cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 26 கட்டுரைகள்

உருமாறும் காமமும் இடம்மாறும் பொருளும்: பயணியின் ‘காமத்தில் நிலவுதல்’ கவிதைத் தொகுப்பு குறித்து…


யணி எழுதிய ’காமத்தில் நிலவுதல்’ எனும் கவிதைத் தொகுப்பு சால்ட் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அந்தக் கவிதைத் தொகுப்புக்கான வாழ்த்துரை வழங்குவதற்காக அதை வாசித்த போது சில குறிப்பிடத்தக்க அம்சங்களைக் குறித்துச் சொல்ல இடம் தரும் கவிதைத் தொகுப்பாகத் தெரிந்தது. ’காமத்தில் நிலவுதல்’ என்ற இந்தக் கவிதைத் தொகுப்பை விவரிக்க வேண்டுமானால் ‘உருமாறும் பலவற்றையும் இடம்மாறும் சிலவற்றையும் வர்ணிக்கும் சொற்கோவை’ என்று சொல்லலாம். பயணி எழுதிய  ‘இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளில் சில கவிதைகள் இந்தத் தொகுப்பைப் புரிந்துகொள்ள உதவும் மார்க்கர்கள், ஹைலைட்டர்கள் அதாவது அவற்றை வாசித்தால் இந்தக் கவிதைத் தொகுப்பினைப் புரிந்துகொள்ள உதவும் அடையாளத்தைப் போல் உள்ளன. இந்தக் கவிதைகளை எடுத்து விவாதித்தால் இந்த முழுத் தொகுப்பையும் வாசித்தது போல் இருக்கும்.

 மேலும் இந்தக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் பொருளை நான்கு அம்சங்களாகப் பிரித்துக் கொள்வோம்.

  1. சொல் பற்றிய உருவகங்கள்
  2. காலத்தின் வடிவங்கள்
  3. கதைகளான கவிதைகள்
  4. காமத்தின் பல அலகுகள்

முதலில் 

1.சொல் பற்றிய உருவகங்கள்

சொற்கள் மட்டுமே எல்லாவற்றையும் எல்லாப் பொருளாம்சத்தையும் விளக்கவேண்டியவையாக இருப்பதால் சொற்களைக் குறித்து பல கவிதைகள் இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று முதல் கவிதையாக இடம்பெற்றிருக்கும் ‘சொல் எனும் சுதந்திரக் கண்ணாடி எனும் போது’ என்ற கவிதை, இந்தக் கவிதைத் தொகுப்புக்குக் காவியங்ககளில் காணப்படும் பாயிரம் போல் அமைந்திருக்கிறது. முதலில் அந்தக் கவிதையைப் பார்க்கலாம். 

  • சொல் ஒரு சுதந்திரக் கண்ணாடி என்னும் போது…

வார்த்தை தன்னைத் தானே காத்துக் கொள்கிறது
என்கிறபோது,
இங்கு நான் வழிப்போக்கனாகக் கூட இருக்க முடியாது
எல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது
அல்லது
அனைத்தும் எழுதப்படத்தான் வேண்டும் என்னும்போது
சொற்கள் அழிந்து தொடங்குகின்றன
அல்லது
தொடங்கி அழிகின்றன
சொல் ஒரு சுதந்திரக் கண்ணாடி என்னும் போது
அதன் ஒரு பிம்பத்தை மட்டும் திருடி வரும்போது
வழியிலேயே அது இறந்துபோகிறது.
செத்தநாயைப் பேசவைக்க முடியாத்தைப் போல்
அந்தச் சொல்
இடிமுழக்கம்,
கறுத்த ஒலி
இறந்தவனைத் தூக்கிச் செல்கிறது
இடுங்கிய பிரதேசங்களுக்கு…
அந்தக் கறுத்த சத்தம் வெடிக்கும் போது
சொல்லுக்குள்
ஒரு கூடுதல் நடுக்கம் படர்கிறது
அங்கே…

