cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 கவித்துவம், கவிதை, கவிஞன் தொடர் கட்டுரைகள்

கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 4]


மனித முகத்தை சரியாகப் பார்ப்பவர் யார்:

புகைப்படக்காரரா 

கண்ணாடியா 

ஓவியரா

– பாப்லோ பிகாஸோ

(ஸ்பானிய ஓவியர்) , 1881-1973

 

மிகத் தட்டையாக, ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்கின்ற கூற்று ஒன்று உண்டு. அதாவது பொதுவாகவே நிஜமற்றவைகளை அழகுற பயன்படுத்திக்கொள்ளும் தன்மை கவிதைகளுக்கு மேலும் அழகூட்டுவதாகிறது. இங்கே அதனை Fiction என்பதாக மனத்தில் வரிந்துகொண்டு அதற்கான அர்த்தம் புனைவு என்பதாகவும் மட்டும் போய்விடாமல் சற்று உற்றுநோக்கினால் ‘நிஜமற்ற’ என்கிற பதத்தை அடையாளங்கண்டு கொள்ளலாம்.

Fiction என்கிற நிஜமற்ற புனைவுத்தன்மை எப்படியெல்லாம் மனித கற்பனாசக்திக்கு வளம் சேர்க்கிறது என்பதை வியப்பதற்கு ஒரு பிறவி போதாதுதான். அதிலுள்ள குறைந்தபட்ச சாத்தியக்கூறாக படைப்புலகம் இருக்கின்றது. அதிகபட்ச சாத்தியக்கூறாக விஞ்ஞானம் இருக்கின்றது. இரண்டிற்குமான தொடர்புகள் தொன்றுதொட்டு உள்ளன.

கவிதைகளை வியந்து ஆழ்ந்து வாசித்து அதன் தாக்கங்களையும் தம் ஆராய்ச்சிகளின் கூறுகளுக்கு பயன்படுத்திக்கொண்ட விஞ்ஞானிகள் உண்டு. ஓவியர்களின் கற்பனாசக்திக்கு பின்னர் வடிவங்கண்டு அவற்றின் சாத்தியக்கூறுகளை கண்டுபிடிப்புகளாக நிறுவிய விஞ்ஞானிகள் உண்டு.

எந்தவொரு கற்பனாசக்தியும் மூலக்கூறுகள் இல்லாமல் ஏற்பட முடியாது. அவை, நாம் எப்போதும் சொல்வதுபோல ஐம்புலன்களின் வழியாக கண்டடைந்து உள்ளுணர்ந்து கிளர்ந்து வெளிப்படுகின்ற ஒரு வடிவமாகும். அவை புறம் X அகம் என செயல்பட்டே ஆக வேண்டும். இதன் இணைவரிசையில் புனைவு என்பதின் மேல்பரப்பு முதல் பார்வைக்கு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றின் வேர் எங்கே படர்ந்திருக்கிறது என கவனிக்கவேண்டியது அவசியம் ஆகிறது.

இன்றைய காலக்கணக்குபடி நாம் எவை சூழ இருக்கின்றோம் என்பதை முன்னூற்றி அறுபது டிகிரி ஒரு வட்டம் அடித்துப் பார்த்தால் புரிந்துவிடும். புறப்பொருட்களின் தேவை என்கிற எல்லையைக் கடந்து அவை நம்மை ஆக்கிரமித்துவிட்ட இடத்திற்கு வந்துவிட்டோம். அதாவது நாம் அன்றாடம் புழங்க நேர்ந்துள்ள Material World –ஐ சொல்லுகிறேன்.

