cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 26 கவிதைகள்

உறவின் மூன்று தடயங்கள்


குறிப்பு: உறவு குறித்தான மூன்று கவிதைகள் இவை. ஆனால், ஒரு கவிதையின் மூன்று உறுப்புகள் அல்ல. ஓர் உணர்வின் மூன்று ஊசல் நிலைகள். இக்கவிதைகள், வெவ்வேறு நாட்களில் எழுதப்பட்டவை; வெவ்வேறு காதலர்கள் பரிசளித்தவை. கிரமம் மாற்றி அடுக்கப்பட்டவை. ஒரே சமயத்தில் யாரையும் நெருங்கவும், விலகவும் செய்யும் ஒருவன் கவிதையின் பொருட்டு விட்டுச் செல்லும் தடயங்களாக இவ்வெழுத்துகள் எஞ்சி நிற்கின்றன. அவற்றின் கதியில் நீங்கள் அவனையோ, கவிதையையோ, அவர்களையோ, கவிதைகளையோ நீங்கள் கண்டுகொள்ளலாம் அல்லது புறக்கணிக்கலாம்.  அல்லது அவளையும் கண்டுகொள்ளலாம்; அல்லது உங்களைப் பதிலீடு செய்துகொள்ளலாம்.   


1.

நான் அவர்களை நேசிக்கிறேன்

அவர்கள் அவர்களாக இருப்பதன் பொருட்டு

அவர்கள் என்னை நேசிக்கிறார்கள்

நானாகும் பொருட்டு

உடனே, தாளாமல் எல்லாவற்றையும் வாயிலிட்டுப் புசிக்கிறார்கள்

கொஞ்சம் தனிமை, மோசமான மனிதர்கள்.

தற்கொலைப் பற்றிய புத்தகங்கள்.

கணக்கில்லாத செலவு.

வெறுப்பு. அதீத உடல் வேட்கை. 

என்னைப் போலவே அவர்களும் 

தங்களின் தனிமையில் அவர்களின் 

சொந்த உறுப்புகளைக் கடித்துப் புசிக்க

தாமதிப்பதே இல்லை.

அடி அடி

கடி கடி

உதை உதை

தனித்திரு தனித்திரு

அழு அழு

கேவு கேவு

ஓலமிடு ஓலமிடு

நித்திரை கெடு 

நித்திரை அறு 

நீர் சிந்து

வீணடி

அத்தனையையும் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்

திரும்பத் திரும்ப

நானோ அவர்களை உடனே

வெறுக்க ஆரம்பித்து விடுகிறேன்.

நானாக இருக்கும் அவர்களிடம்

நான் சுவைக்க என்ன இருக்கிறது

எஞ்சியும்?? புதுசாகவும்?? 


2. என்னை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்!

 

இனி ஒருபோதும் நான் நேசிப்பதற்கு உரியவன் அல்ல

நான் சலித்துவிட்டேன் அல்லது 

எனக்குச் சலிப்படைந்துவிட்டது. 

காதலித்தும் பிரிவுற்றும் 

அதீதமாகக் காதலிக்கப்பட்டும்

அதீதமாய்ப் பிரிவினை எதிர்க் கொள்விக்கப்பட்டும்

எனவே, நான் உறுதியாகவே சொல்கிறேன்

இனி ஒரு போதும் ஒரு பிரிவை

என்னால் சந்திக்க இயலாது என்பதால்

இனி ஒருபோதும் ஒரு காதலை

கையாள எனக்கு இயலவே இயலாது.