இந்தக் கவிதையில் சொல் ஒரு கண்ணாடியாக, ஒரு பிம்பமாக, ஓர் உயிர்ப்பொருள் போன்றதாக பல உருவாக்கங்களை அடிக்கடி அடைந்துகொண்டே இருக்கிறது. ’வார்த்தை தன்னைத் தானே காத்துக் கொள்கிறது,’ என்ற வரியின் பொருள் என்ன என்று பார்த்தால் சொல் ஒரு பொருளை உடையதாக மட்டும் இருந்துவிட்டால் அதற்கான எல்லைக் குறுக்கப்பட்டுவிட்டால் கவிஞனால் வேறு எதுவும் செய்ய முடியாது. அது போன்ற சொல்லைக் கண்டு கடந்து போவதைத் தவிர. எனவே சொல் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் நிலையையும் சில சமயங்களில் கவிஞன் கண்டடைகிறான். அப்போது அந்தச் சொல்லை விடுத்து வேறு சொற்களைக் கோர்க்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான். சொல் உருமாறுமா என்ற ஏக்கத்தில் இருக்கும் கவிஞனின் குரலாக ஒலிப்பது இது. 

ஏனெனில் ’எல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது/அல்லது அனைத்தும் எழுதப்படத்தான் வேண்டும் என்னும்போது/சொற்கள் அழிந்து தொடங்குகின்றன/அல்லது தொடங்கி அழிகின்றன’ என்ற வரி வருகிறது. அதாவது எந்தச் சொல்லாக இருந்தாலும் கவிதைக்குள் ஒரு புதுப் பொருள் பெற்றுவிடும் என்ற எண்ணத்தில் பெறும் நம்பிக்கையாக ஒலிக்கும் கவிதை சொல்லியின் குரல் இது. சொற்களின் உருமாற்றத்தைச் சொல்லத் தொடங்கும் வரி இது.

எல்லாச் சொற்களுக்கும் பழைய பொருள் ஒன்று இருக்கும். புதிதாக எழுதுகையில் வேறு பொருள் வரும் என்ற உருமாற்றத்தை நோக்கிய படைப்பாக இந்தக் கவிதையை நாம் வாசிக்க முடிகிறது. அடுத்து ‘சொல் ஒரு சுதந்திரக் கண்ணாடி என்னும் போது/ அதன் ஒரு பிம்பத்தை மட்டும் திருடி வரும்போது/ வழியிலேயே அது இறந்துபோகிறது. 

சொல் ஒரு சுதந்திரக் கண்ணாடி என்கிறது கவிதை. அதில் எந்தப் பொருளையும் பிரதிபலித்துக் கொள்ளலாம் என்பதன் பொருளில் இப்படிச் சொல்கிறது கவிதை. அதில் ஒரு பிம்பத்தைத் திருடி வருதல் என்றால் அந்தச் சொல்லின் ஒரு பொருளை மட்டும் எடுத்து வரக்கூடிய முயற்சியைப் பேசுகிறது கவிதை. வழியில் அந்தப் பிம்பம் இறந்து போகிறது. அதாவது பிம்பத்தின் வாழ்வு மிகவும் சுருக்கமானது. சொல்லுக்குள் பிம்பம், அடையாளம், குறியீடு என்ற மூன்று வகையான குறிகள் இருப்பதை சார்ல்ஸ் சேண்டர்ஸ் பர்ஸ், தனது குறியியல் கோட்பாட்டில் குறியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு பிம்பக் குறியை எடுத்து வேறு பொருளைக் கோர்க்க நினைத்தால் அது ஏற்காமல் கூடப் போகலாம். 

சொல் ஒரே கவிதைக்குள் ஒரு சொல்லாகவும் கவிதையின் பொருள் எல்லையிலுள்ள சொல்லாகவும் மரணமடைந்த மனிதனாகவும் ஒரே சமயத்தில் உருமாறுகிறது. பிறப்பு, மரணம் எல்லாமே சொல்லால்தான் உருப்பெறவேண்டும். சொல் என்ற எல்லையிலிருந்து பிம்பம் என்ற எல்லையை அடைந்த சொல், மரணத்தை எட்டிப் பிடிக்கையில் மீண்டும் ஒலியாக அதுவும் இடி ஒலியாக மாறி இதுவரைக் கேட்டிராத இடங்களுக்குச் செல்கிறது. 

