1. சென்றடைதல்
பணிமனைக்குக் கிளம்புகிறேன்
முதற் திருப்பத்தில்
சரேலென முந்திச் செல்கிறது
அவன் வாகனம்
அடுத்த திருப்பத்தில்
நானதை முந்துகையில்
ஒரு பார்வை.
சாலைச் சந்திப்பில்
அவன் முந்திவிட்டான் இம்முறை
ஒரு பார்வை
அடுத்த வளைவில் நான்
அவன்
நான்
அவன்
நான்
இறுதியில்
வந்து சேர்ந்தோம்
சேருமிடத்திற்கு
என் எட்டு மணிக்கு நானும்
அவனது எட்டு மணிக்கு அவனும்
2.
சாலையெங்கும் இடைவெளியற்று
மிதந்தபடி வாகனங்கள்
இரண்டு முதிய கால்கள்
சாலையைக் கடக்க
முன்வருவதும்
பின்மீள்வதுமாக இருக்கின்றன
ஒலிப்பான் கடுஞ்சொல்லென ஒலிக்கிறது
அபஸ்வரத்தில்
விரைகின்ற கால்களுக்கு
கண்கள் இருந்திருக்கும்
என நான் நம்பும்படியாக இல்லை அக்காட்சி
அதி அவசர வேலைகளை விட்டுவிட்டு
நிதானித்து
அக்கால்களை
அக்கரையில் கொண்டு சேர்க்கும்
தேவதூதர்களை
இன்னும் நான்
திரைப்படங்களிலும்
விளம்பரங்களிலும் மட்டுமே பார்ப்பவனாகயிருக்கிறேன்
3.
மாநகரத்தின் புதிய விதிகள்
சக்கரங்களைக் கிறுகிறுக்க வைக்கின்றன
புஷ்பக விமானத்தில் மாநகரத்தைக் கடக்கும்
கடவுளுக்கு
சாலைகளில் புஷ்பாஞ்சலி நடக்கிறது
புதிர்வட்டப் பாதைகளாகிவிட்ட
மாநகரத்தின் சாலைகளை
சக்கரங்கள் அப்படிச் சபிக்கின்றன
காவலர்களின் உடைகள்
கூடுதல் மிடுக்கு கொள்கின்றன
மாநகரத்தின் மையத்திலிருக்கும்
எங்கள் அலுவலகத்துக்கு
நூற்றி நாற்பத்து நான்கு வட்டங்கள்
சுற்றிவிட்டு வந்து சேர்ந்த போது
ஒலிக்கிறது
தேசிய கீதம்
4.
சிவப்பு
மஞ்சள்
பச்சை
நிற்க
கவனிக்க
செல்க
மீண்டும் முதலிலிருந்து
மீண்டும்
மீண்டும்
சலிப்பின்றி
எரிவதும்
அணைவதுமாக
ஓர் அலகிலா விளையாட்டு
காலையில் பார்த்த அதே ஒளி
வீடு திரும்புகையிலோ
இன்னும் பிரகாசமாய்
நான் தான்
சலிப்பும்
வெறுப்பும்
தவிப்புமாகக் காத்திருக்கிறேன்
இடதும் வலதுமான வாகனவோட்டிகள்
இசைக்கிறார்கள்
ரசிக்கிறார்கள்
புசிக்கிறார்கள்
அறுபது விநாடிகள் என்பது
ஓர் ஆசுவாசம் என நினைப்பவனின்
அருகில் நின்றபடி
அவ்வளவு சபிக்கிறேன் நான்
என் பாதையெங்கும் எரிந்தபடியிருக்கின்றன
சிவப்பு விளக்குகள்
5.
எப்போதாவது
விடுமுறை கிடைத்துவிடுகிறது
துணிக்கடைகளுக்கு
பெரு வணிக வளாகங்களின்
பெரு முதலாளிகளும்
கடைக்கண் காட்டிவிடுகிறார்கள்
கடைநிலை ஊழியர்க்கும் என்றேனும் ஒரு நாள்
மருந்துக்கடைகளும் கூட
ஆசுவாசம் கொள்கின்றன
ஆண்டுக்கு ஒரு நாளாவது
அரை நாளேனும்
விடுப்பு அளியுங்களேன்
இம் மாநகருக்கு
சற்றுப் புரண்டு தான் படுக்கட்டுமே
6.
எவனோ ஒரு குடிப் பொறுக்கி
மனம் பிறழ்ந்தவனுக்கு
ஒரு போத்தலைப் பழக்கிவிட்டான்
அவன் பாதி குடித்துத்
தள்ளாடித் தள்ளாடி
நடந்ததில்
தார்ச்சாலையின் கருத்த வாயில்
கொஞ்சமே கொஞ்சம்
சிந்திவிட்டான்
தள்ளாடித் தள்ளாடி
நெளிந்தபடி அந்தச் சாலை
நள்ளிரவை வேறு ஊருக்குக்
கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு
நேராகிவிட்டது
அதிகாலையில்
7.
சாம்பிராணிப் புகையுடன்
கடக்கிறார் பாய்
சிலுவைகளிட்டபடி
அசைந்து வருகிறது
மாதா கோவில் தேர்
காளியை வரைந்து காத்திருக்கிறான்
சாலை ஓவியன்
மயிலிறகில் சாலையை
விலக்கியபடிக் கடக்கிறார் தீர்த்தங்கரர்
மாநகரச் சாலை
மறுகணம்
மீண்டுவிடுகிறது
தன் இயல்பு வண்ணத்துக்கு