Getting your Trinity Audio player ready...
|
இயற்கையும் கலையும்
கவிதையும் என்னிடமுள்ளது
அது போதாதென்றால் எதுதான் போதும்?-வின்சென்ட் வான் கா
(டச்சு ஓவியர்)
1853-1890
முரண்பாடு குறித்து பேசும்போது எடுத்த எடுப்பிலேயே நமக்கு மனத்தில் தோன்றுவது ஒன்றுதான். ‘எதிர்’ என்கிற பதம். அது வெறுமனே ஒரு Juxtaposition அல்ல. அவை மிக அருகருகே இருந்தபோதும் மாற்றுத்தன்மையோடு இருப்பவை என்பதால் மட்டும் கவித்துவத்திற்கு போதுமானதாக இல்லை. எதார்த்த வாழ்வில் அதன் இயக்கம் நிகழ்கின்ற தளமும் விதமும் கலையின் அம்சம் என்று வரும்போது அதன் இயக்கம் வேறு ஒரு தளத்திற்கு எழுவதிலும் உள்ள வித்தியாசத்தை நாம் நுணுகி அவதானித்தாக வேண்டும்.
நமது சொந்த அனுபவங்கள் செய்கின்ற இடக்கு, வாசிப்பிலும் அழுத்தத்தைக் கொடுக்கத் தவறாது. வாசக மனத்திற்கு என்றென்றைக்குமான சவால் அது.
சொல்ல வருவதை நேரிடையாக சொல்லாமல் அதை நேரெதிரிலிருந்து சொல்லுவது. உதாரணத்திற்கு ஒருவர் ஒரு பிரச்சனைக்கு சொல்லுகின்ற கருத்து ஒத்துவராத ஒன்றாக இருக்கும்போது ‘நீ சொல்கிற கருத்து சரியல்ல’ என்று நேரிடையாக சொல்லுவதற்குப் பதிலாக, ‘ரொம்ப நல்லா இருக்குது.. நீ சொல்லுறது..’ என்கிற தொனியில் விஷய அர்த்தத்தை மாற்றி உணர்த்துவது.
முந்தைய நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட நாடகங்களில், நாவல்களில், துயரமான பிரதிகளில் கையாளப்பட்டிருக்கும் பகடியின் பல பரிமாணங்களுக்குமே இதுவொரு தொடக்கப்புள்ளியாக இருந்துள்ளது. கலையைத் தாண்டி தத்துவரீதியிலும் முக்கிய கருவியாக இம்முரண் பங்காற்றியுள்ளது.
அதுபோலவே, காணும் பொருளில் காணா பொருளை உணர்த்த கவித்துவத்திற்குள் இந்த முரண் பயன்படுகின்றது. கையில் உள்ள ஓர் அர்த்தத்தை அப்படியேதான் பிரயோகப்படுத்த வேண்டுமா என்றால் வாழ்க்கையே அதுபோல இல்லையே. வெவ்வேறு அர்த்தங்களின் தொனிகளை நாம் உபயோகப்படுத்துகிறோம். அதற்குரிய சூழல் எத்தனை தூரம் அனுமதிக்கின்றது என்பதைப் பொருத்து அதற்குரிய இடத்தை அது தக்கவைத்துக்கொள்ள முயலும்.