சொல்லின் பிறப்பும் மரணமும் மனித பிறப்பின் மரணத்தை ஒத்திருக்கின்றன. அதனை

‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 

என்ற பைபிள் வசனத்தைப் போல் இருப்பதை நினைவுகூரலாம். அப்படி உருவான வார்த்தையாக சொல்லாக மனித கற்பனையில் இருப்பது கவிதைக்குள் சுதந்திர கண்ணாடியாகியிருக்கிறது.

மீண்டும் கவிதையின் தலைப்புக்கு வந்தால் சுதந்திரமான கண்ணாடி என்பதில் கண்ணாடியின் பிரதிபலிப்பு அதற்கு நேராக இருக்கும் பொருளைச் சார்ந்தது. ஆனால் சொல் அதிலிருந்து மாறபட்ட அதற்கு நேராக அல்லது நிகராக இல்லாத எல்லாவற்றையும் பிரதிபலிக்கும். பிரதிநிதித்துவப்படுத்தும், தன் உருமாற்றத்தின் மூலம் என்பதைச் சொல்ல இந்தக் கவிதை முயல்கிறது.

2.காலத்தின் வடிவங்கள்

காலம் கவிதைக்குள் என்ன பொருளைத் தருகிறது என்பதைப் பார்த்தால் அத்துடன் இணைந்திருக்கும் பல பொருள்கள் தெளிவடையும். எடுத்துக்காட்டாக

மணற்கடிகை என்ற கவிதையை வாசிக்கலாம்.

  • மணற்கடிகை

என் உடலிலுள்ள மணற்துகள்களை
குடுவையில் சேகரிக்கத்
தொடங்குகிறாள் சிறுமி
குடுவையிலுள்ள மணல் சரியத்
தொடங்க
நிறங்கள் மாறிக்கொண்டே
வருகின்றன
திடுமென என்னை
மணற்குடுவையினுள் வீசுகிறாள்
காலாதீதத்திற்குச் சென்று
காலத்தில் நிலவிக்
கொண்டிருக்கிறோம் இருவரும்.

காலத்தைக் கணக்கிடுதல் என்ற செயல்பாட்டை ஒரு விளையாட்டாக மாற்றுகிறது கவிதை. மணற்துகள்தான் காலம் என்றால் அதைத் தொட்டு விளையாட முடிகிறது. அப்படி என்றால் அது ஸ்தூலமானது. அதாவது மணல் எனும் காலம் ஸ்தூலமானது. மணற்கடிகையில் நுழைய முடிந்தால் மணல் என்ற ஸ்தூலம் போன்ற காலத்தில் நுழையலாம். அது காலத்தின் அதீதமாக இருக்கும். அதில் நிலவிக் கொண்டே இருக்கலாம். இது தான் கவிதையின் பொருள்.

காலம் என்பது தனித்திருப்பது அல்ல. இடத்துடன் சேர்ந்திருப்பது. காலவெளி என்றுதான் இந்திய தத்துவ மரபிலும் சித்தர்களின் மரபிலும் சொல்லப்பட்டிருப்பது. இப்போது நவீன அறிவியலும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டது. 

இதனால் மணல் துகள் என்பது ஒரு பொருள் அதாவது மேட்டர். அது காலத்தை உள்வாங்கியிருப்பதாகக் கவிதை நம்புகிறது. எனவே. ஸ்தூலப் பொருளான இடம், காலத்துடன் இணைந்திருக்கிறது. அதாவது காலவெளியாகியிருக்கிறது. அந்த ஸ்தூலப் பொருளான மணலுடன் மனிதன் கலக்கும் போது இடமாகிறான். மணல் காலம் ஆகும்போது மனிதன் காலமாகிறான். அதனால் காலவெளியாகிவிட்ட கால அதீதம்தான் கவிதையில் நிலவும் பொருள். அதில்தான் மனிதன் நிலவிக் கொண்டிருக்கிறான். 