உதாரணத்திற்கு அத்தியாவசியமான வீட்டு உபயோகப் பொருட்கள். மனிதனுடைய அடிப்படை வேலை சக்தியை குறைத்துக்கொள்ளும் விதமாக நவீனத் திறனுடன் புதிது புதிதாக அவை வடிவமைக்கப்பட்டு உற்பத்தியாகி நம்மை வந்து அடைகின்றன. அளவில் சிறிதும் பெரிதுமான அந்த நுகர்வு பொருட்கள் முந்தைய காலங்களில் நம் குடியிருப்புக்குள் ஓர் ஓரமாக சொற்ப இடத்தைப் பிடித்துக்கொண்டு நம்மை அதிகம் புழங்கிட அனுமதித்தன. இன்றைய காலம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. பொருட்கள் ஆக்கிரமித்தது போக வீட்டுக்குள் கிடைக்கும் சொற்ப இடத்தில் மட்டுமே மனிதன் புழங்கிட அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

இந்தச் சூழலைச் சொல்லும்போதே அதில் உள்ள முரணும் நமக்கு உரைக்கிறது அல்லவா. அன்றாட புழக்கம் என்பதாக வாழ நேர்கின்ற விதங்களின் வரையறைகள் கண்முன்னே உருமாறுகின்ற வேகத்தைக் கவனத்தில் கொள்வதற்கு மனித புத்தி நேர்க்கோட்டில் நின்று யோசிக்குமா என்பதும் சந்தேகமே.

தனி மனிதனின் சவாலான சூழல் வீட்டினுள்ளே தொடங்கி பொதுச் சமூகவெளி வரையில் பரந்து விரிகின்றது.

அப்படிப் பார்க்கும்போது, அவதானித்தலின் பரிணாமங்களை உரசிப் பார்த்துக்கொள்ள நவீனத்துவக்கவிதைக்குள் கவித்துவம் என்கிற உரைகல் பயன்படும் வாய்ப்பு உள்ளதுதான். கலைத்திறனோ கவித்திறனோ இவற்றினூடே இயங்கிட வேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது என்று சொல்லலாம்.

இதில் – முரண் என்கிற பதம் கவிதையில் முக்கியத்துவம் உள்ள அம்சங்களில் ஒன்று.

நவீனத்துவக்கவிதைப் பரப்பில் முரண் என்கிற சொல்லின் நேரடி அர்த்தத்தைத் தாண்டி அதன் நுணுக்கத்திற்குள் சற்றே பயணம் செய்து பார்த்தோமேயானால் அவை கையாளப்படுகின்ற விதத்தைப் பொருத்து கவித்துவமும் அழுத்தம் பெரும்.

முரண் என்பதை இங்கே Irony என்கிற ஆங்கில அகராதியின் அர்த்த தொனியுடன் நவீனத்துவக்கவிதைகளில் பார்த்துவிடாமல் அதன் சாயலுடன் இயைந்து போகக்கூடிய இன்னொரு ஆங்கில பதமான Contrast (மாறுபாடு) என்பதையே இக்கட்டுரைக்கான பேசுபொருளாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஒன்றுக்கொன்று ‘எதிரெதிர்’ (Irony) என்பதைக் காட்டிலும் ஒன்றுக்கொன்று உள்ள ‘மாறுபாடுகள்’ (அல்லது) ‘வித்தியாசங்கள்’ ஈர்ப்புள்ளவை (The Contrast).

வெளிச்சம் – இருட்டு; கருப்பு – வெள்ளை; மேடு – பள்ளம்;  வெயில் – பனி; மரம் – செடி; வெப்பம் – குளிர்; கசப்பு – இனிப்பு; பூனை – நாய்; குடிநீர் – கழிவுநீர்; தார் சாலை – மண் சாலை; ஊர் – நகரம்; நல்லவை – கெட்டவை; கோபம் – சாந்தம்; உள்ளே – வெளியே; பிறப்பு – இறப்பு…

போன்றவை எடுத்த எடுப்பில் எதிரெதிர் தன்மை கொண்டவை என்பதாக பட்டாலும், அவை ஒன்றுக்கொன்று மாறுபாடு உடையவைகளும் கூட.

அவற்றிலுள்ள மாறுபாடுகளின் அளவைகள் ஒரு பரப்பின்மீது நிகழும்போது அவை முரண்களாக அல்லாமல் தத்தம் வித்தியாசங்களை வெளிப்படுத்துவதாகவும் அமையும். அப்படி அமைவதை கவனித்து உட்கொள்ள வேண்டிய பொறுப்பு வாசகரை சார்ந்தது.

இதனை இனங்கண்டுகொண்டால் கவிதையாக்கத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை வாசகர் பார்த்துவிடலாம். அப்போது வாசிப்பு அனுபவத்தின் கோணம் அத்தருணத்தில் மாற்றம் அடைகின்றது. இன்னுமோர் உயரம் ஏறுகிறது.

