cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

சுபா செந்தில்குமார் கவிதைகள்


  • உயிரின் திறப்பு

பித்து சற்றே அதிக உயரத்தில்
தலைக்கேறி நிற்கிறது
உறங்காத விழிகள்
மீளாது துரத்தும் நினைவுகளென
இரவின் நிழல்
காணும் கணம் உயிரின் திறப்பு
ஆன்மாவின் விடுதலை
பிதற்றும் கேவல்
பைத்திய ருசி
சமன் செய்ய இயலாத
உடலின் வேட்கை
ஆதித் தீ
தின்று செரிக்கும்
இயலாமையை
மார்புடன் இறுக்கும்
தலையணைக்குள் புதைக்கிறேன்
மோகம் விரவும்
இவ்விரவில்
நினைக்கும் தூரத்தில்
நீயிருக்கிறாய் எனும் நிதர்சனம்
எத்தனை ஆதுரம் தெரியுமா?


  • நொதிக்கும் மயக்கம்

பிடிமானங்களற்று
நழுவத் துவங்குகிறது காலம்.

அந்தரத்தில் மிதக்கும் மொழி
தவறவிடுகிறது தன் அர்த்தங்களை.

வழிதவறிப் போகிறது
வலசைப் பறவை.

அனைத்தும்
அணைந்துகொண்டிருக்கிறது.

எஞ்சியிருக்கும் என் வாதையை
உன் சிதையில் சமைத்துத் தருகிறாய்.

குளிரத்தொடங்கும் தணலில்
நொதித்துக் கொண்டிருக்கிறது
நம் மயக்கம்.

நம் துயர் பிரபஞ்சத்தின் துயர்.
நம் பசி உலகின் பசி.

அந்திமத்தில் தளும்புகிறது
நம் கடைசி உறக்கம்.

காலத்தின் கடைசி கண்சிமிட்டலில்
மெல்ல மெல்லத் துலங்குகிறது
பிரபஞ்சத்தின் விளிம்பு.

இரு பக்கங்களிலும் நாம்.


கவிதைகள் வாசித்த குரல்:
சுபா செந்தில்குமார்
Listen On Spotify :

About the author

சுபா செந்தில்குமார்

சுபா செந்தில்குமார்

கவிஞர், தொழில்முனைவர். இன்போனிடிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்.
மாணவர்களுக்கான கலை, மொழி, பண்பாடு சார்ந்த பயிலரங்குகளுக்கான பயிற்றுவிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
கடலெனும் வசீகர மீன்தொட்டி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website