இத்தகைய காலத்தைப் பற்றிச் சொன்ன கவிதைத் தொகுப்பு இடம் பற்றி எப்படி வர்ணிக்கிறது என்றால் பெரும்பாலும் நகர வாழ்வை இடமாகக் காட்டுகிறது. நகர வாழ்வு குறித்த சில கவிதைகள் அழுத்தமான பொருளைத் தருகின்றன. நகர வாழ்வு என்பது அதில் நிறைக்கப்பட்டிருப்பவற்றைக் கொண்டுதான் நகர்கிறது. அவைப் போக்குவரத்து ஒலிகள். அலைபேசிகள். இன்னும் பிற குழப்பங்கள்.
வாழ்வு இதற்குள் முடிந்துவிடுகிறது. ஒரு க்ளைமேக்ஸ் போன்ற நிலை எப்போதும் நகர வாழ்வு தருகிறது. கொதிநிலையில் இருத்தல் என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாம். பெண் கண்ணீருடன் ஆண் இயலாமை மிக்கக் கோபத்துடன் நகர உடல்களாக உருமாற்றப்பட்டிருக்கிறார்கள் இந்தக் கவிதைத் தொகுப்புக்குள். அடுத்து நகரமும் காடும் இணையும் புள்ளியைத் தேடுகிறது கவிதை. அதுதான் நகரமான்கள் கவிதையில் காணக்கிடைக்கும் காட்சி. நகரத்தின் குழப்பமும் காட்டின் மூர்க்கமும் கலந்த இடம்தான் மான்களின் கனைத்தல் ஒலி. காடு மூர்க்கமானதாக இருந்தாலும் அப்பாவியானது. குழந்தைகளைப் போலானது. எனவே நகரமான்களாக உருவாகியிருப்பவை இந்தக் கவிதைக்குள் குழந்தைகள். 

3.கதைகளான கவிதைகள்

பெரும்பாலும் கதைகளாக உள்ள கவிதைகளை இந்தத் தொகுப்பு நெடிய காணமுடிகிறது. கதைகளாக, கதைகளின் கூறுகளாக, சம்பவங்களாக, நிகழ்வுகளாக உள்ள கவிதைகள் பலவற்றை இந்தக் கவிதைத் தொகுப்பில் வாசிக்க முடிந்தது. அவற்றில் ஒரு கவிதை 

  • கதைகளால் ஆனவன்

நாவிதர் ஜெயபால் வந்து கொண்டிருக்கிறார்
மழுங்க சிறைத்த முகத்தோடும் பாகவதர் கிராப்போடும்
வாயில் எம்கேட்டியை முணுமுணுத்த படியும்
சில நேரங்களில் உரக்கப் பாடிய படியும்
ஜெயபால் பாட்டுக்கு ஊரின் வீதிகளும் சந்துகளும்
தாளமிட்டபடி பின் செல்கின்றன
தன் உலகத்தை எம்கேட்டியை கொண்டு
நிரப்பிக் கொண்டவர் ஜெயபால் சாராய நெடியோடு தன்னை மறந்து அவர் பாடும் பாடல்கள் ஜெயபாலுக்கே சவால் விடக்கூடியவை
பல நேரங்களில் அவர் குடித்த சாராயம்
கண்களின் வழியாகப் பூமியை நனைத்து கொண்டிருக்கும்
சலூன் கடையில் எம்கேடியை ரெக்கார்டில் கேட்டுக்கொண்டே
அவர் முடி திருத்தும் காட்சி பார்க்க அத்தனை ரசமானது
சாராயம் பார்க்காத காலங்களில் வாய் சதா வெற்றிலை  சீவலை மென்று கொண்டிருக்கும்
கல்யாண காலங்களில் அவர் எம்கேட்டியை
நாதஸ்வரத்தில் இசைப்பதை கேட்பதற்கு என்றே
ஒரு கூட்டம் எப்பொழுதும் உண்டு இவை ஒரு கதையாக மாறிய காலமும் உண்டு.
காலம் கதைக்குள் சென்று மேலும் சில கதைகளை
நமக்குக் கொண்டு வருவதும் உண்டு