இவை யாவும் கண் முன்னே வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் வெகு இயல்பாக எளிதாக எதேச்சை போல கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தொட்டுக்காட்டும் வேலையை ஒரு நவீனத்துவக்கவிதை செய்யும்போது வாசக மனம் இன்னும் சற்று கூடுதல் நொடிகள் அவ்வரிகளில் தங்கிவிட்டு நகர்ந்து அடுத்த வரிகளுக்கு போகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

உவமை, உருவகம், படிமங்கள் ஆகியவைகளின் உள்ளே இந்த மாறுபாடுகள் (அ) வித்தியாசங்கள் (அ) முரண்கள் வீற்றிருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து உணராமல் கண்டும் காணாமல் போய்விடும் அசந்தர்ப்பத்தை வாசகர் தம்மளவில் மாற்றிக்கொள்ள்ளும்போது வேறு சில திறப்புகள் நிகழும்.

பொதுவாக ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுபட்டிருந்தும் கூட அவை ஒன்றின் அருகே இன்னொன்றாக ஒட்டியபடியோ இணைக்கோடாகவோ இருக்க நேரும்போது அதிலொரு அழகு ரசிக்கும்படியான பாந்தத்தில் இருக்கின்றது. அதனை எந்தவொரு கலையும் சுவீகரித்தபடி படைப்பூக்கமாக உருமாற்றிக்கொள்ளும்.

இதன் தொடர்ச்சியில்..

நாம் உரையாட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால்- வடிவங்கள்.

மனிதப் பார்வைக்கு வடிவங்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை கொஞ்சம் மீள்பார்வை செய்துகொள்வோம். நம் உலகம் வடிவங்களால் கட்டியெழுப்பப்பட்டவை. யாருக்கான வடிவங்கள் அவை என்றால் சர்வ நிச்சயமாக நமக்கானது மட்டுமே. Human Perception என்கிறோமே அதன் அடிப்படையே அறிவியல்தான் அல்லவா. மனிதனின் கண்பார்வை சம்பந்தப்பட்டது. அங்கிருந்துதான் பார்வைக்கோணம் என்பதை நாம் வரையறை செய்து வைத்திருக்கிறோம். இதனைச் சொல்லும்போதுதான் ‘பறவைக்கோணம்’ என்கின்ற Contrast-யும் நம்மால் ஒப்பிட்டு பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம்.

ஒரு கேள்வி உண்டு. தர்க்க ரீதியிலான கேள்வி.

‘நாம் காணும் உலகம் நாம் காண்பதைப் போலத்தான் இருக்கிறதா?’

இதற்கு பலவிதமான பதில்களை மனிதன் உற்பத்தி செய்து வைத்திருக்கிறான். ஆனால் அறிவியல் துணைக்கொண்டு நாம் வக்காலத்து வாங்க நினைத்தால் அதுவோ அடிப்படை வடிவங்களை துணைக்கு அழைத்துக்கொள்ளும். பரிந்துரை செய்யும்.

வடிவங்கள் ஓர் ஒழுங்கிற்குள் சீராகிக்கொண்டே போவதுதான் நாளதுவரையில் மனித இனத்தேவைகளுக்குரிய அனைத்தின்மீதான தொடர் வளர்ச்சியாகும். நுட்பம் என்கிற சொல்லின் பதம் வேண்டுவதும் அதுவே. அங்கே கலையின் அம்சம் துளிர்த்துவிடுகின்றது. தொழில்நுட்பம் பயன்படுவதும் அவ்வாறே. Minutes என்கின்ற நுணுக்கத்தின்பால் அதிதீவிர அக்கறை செலுத்தப்பட வேண்டிய அவசியத்தை அனைத்து வடிவங்களும் கோருகின்றன.

அந்த வடிவங்களின் அடிப்படையாக உள்ளவை எவை எனப் பார்த்தால்..