இந்த அத்தியாயத்தில் நாம் துணைக்கு சேர்த்துக்கொள்ள போகின்ற இன்னோர் அம்சம் ‘குறியீடு’
நம் வாழ்வு பலவிதமான குறியீடுகளால் ஆன ஒன்று. அதனை கொஞ்சம் கொஞ்சமாக நாம்தான் வரிந்துகொண்டுள்ளோம். அதன் பயன்விளைவு அபரிமிதமானது ஆகும். உலகெங்கிலும் வாழும் மனித இனத்திற்கு குறியீடுகள், குறிப்பான்கள், அடையாளக்குறிகள் என ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்புணர்த்துவது என்கிற அம்சம் நம்முடைய நடைமுறை வாழ்வின் அத்தியாவசியங்களில் விலக்கிவிட முடியாத ஒன்று. ‘உணர்த்துவது’ என்கிற இடம்தான் உற்று கவனிக்கப்பட வேண்டியதாகும். திசையைக் காட்டும் அம்புக்குறிகள், போக்குவரத்தில் சாலையின் வேகக்கட்டுப்பாட்டிற்கு உதவுகிற சிக்னல் வண்ணங்கள், ரயில்வே கிராஸிங், சாலையில் வரையப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் பட்டை நிறங்களிலான ஜீப்ரா கோடுகள், இணையத்தில் தகவல்களைத் தேடுவதற்காக குறியீடாக்கப்பட்டிருக்கும் பூதக்கண்ணாடி.. அதைத் தாண்டி இன அடையாளக் குறியீடுகள், மதக் குறியீடுகள்.. என பொருட்களின் பயன்பாட்டில் தொடங்கி மனிதன் மீதும் வந்து படிகின்ற அனைத்தும் கவனத்திற்கு உட்பட்டவை.
உணர்த்துவதற்கான எந்த விஷயமும் உணர்தலை கோரி காத்திருக்கின்றது. அடிப்படையில் உணரப்பட நம்மிடம் ஐம்புலன்களும் உள்ளன. அன்றாட வாழ்வின் பயன்பாட்டில் அவற்றின் ஆழமான நிலையை கவனிக்க மறந்துவிடுவோம். ஆனால், ரசனை என்று வரும்போது கொஞ்சம் நிதானித்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதுவே உற்றுப் பார்த்தலை செய்ய வைக்கின்றது.
உதாரணத்திற்கு-
சுவரோரம் ஊர்ந்தபடி சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருக்கிற எறும்புகளை உற்றுப் பார்ப்பதற்கு நமது அன்றாட பரபரப்பிலிருந்து சற்றே வெளியேற வேண்டிய தேவை உருவாகிவிடுகின்றது. அவ்வெறும்புகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதிலிருந்து விடுபட்டு ஆழ்ந்து பார்க்கத் தொடங்கிவிடுகின்ற ஏதோ ஒரு சிறிய தருணத்தில் Glimpse-ஆக நமக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஒப்பீடு ஏதாவது தோன்றலாம். அதற்கு நிகரான மாற்றாக அந்த ஒப்பீடு இருந்துவிடும்பட்சத்தில் அக்கணம்தான் ‘பார்த்தல்’ என்பது வெறுமனே பார்த்தலாக அல்லாமல் ரசனைமிகு பார்வையாக / அர்த்தமிகு பார்வையாக / தத்துவப் பார்வையாக –என வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்துகொள்கிறது.
இப்படி, உணர்த்துவதின் எதிர்ப்பக்கம் உணர்வது இருக்கும்போது நம் புலன்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுஉணர்வு –என ஒவ்வொரு புலனின் சிறப்புத்தன்மையையும் மேம்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை கண்டடைவது அவசியமாகின்றது. அவற்றை மேலோட்டமாகவும் பிழைப்புவாதத்தின் கூறுகளில் ஒன்றாகவும் நெடுங்காலமாக பழக்கப்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால், தன்னுடைய கலை சார்ந்த ரசனையின் மட்டத்தை உயர்த்திக்கொள்வதற்கு, ஐம்புலன்களை செறிவூட்டுவதற்கு அவற்றை முழுமையாகப் பயன்படுத்த எத்தனிக்க வேண்டும்.
முழுமையாக என்றால் எப்படி?
பார்த்தலை / காண்பதை ஆழப்படுத்துவது. உருவ வடிவங்களை, நிறங்களை, அசைவுகளை என அனைத்தையும் ஊடுருவி பார்த்தல் வேண்டும். அதிலுள்ள நுணுக்கங்களுக்குள் மனத்தை செலுத்த முயல வேண்டும்.
