மரணம் சரணம் சம்பூதம்
மரணம் எனும் கிரண அனுபூதி
அறியாமையின் சிகரத்திலிருந்து கேட்கும்
மற்றுமொரு அபலைக் கூக்குரல்
எனக்கு மட்டும் இப்போது கேட்கிறது
உங்களுக்கு எப்போதாவது கேட்கும்
எப்போதோ கேட்டிருக்கும்
எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்
உங்கள் மரணம் உங்களுக்கானதல்ல
அது உங்கள் சுற்றத்திற்கானது
வாழ்வு அபத்தமா
மரணம் அபத்தமா
வாழ்வின் சடங்குகள் அபத்தமா
மரணத்தின் சடங்குகள் அபத்தமா
இல்லை அபத்தமே அபத்தமா
இன்னும் பத்து வருடம்
இவர் நம்முடன் இருந்திருக்கலாமே
என யதார்த்தம் மீறி நினைக்கும் போதே
இன்னும் பத்து வருடம் முன்
இவர் நம்மை விட்டுச் சென்றிருந்தால்
நாம் என்ன ஆகியிருபோம் என
மீண்டும் யதார்த்தம் மீறித் தோன்றி
நாம் அடையும் ஆசுவாசத்தின்
புனைவு வெறி
நம்மைச் செலுத்துவது என்னவோ
இந்த வாழ்வு நோக்கியே தான்
எனினும் கற்றதை பயன்படுத்துவதற்குள்
அனுபவங்கள் காலாவதியாகி
மற்றுமொரு கற்றல் தொடங்குகிறது
நெஞ்சகளக் கற்பூரத்தின் மீது
தீ ஜ்வாலைகள் உயிர் பெற்றுக்
கொழுந்து விட்டு எரிகின்றன
புலம்பல்களின் சுடரொளியிலிருந்து
பிறக்கிறது கள்ள காலத்தின் காரிருள் நிழல்
கனவுகளும் நினைவுகளும் ஒன்றை ஒன்று
எதிர்த்துப் போராடுகின்றன
கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே
கலைக்கும் வாழ்விற்கும் இடையே
இது ஒரு தத்துவத் தாண்டவம்
கரணம் தப்பிக் கொண்டேயிருக்கும்
இந்த கிணற்றுக்குள் காரிய வீரியமே
காப்பாற்றும் கரம்
இது கவிதை இல்லை எனில்
வாழ்வும் கவிதை இல்லை
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு
உருவாக்கிய ‘ஒரிகாமி’ மண்டையொட்டில்
சிதை சிதைந்து கனக்கிறது
அப்பாவின் அஸ்தி
நானா உங்களை எரித்தது
நானா உங்களை மரித்தது
என் குற்ற உணர்வுகளை
எதில் கரைக்க
இந்த ஜென்மத்தில் மீண்டும் ஒரு முறை கூட
உங்களைச் சந்திக்கவே முடியாத அளவு
உங்களைக் கடைசிச் சொட்டு வரை
ஒரு ரத்த அறிக்கையின்
மரணச் சான்றிதழ் மற்றும்
வாரிசு போற்றும் அறிக்கையாக்கிச்
சுருக்கி எழுதி விட்டேனே உங்கள் வாழ்வினை
பாவி நான்
பாவம் நான்
சிவனுக்கும் அறிவில்லை
இவனுக்கும் தெரியவில்லை
எவனுக்கும் தெரிவில்லை
மிகு துயர்
மீச்சிறு வாழ்வு
மரணம் மற்றுமொரு கிரணம்
மரணமே மாபெரும் கவிதை
மரணம் சரணம் சம்பூதம்
குண்டலகேசி பாடல் 9
பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே
மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால்
நமக்கு நாம் அழாதது என்னோ!