கோடுகள், வட்டங்கள், நெளிகோடுகள். இவைத்தான் நமது அடிப்படை. இவற்றைக் கொண்டு சதுரம், நீள்சதுரம், முக்கோணம், வட்டம், மேல் வளைவு, கீழ் வளைவு, பக்கவாட்டு வளைவு போன்ற கோடுகளின் துணையில் நமக்கான அனைத்தையும் வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம். இவைகளில் பெரும்பாலும் மனித பார்வைக்கு ஏதுவானவை. அவற்றை மீறி வடிவமைக்கப்பட்டவைகள் பெரும் குழப்பங்களையும் சிக்கல்களையும் மனோரீதியாக கூட உருவாக்கிவிட்ட சம்பவங்கள் உண்டு. மிகப்பெரிய ஆராய்ச்சிக்கு பிறகுதான் பொது புழக்கத்திற்கு அனைத்தும் வந்து சேர்ந்திருக்கின்றன. எளிமையாக சொல்லுவதென்றால் நாம் பயிற்றுவிக்கப்படுகிறோம். அதற்காகத்தான் அகடெமிகள் உருவாகின்றன.

அதனால்தான் அதனை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக தத்துவஞானி பிளேட்டோ கனவு கண்டார். திட்டமிட்டு வடிவமைத்து அகடெமி என்கிற ஒரு பயிற்சி பட்டறையை நிறுவினார்.

சரி..

நம் கண்முன்னே நன்கு பழகியுள்ள வடிவங்களை பரிசோதனை முயற்சியாக கலைத்துப் போடும்போது சில ஆர்வமூட்டும் பார்வைக்கோணங்களும் கிடைக்கலாம். 

ஆனால் அவை கலைகளாக பரிணமிக்க நிறையவே மெனக்கிட வேண்டும். (அவற்றைக் குறித்து பின்னர் இத்தொடர் வரிசையில் ஆழமாக உரையாடலாம்)

இப்போதைக்கு ஓர் உதாரணத்திற்கு..

புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாஸோ 1908-ல் Cubism என்கிற ‘கனசதுர’ வரைகலை உத்தியில் தம் ஓவியங்களை அறிமுகப்படுத்தும்போது பார்வையாளர்கள் முதலில் ஸ்தம்பித்துவிட்டார்கள். பின்னர் அந்த பாணி அடைந்த தனித்துவமான இடம் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றது. அக்காலக்கட்டத்தில் அந்த உத்தியில் அவர் தீட்டிய Three Women என்கிற பெண் உரு ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. அதற்கான Interpretations and Interventions அசாதாரணமானவை. யாவும் ஒன்று இன்னொன்றோடு ஒட்டிக்கொண்டு உறவாடுபவை. புதிய பாணிகளை சுவீகரித்துக்கொண்டு தம் துறையில் அதற்குரிய பங்களிப்பை செய்து பார்க்க அனுமதிப்பவை.

• • •

 

ப்படியாக-

மனித பார்வைக்கோணத்திற்கு பெரிதும் உதவுபவை வடிவங்கள்.

வடிவங்களில் உள்ள மாறுபாடுகளும் அதுபோலவே நிறங்களில் உள்ள மாறுபாடுகளும் அரிதான மாற்று இணைப்புகளால் புத்தம்புதிய கோணங்களை நமக்கு ஈட்டுத் தரும். கவித்துவம் படைத்த ரசனை மனம் அவற்றை இனங்கண்டு சொற்களுக்குள் கொண்டு வந்துவிடும்போது இறுதியாக அக்கவித்துவத்திற்குரிய புதிய வாசக அனுபவத்தை அதன் வாசகரும் அடைவார்.

படைப்பு & நுகர்வு என இரண்டு பக்கத்திலுமே ரசனை மட்டம் ஒரு கால் இன்ச் உயர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் அது.

அடுத்து இரண்டு கவிதைளை அனலைஸ் செய்து பார்க்கலாம்.

முதலாவதாக 2018-ல் மே மாதம் என்னுடயை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட கவிதையைப் பார்ப்போம்.

 

  • எங்கிருந்தோ சிறகசைத்த காற்றினூடே..