இப்படி சொல்லலாம், ஒரு தொலைவுக்கும் அண்மைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்தான் காட்சி வடிவில் பதிவு செய்கின்றது. உடனுக்குடன் அவற்றை ஒரு செய்தியாக மூளைக்கு கடத்துகின்றது. அங்கே அவை வெறும் செய்தியாக மட்டுமே தேங்கிவிடுவதில்லை. ஏற்கனவே நாம் Logics என்கிற ஒன்றினை அறிந்து வந்திருக்கிறோம். அத்தகவல்கள் ஒரு Data base ஆக எஞ்சிவிடாமல் அவை, Logical Process-ன் உள்ளே நுழைந்தாக வேண்டியுள்ளது. ஒன்று இன்னொன்றின் தயவோடு மேலெழும், பின்னர் ரசவாதமாகி வேறொன்றும் வெளிப்படும். இது இயற்கை.
கனிந்துபோதலுக்கும் அழுகிவிடுதலுக்கும் நடுவே நிகழ்வது என்ன? ஒன்றேதான் வேறொன்றாக உருமாற்றம் அல்லது தன்மை மாற்றம் அடைகின்றது அல்லவா. அதற்கிடையே உள்ள வித்தியாசம்தான் அதிலுள்ள விஷய ஞானம். வேறொன்றுமில்லை.
லாஜிக்கல் புள்ளிகளை இணைக்கும்போது அல்லது அடுக்கு வரிசையை மாற்றி வைக்கும்போது தோற்றமாகின்ற புதிய வடிவை நாம் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள விழைகிறோம். அது ரசனையின் கண்ணாகத் தொடங்கி படைப்பின் கண்ணாக வளர்கிறது.
இதெல்லாம் உற்றுப் பார்த்தல், கூர்ந்து அவதானித்தல் ஆகிய இரண்டிலும் மட்டுமே சாத்தியமாகின்ற அனுகூலங்கள். அதேவேளை, ஒரு கலா ரசிகனுக்கு சவாலாக இருப்பதும் அதுவே.
அதைப் போலவே கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு ஆகிய புலன்களுக்கும் வேலையுள்ளது. உழைப்பின் ஆற்றல் செயல்படுவது, வெளிப்படுவது என்பது வேறு. உள்ளத்தின் ஆற்றலை செயல்படச்செய்தல், வெளிப்படச்செய்தல் என்பது முற்றிலும் வேறு. இரண்டாமதில் மனித மனத்தின் மெனக்கெடல் உள்ளது. அதனால் அது, வலிந்தும் உணர்ந்தும் செய்கின்ற விஷயமாக மாறுகின்றது. அதனை எத்தனம் என்போம்.
இயற்கையின் கொடையான மனித புலன்கள் ஆற்றலின் நுழைவாயிலாக பாவங்கொள்கிற தன்மையை உள்வாங்கிக்கொள்வது நல்லது.
இதுவரையிலான கிடைக்கப்பெற்ற அனுபவங்களுக்கும் அப்பால் புதிய கோணத்திலான அனுபவங்களை அடைய முயலுதல்தான் இதிலுள்ள நோக்கம். இயல்பு வாழ்வின் சாராம்சத்தில் உள்ளவையே கலை மற்றும் கவித்துவ வெளிப்பாட்டிலும் கண்டடைய வேண்டியவை. இல்லையென்றால் அவை சத்து இல்லாமல் சக்கையாக இருப்பதை கண்டுபிடித்துவிட முடியும்.
எதிலுமே உணர்ந்து செயல்படும்போது, உணர்ந்து ஈடுபடும்போது எதிர்ப்பக்கத்திலிருந்து பெறவிருக்கிற அபிப்பிராயங்கள் அதன் சாராம்சத்தை எளிதில் உணர்த்திவிடும். அவற்றிற்கு ‘குறியீடுகள்’ உதவுகின்றன. எனில், குறியீடுகள் குறித்த கூடுதல் கவனம் இங்கே கூடுதல் அவசியமாகின்றது.
நவீனத்துவக்கவிதைகளில் அதன் சாரமான கவித்துவத்தின் முனைகளை குட்டி குட்டியாக இக்குறியீடுகள் தம்மோடு பிணைத்து வைத்திருக்கும். பாதிக்குப் பாதி அவை நமக்கு பரிச்சயமுள்ளவையாகவே இருக்கும் வாய்ப்புகள் உண்டு. மற்றவை, ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் நமக்கு அறிமுகமாகியுள்ள உருவகத்தையோ அல்லது உவமையையோ குறியீடுகளாக பயன்படுத்துபவை.
