்துக்கொண்டு வாசிக்கிறீர்களோ அவராகவே உங்கள் ‘நானை’ உணர்ந்துகொள்ள முடியும். அனைத்து குரோமோஸோம் கூட்டிணைவுகளுக்குமானதுதான் யூனிவர்ஸல் உணர்வு என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
- கலை வேண்டுவதும் அதுவே.
அடுத்து பின்வரும் கவிதை 2013-ல் எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது.
பெருகும் டிக் ஒலியில் முளைக்கும் முட்கள்
இருந்த இருப்புக்கு அறை இருள்கிறது
சுவர் கடிகாரத்தின் நொடிமுள் துடிப்பு
எப்படித் துல்லியமாயிற்று
பெருகும் டிக் ஒலியில்
நனவிலி மனநிலத்தில் முளைக்கின்றன முட்கள்
எண்ணில்லா கடிகாரம்
மணிக்கட்டு நரம்பொன்றைத் துண்டிக்கிறது
நிதானமாய்
தட்டும் கதவொலியில்
டிக் என்றுத் தொங்கியபடி இறக்கிறது
சாவித்துவாரம்
மேலே அனலைஸ் செய்த முந்தைய கவிதைக்கும் இதற்கும் நடுவே பத்து ஆண்டுகள் இடைவெளி உள்ளன. ஆனால், இந்தக் கவிதையின் அடர்த்தியும் மறைபொருளும் செயல்பட்டிருக்கும் விதம் என்னவென்று பார்ப்போம்.
- கவிதையின் கருப்பொருளுக்கான தளம் இங்கே தனிமையின் இருப்பு. அதற்குரிய உணர்வுநிலையை உருவகப்படுத்திட கவிதைக்குள் பயன்பட்டிருக்கும் பொருட்கள் முக்கியமானவை.
- அறை – அதன் வடிவம்.
- சுவரில் இருக்கும் கடிகாரத்தில் துடிக்கிற ‘டிக் ஒலி’ எப்படியெலாம் கவிதைக்குள் பரிணமித்து பயணிக்கிறது என்பதை அவதானியுங்கள்.
- நனவிலி மனம் (Unconscious Mind) என்பது முக்கியமான பதம். அது நிலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முளைக்கிற முட்களே மறைபொருள்.
- உள் உலகையும் வெளி உலகையும் (அகம் X புறம்) காணுற ஒரு Allegory –யாக உள்ளது சாவித்துவாரம்.
- எண்கள் இல்லாத கடிகாரம், காலத்தை என்னவாக்குகிறது? அது மணிக்கட்டு நரம்பை நிதானமாகத் துண்டிக்கிறது என்பதை எப்படி அவதானித்திட முடிகிறது? அப்படியென்றால் அது அகமா அல்லது புறமா?
முந்தைய கவிதை ஓர் அறைக்கு வெளியே நிற்க நேர்கிற கவி மனதில் நிகழ்கிறது. இந்தக் கவிதை அறைக்குள்ளிருக்கும் கவி மனதில் நிகழ்கிறது. உதாரணங்களே இங்கே ஒரு முரணாக அல்லது மாற்றாக (Contrast) ஆக அமைந்துவிட்டதோ. இல்லை, கவனமாகத் திட்டமிட்டு தேர்ந்து தந்திருக்கிறேன்.
பத்து ஆண்டுகள் என்கிற காலம் குறிப்பிடப்பட்டிருப்பதால் மட்டுமே உறுத்திக்கொண்டு நிற்கிறது. அதை நீக்கிவிட்டாலும் கவிதைகளின் பாடுபொருளும் கருப்பொருளும் அகம்Xபுறம் செயல்படுகின்ற நவீனத்துவத்தை அவதானித்துக்கொள்ளலாம்.
இந்த இரண்டு கவிதைகளையும் வாசகர்கள் உங்கள் பாணியில் Decode செய்து முயற்சிக்கலாம். அதற்கு, இதுவரையிலான அனைத்து அத்தியாயங்களின் உரையாடல்களும் உதவும் என்றும் நம்புவோம்.
தொடர்ந்து பேசுவோம்.
எத்தனைமுறை வாசித்தாலும் தீராத திறப்புகள் கொண்ட வடிவத்தில் கவிதையும் ஒன்று. அதில் கவிதைகள் குறித்த, கவிதையின் இயங்கு தளங்களை, அதன் உணர்வு நிலைகளை, வடிவங்களை என, ஒரு மழைப் பயணத்தில் கண்ணாடிக்குள் நெளியும் மழையை ரசித்தாலும் முன் நிற்கிற, வருகிற அனுபவங்களை தெளிவாக்குகிற பார்வையை தொடர்ந்து தருகிறது உங்களுடைய கவிதைகள் குறித்த கட்டுரைகள் அண்ணா.
மகிழ்ச்சி கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் வைக்கிற கவிதைகளுக்கும் கட்டுரைக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் ரேவா..
தொடர்ந்து கவிதையின் தளத்தில், ஒரு தேர்ந்த வாசகராகவும் செயல்படுவதற்கு முதலில் வாழ்த்து.
ஏற்கனவே நன்கு பரிச்சயமுள்ள கவிதையின் வெவ்வேறு இயங்குதளங்களின் மாறுபட்ட கோணங்களை.. புதிய தரிசனங்களாக, இக்காலத்திற்கான அனுபவங்களாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் உன்னுடைய வாசக மதிப்பீட்டிற்கு நன்றி.
அடுத்தடுத்து வரவிருக்கிற கட்டுரைகள் குறித்தும் உனது மேலான அபிப்பிராயங்களை பகிரவும்.
தொடர்ந்து பேசுவோம்.