இவ்வறையில்

கருப்பு சாம்பல் தவிர வேறு வண்ணங்கள் இல்லை

திறந்த ஜன்னல் வழியே

வெளிச்சம் கொணரும் மென் கருநிழல் 

நொடிக்கு நொடி அசைந்து தன்னுருவம் மாற்றுகிறது

மாறா அடர் நிழல்கள்

பிடிவாதமாக சுவர்களில் நீண்டு மடங்கி

என்னையே வெறிக்கின்றன

அவை

என்னைப் போலவே வெறிக்கின்றன

முகம் பார்க்கும் பழைய கண்ணாடியின்

சட்டகத்துக்குள்

பழைய முகம் எதுவும் மிச்சமிருப்பதில்லை

குறுஞ்சிரிப்பு ஒன்று 

கொஞ்சம் அழுக்கேறிய பசையை 

விரல் ரேகையோடு விட்டுப் போயிருக்கிறது 

கதவின் 

நிலை மூலையில்

உடுப்புகளற்ற என் வெறுமைக் கொடியில்

வந்தமரும் 

நீல நிறப் பறவையே 

இக்குரல்வளை இறுக்கி 

சுருக்கிட்டுக்கொள்ள ஓர் இசை வேண்டும்

உனது 

நிழலை மட்டும் அக்கயிற்றில் 

விட்டுப் போ

****

இக்கவிதை..

முந்தைய அத்தியாயங்களில் உரையாடிய கவித்துவக் கருவிகளான 

படிமம், உருவகம், மைய உணர்ச்சி, உணர்வுநிலை, உடல் & புலன்களால் உணர்தல் – ஆகிய ஐந்தையும் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

நாம் இந்த அத்தியாயத்தில் பேசிக்கொண்டிருக்கும் அம்சங்களான முரண் (அ) மாறுபாடு (அ) வித்தியாசங்கள் போன்றவையும்.. வடிவங்கள் மற்றும் நிறங்களின் சாரம் எவ்வகையில் இந்தக் கவிதையில் இடம் பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்.