அனைத்தும் செய்வது ஒன்றைத்தான்.
பொருள் குறித்தே அனைத்தும்.
கருப்பொருளுக்குரிய ஒரு ‘பொருளை’ அடிப்படையாகக் கொண்டு ‘இன்னொரு பொருளு’க்காக வக்காலத்து வாங்குவதற்கு குறியீடுகள் பயன்படும். அவற்றை வாகனத்தில் ஏற்றி சவாரி விடுகின்ற வேலையை சமயத்தில் உருவகம் செய்துவிடும்.
இங்கே உணர்வதும் உணர்த்துவதுமே பிரதானம். ஆனால் அது- எங்கே? எப்படி? எதனால்? என்பதற்கான மீடியம் நவீனத்துவக்கவிதை எனும்போது அதனுள்ளே இயைந்து வருகின்ற கவித்துவம் கவனமான போற்றுதலுக்குரியதாகின்றது.
****
தொடக்கத்தில் ‘முரண்பாடு’ குறித்து ஆரம்பித்து அப்படியே ‘குறியீடு’ குறித்தும் சிலவற்றைப் பேசிவிட்டோம்.
ஒரு பொருள் கண்முன்னே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனைக் காணும்போது அடைகின்ற அர்த்தத்தைத் தாண்டி அதில் காணாமல் மறைந்திருக்கும் ‘பொருளி’ன் அர்த்தத்தைத் தேடும் வாசகரின் பார்வையின் விளைவே இவை அனைத்தும்.
****
2016-ல் முகநூலில் நான் எழுதிய ஒரு கவிதை:
-
மேகத்திலிருந்து கீழிறங்கும் தருணம்..
இந்த உலகில் இருந்து நானில்லாமல் போகும்
ஏதோ ஒரு திங்கள்
உன் நினைவின் அடுக்கு சரியத் தொடங்குகிறது
அச்சரிவின் அடிவாரமெங்கும் நீக்கமறச் சிதறும்
என் பிம்பத்துக்குப் பெயரிட
அந்தரங்கச் சொல் ஒன்று தேவைப்படுவதாக
அதுவுன் காலடியில் மிதிபடாமல் தப்பிவிட்ட
சிறுசெடியின் இலை நரம்பில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
அதன் வாசம் கிளரச் செய்யும் முதல் மழைத்துளி
மேகத்திலிருந்து கீழிறங்கும் தருணத்தை
கண்ணீரென்று
தப்பர்த்தம் செய்துகொள்ளாதே
அது
என்னோடு கொண்டுச் சென்ற
உன் புன்னகையின் கடைசி சொட்டு
***
பசலையின் வேதனையை இந்தக் கவிதை பாடுபொருளாகக் கையாண்டுள்ளது. அதுவே இழப்பின் துயரத்தையும் இழுத்துக்கொண்டு எங்கெல்லாம் பயணிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
- உலகிற்கே அப்பட்டமாகத் தெரிந்துவிடப் போகின்ற தன்னுடைய மறைவு, தான் நேசித்த நபருக்கு மட்டும் என்னவாக இருக்கக்கூடும்? என்னவாக இருக்கலாம்? என்கிற ஐடியாதான் இக்கவிதை முழுவதும் சிறு சிறு காட்சிப் படிமங்களாகவும் உருவகங்களாகவும் எழுந்துள்ளது.
- எந்தவோர் உறவுநிலைகளிலும் Subjective-ஆக ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கிவிடும்போதே அங்கே Others என்கிற எதிர்த்தரப்பு ஒன்றும் எப்போதும் உள்ளது. ஏனென்றால் இக்கவிதையின், கவிதைசொல்லி ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.
- Other-னுடைய நினைவின் அடுக்கு சரியத் தொடங்குவதிலிருந்து கவிதைசொல்லியின் பிம்பம் அதன் அடிவாரம் எங்கும் சிதறுகின்றபோதிலும் அந்த பிம்பத்திற்கு ஓர் அந்தரங்க சொல் தேவைப்படுகின்றது.
