றாம் சந்தோஷ்

வேலூர் வாணியம்பாடியிலுள்ள உதயேந்திரம் கிராமத்தில் பிறந்த றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முக.விமல் குமார். ஆந்திரா மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழிபெயர்ப்பியல் துறையில் பட்டம் பெற்றார். திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 'நச்சினார்க்கினியரின் தொல்காப்பியக் கோட்பாடு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். சண்முக.விமல் குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார். சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை ’கண்ணீரின் நிறங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். தெலுங்கிலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து இலக்கிய இதழ்களில் வெளியிட்டுள்ளார். 'இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். தமிழவன், ஞானக்கூத்தன், சி.மணி, ரமேஷ் பிரேம், ஆண்டாள், ஜெயங்கொண்டார் போன்றோரை ஆதர்சமாகக் கூறுகிறார். கவிஞர் அப்துல் ரகுமானை தொடக்ககால ஆதர்சமாகக் கூறுகிறார். தொல்காப்பியவியல், கவிதையியல், கலை, இலக்கியத் திறனாய்வு, கோட்பாடு, நாட்டார் வழக்காற்றியல், ஒப்பிலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.