cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 26 கவிதைகள்

உப்புக் கண்டங்கள்.


இன்று காலையில் எழுந்ததும்
முதலில் கண்டதுன் குறுஞ்செய்தியே
இரவு ஒன்றரை மணிக்கு
அனுப்பியிருக்கிறாய்
இரண்டு
வருடங்களுக்குப் பின்

கொல்லையில் பல் துலக்குகையில்
காகமொன்று
பப்பாளிப் பழக்கூழை
கொத்திக் கொத்தி உறிஞ்சியது
பரவசம்
உன் குறுஞ்செய்தியைக்கூட
உறிஞ்சிக் கொள்தல் ஆகுமா

சரியாக இன்றைக்கு
தொலைக்காட்சியில்
நாமிணைந்து
பார்த்த படம்.
நற்சகுனமெனச் சொல் மனமே.

மொட்டை மாடியிலிருந்து
பார்த்தபோது
முருங்கைப் பூக்கள் கொல்லெனப்
பூத்திருப்பதும்
மேக மூட்டமும்
வாகாய் குளிர் காற்றும்.
இன்றேனோ
கூடுதல் அழகாய் காட்டுமிந்தக் கண்ணாடி.

மாலை பூக்காரரை நிறுத்தி
பூ வாங்கிக் கொண்டேன்
எத்தனை வருடமானாலென்ன
நெஞ்சு முழுக்க
மணக்கிறது மல்லிகை.

வாயேன்
உடம்பை உப்புக்கண்டங்களாக்கி
வைத்திருக்கிறேன்
காதலைத் துல்லியமாக
காமத்தில்தான்
சொல்லமுடியும்.


கவிதைகள் வாசித்த குரல்:
  அன்புமணிவேல் 
Listen On Spotify :

 

About the author

தேன்மொழி சதாசிவம்

தேன்மொழி சதாசிவம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த தேன்மொழி சதாசிவம் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

கமலாதாஸின் The Old Play house and Other poems என்ற கவிதைத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மு. மேத்தாவின் "நடந்த நாடகங்கள்" கவிதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு " என் பெயர் தேன்மொழி" என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website