மனைவி ஓடிப் போனதால் தான் ஜெயபாலின் சாராய அளவு அதிகமானது என்பதும்
சாராய அளவு அதிகமானதால் தான் மனைவி ஓடிப்போனாள் என்பதும் ஒரே காலத்தில் நிகழ்ந்த இரு வேறு கதைகள் மேலும்
ஜெயபால் ஒரு நாடகப் பைத்தியம் என்பதும்
நாடகக்காரி வளர்மதி மீது
அவர் மையல் கொண்டிருந்தார் என்பதும்
அவளின் இறப்பு ஜெயபாலை சிதைத்து விட்டது என்பதும்
வேறு காலத்தில் நிகழ்ந்த வேறு கதை
வெவ்வேறு காலங்களால் வெவ்வேறு கதைகளால் உருவான ஜெயபால்
உதட்டில் எப்பொழுதும் துளிர்க்கும் சிவந்த புன்னகையுடன்
ஊரின் சந்துகளில்
எம் கே டியை உரக்க பாடியபடி அசைந்தாடிக் கொண்டே வருகிறார்

ஒட்டுமொத்தமாக ஒரு கதையின் வடிவம் என்று இந்தக் கவிதையைச் சொல்லிவிடலாம். கதைப்பாடல்களின் மரபு நம்மிடம் இருப்பதால் கவிதைக்குள் கதை வருவது தவிர்க்க இயலாது. இந்தக் கவிதை ஒரு நவீன கதைப்பாடல். விளாடிமிர் ப்ராப் கதைப்பாடல்களை ஆய்வு செய்து அவற்றின் அமைப்பை விளக்கியதைப் போல் இது போன்ற கதைப் பாடல்களை ஆய்வு செய்யலாம். குடியில் மயங்கிய ஒரு கதாபாத்திரம் ஜெயபால். இசையில் நாட்டம் கொண்டவர். மனைவி பிரிந்துவிடுவது. வேறொரு பெண்ணைத் தேடுவது. அந்தப் பெண் மரணம். அடுத்த திருப்பு முனை. மீண்டும் குடிக்கும் இசைக்கும் திரும்பும் ஜெயபால். இந்த அமைப்பை உடைய கதைப்பாடல்களை நவீன கதைப்பாடல்களாகக் காண முடியும். 

4.காமத்தின் பல அலகுகள் 

இந்தக் கவிதைத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் உட்பொருளாக connotative meaning அமைந்திருப்பது காமம். அதாவது பாலியல் விருப்பம். இருபால் மட்டுமல்ல தற்பாலின விருப்பமும் கூட இடம்பெறுகிறது. திருமணத்திற்கு மீறிய உறவு போன்ற அம்சங்களும் பேசப்படுகின்றன. பாலியல் விருப்பங்கள் ஒடுக்கப்படுவதிலிருந்து அது பற்றிப் பேசுவது தவிர்க்கப்படுவதுவரை உள்ள வரலாறு அதாவது நாகரிகம் அடைந்த மனிதச் சமூக வரலாறாக இது வரைக் கொள்ளப்பட்டிருப்பது பற்றிய ஒரு மறு ஆய்வு தேவை. 

ஃபூக்கோ பாலியல் வரலாறு குறித்து மூன்று தொகுதிகளை எழுதினது போன்ற ஓர் ஆய்வு தனிப்பட்ட முறையில் தமிழுக்கும் தேவை. அதிலும் குறிப்பாக இது போன்ற வரலாற்றின் கணங்களைப் பேசும் இலக்கியங்கள் பாலியல் விருப்பத்தின் அரசியல், பண்பாட்டு, உள்ளடக்கமாக இருக்கக்கூடிய பாலியல் இன்பத்தைக் குவிமையப்படுத்துகின்றன. இதில் ஒரு கவிதையைப் பார்க்கலாம்.