  • ஓர் அறைக்குள் நிகழும் கவிதைக்குள் அறையின் வடிவம் என்று ஒன்று உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டேமேயானால் அதன் பிரத்யேகமான வடிவம் ஏதாவது கவிதைக்குள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறதா என உற்றுநோக்கலாம்.
  • அந்த அறையில் கருப்பு, சாம்பல் வண்ணங்களைத் தவிர்த்து வேறு நிறங்கள் கிடையாது என்று கவிதை தொடக்கத்திலேயே உறுதிப்படுத்துகிறது. எனவே எடுத்த எடுப்பிலேயே நிறங்களைக் குறித்தும் வாசிப்பு பார்வை உன்னிப்பு அடைகின்றது.
  • வெளிச்சம் X மென் கருநிழல் என்கிற Contrast கவிதையின் படிமத் தோற்றத்தை மெதுவாக உறுதிப்படுத்த தவறவில்லை. அதே வேளை அந்த வெளிச்சம் அவ்வறைக்குள் கொண்டுவருகிற மென்கருநிழலோ நொடிக்கு நொடி அசைவதாக இருக்கின்றது. அசைந்தபடியே தன்னுருவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது. நிழல் அசைவதால் வெளிச்சம் தடுக்கும் அந்தப் பொருளும் அசைகின்ற ஒன்றாக இருந்தாக வேண்டும். அந்த அசைவால் நாம் காற்றை அரூபமாக உணருகிறோம். கவிதையின் போக்கில் அந்த அசைவு ஒரு மரத்தின் கிளையாக இருக்கலாம் என்பதாகவும் அதனை மென்கருநிழலாக்கும் வெளிச்சம் வெயிலாக இருக்கும்பட்சத்தில் கவிதையின் பொழுது வெயில் பொழுதாக இருக்கலாம் என்கிற செய்திகளை வரிகள் தம்முள் பொதிந்து வைத்துள்ளன. கவிதைக்குள் ஜன்னல் இருக்கிறது. ஆனால் திரைச்சீலை எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதால் திரைச்சீலையின் அசைவாக அது இல்லாமல் நேரடியான நிழல் அசைவாக இருக்கின்றது. அதோடு அந்நிழல் கருநிழலாக இல்லாமல் மென்கருநிழலாக இருக்கின்றது. அது ஏன் என்று பார்ப்போம்.
  • மென்கருநிழல் மட்டுமே அவ்வறைக்குள் இல்லை. மாறாத அடர்நிழல்களும் உள்ளன. அவை சுவர்களில் நீண்டும் மடங்கியும் இருக்கின்றன. எனவே கவிதைக்கான பொழுது மதியப் பொழுதாக இருக்கலாம். மதிய வெயில் தம் வெளிச்சத்தை காத்திரமாக வீசும்போது அதனை நேரடியாகத் தடுக்கும் பொருட்களின் நிழல் வேறொரு பரப்பில் மோதும்போது அடர்ந்து காணப்படும். மென்கருநிழல் என்பது பலவற்றாலும் தடுக்கப்பட்ட வெளிச்சத்தால் மோதலாகும் பொருட்களால் உருவாகும். 
  • அடர்நிழல் X மென்கருநிழல் என்கிற Contrast –ம் படிமத்திற்கு மெருகூட்டுகின்றன. மனக்கண்ணில் மெல்ல மெல்ல ஒரு காட்சி புலனாகிறது. கவிதைக்கான பீடிகையை அது மெதுவாக ஸ்திரப்படுத்துகின்றது.
  • வெறுமைக்கொடியில் வந்தமரும் நீல நிறப் பறவை மட்டும்தான் மாற்று வண்ணத்தை கவிதையின் மைய அம்சமாக வந்தமர்ந்து கோலோச்சுகிறது. மற்றவை எல்லாம் கருப்பு மற்றும் சாம்பல் வண்ணங்கள். அந்தப் பறவை வந்தமரும் தருணத்தில் கவிதையின் மையப்பகுதியே Contrast எனும் வினோதமான உருவகமாக மாறுகிறது. வெறுமனே அதன் எதிரெதிர் நிற வித்தியாசத்தால் மட்டும் இந்த Contrast ஓர் உருவகமாக மாறவில்லை பாருங்கள். அது வந்தமரும் கொடியானது நிஜக் கொடியல்ல. வெறுமைக்கொடி என்கிற உருவகப் பொருள் அல்லவா. அதனால், வெறுமைக்கொடி என்கிற உருவகப்பொருளும் கவிதைக்குள் கருப்பு (அ) சாம்பல் நிறத்தில்தான் இருந்திருப்பதாக ஏற்கனவே நம் வாசிப்பு மனம் மயங்கியுள்ளது. எனவே இவ்விடத்தில் உருவகமே ஒரு Contrast –ஆக பரிணமித்துள்ளது.
  • இக்கவிதையில் குறுஞ்சிரிப்பு ஓர் உருவகம். அதில் படர்ந்துள்ள உணர்வுநிலை எப்படி மைய உணர்ச்சியாக உருமாற்றம் அடைந்திருக்கிறது என்பதற்கும் உடல் & புலன்களால் எவற்றை உணர வேண்டியுள்ளது என்பதற்கும் ‘கொஞ்சம் அழுக்கேறிய பசை விரல் ரேகையோடு’  அங்கே உள்ளது. வட்டவடிவிலான ஸ்டிக்கர் பொட்டின் பசை மிச்சம்தான் அது என்பதை மனம் வரிந்துவிட்டால்.. அந்த வட்ட வடிவம் குறுஞ்சிரிப்பாக எதனால் உருவகமாகிறது என்றால்.. அது ஒரு ஸ்மைலி எமோட்டிகான் ஸ்டிக்கரை பிரதி செய்கிறது என்று வரிந்துகொள்ள முடியும். வெறும் வட்டவடிவிலான ஸ்டிக்கர் பொட்டின் பசை அழுக்கேறியுள்ளது. அதில் விரல் ரேகைத் தடம் உள்ளது. இத்தனையையும் சிக்கனமான வரிகளுக்குள் பொதிந்து வைத்திட முடிகின்ற வாய்ப்பை நவீனத்துவக்கவிதை வழங்குகிறது.
  • இறுதியில் கவிதையைப் பாடிக்கொண்டிருக்கும் கவிஞனின் குரல் தன் குரல்வளையை இறுக்கி சுருக்கிட்டுக்கொள்ளுவதற்காக ஓர் இசை வேண்டும் என்பதோடு அந்த நீல நிறப் பறவையை அதன் நிழலை மட்டும் அக்கயிற்றில் விட்டுப் போகும்படி கேட்டுக்கொள்கிறது.
  • சரி.. கவிதைக்குள் வடிவங்கள் எங்கெங்கெல்லாம் உள்ளன. ஜன்னல் என்கிற பொருளில்; சுவரில் மடங்கி நீளும் அடர்நிழல் மடங்குவதால் சுவரின் வடிவு; முகம் பார்க்கும் பழைய கண்ணாடியின் சட்டகம்; விரல் ரேகை; கதவின் நிலை; குறுஞ்சிரிப்பின் அரூபக் கோடுகள்; வெறுமையைத் தாங்கி நிற்கும் கொடியின் நீளம். கவிதையின் முதல் பகுதியில் நொடிக்கு நொடி அசைகின்ற மென்கருநிழலின் தன்னுருவம் வாசகரின் கற்பனைக்கு முழுமையாக விடப்பட்டுள்ளது.

