cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

சிவசங்கர்.எஸ்.ஜே கவிதைகள்


  • ஓர் ஒலி ஓர் ஒளி

ஒவ்வொரு முறையும்
கதவுகளற்ற இந்த செவ்வக மின்வாயில்களை கடக்கையில்
ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது
ஒரு சமிக்ஞை சப்தம் கேட்கிறது

அலுவலகங்கள், நிறுவனங்கள்
வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள்
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள்
மால்கள், அரங்குகள்
எல்லா இடங்களிலும் கேட்கிறது
எல்லா இடங்களிலும் ஒளிர்கிறது

அந்த சப்தம் ஓர் இயந்திரத்தின் சப்தம்
அந்த சப்தம் ஓர் இராணுவத்தின் கூக்குரல்
அந்த சப்தம் ஓர் அபாய ஒலி
அந்த சப்தம் ஓர் அபயக்குரல்

அந்த சிவப்பு விளக்கு
இந்த அழகிய உலகத்தின்
தாய்மையை குழந்தைமையை அழித்து
யாரோ இடும் திருஷ்டி பொட்டு .


  • கேள்விகள் குழந்தைகளாக இருந்தபோது

ஒவ்வொரு பறவைகளுக்கும் ஒவ்வொரு குரலிருக்குமா?
பறவைகளுக்குள்ளும் பாடகன் பாடகி உண்டா?
மீன்களுக்குள் சிறந்த நீச்சலடிக்கும் வீரர்கள் உண்டா?
மான்களுக்குள் அதிக உயரம் தாண்டும் வீராங்கனைகள் உண்டா?

இந்த மீன்களுக்கு நீந்தும் கலையைத் தந்தது யார்?
அந்த மான்களுக்கு தாண்டும் வித்தையைத் தந்தது யார்?
இந்தப் பறவைகளுக்கு பாடும் வேலையைத் தந்தது யார் ?

ஒரேபோல இன்னொரு பறவை உண்டா?
ஒரேபோல இன்னொரு மீன் உண்டா?
ஒரேபோல இன்னொரு மான் உண்டா?
ஒரேபோல இன்னொரு பூமி இருக்குமா?

சுற்றிகொண்டேயிருக்கும்
இந்த பூமிக்கு இப்படியொரு வேலையைச் சொன்னதுதான் யார்? .


  • புலப்படாதவை

புகைப்பதை நிறுத்திய பிறகு
படம் வரையத் தொடங்கியிருக்கிறேன்
பென்சிலின் முனையை அடிக்கடி ஆட்காட்டி விரலால் தட்டிக் கொடுக்கிறேன்

புலப்படாத சாம்பல் உதிர்ந்து அறையை நிறைக்கிறது
புலப்படாத புகை பரவி இரவை நிறைக்கிறது.

பழகிய ஒன்றை பழகாத ஒன்றில் நிகழ்த்தும்போது
பழகியவை
என்னவாகிறது.


கவிதைகள் வாசித்த குரல்:

உதயகுமார்

Listen On Spotify :

About the author

சிவசங்கர் எஸ்.ஜே

சிவசங்கர் எஸ்.ஜே

எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.

இவரது நூல்கள்:

கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012)
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017)
யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019)
இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121)
அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022)
.. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022)
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022)

( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website