  • அறுவடைக் காலம்

சிரைத்தது சரியில்லெனக் கூறி
சிணுங்கி சண்டையிட்டு அப்படியே உறங்கிப்போனாள் இவள்
உடலின் மறைவிடங்களில்
சவரம் செய்யும் அவனின் தீராக் காதலை
நெருங்கிய தோழிகள் மட்டுமே அறிவர்
கோல்ட் ப்ளாக் சுவையுடன்
நடுக்கூடத்தில் உறங்கியவன்
காலையில் விழித்தபோது
அவளும் அவள் கணவனும்
உள்ளே படுத்திருப்பது தெரிந்தது
காலையில் அவனுக்குப் பிடித்த
சிற்றுண்டி முடிந்து
அவன் ஊருக்குக் கிளம்பத் தயாரானபோது
காரணத்தை அவள் கணவன் கேட்க
ஊரில் நிகழும் அறுவடைக் காலத்தை
சுட்டிக்காட்டிப் புறப்பட்டான்
அவள் கணவனும் சந்தோஷத்துடன்
அவனை வழியனுப்பி வைத்தான்
தோழி ஸ்தனங்கள் அழுந்த கட்டியணைத்தபடி
கிசுகிசுத்தாள்

காலையில் குளிக்கும் போது பார்க்கையில்
அவன் தன் வேலையைக் கச்சிதமாகவே
செய்திருப்பதாகக் கூறிப் பாராட்டினாள்
நீ தக்காளி தோசை செய்தபோதே
அதைப் புரிந்துகொண்டேன் என்று இவனும் கூற
மேலும் இறுகியணைத்தபடி
இந்தக் காலங்களில் உன்னைப் பிரிந்திருப்பது
மிகவும் துரதிருஷ்டவசமானதென
கூறி விடைகொடுத்தாள்

பயணித்துக் கொண்டிருக்கையில்
எங்கிருந்தோ நாட்டுத்தக்காளியொன்று
பேருந்தில் உருண்டுகொண்டிருக்க
அவன் அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்

 

இந்தக் கவிதையில் அறுவடைக் காலம் என்ற சொல்லும் தக்காளி என்ற சொல்லும் உருவாக்கும் மறைபொருள் அல்லது பாலியல் விருப்பம், இன்பம் குறித்த பொருள் இந்தக் கவிதைத் தொகுப்பின் ஓர் அடையாளமாக உள்ளது. ஒடுக்கப்படுவதும் மடைதிறந்து பாய்வதும் பாலியல் விருப்பத்தின், இன்பத்தின் இரு வேறு திசைகளாக உள்ளதை இந்தக் கவிதை காட்டுகிறது. 

பயிர்களை அறுவடைச் செய்வதும் இந்தக் கவிதைக்குள் பேசப்படும் மழித்தலும் ஒரே வகையான செயல்பாட்டைக் கொண்டவை போல் இணை வைக்கப்படுகின்றன. அதே போல் தக்காளி என்ற சொல், ஸ்தூலப் பொருள் குறிக்கும் அர்த்தமும் இந்தக் கவிதைக்குள் வரும் அர்த்தமும் இரு கட்டத்திலானவை. ஒன்று அது சாப்பிடக்கூடிய பழம். அடுத்து பாலியலின் பொருள் கொடுத்து கற்பனை செய்யக்கூடிய அர்த்தம். அதனால் இது ஒரு செயற்கைப் புராணமாக அதாவது பாலியல் புராணமாக கவிதைக்குள் நிலவுவதைக் கவனிக்கவேண்டும். மேலும் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் காமம் நிலவி இருப்பது குறித்த ஓர் உள்முகப் பார்வையாக இந்தக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் பல உள்ளன என்று சொல்லலாம். 

 பயணியின் ‘காமத்தில் நிலவுதல்’ கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க வாசிப்பனுவத்தைக் கொடுக்கிறது. காமத்தை, பாலியல் விருப்பத்தை இன்னும் பல பொருள்களைத் தேர்ந்த முறையில் கையாளப்பட்டப் பிரதிகளாக இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் உள்ளன.


நூல் விபரம்

நூல்:  காமத்தில் நிலவுதல்
ஆசிரியர் :  பயணி
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2023
பக்கங்கள்: –
விலை: ₹ 180
நூலைப் பெற தொடர்பு எண் : 9363007457

25-12-2023 அன்று நடைபெற்ற சால்ட் பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வில்  கவிஞர் பயணியின்  “காமத்தில் நிலவுதல்” கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிஞர், ஆய்வாளர் முபீன் சாதிகா அளித்த வாழ்த்துரையின் கட்டுரை வடிவம்.

 

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website