மெய் ஞான மிச்சம்
உங்கள் சந்தோஷத்திலும்
உங்கள் துக்கத்திலும்
நான் பங்கு கொள்கிறேன்
எனும் என் மாபெரும்
உண்மையின் பொய்யிலிருந்து
உங்கள் இருப்பிலிருக்கும்
என் இடத்தைப்
பேசத் துவங்குகிறேன்
இப்போது
இந்த என் அலமாரி புத்தகங்களை
எல்லாம் நான் எரித்துவிட்டேன்
நான் குளிர் காய்வது இன்று
எவர் ஞான போத்தலின் மிச்சம்
ஒரு மிடறு தாகம் தந்து தணித்த
பனித் துளிப் போகம்
ஒரு நள்ளிரவின் மாமிசம் சமைக்கும்
‘பார்பக்யூ’ தீ ஜ்வாலை
ஒரு நிலத்தடிக் கண்ணீர்
ஒரு ஆக்சிஜன் தேவையின்
சுவாசப் பிதற்றல்
ஒரு துண்டு வெற்று வயிற்று
மேகக் கலகம்
ஒரு ஸ்மைலி
ஒரு ஒன்றுமின்மை
இந்தப் பாவம்
அநேகம் சாபம்
தெள்ளிருள்
இதற்கு மேலும் நீர்
எமக்குத் தேவையில்லை என்றா
நாம் உமைக் கை விட்டோமா
பிறகு
அதற்குப் பழகிவிட்டோம்
இந்த வெளிச்சம் போதாது
இந்த இருள் போதாது
அதுவும் தாங்காமல்
உம்மைச் சாம்பலாக்கினோம்
அதுவும் போதாது என
ஒரு ஆற்றில் கொண்டு சென்று
கரைத்தோம் உம் அஸ்தியை
நீர் திரும்பாதீர்
திரும்பி வந்தால்
எமது இழப்பின் கேள்விகள்
உம்மை மீண்டும்
கொன்று விடும்
என் இரகசிய அழுகையின் கண்ணீர்
இந்தக் கனன்று சுழலும் இரத்த விளக்கை
ஒரு துளி கூட சொஸ்தப்படுத்தாது
எனினும்
நான் என் இப்போதைய இந்த
இருப்பை எழுதி வைக்கிறேன் இப்படி
மகன் சொல்
1.
எதிர்பார்த்த ஒரு மரணம் நிகழும் முன்
எதிர்பாராத ஒரு மரணம் நிகழ்ந்த பின்
இரண்டு மரங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுகின்றன
இந்த ஆண்டு ஒரு பருவம் தப்புகிறது
2.
கண்ணீரில் கனிந்த மனித முகம்
மலரும் பூக்களும் உதிரும் பூக்களும்
இதே வசந்தராணி மரத்தினுடையவை தான்
3.
சலசலக்கும் காற்று
ஜொலி ஜொலிக்கும் பூக்கள்
யாத்திரையில் ஒரு இளைப்பாறல்
4.
பேருந்தில் இடிபட்டு
சாலையெங்கும் கொட்டிக் கிடக்கும்
இம்மரக் கிளைகளின் இளஞ்சிவப்புப் பூக்களின்
ரத்த உருவகத்தினூடே
பறவைகளின் எச்சங்களின் தூய வெண்மை
5.
அதிகாலை வானில் செஞ்சாந்துச் சூரியன்
பனியினூடே தனிமையில் நெடுஞ்சாலை கார் பயணம்
எப்போதும் போல இப்போதும் அனுதினமும்
ஒரு மரணம்
ஒரு கிரணம்
ஒரு தரிசனம்
ஒரு அற்புதம்
6.
அப்பாவின் கைக்கடிகாரம்
செல்பேசி வாங்கியதும் செயல்படாமல் போனது
இப்போது அவரும்
7.
இறந்தவர் உடல் மேல் தூவப்பட்ட பூக்களின்
சிதறிய இதழ்களைக் கொத்தித் தின்னும் இந்தக் கோழி வேறு
மயானத்தில் எரியூட்டும் முன் அந்த இறந்தவர் உடலுடன்
இணைந்து செல்லும் கழுத்தறுக்கப்பட்ட இந்தக் கோழி வேறு
8.
நியான் விளக்கு பெயர் பலகை
ஒளிராத ஒற்றைச் சொல்
பின்னணி வானில் பிறை நிலா
திருக்குறள் 334 – துறவறவியல்
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
மகா நிதர்சனம்
அப்பா இல்லாத வீடு
அப்பா இல்லாத தோட்டம்
அப்பா இல்லாத அம்மா
அப்பா இல்லாத மருமகள்
அப்பா இல்லாத அனைவரும்
அப்பாவுக்கும் அப்பா இல்லை
அப்பா இல்லாத நான்
அப்பா இல்லாத நானும் ஒரு அப்பா
அப்பா இல்லாத உலகம்
இன்மையின் அற்ப பூதம்
இருப்பின் அற்புத விளக்கைத்
தானே தேய்த்துக் கொண்டு
விடுதலை கொண்டு
அகாலத்தை நிரூபிக்கிறது
விதியின் ஆளுயர அரவணைப்பில்
மரணம் தன்னை மீண்டும்
புதுப்பித்துக் கொள்கிறது
அப்பாவின் அஸ்தி
கரையும் எங்கள் கண்ணீரில்
எங்கள் ஆசைகளுக்கும் சேர்த்து
வருடாந்திரத் திதிக்குக் காத்திருக்கிறோம்
மரணக் குளத்தில்
மகாமகக் குளியல்
பாவம் நீங்கிய பாவி
ஆவி நீங்கிய சாவி
துழாவும் விடைக்கு
சுய கரிசனம்
மகா நிதர்சனம்
(அப்பா இல்லாத அனைவருக்கும்)