- அந்த சொல் என்னவெல்லாம் ஆகிறது என்பதை அவதானிக்க முடிகிறதல்லவா?
- பிம்பம் சிதறுவதினால், நுணுக்கமான அளவில் அது சிறுத்துவிடுகின்றது. ‘பார்த்தலி’ன் நுணுக்கத்தை வேண்டுகிறது கவிதையின் உருவகப் பொருள்.
- ‘வாசம்’ இருக்கிறது. நுகரும் புலனைச் சீண்டும் வேலை அது.
- மழைத்துளி / கண்ணீர் / புன்னகையின் சொட்டு – ஒரு திரவ வடிவம் எத்தனை ரூபங்களை எடுக்க முடிகின்றது?
- ‘தப்பர்த்தம் செய்துகொள்ளாதே’ – என்பதாக பரிந்துரைக்கும் குரலும் ஒலிக்கிறது.
- ‘தருணத்தின்’ நுணுக்கம் காலத்தின் நுணுக்கத்தை புவியீர்ப்பு விசையிலிருந்து விண் நோக்கி பயணிக்கச் செய்கிறது. ஒரு மழைத் துளி நம்மைத் தொட்டதும்தான் (தொடுவுணர்வு) அதனை உணர முடிகின்றது. ஆனால், அது எப்போதோ உயரத்தில் மேகத்திலிருந்து வேறொரு Time Frame-ல் விடுவிக்கப்பட்டிருக்கும்.
- கண்ணீரும் அதுபோலத்தானே? கண்களிலிருந்து வெளிப்படும்போதுதான் நமக்குப் புலனாகிறது. ஆனால், அது வேறொரு நுணுக்கமான Time frame வித்தியாசத்தில் வெளிப்பட்டுவிட, உள்ளுக்குள்ளே உருண்டு திரண்டிருந்திருக்கும்.
- கவிதையின் இறுதி வரியில்.. ‘அது என்னோடு கொண்டுச் சென்ற..’ எனும்போது ‘இந்த உலகில் இருந்து நானில்லாமல் போகும்’ எனும் முதல் வரியோடு முரண்பட்டுவிடுகின்றது. அல்லது இந்தக் கவிதை முடியாத ஓரிடத்தில் இருந்தபடி தொடர்ந்து சுழன்றபடியே இருக்கின்றது.
- ‘நினைவு’ என்கிற பொருட்பதம் சரியும் தன்மையில் குறியீடாக்கப்பட்டு பின்னர், அடிவாரம் எனும்போது அதுவே ஒரு மலையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
வாசகரின் வாசிப்பு அனுபவத்திலிருந்து மென்மேலும் புதிய கோணங்களை கண்டடைவதற்கான வாய்ப்பை இந்தக் கவிதை வழங்குகிறது. கவித்துவத்தின் மையத்தை ‘பசலை’ & ‘பிரிவுத் துயர்’ என வகைமைப்படுத்திக் கொள்ளும்போது கவித்துவத்திற்கான இக்கருவிகள் பயன்படும்.
2014-ல் முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்துகொண்ட கவிதை ஒன்றைப் பார்ப்போம்.
-
இலை இலையாக உதிரத் தொடங்கும் சொல்லின் சருகுகள்..