மாறாய், நான் நேசிப்பதெல்லாம்

ஒரு பூவையும்

தவிட்டுக் குருவியையும் 

ஒரு பச்சைச் சின்ன செடியையும்

என் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கும்

அந்த நொய்ந்த கிழட்டு மந்தியையும் 

அன்றி, என் பாரத்தை சுமந்தலையும்

இள நீல வண்ண எனது வெஸ்பா வண்டியையும்

தாங்கள் வளரும் மட்டும்

யார் மீதும் பாசம் அருளவிருக்கும்

என் வீட்டு இரண்டு குழந்தைகளையும்தான்

எனவே, 

நான் சர்வ நிச்சயமாகவே சொல்கிறேன்

சந்தேகமே இல்லாமலும்:

இனி, நான் ஒருபோதும்

யாரையும் நேசிப்பேனாய் இல்லை

எந்த ஒரு பருவ மனுஷியையும்

எந்த ஒரு பருவ மனுஷனையும்

ஏனெனில் நான் சலிப்படைந்துவிட்டேன்

நாம் இருவரும் நேசிக்கப்பட ஆரம்பிக்கும் போதே

ஆரம்பித்துவிட்ட

நமக்கிடையிலான தூரத்தைத் 

திரும்பத் திரும்ப

உணர்ந்து உணர்ந்து. 


3.

என் தனிமைக்கு பங்கமாய் இருந்தவர்கள்

ஒவ்வொருவரையும் நான் கொஞ்சம் கொஞ்சமாய் 

தூரஞ் செய்துவிட்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாய். 

ஒவ்வொரு நட்சத்திரமும் 

ஒவ்வொன்றாய் உதிர்வதைப் போல

ஒவ்வொரு உயிரினமும் 

சிறிது சிறிதாய் மரிப்பதைப் போல

கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் என்னைவிட்டு 

காணாமல் போனார்கள்

அல்லது அவர்களைவிட்டு 

நான் காணாத தூரத்தில் ஒளிந்து கொண்டேன்.

ஒவ்வொரு நட்சத்திரமும் உதிர்ந்தப் பின்னே 

ஆகிறது அந்த மேல் வெளி ஏதுமற்று

ஒவ்வொரு உயிரினமும் அற்றபின்னே

ஆகிறது இந்தப் பெரும்பூமி கேட்பாரற்று.

நானோ கட்டங் கடைசில் அழிகிறேன்; ஒழிகிறேன்; 

யாருமில்லை தோள்தாங்க. 

யாருமில்லை கைத் தாங்க.

யாருமில்லை குறைந்தது 

என் பலவீனத்தைப் பார்த்துச் சிரிக்க.

யாராவது வாருங்கள் என்று நான் கூவி அழைக்கிறேன். 

ஒரு பரந்தப் பிரபஞ்சத்தை நோக்கி… 

ஓரிருவர் வருகிறார்கள்.. நானோ அவர்கள் வந்த பின்னே, 

என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் 

என்றபடி மீண்டும் என் கூர்ம ஓட்டிற்குள் அடைந்துகொண்டேன்.

ஆக, நான் கோருவதெல்லாம் ஒன்றுதான்….

தாங்கள் என் அருகிலேயே இருங்கள்; 

ஆனால், கொஞ்சம் இடைவெளி விட்டு. 


 

About the author

றாம் சந்தோஷ்

றாம் சந்தோஷ்

வேலூர் வாணியம்பாடியிலுள்ள உதயேந்திரம் கிராமத்தில் பிறந்த றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முக.விமல் குமார். ஆந்திரா மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழிபெயர்ப்பியல் துறையில் பட்டம் பெற்றார். திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 'நச்சினார்க்கினியரின் தொல்காப்பியக் கோட்பாடு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். சண்முக.விமல் குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார்.

சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை ’கண்ணீரின் நிறங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். தெலுங்கிலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து இலக்கிய இதழ்களில் வெளியிட்டுள்ளார். 'இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.
தமிழவன், ஞானக்கூத்தன், சி.மணி, ரமேஷ் பிரேம், ஆண்டாள், ஜெயங்கொண்டார் போன்றோரை ஆதர்சமாகக் கூறுகிறார். கவிஞர் அப்துல் ரகுமானை தொடக்ககால ஆதர்சமாகக் கூறுகிறார். தொல்காப்பியவியல், கவிதையியல், கலை, இலக்கியத் திறனாய்வு, கோட்பாடு, நாட்டார் வழக்காற்றியல், ஒப்பிலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website