- ஆசை துறந்த புத்த முகம்
புத்த முகங்கள் அச்சிடப்பட்ட
இரவு உடையில் இருக்கிறாள் தலைவி
சமையலறை வேலைகளில் பட்டுத் தெறிக்கும்
மீன் குழம்பு
புத்தனின் முகத்தில் அறைகிறது
கழிப்பறை கணங்களில்
கண்கள் மூட முடியாமல் தன்னை
ஓர் இரவாடையில்
அச்சிட்டவனை சபிக்கிறான்
எப்போதும் கூடலின் போது
படுக்கையறை
நாட்காட்டியிலிருக்கும்
கடவுளைக் கூட
சுவருக்குத் திருப்பி வைக்கும்
வழக்கமுடைய அவள்
இரவாடையில் இருக்கும் புத்தனை மறந்துவிடுகிறாள்
திசைக்கொன்றாய் திரு திருவென
முழிக்கிறான்
ஆசைகளைத் துறந்த புத்தன்.
- திரும்புதல் சாத்தியமற்ற பாதை
நம்பிய கதவு
அடைத்துக் கொள்கிற போது
நமது பாதைகள்
அடைத்துக் கொள்கின்றன
பறத்தலிலேயே
பிரியத்தின் இறக்கைகள்
அறுபடும் போது
தலைகுப்புற
நிலத்தில் மோதி
வீழ்கிறது மனப்பறவை திரும்பி நடக்கலாம் தான்
அன்பின் பாதையில்
திரும்புதல் சாத்தியமற்றது.
- திரும்புதல் சாத்தியமற்ற பாதை
- வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
- நூலைப் பெற : 98422 75662