 

அடுத்த கவிதை-

2015-ல் என்னுடைய முதல் தொகுப்பின் கையெழுத்து பிரதிக்காக எழுதப்பட்ட சிறிய கவிதை.

  • வட்டக் கண்ணின் அரை அடி 

 

பின்னாலிருந்து அலறும் எண்ணற்ற 

ஹார்ன் ஒலிகள் 

மெல்ல நகர்ந்து அருகே முகரும் பஸ்ஸின் மூக்கு 

அரை அடி முன்னகர்ந்து 

முன்னகர்ந்து 

வந்தே விட்டது போய் சேர வேண்டிய இடம் 

வட்ட வட்ட சிகப்பின் 

கண் நிறைந்து

****

இந்த சின்னஞ்சிறிய கவிதை படிமமாக பிரதிபலிப்பது எதனை என்று உற்றுநோக்கும் ஓர் அரிய வாய்ப்பை வாசகருக்கு வழங்கிட முயற்சிக்கின்றது. சொல்லாமல் சொல்லிப் புரிவது எதை?

  • நகரம் சார்ந்த ஒரு வாழ்வின் சிறு விள்ளலை புற உலகின் சகித்துக்கொள்ளும் அனுபவமான விதத்தை பாடுபொருளாகக் கொண்டுள்ளது இக்கவிதை.
  • போக்குவரத்து. அவற்றின் தன்மைகள். அதில் உள்ள உருவங்களின் கான்ட்ராஸ்ட் என்ன என்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
  • பொழுதும் வடிவங்களும் நிறங்களும் இந்தக்கவிதைப் பரப்பில் வாசகப்புலனுக்கு சிக்குகின்றனவா என சோதித்துக்கொள்ளலாம். அவை இயங்கும் விதம் குறித்து சற்றே ஆழ்ந்து ஈடுபட்டு அறிந்தும்கொள்ளலாம்.
  • நேரிடையாக இல்லாமல் இதனுள் எதெல்லாம் பொதிந்து மறைந்து உள்ளன என்பதை கண்டுணரும் வாய்ப்புகள் உள்ளன.
  • Signal என்பதை வார்த்தையாக நேரிடையாக குறிப்பிடாமலே உணரப் பயன்பட்டுள்ள கவித்துவக் கருவிகள் இதில் என்னென்ன என்பதை கண்டுகொள்ளலாம்.

இந்த இரண்டாம் கவிதையை வாசகராக நீங்களே அனலிஸ் செய்து பார்க்க ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். 

அப்படி செய்து பார்ப்பதற்கு முந்தைய கவிதையான ‘எங்கிருந்தோ சிறகசைத்த காற்றினூடே..’ கவிதையும் அதன் பேசுபொருளும் கருப்பொருளும்.. இந்த அத்தியாயத்தில் பகிர்ந்துகொண்ட விஷயங்களின் அடிப்படையில் அந்தக் கவிதையை அணுகி நாம் அனலைஸ் செய்துபார்த்த விதமும்.. உங்களுக்கு உதவும் என்றும் நம்புவோம்.

தொடர்ந்து பேசுவோம்…


Courtesy : Pablo Picasso, Three Women  – smarthistory.org

 

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website