சொல்லை வைத்து ஆடிய சூதில்
ஓர் அவனை வென்றேன்
இழந்த அவனின் வெற்றிடத்தை
அபகரித்துக்கொண்ட சொல்லைக் குறித்து
விசாரிக்கத் தொடங்கினான்
பயண நெடுவழி தோறும்
ஓய்வாய் உட்கார்ந்துவிட்ட மர நிழலில்
பாடலொன்றை பாடியது களைப்புத்தீர
அச்சொல்
குறிப்புகள் எடுத்துக்கொண்டான்
சொல் ஓய்ந்து அயர்ந்தபோது
மரத்தின் இலைகளை எண்ணிக் கொண்டிருந்தான்
தொடர்ந்த பயணத்தில்
தர்க்க வாதம் பண்ணினான் அதனிடம்
நடக்க நடக்க பாதையெங்கும் இலை இலையாக
உதிரத் தொடங்கிய
சொல்லின் சருகுகள் ஒவ்வொன்றும் நிறம் மாறின
வேறு வேறு சொல்லாக
நான் அவனாகிப் போன சூதில்
என்னை வென்ற சொல்
பெருங்காடாகியது
***
இக்கவிதையில் அகமும் புறமும் உள்ளும் வெளியுமாக ஒரு நேர்க்கோட்டை தவிர்த்துவிட்டு உருவாக விளையாட்டை ஆடிப் பார்த்திருக்கிறது. குறியீடுகளாக உணர்த்தப்பட்டுள்ளவை எவை? அதற்கு பயன்படுகின்ற சொல்லே இதனுள்ளே ஒரு கருப்பொருளாக மாறியுள்ள விந்தை என்ன போன்ற வாசிப்பு ஆர்வத்தை தருகின்றது. கொஞ்சம் ஆழ்ந்து போக மனம் தயாராகிவிட்டால் அடையவிருக்கின்ற தரிசனம் கவித்துவமாக எதனை எவ்விதத்தில் அடையாளங் காணுகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம்.
- சொல்லுக்கு சொந்தம் கொண்டாடும் கவிதைசொல்லி அச்சொல்லை ஒரு சூதில் பணயமாக வைத்து வென்றது யாரை என்றால்.. ‘ஓர் அவன்’தான் அது.
- மேற்கொண்டு கவிதை ‘அவனை’யும் ‘சொல்’லையும் வைத்து காட்சிகளை நகர்த்திக்கொண்டு போகிறது. அதைச் சொல்லிக்கொண்டே வருவது Subjective ஆன கவிதைசொல்லி.
- Objective ஆக ஒரு சொல்லே கவிதைக்குரிய கருப்பொருளும் காரணப் பொருளுமாக உருமாற்றமாகியுள்ளது.
- அதன் காரணத்தாலேயே அது ஒற்றை அர்த்தத்தை வைத்திருக்கப் போவதில்லை. அதனாலேயே அதுவே ஒரு குறியீடாகவும் உணர்த்தும் வேலையை, தம் தன்மையிலிருந்தே தொடங்கிவிடுகின்றது.
- இலைகள் எல்லாம் சொல்லாகத் தோற்றம் காட்டி ஏற்படுத்தும் மயக்கம், அச்சொல்லின் ஓய்வான அயற்சிக்குப் பிறகு வேறொரு ரூபமெடுக்கின்றது.
- அதுவே இலை இலையாக சருகுகளை உதிர்க்கத் தொடங்குவதில்.. பல நூறு சொற்கள் பெருக ஆரம்பிக்கின்றன.
- கடைசியில் ‘அவன்’ ‘நான்’ ஆகிற முரணில் சொல் என்னவாயிற்று என்கிற குறியீடு ஒட்டுமொத்த கவிதையின் தன்மையையும் மாற்றிவிடுகின்றது. உள் என்பது வெளி யாகவும். வெளி என்பது உள் ஆகவும் உருமாற்றம் அடைந்துவிடுகிறது.
இரண்டு கவிதைகளும் அக தரிசனத்தின் பேதலிப்பை புறத்தில் அடையாளங் காணுவதற்கான வடிவத்திற்குள் தத்தளித்து தத்தளித்து இறுகுவதும் இலகுவதுமான பதத்தில் வார்க்கப்பட்டுள்ளன. வாசிப்பு மனத்தின் நுணுக்கத்தை மேம்பட்ட தளத்திற்கு கைப்பற்றி இட்டுச்செல்ல விழைகின்றன.
‘எதிர்’ என்பது வெறும் Juxtaposition மட்டுமல்ல. அது ஒருவகையில் உள்முரணும் கூடத்தான். ஆனால், பொருள்கொள்ளத்தக்க கருப்பொருளை எடுத்துக் கையாளும்போது மட்டுமே அதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமைந்துவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியும்.
Excellent and detailing article elango sir !.
We do not find such clean and clear explanations in the article on poetry. Thanks and Please keep writing